பார்வதிக்கு 16 வயதில் திருமணம். அடுத்த நான்கு வருடங்களில் மகளும் மகனும் பிறந்தனர். கணவனுக்குச் சந்தேகக் குணம். எப்போதும் வார்த்தைகளால் வதைத்துக்கொண்டிருப்பார். திடீரென்று கையில் இருந்த ஆறாவது விரலை ஆபரேஷன் மூலம் அகற்றினார். அதன் பிறகு அவரால் டைப்ரைட்டரில் வேலை செய்ய முடியவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்தன. வேலையை ராஜினாமா செய்தார். அத்துடன் மிச்சம் இருந்த நிம்மதியும் அந்தக் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டது. கையில் இருந்த பணம் கரைந்தது. ஊரிலிருந்த நிலத்தை விற்றார். பார்ப்பவரிடம் எல்லாம் கடன் வாங்கினார். இப்படி எட்டு ஆண்டுகள் ஓடின. ஒருநாள் உறவினர்களின் தொடர்பிலிருந்து மறைந்து போனார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பார்வதியின் பிறந்த வீட்டினர் செய்த பெருமுயற்சிக்குப் பிறகு அந்தச் செய்தி கிடைத்தது.

ஓர் அரிசி மில்லில் பார்வதியையும், குழந்தைகளையும் அடகு வைத்திருந்தது தெரிந்தது. எலும்பும் தோலுமாக இருந்த மூவரையும் மீட்டு, தன் வீட்டுக்கு அழைத்து வந்தார்பார்வதியின் சகோதரர். மூன்று மாதங்களில் அவர்களின் உடலும் உள்ளமும் தேறின. குழந்தைகள் இருவரையும் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார் பார்வதி. அவர் தம்பி வீட்டில் இருந்துகொண்டார். நீண்ட காலங்களுக்குப் பிறகு நிம்மதி திரும்பி வந்திருந்தது.

ஒருநாள் மகள் படிக்கும் பள்ளியில் இருந்து தகவல் வந்தது. மயங்கி விழுந்த பூங்குழலியை, மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். பல பரிசோதனைகளுக்குப் பிறகு உடனடியாக, இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். 18 ஆண்டுகளுக்கு முன் அந்த சிகிச்சை மிகவும் கிலியை ஏற்படுத்தும் விஷயமாகவும் நிறைய பணம் தேவைப்படும் விஷயமாகவும் இருந்தது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள் பூங்குழலி.

“தைரியமா இருங்கம்மா. நான் இருக்கேன். பத்திரமா திரும்பி வருவேன்…’
சொன்னது போலவே குணமாகி, திரும்பி வந்தாள் பூங்குழலி. ஒன்றிரண்டு மாதங்கள் மட்டும்தான் கடின வேலைகள் செய்யாமல் இருந்தாள். அடி குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது, குடத்தைத் தூக்குவது, கிணற்றிலிருந்து நீர் இறைப்பது, துணிகளைத் துவைப்பது என்று பம்பரமாகச் சுழல்வாள். அம்மாவுடன் சேர்ந்து ருசியாகச் சமைப்பாள். ஒருபோதும் சோர்ந்து இருக்க மாட்டாள். தனியாக மருத்துவமனைக்குச் சென்று, ஒருநாள் தங்கி, கை கட்டியை அகற்றிவிட்டு வந்தாள். விட்ட படிப்பைத் தொடர்ந்தாள்.

வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் அவளை, தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட மனுஷியாக மாற்றியிருந்தன. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் சென்றாள். தம்பியும் வேலைக்குப் போனான். பார்வதி அண்ணனிடமிருந்து பிரிந்து, தனிக் குடித்தனம் சென்றார். பிள்ளைகளின் வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குடும்பம் முன்னேறிக்கொண்டு வந்தது.

பூங்குழலி வயதை ஒத்த பெண்களுக்குத் திருமணம் நடக்கும்போது, அந்தத் தாயின் உள்ளம் தன் பெண்ணுக்கும் இப்படி நடக்காதா என்று ஏங்கும்.
“ஏம்மா, நீங்க கல்யாணம் பண்ணிக் கஷ்டப்பட்டது போதாதா? அப்பன்னு ஒருத்தனால பட்ட காயமே இன்னும் ஆறலை. அதுக்குள்ள புருஷன்னு ஒருத்தன்கிட்ட மாட்டிக்கணுமா? எனக்குக் கல்யாணமே வேணாம். நாம இப்படியே சந்தோஷமா இருக்கலாம். எனக்குப் பத்து வருஷம் வரை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு டாக்டர்கள் சொல்லிருக்காங்க… மத்தவங்க மாதிரி நம்ம இல்லை. அதைப் புரிஞ்சுக்குங்க..’

பூங்குழலியின் சுறுசுறுப்பையும் பொறுப்பையும் பார்த்து பல வரன்கள் வீடு தேடி வந்தன. இதய அறுவை சிகிச்சை செய்தவள் என்று அறிந்தவுடன் வந்த வேகத்தில் மாயமாக மறைந்தன. பார்வதியும் திருமணப் பேச்சைப் பேசிப் பேசி ஓய்ந்துவிட்டார். 12 வருடங்கள் கழிந்திருந்தன. பூங்குழலிக்கு இப்போது 30 வயது.

அன்று பூங்குழலி ஓர் ஆணுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். பார்வதிக்கு ஒன்றும் புரியவில்லை.
“அம்மா, இவர் குமரேசன். ரயில்வேயில் வேலை செய்யறார். என் பிரெண்ட் ரேணுகா மூலம்தான் பழக்கம். ரொம்ப அன்பானவர். மனைவி ஹார்ட் ப்ராப்ளத்துல இறந்துட்டாங்க. தனியா இருக்கார். அம்மா, அப்பா எல்லாம் ஊர்ல இருக்காங்க. அவரே சமைச்சு சாப்பிடறார்.’ பதில் பேசாமல் டீ போட்டுக் கொடுத்தார் பார்வதி. இயல்பான பேச்சு, மரியாதை, உதவும் குணம் எல்லாம் சேர்த்து குமரேசன் மேல் பார்வதிக்கும் நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் பெண் கேட்டு வந்தார் குமரேசன்.

‘அம்மா எனக்கு நாற்பது வயசு. நல்லா சம்பாதிக்கிறேன். பூங்குழலிக்கு நல்ல கணவனா இருக்க விரும்பறேன். நீங்க என்ன சொல்றீங்க?’
‘என் மகளுக்குக் கல்யாணம்னா எனக்கு சந்தோஷம்தான். என்னவோ கொஞ்சம் பயமாவும் இருக்கு…’
“உங்க வீட்டுக்காரர் மாதிரியே எல்லாரும் இருக்க மாட்டாங்கம்மா. பூங்குழலியோட அத்தனை கஷ்டமும் எனக்குத் தெரியும். அவளை அன்பா கவனிச்சுக்கிறதுக்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க.’

பூங்குழலியின் உறுதியும் குமரேசனின் அன்பும் பார்வதியைச் சம்மதிக்க வைத்தன. வடபழனியில் திருமணம் எளிய முறையில் நடந்தது. இருபது நாள்கள் கழித்து..
“எப்ப வேலையில் ஜாயின் பண்றீங்க?’
“இப்ப என்ன அவசரம்? நீதான் சம்பாதிக்கிறீயே?’
“என்ன சொல்றீங்க? புரியலை..’
“இங்க பாரு குழலி, எனக்கு வேலை கிடையாது. வேலைக்குப் போகவும் விருப்பம் இல்லை. ஹார்ட் ஆபரேஷன் பண்ணின உனக்கு நான் வாழ்க்கை கொடுத்திருக்கேன். அந்தத் தியாகத்துக்குச் சம்பாதித்துப் போடு.’
அந்த நிமிடம் குமரேசனுக்குப் பதில் அவள் அப்பாவே அங்கே குரூரமாகச் சிரித்துக்கொண்டிருப்பது போல இருந்தது பூங்குழலிக்கு.

வெட்டியாக டிவி பார்த்துப் பொழுதைக் கழித்தான். பூங்குழலியின் சம்பளம் முழுவதையும் பறித்துக்கொண்டான். குடித்துவிட்டு நாள் முழுவதும் தூங்கினான். அடிக்க ஆரம்பித்தான். அவன் பெற்றோருக்கு போன் செய்தபோது, அவன் எங்கள் பிள்ளையே கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அம்மாவுக்குத் தெரிந்தால் தாங்க மாட்டார் என்று அத்தனையும் பொறுத்துக்கொண்டாள் பூங்குழலி. வீட்டில் இருந்த பொருள்கள் காணாமல் போக ஆரம்பித்தன. ஒருநாள் அவனே மாயமானான். 6 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் பூங்குழலி.

மீண்டும் தனிமைப்பட்டார்கள். இந்த முறை அவர்களே விரும்பி உறவினர்களை விட்டு விலகிச் சென்றனர். பிரசவம் சிக்கலாக இருக்கும் என்பதால் பூங்குழலி அரசாங்க மருத்துவமனையில் எட்டாவது மாதத்தில் சேர்ந்தாள். மகனும் வீட்டை விட்டுச் சென்றுவிட்டதால், பார்வதி வேலைக்குப் போனார். தன்னந்தனியாக இருந்து, குழந்தை பெற்று வீடு வந்தாள் பூங்குழலி. இரண்டு மாதங்களில் அம்மாவை வீட்டில் வைத்துவிட்டு, அவள் வேலைக்குச் சென்றாள். மன உளைச்சலும் ஓயாத உழைப்பும் வலிப்பு நோயைக் கொண்டு வந்துவிட்டது பூங்குழலிக்கு. மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, நம்பிக்கையோடு இரண்டு பேருந்துகள் மாறி தொலைவில் உள்ள அலுவலகத்துக்குச் சென்று வந்தாள் பூங்குழலி.

இப்போது மகனுக்கு 8 வயது. தன் தந்தையைப் போலோ, கணவனைப் போலோ மகன் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் பூங்குழலி. மகனுக்குப் படிப்புடன் அன்பு, அக்கறை, கஷ்டம், வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தாள்.

கவனிக்காமல் விட்ட வயிற்றுவலி ஒருநாள் பெரிய இடியாகப் பார்வதியைத் தாக்கியது. ஒருமாதம் அம்மாவை அருகில் இருந்து கவனித்த பூங்குழலியை விட்டுச் சென்றுவிட்டார் பார்வதி. வீட்டு வேலைகளையும் செய்து, அலுவலகத்துக்கும் செல்ல பூங்குழலியின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. மகனை கவனிக்கவும் ஆள் இல்லை.

“நானும் மகனும் ஏதாவது ஆசிரமத்தில் சேர்ந்துக்கறோம். அங்கே வேலை செஞ்சிக்கறேன். யாரையும் கஷ்டப்படுத்த விருப்பலை. எவ்வளவோ கஷ்டத்தைத் தாங்கின எனக்கு அம்மாவின் இழப்பு நிலைகுலைய வச்சிருச்சு. நல்ல ஆண் மகனா என் மகனை வளர்த்து ஆளாக்கிடணும்னு ஒரே ஒரு லட்சியம்தான் இருந்துச்சு. இன்னும் இருக்கு. என் கணவன் மாதிரியோ, எங்கம்மா கணவன் மாதிரியோ இல்லாமல், ஒரு நல்ல மனுஷனா இவனை வளர்க்கணும்’ என்ற பூங்குழலி, மகனைப் பிடித்தபடி நடந்தாள்.

முந்தைய பகுதி இங்கே:

கட்டுரையாளர்:

சஹானா

பெண்கள், பெண்கள் பிரச்னைகள் குறித்துப் படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். கடந்த 15 ஆண்டுகளாக எழுதி வருகிறார். குங்கும் தோழியில் ‘உலகை மாற்றிய தோழிகள்’, ‘தடம் பதித்த தாரகைகள்’ ஆகிய தலைப்புகளில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வாசகர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர்கள் சூரியன் பதிப்பக நூல்களாக வெளிவந்துள்ளன. ‘வினு விமல் வித்யா’ உள்பட பேசும் பெண் கேரக்டர்களை உருவாக்கி பெண் உலகம் சார்ந்து எழுதி வருகிறார்.