ராசாத்தியின் கதை – 7
ராசாத்தி தன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, சித்தி, சித்தப்பா, சித்தப்பாவின் பிள்ளைகள் இவர்களோடு குன்னாங்கல்லுக்குப் பூப்பறிக்கக் கிளம்பினாள்.
போகும் வழியெல்லாம் தோட்டத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டே சென்றாள். வழியில் திடீரென்று பாட்டி ஞாபகம் வர பாட்டியைத் தேடினாள். கூட்டத்தின் கடைசியில் பாட்டி வந்து கொண்டிருந்தார். பாட்டியின் அருகில் ஓடிச் சென்று, பாட்டியின் கை கோத்து அவரோடு நடந்து வர ஆரம்பித்தாள் ராசாத்தி.
தோட்டம் ஒன்றில் கரும்பச்சைத் தோகைகளோடு கரு நாகம் போல நீண்டு வளர்ந்திருந்தன கரும்புகள். ஆளுக்கொரு கரும்பு ஒடித்துச் சாப்பிட்ட வண்ணம் சென்றனர். ராசாத்தியும் பாட்டியும்கூட கரும்பை கடித்துச் சாப்பிட்டுக்கொண்டே சென்றார்கள்.
“பாட்டி கரும்பு கடிக்கறளவுக்கு உன்னோட பல்லு இன்னும் நல்லா இருக்குல்ல?”, என்று கேட்டாள் ராசாத்தி.
“ஆமா… அந்த காலத்துல நாங்க தின்ன பண்டம் அப்படி. நீங்களுந்திங்கறீங்களே எங்க… இந்த வெள்ளைச் சோறு… இதுல என்ன இருக்குது?” என்றார் பாட்டி.
“சரி அதவுடுங்க, நீங்க எத்தன வருஷமா இந்தக் குன்னாங்கல்லுக்கு வர்றீங்க பாட்டி?”
“நானு… என்ன பாட்டன் போய் கொஞ்ச வருஷங்கழிச்சுதான் வாரேன்”
“பாட்டன் இருக்கும் போது நீங்க வந்தது இல்லையா?”
“இல்ல ராசாத்தி, ஊர்ல இருக்குற அம்புட்டுச் சனமும் போகும். அந்தன்னிக்கி ஊரே புது துணி போடறதும் பூவப் பொறிக்கறதும் கட்டறதும் பவடரு போடறதும் அப்படி இருப்பாளுக. எனக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லை…”
“சரி நீ ஏம்போனதில்லை?”
“எனக்கு வூட்டவுட்டு வெளியே போவமுடியாது. பண்டம் பாடிய பாக்கோணும். மருமவன்களுக்கு வடை பாயாசத்துடன் சோறு செய்யோணும். இப்படி நாள் பூரா வேலை இருக்குமே…”
“பாவம் பாட்டி நீ! சின்னப் புள்ளையா இருக்கும்போது கூட நீ அங்க போனதில்லையா?”
“பாட்டனக் கல்யாணம் முடிச்சதுக்கப்புறம் பாட்டன் கூட கூட்டிட்டுப் போவலையா?”
“கல்யாணம் முடிச்சதுக்கப்புறம் ஒரு தடவை கல்யாணமான புதுசுல ஊரே போகுதே நாமுளு போவோமேன்னு உங்க பாட்டன்கிட்டக் கேட்டேன். அந்த மனுஷன் என்னமோ தெரியல, கூட்டிட்டு போறேன்னு சொல்லிபுட்டாரு. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. வேலையெல்லாம் சட்டுப்புட்டுன்னு முடிச்சுட்டு கலியாணத்துக்கு எடுத்த சேலையக் கட்டிக்கிட்டு வெளியில் வந்து நிற்கிறே… சனங்க சாரை சாரையாக மாட்டு வண்டியில் போனாங்க. நானும் பாட்டனும் நடந்தே இதே வழியாத்தே வந்தோ. அப்புடியே பொடி நடையா நடந்து வாறப்போ வழியெல்லாம் வளர்ந்து கெடந்த கரும்பு சோளத்தையெல்லா பொறிச்சு தின்னுட்டே வந்தோம்.”
பாட்டி உம்படபொடவை என்ன கலரு? பட்டுப்பொடவதான?
“எட்டுக்கசம் பொடவ. மஞ்சக் கலரு. பட்டா பட்டெல்லா இப்பத்தே. அப்பெல்லாம் கைதறிப் பொடவதா. அதே பெரிசு”
“எட்டுக்கசம்னா?”
“எட்டுக்கசம்னா எட்டுமொழம்தா உள்ள பாவட கட்டமாட்டோ…அதுவே மூணு சுத்துசுத்திக் கட்டிக்குவோம்.”
“அய்யய்யோ எப்புடி இடுப்புல நிக்கும்?”
“இதப்பாரு இப்பக்கூட அப்புடிதாங் கட்டீருக்கறே”, என்றார் சின்னம்மாள் பாட்டி.
“அய்யோ! செரி… உங்க குன்னாங்கல்லு கதை என்னாச்சு?”
“சனங்கள கூட்டமா பார்த்ததே இல்லியா.நொருங்க சனத்தப் பாக்கலாம்னு போனேனா. அங்க போனா மொட்டப்பாறை பெரிய பாறை சின்ன பாறைனு ஏழெட்டுப் பாற. பாறயே தெரியாத அளவுக்கு சனங்க அத்தனபேரு. அடடா அடடா எத்தன கடைகன்னிக இப்புடிப் பாத்ததில்லையே அப்படின்னு நான் பாட்டங்கிட்டச் சொன்னனா… நாமட்டுங் கண்டனா அப்படி சொல்லுச்சு பாட்டன்.”
“அப்புறம் என்னாச்சு பாட்டி?”
“அப்பா அந்த மொட்டப் பாறையில ஒரு இடத்திலே பொந்து மாதிரி இருந்துச்சு. கைய உள்ள வுட்ட உள்ள தண்ணீ இருந்துச்சு. அல்லாரும் கைய உள்ள விட்டு அதிலிருந்து தண்ணிய எடுத்து கண்ணுல வைச்சுக்கிட்டு தலையிலையுமு வைச்சுக்கிட்டாங்க. நாங்களும் அப்படியே செஞ்சோம்.
பக்கத்துல இடுக்கு மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள ஒரு சாமி இருந்துச்சு… அதையும் கும்பிட்டோம். போற வழியில ஒருத்தரு சொன்னாரு, ‘இந்த மூணு நாளு மட்டுந்தான் அந்த பொந்துக்குள்ள தண்ணீ வரும்’, அப்படின்னு. இது என்னடா கௌரவமா இருக்குது அப்படின்னு நினைச்சிட்டு வந்தேன்.”
“அட ஆமா பாட்டி… எனக்குக் கூட பெரிய அதிசயமா இருக்குது. இப்பக்கூட அந்த மூணு நாளைக்கு மட்டும் எங்கிருந்து வரும்? எனக்கு ஒண்ணுமே புரியல.
அப்புறம் என்னாச்சு?”
“நாங்க திரும்பி வர்ற வழியிலே ஒரு ஏழு அடி பாம்பு வந்து பாட்டனக் கொத்திடுச்சு. பாட்டனோட உசுர காப்பாத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. மறுசெம்மந்தா அது. அதுலிருந்து இனிமே போவக்கூடாதுன்னு முடிவு பண்ணி பாட்டம் போனதுக்கப்புறந்தே வந்தே…”, என்று பேசிக்கொண்டே குன்னாங்கல்லை அடைந்தார்கள். பாறையே தெரியாத அளவுக்குக் கூட்டம்.
“புள்ளகளே! தாராச்சி கைய புடிச்சுக்குங்கோ. கூட்டத்துல பெராக்குப் பாத்துட்டு நீங்க பாட்டுக்குப் போயிடாதீங்க”, என்றார் வள்ளியம்மை.
எல்லோரும் யாருடைய கையையாவது பிடித்துக்கொள்ள, ராசாத்தி பாட்டியின் கையை இறுகப் பற்றினாள். இரண்டு பாறைகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் ஒரு சாமிப் படம் வைத்து அதற்கு முன் ஒருவர் அமர்ந்து அங்கு வரிசையில் வருவோர்க்கெல்லாம் திருநீர் வழங்கிக் கொண்டிருந்தார். எழுந்தால் தலையில் முட்டும் அளவுக்கான குறைந்த அளவிலான இடைவெளிதான். கூட்டம் முண்டியடித்து வரிசையில் நின்று சாமி கும்பிட்டு, காணிக்கையை தட்டில் போட்டுவிட்டு நகர்ந்தது.
அடுத்து தீர்த்தம் எடுக்க பாறையிலிருந்த பொந்துக்குள் கைவிட்டு, உள்ளிருந்து தீர்த்தத்தை எடுத்து கண்களிலும் தலையிலும் கூட்டம் ஒற்றிக்கொண்டது. ராசாத்தியும் அவர்களுடைய சொந்தமும் அதேபோல் செய்து வரிசையைக் கடந்து சென்றனர்.
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ!
தாழம்பூ சித்தால தலை நெறையா முக்காடு!
என்று பாட்டுச்சத்தம் கேட்டு, பாட்டு வந்த திசையை நோக்கி நகர்ந்தார்கள்.
அங்கு இருபது முப்பது பெண்கள் சுற்றி வட்டமாக நின்று கும்மி அடித்தபடி பாடிக் கொண்டிருந்தார்கள்.
நடுவில் ஏழெட்டுப் பொட்டுக்கூடைகளில் பூக்களைப் பறித்துப் போட்டு வைத்திருந்தார்கள்.
“நெலாப்புள்ளைக்குச் சோறு மாத்தப்போகும்போது இந்தப் பாட்டப் பாடுனா நல்லா இருக்கும். புதுசா இருக்குது இல்லனு பாப்பாங்க. நாம போயி புது பாட்டாப் பாடலாம். மனப்பாடம் பண்ணிக்கோங்க”, என்றாள் மலர்.
ராசாத்தியும் அவளின் சித்தி பிள்ளைகளும் பாட்டை கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த நேரம் தூரத்திலிருந்து திடீரென கேட்ட சத்தத்தில் அங்கிருந்தோர் அனைவரும் அதிர்ந்தனர்.
தொடரும்…
முந்தைய பகுதியை வாசிக்க:
படைப்பாளர்
சரிதா
கதைசொல்லி, சிறார் எழுத்தாளர், பண்பலைத் தொகுப்பாளர் Scan foundation India animal welfare அமைப்பின் தூதுவர். Skillware Founder இதன் வழியாக கதைசொல்லல் பயிற்சிகளும் வழங்கி வருகிறார். கருவுடன் கதையாடல் இந்த தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இணைய வழியாகக் கதைகளைக் கூறி வருகிறார்.
பாட்டி கிட்ட உக்காந்து கதை கேட்கிற மாதிரியே இருக்கு. அப்படியே எங்கூரு பாஷை! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றிகள்ங்க. தங்களின் வாழ்த்துகள் எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.
அருமை சரிதா.கதை தெளிந்த நீரோடை போல…💙💙
எனது கதைசொல்லலுக்கும் எழுத்திற்கும் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.பேரன்பின் நன்றிகள் மேடம்