அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை.
கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன் வந்துவிட்டது. அதற்குள்ளே விடிந்துவிட்டதா? நான் இன்னும் தூங்கவே இல்லையே. தாய் ஆனதில் இருந்து தூக்கத்தையே தொலைத்துவிட்டேனே.
புதிய தாய்மார்களுக்கு உண்மையிலேயே தூங்க நேரம் இல்லையா?
பிறந்த புதிதில் பெரும் பொழுதுகளில் தூங்கத்தான் செய்தது குழந்தை. அப்பொழுது நம்மைப் பார்க்க வருபவர்கள் சொல்லும் அறிவுரை, குழந்தை தூங்கும்போது நீயும் உறங்கிக் கொள் என்று.
ஆனால் நம்மால் அந்த நேரத்தில் தூங்க முடிவதில்லையே எதனால்?
உடல் சோர்வாகத்தான் இருந்தது. கண்ணில் தூக்கம் அதிகமாகி எரிச்சலாக இருந்தது. பகலிலும் தூங்கவில்லை. நேரம் பன்னிரண்டைத் தாண்டிவிட்டது
கண்களை மூடித் தூங்க முயற்சி செய்தேன். ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் பெருக்கெடுத்து ஓடின.
நான் அம்மா ஆகிவிட்டேனா… என்னால் நம்ப முடியவில்லையே… ஒரு குழந்தை வளர்த்து ஆளாக்கும் அளவிற்கு எனக்குப் பக்குவம் வந்துவிட்டதா?
பக்கத்தில் ஒரு குட்டி உயிர் படுத்துக்கொண்டிருக்கிறது. தூக்கத்தில் தெரியாமல் மேலே கை போட்டுவிட்டாள். ஐயோ பாவம் என் பிள்ளை.
அவளை விட்டுத் தள்ளியும் படுக்க முடியாதே, என் அரவணைப்பு அவளுக்கு வேண்டும்.
என்னென்னவோ யோசனைகளில் தூக்கம் என்னைத் தீண்டவே இல்லை.
மணி ஒன்று.. இரண்டு.. மூன்றை நெருங்கியது.
மெல்ல என்னை மீறித் தூக்கம் சொக்கியது.
“க்குவா.. க்குவா.. க்குவா…”
மனம் எழச் சொன்னது. உடல் தூக்கத்திற்கு கெஞ்சுகிறது.
இவ்வளவு நேரம் கழித்து இப்போதுதான் உறங்கினேன் அதற்குள் மீண்டும் எழ வேண்டும்.
எழுந்து அமர்ந்து அவளைத் தூக்கி வைத்து பால் கொடுத்தேன். முதல் சில மாதங்களுக்கு நிச்சயம் படுத்துக்கொண்டே பால் கொடுப்பதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு நானும் உறங்கினேன்.
சில நிமிடங்களிலேயே மீண்டும் அழுகைச் சத்தம். எழுந்தேன் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தேன். அழுகை நிற்கவில்லை. நடந்துகொண்டே தட்டிக் கொடுத்தேன். அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் உறங்கினாள். மீண்டும் அழுதால் என்னை எழுப்ப வேண்டாம், முடிந்த வரை சமாளியுங்கள் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு உறங்கினேன்.
ஐந்து மணிக்குச் சொல்லிவிட்டுத் தூங்கினேன் ஆறு மணிக்கு மீண்டும் சத்தம் கேட்டு எழுந்தேன்.
“எவ்ளோ நேரமா தட்டிக் கொடுத்தேன். பசிக்கு அழறாளோ என்னவோ தூங்கவே மாட்டேங்குறா” என்று அம்மா என்னிடம் குழந்தையைக் கொடுத்தார்.
நானும் விழித்துக்கொண்டேன்.
அவள் தொடர்ந்து மூன்று மணி வரை தூங்கும் போது என்னுடைய மனநிலை மாற்றங்களால் என்னால் தூங்க முடியவில்லை. எனக்குத் தூக்கம் வரும்போது அவள் என்னைத் தூங்கவிடவில்லை.
இரவில் மூன்று மணி நேரம்கூடத் தூங்காததால் நாள் முழுவதும் சோர்வாகவே இருந்தது.
இனி இப்படி இருக்கக் கூடாது, நானும் நேரம் கிடைக்கும் போது தூங்க வேண்டும் என நினைத்தேன்.
அடுத்த நாள் இரவு பன்னிரண்டு மணி.
நான் ஒரு பெண்ணைப் பெற்ற தாய் ஆகிவிட்டேனா!
எப்படி என் குழந்தையை வளர்க்கப் போகிறேன் என்கிற கேள்வியும் சிந்தனையும் எனக்குள் எழுந்தன.
என் மகளை அறிவோடும் நல்ல ஆரோக்கியத்துடனும் வளர்க்க வேண்டும். அவளை நன்கு படிக்க வைக்க வேண்டும். அவள் அறிவுக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவள் எந்தத் துறையில் சாதிக்க நினைக்கிறாளோ அதில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
அது சரி, அவள் விருப்பப்படும் படிப்பிற்காக வெளியூர் செல்ல நேர்ந்தால் என்ன செய்வது?
நானும் அவளோடு துணைக்குச் செல்வேன்.
அவள் அறிவையும் திறனையும் வளர்க்க நினைக்கும் என்னால் ஏன் அவளைச் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்க முடியவில்லை?
ஏன் அனுமதிக்கக் கூடாது? எது சரி, எது தவறு, எது நெறி என்பதை அவளுக்குள் அறிவாகப் புகுத்திவிட்டாள். அவளே சுயமாகச் சிந்தித்து யாரையும் சார்ந்து இல்லாமல் வாழட்டுமே.
என் கண்களில் வைத்து காக்கும் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? எப்படி அவளை நான் தனியாக வெளியே அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும்?
பாலியல் துன்புறுத்தலில் அச்சுறும் பெண்களின் நிலைமையை இன்னும் ஏன் நம்மால் மாற்ற முடியவில்லை? பெண் பிள்ளையின் பெற்றோராகத் தேவையற்ற யோசனைகள் வந்து என்னை வருத்தியது.
பாதுகாப்பு இல்லாத சூழலால் அவளைக் குடும்ப வாழ்க்கைக்குள் புகுத்திவிடுவேனோ? இத்தனை வயதிற்குள் கல்யாணம் முடிய வேண்டும், இத்தனை வயதிற்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பேர்பட்ட வாழ்க்கைக்குள் அவளையும் திணிப்பதா?
பெண் பிள்ளைகளை வளர்ப்பது இவ்வளவு கடினமானதாக இருக்கின்றதா? பெண் பிள்ளையின் தாய்கள் இன்னும் தங்கள் மகள்களை வளர்ப்பதில் இவ்வளவு சிரமங்களுக்கு உள்ளாகின்றனரா!
நேரம் அதிகாலை நான்கு மணி.
நான் மட்டும் ஏன் இந்த இரவில் அமர்ந்து இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது இதையெல்லாம் யோசித்து என்ன நிகழ போகிறது? திடமான மனதுடன் இருக்க வேண்டும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். கற்பனையாக ஒன்றை நினைத்துக் கொண்டு பயம் கொள்ளக் கூடாது. எப்படியோ மனதைத் தேற்றிக்கொண்டு தூங்குவதற்குள் அன்றும் விடிந்துவிட்டது.
இப்படிச் சில நாட்கள். பின் இரவில் அவள் செய்கைகளைக் கவனித்துக் கொண்டு இருப்பேன். ஏன் தூக்கத்தில் அவள் இப்படிக் குறட்டை விடுகிறாள் இது சரியா என்று இணையத்தில் தேடினேன். ஏன் அவள் இத்தனை முறை நீர் மாதிரி மலம் கழிக்கிறாள் அது சரியா என்று அதையும் இணையத்தில் தேடினேன்.
இப்படி ஏதேதோ பயங்களை இணையத்தில் தேடிப் பார்த்தேன். அதில் வரும் பதில்கள் மேலும் நம்மை வாட்டத்தான் செய்தன.
மருத்துவரிடம் கேட்டால் அவரே ஒன்றும் பிரச்னை இல்லை என்றுதான் கூறுவார். ஆனால் இந்த இரவில் இப்படி அமர்ந்து எதையாவது தேடிக்கொண்டிருக்க மனம் அலைகிறது.
பகல் நேரத்தில் தூங்கலாம் என்றால் அவளைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பகலில் தூங்க வைக்கப் பழகிய பின் அந்த நேரத்தில்தான் நான் என் சுய வேலைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
காலையில் பதினோரு மணிக்கு அவளைக் குளிக்க வைத்துத் தூங்க வைத்துவிட்டுதான் நான் குளிக்கச் செல்ல முடியும்.
குளித்து முடித்துச் சாப்பிட்டுவிட்டுத் துணிகளைத் துவைத்து முடித்து படுப்பதற்குள் தூங்கும் குழந்தை எழுந்தேவிடும்.
ஒரு சில நாட்களில் அவள் தூங்கும்போது தான் புத்தகம் படிக்கவோ வேறு ஏதாவது பிடித்த வேலைகளைச் செய்யவோ மனம் தூண்டும்.
“அவள் தூங்கும் போது தூங்காம ஏதாவது பண்ண வேண்டியது அப்புறம் தூங்கவே முடியலன்னு பொலம்ப வேண்டியது” என்பார்கள் வீட்டார்கள்.
அவள் விழித்திருக்கும் போது புத்தகம் படித்தால் ஏற்றுக்கொள்வார்களா? அப்புறம் நான் எப்பொழுதுதான் எனக்குப் பிடித்ததைச் செய்வது?
அவளுக்கு ஆறு மாதங்கள் ஆன பின் அவளுக்கான உணவு தயார் செய்ய அவள் காலையில் தூங்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். எளிய உணவு வகைகள்தான், ஆனால் அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்ய நேரம் எடுத்துக் கொண்டேன். ஒன்றை ஒதுக்கினால் இன்னொன்றைக் கொடுக்க அடுத்த உணவையும் தயார் செய்ய வேண்டும்.
நாட்கள் செல்ல செல்ல அவர்கள் கொஞ்சம் வளர்ந்து சேட்டைகள் செய்யத் தொடுங்கும் போது இரவில் தூங்க வைப்பதற்குள் நம் முழு சக்தியும் தீரும் அளவிற்குச் சோர்வாகிவிடும் உடல். அப்போதும் நாம் நினைத்த நேரத்தில் தூங்க முடியாது.
ஏன் எல்லாவற்றையும் பெரிதாகப் பேசுகிறாய்.. குழந்தை பெற்றால் என்ன.. கிடைக்கும் நேரத்தில் தூங்கலாம் என்கின்றனர் பலர்.
என்னால் மட்டும்தான் முடிவதில்லையோ எனக் குழப்பம் நேர்ந்தது.
“என்னை யாராவது தூங்குன்னு சொன்னா.. போய் நிம்மதியா போய்த் தூங்குவேன்டா. ஆனா யாரும் சொல்ல மாட்டிக்குறாங்க.. தூங்க நேரமும் கிடைக்க மாட்டிங்குது உன்னைலாம் தூங்க வெச்சா தூங்காம இவ்ளோ அடம்பண்ற” என்று பக்கத்து வீட்டு அக்கா தன் இரண்டு வயது மகனிடம் கூறியது என் காதில் விழுந்தது.
மனநிலை, சூழல், குடும்பத்தின் உதவி இதைப் பொறுத்து ஒவ்வொரு புதிய தாயின் தூக்கமும் வேறுபடலாம். ஆனால் பொதுவாகத் தாயான பின், வேண்டிய நேரத்தில் தூங்க முடியாமல் தவிப்பதுதான் நிஜம். ஒரு சில நாட்களில் அப்படி எப்போதாவது அரிதாக நேரம் கிடைக்கிறது. ஆனால், பெரும்பாலான நேரத்தில் தேவையான அளவிற்குத் தூங்க முடிவதில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
(தொடரும்)
படைப்பாளர்:

ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.