78 வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடி(?) வரும் வேளையில் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களைப் புனிதப்படுத்தி கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் இந்தப் புனிதமான, புண்ணிய பூமியில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஆகஸ்ட் 9, 2024 ஆம் தேதி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் ஊடகங்களால் இயல்பான ஒரு செய்தியாகவே கடந்து போயிருக்கிறது. அதிக முக்கியத்துவம் கொடுத்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அப்படியென்றால் இது மாதிரியான சம்பவங்களை இயல்பென்று ஏற்றுக் கொள்ளும் ஒரு கேடுகெட்ட சமூகமாகி விட்டோமா நாம்?. இந்தக் கேள்வியைக் கண்ணாடி முன் நின்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் கூட்டு வன்புணர்வுக்குப் பின் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கண், மூக்கு, வாய், அந்தரங்க உறுப்பு ஆகியவற்றில் ரத்தம் வந்திருக்கிறது. கழுத்து, கை, கால்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன. உடம்பில் 14 இடங்களில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அரை நிர்வாணக் கோலத்தில் கிடந்தவரை அவர் பணிபுரிந்த மருத்துவமனை நிர்வாகம் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியிருப்பது எவ்வளவு அருவருப்பான விஷயம். தங்கள் நிர்வாகத்தில் பணியாற்றும் நபர்களுக்கு இவர்கள் எந்த மாதிரியான பாதுகாப்பை வழங்குகிறார்கள்?
மமதா தன் ஆட்சிக்கு அவப்பெயர் வந்து விடக்கூடாது என்று தான் நினைக்கிறாரே தவிர, குற்றம் இழைத்தவர்களைக் கண்டறியும் ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் இது தொடர்பாக ஒருவரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து இருக்கிறார்கள் என்றால், அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராவைச் சோதனை செய்தாலே முடிந்த வரை கண்டறிந்து விடலாம். அதைச் செய்ய மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தலாமே. அதை விடுத்து காலதாமதம் செய்து கொண்டே இருப்பதால் குற்றம் நடந்த இடத்தில் தடயங்கள் அழிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். அது மட்டுமன்றி அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்து சில நாட்களிலேயே இன்னொரு கல்லூரி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டது எப்படி என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இவற்றுக்கு நேர்மையான பதில்களைச் சொல்பவர்கள் யார்? எவ்வளவு படித்தாலும் பெண் இன்னும் வெறும் ‘உடலாகத்தான்’ பாரக்கப்படுகிறாள்.
197இ ல் மும்பை கிங் எட்வர்ட் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அருணா ஷன்பாக் என்கிற இளம்பெண் அங்கே வார்டுபாயாகப் பணியாற்றிய சோகன்லால் பர்தா வால்மீகி என்பவனால் வன்கொடுமை செய்யப்பட்டு, அதை அருணா வெளியே சொல்லாமல் இருக்க கழுத்தில் இரும்புச் சங்கிலியால் தாக்கியிருக்கிறான். இதில் அருணாவின் உயிர் பிரியாமல் நரம்புகள் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்று விட்டார். ஒருநாள், இரண்டு நாள் அல்ல. கிட்டத்தட்ட 42 வருடங்களாக அதே மருத்துவமனையில் கோமாவில் சுயநினைவின்றி இருந்தார். அவரை அங்கு பணிபுரிந்த செவிலியர்கள் அன்போடு கவனித்துக் கொண்டார்கள். அவரது செயலற்ற நிலை கண்டு துயருற்றவர்கள் அவரைக் கருணை கொலை செய்ய 2011ஆம் வருடம் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் இந்தியச் சட்டத்தில் அதற்கு இடமில்லாததால் மேலும் ஐந்து ஆண்டுகள் அருணா பிழைத்துக் கிடந்தார். 2015 மே 18 அன்று அந்தப் பாவப்பட்ட ஜீவன் இந்த உலகை விட்டுப் பிரிந்தது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அந்த சோகன்லால் மீது வன்புணர்வு வழக்குகூடப் பதியப்படவில்லை. அப்போதைய இந்தியச் சட்டத்தின் படி ஆண் மீது பாலியல் குற்றம் சுமத்தப்படுவதில்லை என்பதால் திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்காக மட்டுமே பதியப்பட்டு ஏழு ஆண்டுகள் தண்டனையோடு அவன் சிறையில் இருந்து வெளியேறி விட்டான். அதன் பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு மருத்துவமனையில் பணிபுரியத் தொடங்கி விட்டான். அந்தப் பழைய மருத்துவமனையில் அவனது ஒளிப்படம் கூட இல்லை. முற்றிலும் மறைக்கப்பட்டு விட்டது.
பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட அருணாவோ தனது 67 வது வயது வரை நரகத்தில் உழன்ற பின்னர்தான் மரணம் அவருக்கு விடுதலை அளித்தது. இதில் அருணா செய்த குற்றம்தான் என்ன?
அந்த இளம் வயதில் அவருக்கு எத்தனையோ கனவுகள், ஆசைகள், சந்தோஷங்கள் எல்லாம் இருந்திருக்கும் அல்லவா? அவற்றை அனுபவிக்கும் ஒரு சுதந்திரம்கூட இந்த நாட்டில் பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்பது எத்தனை வருத்தமாக இருக்கிறது. அருணாவிற்குச் சில வாரங்களில் மருத்துவர் ஒருவருடன் நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. அந்தக் கயவன் தனது பணியைச் சரியாகச் செய்யாததற்குக் கண்டித்ததும், அவர் ஒரு பெண் என்பதும்தான் அவன் இவ்வாறு நடந்து கொள்ளப் போதுமான காரணங்களாக இருந்தன. தனக்கு மிஞ்சிய உயர் பதவியில் இருக்கும் ஒரு பெண் தன்னைக் கண்டிப்பதை எந்த ஆணின் மனமும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது? அவரவர் தங்கள் பணியில் பொறுப்புடன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டாமா? ஆண் என்கிற ஆதிக்க மனப்பான்மையும், தன்னை யாரும் தட்டிக் கேட்கக் கூடாது என்னும் திமிர்த்தனமும்தான் முக்கியக் காரணம்.
எந்த நாடாக இருந்தாலும் எந்தச் சமூகமாக இருந்தாலும் காட்டுமிராண்டியோ, அரசனோ யாராக இருந்தாலும் பெண்ணுடல் என்பது வன்முறைக்கான ஒரு களமாக மட்டுமே இங்கு பார்க்கப்படுகிறது என்பது மிகவும் வேதனையான விஷயம் மட்டுமல்ல மிகவும் கொடுமையான விஷயமும்கூட. போரிட்டுத் தோற்ற நாட்டின் பெண்களைச் சூறையாடுவது வீரமாகப்(?) பார்க்கப்பட்ட சமூகங்கள் எத்தனையோ. பெண்ணுக்கு இருக்கும் உணர்வுகள் மதிக்கப்படாத சமுதாயமாக இது மாறியது எப்போது? ஏன்? தன்னிடம் ஓர் உயிர் கண்களில் நீர் வழிய கெஞ்சிக் கதறும்போது வக்கிரமாக நடந்து கொள்ளத் தூண்டும் கேடுகெட்ட உளவியல்தான் என்ன?.
இதற்கு முன் ஹைதராபாத்தில் ஒரு பெண் மருத்துவர் இதேபோல் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வை அப்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பொங்கியதோடு சௌகரியமாக மறந்து விட்டோம். இப்போது இந்தப் பெண். அடுத்து யாராவது வரும்வரை இவரைப் பற்றிப் பேசுவோம். இதைத் தாண்டி வேறு என்ன செய்துவிட்டோம்?
நம் நாட்டில் நிலவும் ஆகப் பெரிய சாபக்கேடு இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்களையே குற்றம்சாட்டி நிற்பதுதான். குற்றமிழைத்தவர்கள் ஆண்கள் என்கிற போர்வையிலோ அல்லது செல்வாக்கு மிகுந்தவர்கள் என்கிற மமதையிலோ எப்போதும் மன்னிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரத்திற்காக அரசே முன்வந்து தையல் இயந்திரம் வழங்கி வாழ வழிகாட்டும். இந்தக் கண்றாவிகள் எல்லாம் இங்குதான் நடக்கும். இதனால்தான் மேலை நாடுகள் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்று சொல்கின்றன. குற்றவாளியின் பின்னணியும், பாதிக்கப்பட்டவரின் பின்புலமும் ஆராயப்பட்டுத்தான் இங்கு நீதிகள் எழுதப்படுகின்றன. செல்வம் மற்றும் செல்வாக்கை வைத்து இத்தகைய கொடூரமான குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது.
இந்தியச் சட்டப் பிரிவு 375 வன்புணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஒரு பெண் தனக்குச் சம்மதமில்லாமல், அவளது விருப்பத்துக்கு எதிராக உடலுறவுக்கு ஆட்படுத்தப்பட்டால் அது வன்புணர்வு ஆகிறது. இதற்கு தண்டனையாக அதிகபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுகிறது. இந்தியச் சட்டப் பிரிவு 376Dயின் படி, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் அவர்கள் ஆயுள் முழுவதும் சிறையிலேயே கழிக்கும் வரை தண்டனை வழங்கப்படுவதைக் குறிக்கிறது. பாகிஸ்தான், சீனா, ஜப்பான், சவுதி அரேபியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈரான் போன்ற நாடுகளில் வன்புணர்வுக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் அது போன்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டால்தான் பாலியல் குற்றங்கள் ஓரளவாவது குறையும். சில விஷயங்களில் அச்சத்தை ஏற்படுத்துவது ஒன்றும் தவறில்லை.
இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகக் கோஷமிடுவதனாலோ, பேரணி நடத்துவதாலோ, ஆர்ப்பாட்டம் செய்வதாலோ மட்டும் இவற்றை ஒழித்து விட முடியாது. பெண் என்பவள் தன் சக உயிர், அவளுக்கும் ரத்தம் சதை எல்லாம் இருக்கிறது. அவளுக்கும் வலிக்கும் என்கிற உணர்வை எப்போது எல்லா ஆண்களும் பெறுகிறார்களோ அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான செயல்கள் நடைபெறாது. அதை உணர்த்தும் செயல்களில் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற குற்றச் செயல்கள் எங்கு நடைபெற்றாலும் அதை அரசியலாக்காமல், அதற்கு அப்பாற்பட்டு ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்குவதில் எந்தக் கட்சியாக இருந்தாலும் மனசாட்சிப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். பெண்ணுடல் வெறும் நுகர்வுப் பண்டமல்ல.
படைப்பாளர்:
கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.