ஆண்டு 1505. காற்றின் வேகத்திற்கேற்ப அசைந்து அசைந்து முன்னேறிக்கொண்டிருந்தது அந்தப் பாய்மரக்கப்பல். கிட்டத்தட்ட ஆறாயிரம் கடல்மைல்கள் கொண்ட நீண்ட பயணத்தில் களைத்திருந்தது போல் காணப்பட்டது. ஆனால், ஒரு புதிய தேசம் பார்க்கப்போகும் ஆவலில் சிரிப்பும் களிப்புமாக அதிலிருந்த மாலுமிகளும் இன்ன பிறரும் பயணித்துக்கொண்டிருந்தனர். உண்மையில் அவர்கள் மனதிற்குள் புது தேசம் பார்க்கும் ஆவல் மட்டுமல்ல, மற்றொரு காரணமும் மறைந்திருந்தது. “அந்தத் தேசத்தில் மணக்கும் நறுமணப்பொருள்கள் விளைந்து எங்கெங்கும் கொட்டிக்கிடக்கிறதாமே? மிளகும் ஏலமும் கறுவாப் பட்டையும் சல்லிசாகக் கிடைக்கிறதாமே? அள்ளி வந்து வியாபாரம் செய்தால் கொழுத்த லாபமாமே?” என்றெல்லாம் கேள்விப்பட்டதிலிருந்து இவர்களைப்போல ஐரோப்பியர் பலரும் இந்து சமுத்திரத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தத் தீவுதேசம் பார்க்க, கடுமையான பயணத்திற்குத் தயாராகிவிடுகின்றனர். அப்படியான ஒரு போர்ச்சுகீசியக் குழுவின் பயணம்தான் அது.
மதுவும் நடனமுமாக சந்தோஷமாக வந்துகொண்டிருந்தபோது, திடீரென திரண்டெழுந்த பெரும்புயலும் ஆக்ரோஷமான அலைகளும் அந்தப் பாய்மரக்கப்பலைத் தத்தளிக்கச் செய்தது. அனைவரின் முகத்திலும் கவலையும் அச்சமும் அப்பிக்கிடந்தன. தங்களுக்கு முன்னால் சென்ற பலரையும் போல் தாங்களும் ஜலசமாதி ஆகிவிடுவோமா என்ற பயத்துடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். குழுவிற்குத் தலைமையேற்று வழிநடத்திக்கொண்டிருந்த தளபதி டொன் லொரேங்கோ அவர்களைத் தைரியப்படுத்திக்கொண்டிருந்தார். அவர்களின் பிரார்த்தனையின் விளைவோ என்னவோ போர்ச்சுகலிலிருந்து கிளம்பிய அந்தக் கப்பல் இலங்கையின் கொழும்பு கரையை அடைந்தது. வியாபார நோக்கில் முதன்முதலாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்த அந்தப் போர்த்துக்கீசியர்களுக்குத் தெரியாது, ஒருநாள் இந்த நாடு தங்கள் அரசன் வசமாகப்போகுமென்று.
ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போனால், உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பியர்கள் நுழைய ஆசைப்பட்ட தேசமான இலங்கையின் நீண்ட அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
‘வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ – தொல்காப்பியம்
‘பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ – சிலப்பதிகாரம்
என்று இலக்கியங்கள் அனைத்தும் தமிழகத்தின் தெற்கில்… இன்னும் இன்னும்… குமரி முனைக்கும் தெற்கில் தமிழகப் பகுதிகள் நீண்டிருந்தது என ஓங்கியடித்து ஒரே குரலில் சத்தியம் செய்கின்றன. தமிழகமும் இன்றைய இலங்கையும் ஒரே நிலத்தொடராக இருந்ததற்கும், அங்கு பஃறுளி ஆறு ஓடியதற்கும், குமரிக்கண்டம் கடல்கோளால் மூழ்கியதற்கும், இலக்கியத்தில் இது போன்ற ஏராளமான சான்றுகளை நெடுகப் பார்க்க முடிகிறது. இரு நாட்டுத் தாவரங்கள், விலங்கினங்கள் குறித்த ஆராய்ச்சியின் முடிவில், இலங்கைத் தீவானது தமிழ்நாட்டுடன் நிலத்தொடர்பு கொண்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் மன்னாரில் உள்ளப் படிகப்பாறையும் மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத்தொடர்ச்சி என உறுதிசெய்யப்பட்ட செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன. குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம், கடலில் மூழ்கிய குமரி நிலத்தின் எச்சமே இன்றைய ஈழம் (இலங்கை) என்றெல்லாம் தமிழ் ஆர்வலர்களும் வரலாற்றாளர்களும் மொழியியலாளர்களும் நெஞ்சம் நிமிர்த்தி, காலர் உயர்த்தி பெருமைகொள்கின்றனர்.
ஆனால், அந்தக் கடல்கோளுக்குத் தப்பிய இலங்கை நிலத்தின் அரசியல்களம் எப்போதும் ரணகளமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டை ஒட்டி, இலங்கைப் பழங்குடியினருக்கும் இந்தியாவின் வங்காளம், ஒரிஸாவிலிருந்து வந்த (விஜயன் வழிவந்த) குடியேற்றவாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட கலப்பினால் தோன்றிய இனமே சிங்கள இனம் எனச் சிங்கள வரலாற்று நூல்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஆரம்பத்தில் தமிழர் பண்பாட்டையே இவர்கள் பின்பற்றினாலும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகரின் முயற்சியால் பௌத்தம் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் புத்தமதம் பரவுவதற்கு முன் சிவ வழிபாடு நடந்ததாக, பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சிவன் சிலைகளும் நந்தி சிலைகளும் சாட்சி கூறுகின்றன. ஒருபுறம், சிங்களமும் தேரவாத பௌத்தமும் தோளோடு தோள் சேர்ந்து நெருக்கமாக, மறுபுறம் சைவமும் தமிழும் பின்னிப்பிணைந்து ஆரத் தழுவிக்கொண்டன.
எட்டித் தொட்டுவிடும் தூரத்திலிருந்த தென்னிந்திய மன்னர்கள், தங்கள் புஜபல பராக்கிரமங்களைக் காட்டி சாம்ராஜியங்களை விரிவுபடுத்தி, வரலாற்றில் இடம்பிடிக்க விரும்பியபோதெல்லாம், அவர்களுடைய முதல்தேர்வாக இலங்கையே இருந்தது.
இலங்கையை வெற்றிகொண்டபின், தமது எல்லையைத் தக்க வைத்துக்கொள்ள, மீண்டும் மீண்டும் போரைத் தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்படித் தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கு உள்ளான இலங்கையில், தென்னிந்திய மொழி, கலாச்சாரம், மதம் போன்றவை செல்வாக்கு செலுத்தினாலும் இப்போர்கள் இந்தியாவின் மீதான வெறுப்பை, அச்சத்தை, பகையை வளர்த்தன என்பதே உண்மை. முதல் ஆக்கிரமிப்பாளனாகக் கருதப்படும் விஜயனைத் தொடர்ந்து, 21 முறை இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்திருப்பதாக வரலாறு கூறுகிறது. கி.மு. 237இல் தொடங்கிய சேனன், குட்டிகன் ஆகிய சோழர்களில் ஆரம்பித்து, 1215இல் கலிங்க நாட்டைச் சேர்ந்த மகா கலிங்கனின் படையெடுப்பு வரை நீள்கிறது ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியல். இலங்கையின் உள்ளூர் அரசியலும் அன்று முதல் இன்று வரை அதகளம் தான். தத்தம் தந்தையரைக் கொன்றும், அரசர்களைக் கொன்றும், சொந்த சகோதரர்களைக் கொன்றும், அரச பதவிக்கு வந்த கசப்பான வரலாறுகள் சர்வ தேசங்களைப்போல இலங்கையிலும் உண்டு.
நறுமணப்பொருள்களால் ஈர்க்கப்பட்டு, ஐரோப்பியர்கள் இங்கு வந்த போது கொழும்பை உள்ளடக்கிய கோட்டை ராஜியம் (இந்தக் கோட்டையை ஏற்படுத்தியவன் அழகுக்கோன் என்ற தமிழன்), கண்டி ராஜியம், யாழ்ப்பாண ராஜியம் என மூன்றாகப் பிரிந்திருந்தது. இவற்றில் யாழ்ப்பாண ராஜியம் எப்போதும் தமிழர்கள் வசமே இருந்தது. கோட்டையையும் கண்டியையும் தமிழர்களும் சிங்களவர்களும் மாறி மாறி ஆண்டு வந்திருக்கிறார்கள்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் சந்தித்த டொன் லொரேங்கோ டி அல்மேதா குழுவினரைத் தொடர்ந்து சாரைச் சாரையாக இயற்கை வளம் கொழித்துக்கொண்டிருந்த இலங்கை நோக்கிக் கப்பல்கள் வர ஆரம்பித்தன. வியாபார ஆசை, நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. கோட்டே (கொழும்பு) மன்னன் தர்மபால பெரிய பண்டாரா தனக்கு வாரிசு இல்லாததால், கோட்டே ராஜியத்தை 1580இல் போர்த்துக்கீசிய மன்னருக்கு உயில் எழுதிவைக்க, 1897இல் அவர் இறந்தபின் கோட்டே நேரிடையாகப் போர்த்துக்கீசியர்கள் வசமானது. அடுத்து நடந்த உள்நாட்டுப் போர்களின் போது, கண்டி ஆட்சியாளர்கள் டச்சு கிழக்கிந்திய கம்பெனியிடம் உதவி கேட்க, ஊர் இரண்டு பட்டால் வந்தேறிகளுக்குக் கொண்டாட்டம் தானே? ஒண்ட வந்த வீட்டு நெய்யை எடுத்து தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். 1638இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகப் போர்த்துக்கீசியர் வசமிருந்த பகுதிகள் ஒல்லாந்தர் பக்கம் வந்தது. 1796இல் ஒல்லாந்தர் ஆங்கிலேய கப்பல்களைத் திரிகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால், மீண்டும் போர்… 1801இல் ஆங்கிலேயருடன் செய்த ஒப்பந்தத்தின்படி ஒல்லாந்தர் ஆங்கிலேயருக்கு இலங்கையைத் தாரை வார்த்தனர். இப்படி ஊர்த் தேங்காயை எடுத்து ‘கொடுத்துக் கொடுத்து’ விளையாடியதால், இலங்கை நிரந்தரமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
133 வருட ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின், 1948ஆம் ஆண்டு கிடைத்த சுதந்திரம்கூட அவ்வளவு சுகமான வாழ்வை மக்களுக்குத் தந்துவிடவில்லை. அதன்பிறகே தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் வெளிப்பட ஆரம்பித்தன. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான வரலாறு, பண்பாடு, வணிகம், அரசியல் போன்ற பல்முனைத் தொடர்புகளால் இறுகப் பின்னப்பட்டது. இவ்வுறவு தொன்மையானது ஆனால், நெருடலானது, சிக்கலானது. அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் எனக் கொஞ்சம் கொஞ்சமாக இரு இனத்தவருக்குமிடையே உரசல் தொடங்கியது. 1958லேயே இனக்கலவரங்கள் நிகழத் தொடங்கிவிட்டது. எங்கு அடக்குமுறையும் ஒடுக்கலும் இருக்கிறதோ, அங்கு கிளர்ச்சியும் விடுதலைப் போராட்டமும் தன்னிச்சையாக எழும் என்ற வரலாற்று உண்மைக்கு இலங்கையும் தப்பவில்லை.
இத்தீவின் பெரும்பான்மையினராக உள்ள சிங்களவர்கள், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சிங்கள மொழியைப் பேசுகின்றனர். சிங்களம் மட்டுமே இந்நாட்டின் அரச கரும மொழி என்ற ‘தனிச் சிங்களச் சட்டமே’ அங்குள்ள பிரச்னைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது என்கின்றனர் எனது இலங்கைத் தோழமைகள். “அரசியலமைப்பு இனப்பாகுபாடு காட்டுவதில்லை, தமிழர்கள் உயர் பதவிகளில் அமர முடியும்” என்றே இலங்கை சட்டங்கள் கூறுகின்றன. ஆனால், இந்த ஏட்டுச் சுரைக்காய்கள் தமிழர்களின் கறிக்கு உதவவில்லை. ஏனெனில், இலங்கை அரசியல் சட்டத்தில் முதல் மொழியாகச் சிங்களமும் முதல் மதமாக புத்த மதமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதனால், அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஓர் இனத்தின் இருப்புக்கு, உரிமைக்கு அடிப்படையாக அமைவது மொழி தானே?
1956இல் சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கிய சட்டம், சிங்கள பேரினவாத ஆட்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இனவாத பாகுபாடிற்கான முதல் கல். அதன்பின் 1972இல் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் குடியரசு அரசியல் அமைப்பும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான தரப்படுத்தல் நடைமுறையும் அடுத்தடுத்த கற்களை அடுக்கி இரு இனத்தவருக்குமிடையே மிகப்பெரிய சுவரை எழுப்பியது.
சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் உருவெடுத்தது. தொடர்ச்சியான போராட்டங்கள் 1983 க்குப் பின்னர் உள்நாட்டுப்போராக மாறியது. தமிழர்கள் கேட்ட, தமிழ் தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல, அடையாளத்துக்கான போராட்டம் என்பதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகநாடுகள்கூட புரிந்துகொள்ளவில்லை.
மொழிப்பிரச்னை, இனப்பிரச்னையாகத் திட்டமிட்டு மடைமாற்றப்பட்டது. இனவாதம் ஒரு வலிய அரசியல் ஆயுதமாக விருத்தியடைந்தது. இதை அரசியல்வாதிகள் மேலும் மேலும் ஊதி ஊதிப் பெருக்கினர். சாதி, மதம், இனம், மொழி இவைதானே எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகள் பிழைப்பிற்கான வழி! இன வேறுபாடு , இன வெறியாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு தமிழரின் தவறும் அந்த இனத்தின் தவறாகவும் ஒவ்வொரு சிங்களரின் தவறும் அந்த இனத்தின் தவறாகவும் காட்டப்பட்டது. “தமிழர்களுக்குத் தமிழ்நாடு இருக்கிறது, எங்களுக்கு உலகில் எவர் உண்டு” என்கின்ற வாசகம் சிங்களத்தில் பிரபலமாகியது.
இலங்கை அரசு மகா சங்கத்தினருடன் கைகோத்து கையாண்டு வந்த தீவிர ‘சிங்கள பௌத்த தேசியவாதம்’ என்ற கருத்தியலால், இனக்கலவரங்கள், போராட்டம், யுத்தம், வதைமுகாம்கள், அடையாள அழிப்பு என ஓர் அழகிய தேசத்தின் முகம் சிதைக்கப்பட்டது. தமிழர் விரோத இனவாத யுத்தத்தின் வெம்மை மானுடத்தை அழித்துத் தீர்த்தது, பொருளாதாரத்தை குட்டிச்சுவராக்கியது.
மதவாதத்தின் பிடியில் சிக்கி, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இலங்கை அரசியலின் வெம்மை எப்போதும் சுட்டெரிப்பது அதன் மக்களைத் தான். ஆட்சியாளர்களுக்கு இருக்கவே இருக்கிறது சொகுசு தீவுகளும் உல்லாச வாழ்க்கையும்.
(தொடரும்)
படைப்பாளர்:
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.