வழக்கம்போல் காலையில் எழுந்தும் பால் கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற சமையல் அறைக்குச் சென்றேன். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து ஒரு சத்தம்.

“சீக்கிரம் இங்க வா.. பாப்பாவ பாரு” என்று கணவர் பதற்றமாக அழைத்தார்.

சமையல் அறையில் இருந்து ஓடிவந்தேன். கணவரின் மேல் வாந்தி எடுத்திருந்தாள் மகள்.

எப்பொழுதாவது சளி இருக்கும்போது சற்றுப் பாலைக் கக்குவாள். இன்று அப்படி இல்லை. நேற்று சாப்பிட்ட சாப்பாட்டுடன் மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்திருந்தாள்.

ஒரு வயது மகள் இப்படி வாந்தி எடுத்ததில் எனக்கும் கணவருக்கும் பயமாக இருந்தது. அவளைத் தூக்கிக் கொண்டேன். வாயைத் துடைத்துவிட்டு, சுடு தண்ணீர் வைத்துக் கொடுத்தேன்.

நீரைப் பருகிய அடுத்த நிமிடம் மீண்டும் வாந்தி எடுத்தாள். குடித்த தண்ணீர் அப்படியே வெளியே வந்தது. எனக்குப் பதற்றம் அதிகரித்தது.

“சாப்பிட்டது ஏதோ சேரல.. அதான் இப்படி இருக்கா.. ஒண்ணும் இல்லை சரியா போய்டும்” என்று நாங்கள் பதறுவதைப் பார்த்த என் மாமியார் எங்களைத் தேற்றினார்.

என் மேல் படுத்துக்கொண்டவளை அப்படிச் சோகமாகப் பார்ப்பதில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஒரு மணி நேரத்தில் தண்ணீராக மலம் கழித்தாள். அவள் சாப்பிட்ட உணவு ஏதோ சேராமல் வயிற்றைக் கெடுத்திருக்கிறது என்று புரிந்தது.

சோர்ந்து போனவள் என் மேல் படுத்துக்கொண்டாள். நேற்று வரை சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தவள் இன்று இப்படி மயங்கி, தோள் மேல் படுத்திருக்கிறாளே… மனம் பதைபதைத்தது.

‘எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருக்க முடியுமா? ஏதோ ஒன்று சேரவில்லை, அதனால் வாந்தி எடுக்கிறாள். சோர்ந்து போகிறாள். அவள் மட்டும் என்ன பொம்மையா ஒரே மாதிரியே இருக்க? மனித உடல் என்றால் இதெல்லாம் வரத்தானே செய்யும்’ என்றெல்லாம் மனம் சொல்லும்.  ஆனால், இதை எதையுமே அறிவு ஏற்றுக்கொள்ளாது மகள் விஷயத்தில்.

பொருட்களைத் தூக்கித் தூக்கிப் போடுவாளே.. கைபிடித்து நடக்க அடம் பிடிப்பாளே.. கீழே அழைத்துச் செல்லச் சொல்லி கை நீட்டுவாளே.. அப்போதெல்லாம் ஏன் இவள் இவ்வளவு அடம்பிடிக்கிறாள் என்று நினைத்தேன். எழுந்து எழுந்து அவள் பின் ஓடச் சிரமப்பட்டேன்.

இன்று இப்படி எதுவும் செய்யாமல் படுத்திருப்பதைப் பார்க்கும்போது கொஞ்சமாவது அடம் பண்ணு கண்ணே எனக் கெஞ்சத் தோன்றியது.

அன்று மாலை வரை அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் மாலையில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருந்து வாங்கிவந்தோம்.

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் என்னுடைய பாலை மட்டும் குடித்துவிட்டு உறங்கினாள்.

நேற்று அவள் கலைத்துப் போட்ட பீரோவின் கீழ் அறை துணிகளை மடித்துக் கொண்டே அவள் இப்படி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவள் உறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த நாளும் அப்படியதான் இருந்தாள். மூன்று வேளையும் மருந்து ஊற்றினோம். ஒன்றும் சாப்பிட முடியவில்லை. இப்படி என் பொண்ணே சாப்பிடாமல் இருக்கிறாளே, நான் மட்டும் எப்படிச் சாப்பிட? மகள் பாசம் உணவின் மீது வெறுப்பைத் தந்தது. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பதைக்கூட மறக்கச் செய்தது.

மூன்றாவது நாள் காலையில்தான் கஞ்சி குடித்தாள். வாந்தியும் நின்றது. வயிற்றுப் போக்கும் குறைந்தது. இரண்டு நாட்களுக்குப் பின் சிரித்தாள். அதற்குப் பின்தான் என்னால் சாப்பிட முடிந்தது.

எப்பொழுது நான் இந்த அளவிற்கு மகளைச் சார்ந்தவள் ஆனேன்?  உண்மையில் பிறந்த முதல் நாளில் இருந்தே என்னை இப்படி மாற்றிவிட்டாள்.

பிறந்த முதல் சில மாதங்களில் ஏன் அழுகிறாள் எனத் தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும் நாட்களில் எனக்கு நெஞ்சே வலி எடுக்கும்.

ஏன் அழுகிறாள், எங்கு வலிக்கிறதோ, என்ன செய்கிறதோ தெரியவில்லையே எனப் பதறுவேன். தொடர்ந்து அழுதால் பயம் கொள்வேன். எப்போது அவள் வாய்திறந்து வலிக்கிறது எனச் சொல்வாள், அதுவரை எப்படிச் சமாளிப்பது?.

‘என்ன காயம் ஆன போதும்

என் மேனி தாங்கிக் கொள்ளும்

உந்தன் மேனி தாங்காது செந்தேனே’

இப்படித்தான் நானும் மாறிப்போனேன். எனக்கு ஏதாவது வந்தால்கூடப் பரவாயில்லை, நான் தாங்கிக்கொள்வேன். அவளுக்கு ஒன்று என்றால் அவளைப் பார்த்து மனதளவில் நான் படும் துன்பம் ஏராளம்.

போன மாதம்கூட அவளுக்குச் சளி காய்ச்சல். விடிய விடிய காய்ச்சலின் அளவு எப்படி இருக்கிறது என்பதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே விழித்திருந்தேன். நெஞ்சு சளியால் மூச்சுவிடச் சிரமப்படுகிறாளா என்பதையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அடுத்த நாள் காலையில் சற்றுக் காய்ச்சலின் அளவு குறைந்து காணப்பட்டது. நேற்றே அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து இருந்ததால் காலையில் அவள் நிலை தேறியதும் அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.

ஆனால், விடிய விடிய தூங்காததில் கண்களையே திறக்க முடியவில்லை. கணினியைப் பார்க்கவே முடியவில்லை. கண்கள் எரிச்சலாக இருந்தது. ‘என்னை ஏன் இவ்வளவு கஷ்டப் படுத்துகிறாய் கொஞ்சம் எனக்கு ஓய்வு கொடேன்’ எனக் கெஞ்சின கண்கள்.

என்னால் அதற்கு உதவ முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கண்களைத் திறந்து வேலை செய்தேன்.

இப்படிப் பார்த்துக்கொள்வது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் பண்டிகை விசேஷ நாட்களில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால்?

நாளை பண்டிகைக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் உடல்நிலை சரியில்லாமல் போகும் போது அனைத்தின் மேலும் கோபம் வரும். எதுவும் பிடிக்காமல் போகும்.

அதெப்படி விசேஷ நாட்களாகப் பார்த்து என்னைக் கஷ்டப்படுத்த இந்த இயற்கையால் முடிகிறது?

இதில் மற்றவர்கள் அறிவுரை வேறு, “நல்ல நாள் அதுவுமா பிள்ளைக்கு உடம்பு சரியில்லாம வெச்சிருக்கியே கொஞ்சம் சளியா இருக்கும் போதே மருந்து ஊத்திருக்கலாம்ல?”

கொஞ்சம் சளிக்கு மருந்து கொடுக்க வேண்டுகிறேன் என்றால் முன்னூற்றி அறுபத்தி ஐந்து நாட்களும் அவளுக்கு மருந்தேதான் கொடுக்க வேண்டும்.

சளியும் இருமலும் அதிகரிக்கும் போது மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தந்து கொண்டு இருந்தாலும் உடனே குறையாது.  ஒரு சில நாட்களில் இன்னும் அதிகரித்து காய்ச்சல் வந்துதான் உடல்நிலை சரியாகும். இதில் என் கையில் என்ன இருக்கிறது?

ஆரம்பித்ததில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். போகப்போகச் சரியாகிவிடும். ஐந்து வயது வரை குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். கவனமாக இருந்தாலும் ஐந்து வருடங்கள் இம்மாதிரி சூழலை எப்படிச் சமாளிப்பது?

இந்த முறை மூன்று நாட்களாகக் காய்ச்சல் இருந்தது, மருத்துவரைப் பார்த்து வந்தோம். மருந்து கொடுத்தும் குறையவில்லை. நான்காம் நாளும் சோர்ந்தே இருந்தாள். மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

“காய்ச்சல் குறையவே இல்லையா.. பாப்பாவும் பாக்க கொஞ்சம் வெளிறிய மாதிரி இருக்கா.. ப்ளட் டெஸ்ட்லாம் எடுக்கணும். அட்மிட் பண்ணுங்க.. லேட் பண்ண வேணாம்.. காய்சசலும் குறைல.. மானிட்டர் பண்ணணும்” என்றார் மருத்துவர்.

நானும் என் கணவரும் திகைத்து நின்றோம்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.