1

பூரணிக்கு முதலில் கற்றுக்கொடுக்கப்பட்டது என்ன?

சமைக்க.

பொறுமையாக இருக்க.

குறைவாகத் தூங்க.

அதிகமாக புன்னகைக்க.

வலிக்கும்போது சொல்லாதே.

ஆசைப்படும்போது மறை.

வேண்டும் என்று சொல்ல யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. கேள் என்று யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. நீ யார் என்றும் யாரும் கேட்கவில்லை.

இது பூரணியின் கதை மட்டும் அல்ல.

இது ஒரு தலைமுறையின் கதை.

2

வேலன் சார் கொஞ்சம் அதிகமாக அவளிடம் அக்கறை காட்டினார்.  அவ்வளவுதான். ஓர் ஆசிரியரின் சாதாரண அக்கறை. நன்றாகப் படிக்கும் பெண் என்பதால். தெரிந்த குடும்பத்துப் பெண் என்பதால். காரணம் எதுவாக இருந்தாலும் அவர் ஓர் ஆசிரியர். ஒரு மாணவியை அக்கறையோடு பார்த்தார்.

பூரணியோ அந்தப் பார்வையை வேறொன்றாக படித்தாள்.

ஏன்?

ஏனென்றால், வீட்டில் யாரும் அவளை அக்கறையாகப் பார்க்கவில்லை. அம்மா பார்த்தார், தட்டு கழுவினாயா, துணி மடித்தாயா என்று. அப்பா பார்த்தார், மதிப்பெண் எவ்வளவு என்று. அக்கறை என்பது ஒரு கணக்குப் புத்தகமாக இருந்தது. செய்தாயா, செய்யவில்லையா. ஆனால், ‘நீ எப்படி இருக்கிறாய்’ என்று யாரும் கேட்கவில்லை.

திரைப்படம் பார்த்தாள். ஆண் ஒருவன் பெண்ணைப் பார்க்கிறான். அவளுக்காக உலகம் நின்றுவிடுகிறது. மழை வருகிறது. இசை வருகிறது. அந்தப் பார்வைக்காக ஆசைப்பட்டாள்.

தவறா?

இல்லை.

ஆனால், யாரும் சொல்லவில்லை… அது திரையில் மட்டுமே என்று. யாரும் சொல்லவில்லை, அக்கறை என்பது காதல் இல்லை என்று. யாரும் சொல்லவில்லை, இந்த ஈர்ப்பு இயல்பு, இது கடந்து போகும் என்று.

இந்த மூன்று வாக்கியங்கள் சொல்லப்பட்டிருந்தால்… பூரணி வேறு மாதிரி வாழ்ந்திருப்பாள்.

சொல்லப்படவில்லை. அதனால் அந்தப் பார்வை அவள் மனதில் வேர் கொண்டது. பெயர் இல்லாத வேர். தெரியாமல் விழுந்த விதை.

3

சங்கர் வந்தான். அறிமுகமில்லாத மனிதன். ஆனால், சமூகம் சொன்னது… இனி இவனே உன் உலகம்.

புகுந்த வீட்டுக்குள் வந்தாள். ஒரு பெரிய குடும்பம் சுற்றி உட்கார்ந்தது. சங்கருடன் பேச வேண்டும் என்று வந்தவளுக்கு…. பேச நேரமில்லை. பேச இடமில்லை. பேச வார்த்தைகளில்லை. இரண்டு பெண்கள் பிறந்தனர். வாழ்க்கை நகர்ந்தது.

மனம் துவளும் நேரத்தில் அவள் வேலன் சாரை நினைத்தாள். அவரை நினைப்பது என்று சொல்வதும் சரியில்லை. அவர் அவள் மனதின் ஒரு மூலையில் இருந்தார். மனம் வலிக்கும்போது அந்த மூலையில் சென்று நிற்கும் பழக்கம். அவர் அறிவதில்லை. அவர் காரணமும் இல்லை. ஆனால், அவர் இருந்தார்.

தோழி அழைத்தாள்… வேலன் சார் மகள் கல்யாணம். வருகிறாயா?

”இல்லப்பா. வேலை இருக்கு.”

ஏன் என்று சொல்லவில்லை.

சொல்லத் தெரியவில்லை. சொன்னால் யார் புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. புரிந்துகொண்டாலும் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இத்தனை ‘தெரியவில்லை’களோடு வாழ்வது… அதுவும் ஒரு வாழ்க்கை.

4

மெனோபாஸைப் பற்றி எழுதுகிறேன் என்றால் சிலர் முகம் திருப்புவார்கள்.

ஏன்?

இது உடல். இது இயற்கை. இது ஒரு பெண் கடந்து போகும் தீ. யாரும் சொல்லவில்லை… இது வரும், இப்படி வரும், இதற்குத் தயாராக இரு என்று. ஒரு நாள் திடீரென்று உடல் தானாகவே ஒரு முடிவெடுத்தது. நான் மாறுகிறேன் என்று சொன்னது.

இரவில் சங்கர் தூங்கினான். பிள்ளைகள் தூங்கினார்கள். பூரணி மட்டும் ஜன்னல் திறந்து உட்கார்ந்தாள். காற்று வந்தது. என்ன வாசம் என்று சொல்ல முடியவில்லை. புளிய மரமா, மல்லியா, அல்லது வெறும் இரவின் வாசமா?

அந்த இரவுகளில் வேலன் சார் வந்தாரா?

இல்லை.

அந்த இல்லாமையை அப்போது கவனிக்கவில்லை.

கொரோனா வந்தது. உலகம் வீட்டுக்குள் அடைந்தது. குடும்பத்தின் நெருக்கடிகள் வந்தன. பணம், உறவு, ஆரோக்கியம், தூரம். இந்த நெருக்கடிகளைத் தனியாகச் சுமக்க முடியவில்லை. சங்கரிடம் சொல்ல வேண்டியதாயிற்று. சங்கரும் பேசினான். இரண்டு பேரும் முதன்முதலாக ஒரே மொழியில் பேசினார்கள்.

அந்த மொழியின் பெயர் – தேவை.

தேவையிலிருந்து தொடங்கிய பேச்சு நம்பிக்கையாயிற்று. நம்பிக்கை அன்பாயிற்று. அன்பு… இத்தனை வருடங்களாகப் பக்கத்தில் இருந்தான் என்று அறிதலாயிற்று.

5

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது தோழியிடமிருந்து.

காலை நாலு மணி வகுப்பு. ஆன்லைன். வருகிறாயா?

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காத்திருந்தவள் உடனே சேர்ந்தாள். தினமும் நாலேமுக்கால் மணிக்கு எழுந்தாள். வீடு தூங்கியது. அவள் மட்டும் எழுந்தாள். வெந்நீர். மூச்சு. மௌனம்.

மூச்சை உள்ளே இழுக்கும்போது வயிறு நிறைகிறது என்று அன்று தெரிந்தது. இத்தனை வருடங்கள் மூச்சு விட்டிருக்கிறாள். இப்படி மூச்சு விட்டதில்லை. மூச்சைக் கவனித்ததில்லை.

அந்த மூச்சின் இடைவெளியில் அமைதி இருந்தது. வேறொன்றும் இல்லை. வேலன் சார் இல்லை. பழைய தவிப்பு இல்லை. குற்றவுணர்வு இல்லை.

வெறும் மூச்சு.

வெறும் மூச்சு என்பது தொடக்கம்.

வகுப்பில் பெண்கள் இருந்தார்கள். வெவ்வேறு வயது. வெவ்வேறு வாழ்க்கை. ஆனால், ஒன்று பொதுவாக இருந்தது. அனைவரும் தங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். வெளியில் வேலை கிடைத்தது. புதிய வார்த்தைகள் கிடைத்தன. புதிய கண்ணோட்டங்கள் கிடைத்தன.

புதியது என்று சொல்கிறோம். உண்மையில் அவை புதியதில்லை. அவள் உள்ளே எப்போதும் இருந்தது. வெளிச்சம் இல்லாமல் தெரியவில்லை. இப்போது வெளிச்சம் கிடைத்தது.

6

ஓர் இரவு.

ஏதோ ஒரு சாதாரண இரவு. விசேஷமில்லை. திருநாள் இல்லை.

சங்கர் சொன்னான்… குடும்பத்துக்காக நீ நிறைய தாங்கினாய்.

நான்கே வார்த்தைகள். இலக்கியமில்லை. அலங்காரமில்லை. ஆனால், அந்த மூன்று வார்த்தைகளில் ஓர் உயிர் இன்னோர் உயிரைப் பார்த்த பார்வை இருந்தது. இத்தனை வருடங்கள் பக்கத்தில் இருந்தும் தெரியாமல் போன பார்வை, அன்று வந்தது.

பூரணி அந்தக் கண்களில் தன்னைப் பார்த்தாள்.

திரைப்படத்தில் இல்லாத காட்சி அது. ஏனென்றால், அது உண்மை. திரைப்படம் உண்மையைக் காட்டுவதில்லை. உண்மையின் நிழலை மட்டும் காட்டுகிறது. வண்ணமாக, இசையோடு, மிகையாக. நிழல் அழகாக இருக்கும். ஆனால், நிழல் குளிர்விக்காது.

சங்கரின் அந்த வார்த்தை குளிர்வித்தது.

அன்று இரவு அவர்கள் இரண்டு பேரும் நீண்ட நேரம் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அது அவர்கள் இரண்டு பேருக்கும் மட்டுமே சொந்தம்.

அன்பு என்கிற வார்த்தையின் உண்மையான எடை அன்று தெரிந்தது.

சங்கரின் கை அவள் கையைப் பற்றியது, காரணமில்லாமல். சின்ன செயல். ஆனால், அதில் இத்தனை வருடங்கள் பகிராமல் போன அன்பு இருந்தது. அதை வாங்கிக்கொண்டாள். திரும்பவும் கொடுத்தாள்.

சரிசமம்.

அப்போதே மனதின் அந்த மூலையில் வெளிச்சம் பட்டது என்று தெரியவில்லை. அது தெரிந்தது கோயிலில்.

7

அன்று காலை எழுந்தபோதே வேறு மாதிரி இருந்தது.

சங்கர் வெளியூரில் இருந்தான். இரவு பன்னிரண்டு மணிக்கே பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருந்தான். ஒரு வருடத்துக்கு முன்பு வரை தானே சொன்னால்தான் ஞாபகம் வரும். இப்போது தானாக நினைக்கிறான்.

இந்த ஒரு சின்ன மாற்றம்… பெரிய மாற்றத்தின் அடையாளம்.

உறவினர் திருமணத்துக்காகக் கோயிலுக்குச் சென்றனர். கோயில் வாசலில் நின்றாள் பூரணி. யாரோ அவள் கையை அழுத்தமாகப் பிடித்தார்கள்.

திரும்பினாள்.

வேலன் சார்.

அறுபது தாண்டிய முகம். கண்களில் அன்பு.

”வணக்கம் சார்.”

”எப்படிம்மா இருக்கிறாய்?”

”நல்லா இருக்கேன் சார்.”

அவர் காலைத் தொட்டு வணங்கினாள். பிறந்த நாள் என்று சொன்னவுடன் மகிழ்வோடு வாழ்த்தினார். அருகில் நின்றிருந்த ஆசிரியர்களிடம் சொன்னார்…

”என் பொண்ணு… என் பொண்ணு…”

அப்போது பூரணி மனதில் என்ன இருந்தது?

படபடப்பு இல்லை.

தவிப்பு இல்லை.

குற்றவுணர்வு இல்லை.

வேலன் சார் கை ஒரு பெரியவரின் கை. ஓர் ஆசிரியரின் கை. அன்பான கை. அவ்வளவுதான்.

இதை அறிவதற்கு முப்பது வருடங்கள் ஆயிற்று என்று வருத்தப்படவில்லை. இப்போது அறிந்தோம் என்று மட்டும் நினைத்தாள்.

அவர் சொன்னார்… என் பொண்ணு.

அவள் நினைத்தாள்…

நான் என் பொண்ணு.

சொல்லவில்லை.

ஆனால், தெரிந்துகொண்டாள்.

8

கோயிலில் மணி ஒலித்தது. கற்பூரம் எரிந்தது.

பூரணி கண்களை மூடினாள்.

அந்த இருளில் வேலன் சார் இல்லை. சங்கர் இல்லை. பிள்ளைகள் இல்லை. கடவுள் இருந்தாரா என்று தெரியவில்லை.

ஒரு பெண் இருந்தாள்.

தனக்கே சொந்தமான ஒரு பெண்.

எல்லாவற்றையும் கடந்து, ஒளி கண்டு, இப்போது இங்கே நிற்கிறாள்.

கண்களைத் திறந்தாள்.

கோயிலில் பெண்கள் வரிசையில் நின்றனர். ஆண்கள் வேறு வரிசையில்.

பூரணி நின்றாள்.

தன் வரிசையில்.

தன் காலில்.

**

படைப்பாளர்:

சென்னையில் வசிக்கிறார். தீவிர வாசிப்பாளர். பாட்காஸ்ட் ரீடர். வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட். ஹெர்ஸ்டோரிஸ் தன்னார்வலர்.