வெண்பா வேந்தன் பள்ளியில் லஞ்ச் டைம்

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே பெஞ்சில் அமர்ந்து சாப்பிடலாம். நான் – மீட்டேரியன்ஸ் தரையில்தான் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது பள்ளியின் விதி.

பிரசன்னா தனது தயிர்சோற்றைப் பிரித்தான். அவனுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகளே மூக்கைச் சுளித்தார்கள். “என்னடா இவ்ளோ புளிச்சிருக்கு? வீச்சம் தாங்கலை!”

வெண்பாவுக்குக் கடுங்கோபம் வந்தது. ”ப்ரசன்னா! வா வந்து என் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிடு.”

”இல்ல வெண்பா வேண்டாம். ரூல்ஸ் படி நான் தரையிலதான் உட்காரணும்.”

”ஆமா வெண்பா. நம்ம ஸ்கூல்ல ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். மீட் சாப்பிடாதவங்க பெஞ்ச்ல உட்காரக் கூடாதுன்னு. அதுவும் இவன் தயிர் சோறு.”

“நான்சென்ஸ். இந்த ரூல் ரொம்பத் தப்பு. என்ன சாப்பிட்டா என்ன? அவனுக்குத் தயிர் பிடிச்சிருக்கு சாப்டுறான். உனக்கு மீன் குழம்பு பிடிச்சிருக்கு நீ சாப்டுற. தயிர மட்டும் ஏன் நாத்தம்னு சொல்றீங்க? “

அவள் சொல்வதை முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தாலும் வெண்பா மீது இருக்கும் மரியாதையால் பிரசன்னாவை தங்களுடன் அமர அனுமதித்தார்கள்.

கூச்சமும் நன்றியுமாய்ப் பிரசன்னா அவர்களுடன் பெஞ்சில் அமர்ந்தான்.

“மீன் சாப்டுப் பாக்குறியாடா?” என்று அன்புடன் கேட்டாள் வெண்பா.

ஆசையுடன் அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டான் பிரசன்னா.

எல்லாரும் ஹேய் என்று ஆர்ப்பரித்தார்கள்.

“இனி நீ தரைல உட்கார வேண்டாம்டா. யூ ஆர் அ மீட்டேரியன். கங்கிராட்ஸ்”

கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் சிரித்த பிரசன்னாவின் முகத்தில் நம்பிக்கைக் கீற்று தெரிந்தது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.