சமீபத்தில் ஒரு விவாத நிகழ்ச்சிக்குச் செல்ல நேர்ந்தது. ‘ஆஸ்திரேலியாவின் வரலாறு மக்களை ஒன்றுபடுத்தி இருக்கிறதா? இல்லையா?’ என்பதுதான் தலைப்பு.

இரண்டு அமர்வுகள். இரண்டும் தலா ஒரு மணி நேரம். முதல் ஒரு மணி நேரத்தில் விவாதிப்பவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இரண்டாம் கட்ட விவாதத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகள் விவாதிப்பார்கள். எதாவது ஒரு அமர்வையோ அல்லது இரண்டையுமோ நாம் காணலாம். மாணவர்கள் விவாதத்தின்பொழுது அரங்கம் பாதிகூட நிரம்பவில்லை.

எனக்குமே கூட பணி நேரம் நீடித்திருந்தால், முதல் அமர்வைத் தவிர்த்திருப்பேன். ஆனால் மாணவர்கள் தங்கள் வாதத்தினை வைத்ததும், நல்ல வேளையாக இதைத் தவறவிடவில்லை என்றே தோன்றியது.

இரண்டு வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் பங்கு பெற்றிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மேடையில் பேசுவது இதுவே முதன்முறை என்று அறிமுகத்திலேயே தெரிவிக்கப்பட்டது. ‘ஆமாம் – ஆஸ்திரேலிய மக்களை வரலாறு ஒன்றுபடுத்தியிருக்கிறது’ என்ற தலைப்பில் பேசிய மாணவர்கள் மூவரும், மிக நன்றாகத் தயார் செய்திருந்தார்கள். தங்கு தடையின்றி பேசினார்கள். கைகளில் தாள்களை பார்த்துதான் பேசினார்கள் என்றாலும், உரை நன்றாக இருந்தது.

‘இல்லை’ என்கிற தலைப்பில் முதலில் பேசிய மாணவன், கைகளில் தாள்கள் இருந்த பொழுதும், மிகுந்த தடுமாற்றத்துடன் பேசினான். முதல் அனுபவ பயம் காரணமாக இருந்திருக்கலாம். மிகக் குறுகிய நேரத்தில் திக்கி திணறி பேசினாலும், அவன் வைத்த வாதம் நன்றாக இருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அவனுக்கு அடுத்து அந்த அணியில் இருந்து பேச வந்த இரண்டு மாணவிகளும் நன்றாகப் பேசினார்கள் என்றாலும், முதல் அணியில் பேசிய மாணவர்கள் அளவிற்கு இல்லை.

விவாதம் முடிந்து நடுவர்கள் தீர்ப்பை வழங்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டார்கள். எப்படியும் முதல் அணிதான் வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தபொழுது, இரண்டாம் அணி வெற்றி பெற்றதாக அறிவித்து ஆச்சர்யப்படுத்தினார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் மிக சுவாரஸ்யமானது.

ஒவ்வொரு மாணவரின் நிறை குறைகளைக் குறிப்பிட்டுவிட்டு, ‘இது பேச்சுப் போட்டி அல்ல. விவாத நிகழ்ச்சி. இதில் யார் நன்றாகப் பேசினார்கள் என்பதில்லை. யார் தங்கள் வாதத்தின் மூலம், நம் எண்ணத்தை மாற்றினார்கள் என்பதே. அந்த வகையில் ‘இல்லை’ என்று விவாதித்த அணியே வெற்றிபெற்றுள்ளது’ என்று அறிவித்தார்கள்.

போட்டி எதற்கானது, அதில் பங்கு பெற்றவர்கள் அதில் எவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியது அந்த நடுவர்கள்மேல் இருந்த மதிப்பை கூட்டியது. அதுவரை, ஒரு விவாதத்தை வெல்ல, நல்ல பேச்சுத் திறமை வேண்டும் என்றிருந்த எண்ணத்தை அந்த நாள் மாற்றி அமைத்தது. ஆனால் எல்லா இடங்களிலும், வாதத்தில் ஆழமான கருத்து இருந்தும், பேச்சுத் திறமையில் கொஞ்சம் குறைபாடு இருந்தால், அது பார்வையாளர்களைச் சென்று சேருமா என்று தெரியவில்லை. விவாதம் என்று வந்தால், அதில் பேச்சுத் திறமையும் மிக அவசியம்.

கல்லூரி படித்த காலத்தில், ஒருமுறை பேச்சுப் போட்டிக்கு ஆளில்லை என்று என்னைப் பேச கட்டாயப்படுத்தினார்கள். வேறு வழியின்றி நானும் ஒப்புக்கொண்டேன். தலைப்பு, பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றியது. கதைப் புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களோ, பொது அறிவோ இல்லாத காலம். பேச்சு தயாரிக்க வெறும் 15 நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டது. பெரிய அரங்கம் எல்லாம் இல்லை. ஒரு வகுப்பறையில் தான் விவாதம். ‘பெண்கள் ஆடை சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. பெண்கள் இந்த உடைதான் அணிய வேண்டும் எங்கும் சட்டமில்லை. அவரவருக்கு வசதியான ஆடைகளை அணிந்தது கொள்ளலாம்.’ அவ்வளவுதான் என்னால் பேச முடிந்தது. அதற்கு மேல் பேச குறிப்புகள் இல்லை. ஆனால் நான் பேசப் பேச, நடுவராக இருந்த ஆசிரியர்கள் தலையை அசைத்ததில் இருந்து என் கருத்தை ஆமோதிப்பதாகவே தோன்றியது. பேச்சை நிறுத்தியதும் அதில் ஒரு ஆசிரியர் ‘நன்றாக பேசுகிறாய் தொடரு’ என்றார். ஒருவேளை எனக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரத்திற்கு என்னால் பேச முடிந்திருந்தால், அந்த விவாதத்தில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

விவாதிப்பவர்கள் எப்போதும் வெறும் புள்ளி விவரங்களையும், தகவல்களையும் சொல்வதை விட, சொந்தக் கதைகள் அல்லது கேள்விப்பட்ட கதைகளைச் சொல்லும் பொழுது இன்னும் வீரியம் பெறுகிறது. இந்திய பாகிஸ்தான் போரில் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்வதைவிட, இடப்பெயர்வின் பொழுது நடந்த துயரை ஒரு உண்மைச் சம்பவம் விளக்க முற்படலாம்.

நாட்டுப் பிரிவினையின்போது ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் காப்பாற்றி, அவளை மணமுடித்து, குழந்தையும் பெற்றுக்கொண்டார் இந்து ஒருவர். பல வருடங்கள் கழித்து அவளைக் கண்டுபிடித்த அவளின் உறவினர்கள், ‘ஒரு இந்துவுடன் நீ எப்படி வாழலாம்’ என்று அவளை அழைத்துச் சென்றுவிட்டனர். பாகிஸ்தான் நீதிமன்றம்வரை சென்று தோல்வியடைந்து, தன் மனைவியையும் குழந்தையையும் இன்னொரு நாட்டில் விட்டுவிட்டு, அந்த மனிதர் இந்தியா திரும்பினார். அதுவரை தான் சேர்ந்து வைத்த அத்தனை சொத்துகளையும் விற்று அவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்த அந்த காதல் கதையை கேட்டால், ஒருவரால் இரவு எப்படி உறக்கம் கொள்ள முடியும்?

பேச்சுத் திறமை இருக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசக்கூடிய அளவிற்கு அறிவு இருக்கலாம். ஆனால் கேட்பவரின் இதயத்தை வருடிச் செல்லவில்லை என்றால், எந்தப் பேச்சும் வெற்றுச் சொற்கள் மட்டும்தான்.

தொடரும்…

படைப்பாளர்

சுமதி விஜயகுமார்

பொதுச் செயலாளர், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம், ஆஸ்திரேலியா