சமீபத்தில்தான் பெரி மெனோபாஸ் (PMS) கடந்துவந்த நிலையிலும், அது குறித்த சக தோழமைகள் பலருடன் உரையாடியதிலும், நான் எடுத்துக்கொண்ட மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் எனக்கு கிடைத்த அனுபவங்களையும் பகிருகிறேன். பலருக்கு உபயோகமாக இருக்க கூடும் என்பதுடன் இதை எதிர்க்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் நடக்கும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு தைரியமாக இக்காலகட்டத்தைக் கடக்க உதவும்.
எனது 38வது வயதில் முதன் முதலில் கணுக்கால் பகுதியைச் சுற்றி வீக்கம், கால் வலி என்பதில் ஆரம்பித்தது. அப்போது எனக்கு பிஎம்எஸ் குறித்தோ மெனோபாஸ் குறித்தோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஒரு பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனையில் கால் வலிக்கான சிகிச்சை எடுத்து, அது சரியானது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு உள்ளாக நான் வெளியூர் சென்றபோது, லேசான வயிற்று வலியுடன் உதிரப்போக்கு கட்டி கட்டியாக வர தொடங்கியது. வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததுடன் நான்கைந்து நாட்கள் வரை நீடித்தது. அதுவரை 28 நாட்களுக்கு ஒருமுறை மூன்று நாட்கள், அதுவும் முதல் நாளும் மூன்றாம் நாளும் பெயரளவுக்கு இருக்கும். இரண்டாம் நாள் மட்டும் கொஞ்சம் கூடுதல் உதிரப்போக்கு என்றுதான் எனக்கு இருந்தது. திடீரென இந்த மாற்றம் ஏன் என யோசித்தாலும் அலைச்சல் அதிகம் என்பதால் இருக்கும் என்று என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டு ஊர் வந்தேன்.
அதன் பின் நார்மலாக இரண்டு, மூன்று மாதங்கள் மாதவிலக்கு வர, நான் எனது பணிகளைத் தொடர்ந்தேன். சில மாதங்கள் கழித்து முகம் எல்லாம் நான் நினைத்தே பார்க்க முடியாதளவு பருக்களும் கட்டிகளும் வரத் தொடங்க, என் முகம் பார்த்துப் பயந்து போனேன். முகத்தில் கையே வைக்க முடியாது. என்னென்னவோ மருந்துகள், தோல் மருத்துவர் ஆலோசனை, பருக்களுக்கு மருந்து மாத்திரைகள் எனத் தொடர்ந்தது. அப்போதும் அது பிஎம்எஸ் அறிகுறி என நினைக்கவில்லை. ஸ்கின் டாக்டரும் அது குறித்து எதுவும் கூறவில்லை.
எனது உறவினர் விசேஷம் ஒன்றுக்குச் சென்ற போது மருத்துவத்துறையில் இருக்கும் ஓர் உறவினர், என் முகம் பார்த்து, ‘நீ முதலில் ஒரு நல்ல கைனோவைப் பாரு. கர்ப்பப்பையில் கட்டி அல்லது ஏதோ பிரச்னை இருக்க வாய்ப்பு இருக்கு’ என்றார். அதுவரை முகத்துக்கு யார் யார் என்னென்ன கைவைத்தியம் கூறினார்களோ அதை எல்லாம் செய்துகொண்டிருந்தேன். திருநீற்றுப்பச்சிலை போடுவது, முல்தானி மட்டி பேஸ் பேக் என அனைத்தும் செய்தேன். ஆனால், அது எதற்கும் அசராமல் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் முகத்தில் நர்த்தனம் ஆடி, கரும்புள்ளிகளையும் சில வடுக்களையும் ஏற்படுத்தி பின்தான் மெல்ல மெல்ல அடங்கியது.
இதற்கிடையிலேயே உதிரப்போக்கில் எப்போதாவது நிகழ்ந்த மாற்றம் அடிக்கடி தொடங்க, அம்மா வீட்டிற்குச் சென்று இருந்தபோது எனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, சில ரத்தப் பரிசோதனைகள் செய்துவிட்டு, நார்மல்தான் பயப்பட ஒன்றுமில்லை. சில நாட்களில் சரியாகிவிடும் என மாத்திரைகள் வழங்கினார். அவரும் பெரி மெனோபாஸ் குறித்தோ அது வருடக்கணக்கில் நீடிக்கும் என்றோ கூறவில்லை.
சில நாட்கள் அதன் போக்கில் நார்மலாகச் செல்ல, ஒன்றும் பிரச்னையில்லை என முகத்தில் கவனம் செலுத்த தொடங்கினேன். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் உதிரப்போக்கு வேலைக்குச் செல்ல முடியாத அளவு என்னைச் சோர்வாக்க, தோழமைகள் ஆலோசனையின் பேரில் மிகப் பிரபலமான சித்த மருத்துவர் ஒருவரிடம் சென்றேன். அவர் மொபைலைப் பார்த்துக்கொண்டேதான் நாம் சொல்வதைக் கேட்பார். கேட்கிறாரா, இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஒரு வழியாக அவரும் ஆறு மாதம் தொடர்ந்து மருந்துகள் எடுத்தால் சரியாகிவிடும் எனக் கூற, சித்த மருந்துகளை ஆரம்பித்தேன். மருந்துகள் அவரிடம்தான் வாங்க வேண்டும். அவரின் அப்பாயின்மெண்ட் வாங்கவே ஒரு மாதம் முன்பு புக் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட மாதம் நான்காயிரம் ரூபாய் மருந்துகளுக்கு மட்டுமே செலவாகும்.
ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.
அப்போதே மனம் ஒருவித எரிச்சல், இயலாமை, கோபம் என எல்லாம் கலந்து கட்டி ஆட்டம் காட்டத் தொடங்கி இருந்தது. இயல்பிலேயே நான் சென்சிட்டிவ், சட்டென்று கோபப்படுவேன் என்பதால் அது மூட் ஸ்விங்ஸ் எனப் புரியவில்லை. ஆனால், மனம் ஒரு நேரம் காரணமே இல்லாமல் குதூகலமாகவும், ஒரு நேரம் மிகப்பெரும் வெறுமையும், கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத எதிர்மறை எண்ணங்கள் சரவெடி போல உள்ளுக்குள் வெடித்துக் கொண்டே என்னை அலைக்கழிக்க, எப்போது வெளியே வெடிப்பேன் என்றே தெரியாமல், பலரிடம் எரிந்து விழுந்து, கோபப்பட்டுதான் அன்றாட வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தேன். இந்தக் காலகட்டத்தில் நட்புகள் பலரிடம் இருந்தும் விலகினேன். தனிமையில் ஒடுங்கி எனக்குள் நடக்கும் மாற்றங்களைச் சற்றுக் கவனிக்கத் தொடங்கினேன். எந்தெந்த நாளில் என்னென்ன உணர்வுகள், ரோலர் கோஸ்டர் போல என்னைப் பந்தாடுகிறது, எந்தெந்த சூழல், அல்லது மனிதர்கள் என்னை ட்ரிக்கர் செய்கிறார்கள் எனக் கவனித்து கவனமாக அதில் இருந்து வெளி வரத் தொடங்கினேன்.
சில நேரம் மனதிற்குள் ஒரு சுழல் அடிப்பது போன்ற உணர்வு இருக்கும். அதைச் சரியாகக் கூற முடியாது. மூட் ஸ்விங்க்ஸ் அனுபவித்தவர்கள் இதனைப் படிக்கும்போது அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். எதற்கு அழுகிறோம் எனத் தெரியாது. ஆனால், அழுகை பீறிட்டுக் கிளம்பும், சில நேரம் அழுதுவிடுவதும் உண்டு. அந்த அழுகைக்கு நிகழ்கால நிகழ்வுகள் மட்டும் காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லது பிறருக்கு மிக மிக அல்பமாகத் தோன்றும் (யோசித்தால் நமக்கே அது உப்புப் பெறாத விஷயமாகதான் இருக்கும்.) ஒன்று நமக்கு அழுகையைக் கொண்டு வரும். ஏதோ ஓர் எதிர்மறை எண்ணம் தோன்றி, அது விரிந்து விரிந்து பூதாகரமாகக் கிளைவிட்டுக் கதறி அழ ஆரம்பிப்போம். எதற்காக அழுகிறோம் என நம்மாலேயே தீர்க்கமாகச் சொல்ல முடியாமல் இருக்க, சுற்றி இருப்பவர்கள் அழுகைக்குக் காரணம் கேட்டு வேறு துளைத்து எடுப்பார்கள். அந்தக் கணம் அனைத்தில் இருந்தும் துண்டித்து எங்காவது தனிமையில் இருந்தால் மனம் சில மணி நேரம் கழித்து அமைதியாவதை உணர முடியும்.
நான் தனியாகக் கூட்டமான இடங்களுக்குச் சென்று விடுவேன். அல்லது கடற்கரையில் கரையில் அமர்ந்து அலைகளைப் பார்க்கத் தொடங்குவேன். வீட்டுக்குத் தகவல் தெரிவித்து மொபைலையும் அமைதியாக்கிவிடுவேன். ஓரளவு என் வீட்டில் உள்ளவர்களிடம் என் பிரச்னைகளைப் பகிரத் தொடங்கி இருந்ததால், புரிந்துகொண்டார்கள். எனக்குள் உருவாகும் சுழலை உற்றுக் கவனிக்க, மெல்ல மெல்ல நிதானம் அடைவேன். அதன் பின் வீட்டுக்குச் செல்வேன். ஒரு முறை அலுவலகம் செல்லாமல் காலை முதல் மதியம் வரை கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கிறேன். எனக்கு இப்படி, சிலருக்குத் தூக்கம் ஆறுதலாக இருக்கலாம், அல்லது நடப்பது என ஏதோ ஒன்று. நம் மனதை ஆற்றுப்படுத்தும் வழிகளை நாம்தான் கண்டடைய வேண்டும். இல்லை குடும்பத்தில் வெடித்துக் கொண்டே இருப்போம்.
சித்த மருந்துகள் நிறுத்தியபோதே அலோபதி, சித்த மருத்துவம் எதுவும் முற்றிலும் குணமாக்கவில்லை, மாறாக மூட் ஸ்விங்க்ஸ்தான் அதிகரித்து இருக்கிறது. இனி மருத்துவமே வேண்டாம் நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டேன்.
கணக்கே வைத்துக்கொள்ள முடியாதவாறு மாதவிலக்கு வரத் தொடங்க என்னவோ நடக்கட்டும் என அலுவலகம் சென்று வந்துகொண்டிருந்தேன். அந்த அளவு மருந்துகள் சாப்பிட்டு விரக்தி அடைந்திருந்தேன். வேலையில் என்னை மூழ்கடித்துக் கொள்ளும்போது வலிகள் மறக்கும். ஒருமுறை மாதவிலக்கு ஆரம்பித்து நாற்பது நாட்களுக்கு மேலும் நிற்காமல் தொடர, லேசாகப் பயம் ஆரம்பித்தது. இந்த நாற்பது நாட்கள் உதிரப்போக்கில் நான் மிகவும் சோர்ந்து போய் இருந்தேன். ஒருமுறை பேருந்தில் வரும்போது திடீரென உதிரப்போக்கு அதீதம் பெற, எழும்போது உட்கார்ந்திருந்த இடம் எப்படி இருக்கும், என்ன செய்யப் போகிறோம் எனப் பல்வேறு எண்ணம். கடைசியாக துப்பட்டா கை கொடுத்தது. எழும்போது துப்பட்டாவால் தண்ணீர் பாட்டில் துணையுடன் துடைத்துவிட்டு எழுந்தேன். இதுபோல அலுவலகம் உள்பட பல இடங்களில் நிகழ பொது இடங்களுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
(தொடரும்)
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.