அண்டம் அளப்பவள் பெண்… கண்டம் தாண்டுபவள் பெண்… கடல் ஆழமும் துளைப்பாள்… விசும்பின் நீளமும் கடப்பாள்… அத்தகைய மகா சக்தியான அவள் வாழ்வைச் செதுக்கிய நிகழ்வுகள், மனிதர்கள் குறித்த இந்நூலில் எழுத வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். நம்முள் இருக்கும் சக்தியை ஏதோவொரு கணத்தில் பெண் உணர்கிறாள். தன்னை அகத்தில் உணர்ந்தவளுக்குப் புறக் காரணிகள் தரும் வலிகள் அற்பம்.

‘அகம் பிரம்மாஸ்மி’ கட்டுரையில் உமா ஷக்தி எழுதிய ‘வாழ்க்கையின் அழகான விஷயம் என்னவென்றால் அது அந்தந்த காலக்கட்டத்திற்கான மனிதர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது’ என்கிற வரிகளில் பொதிந்து கிடக்கும் உண்மைதான் எத்தனை அழகாக இருக்கிறது. புன்னகையின் வழியே பல இதயங்களுக்குச் சென்றுவிட முடிகிறது என்று அருமையாகச் சொல்கிறார். அவரது ஒவ்வொரு வரியும் அற்புதம். தி. பரமேசுவரி எழுதிய ‘அகமொளிர் சிவஞானம்’ கட்டுரையில் ம.பொ.சி. பற்றி அறிய முடிகிறது. ஜா.தீபாவின் ‘குட்டி யானையின் பெரு நெருப்பு’ என் மனதிலும் பற்றிக்கொண்டது. சாதிக்கத் துடிக்கும் மனதுக்கு எந்தத் தடையும் தூசு. இந்தக் கட்டுரை எனக்கான போதியின் ஒற்றைக் கிளை. நிவேதிதா லூயிஸின் ‘அகம் நிறைந்த அம்மா’ எனக்கும் சில அறிவுரைகளை விட்டுச் சென்றிருக்கிறார். பிருந்தாவின் ‘வளையாத்தூர் ஆயம்மா’ கண்ணில் நீரை வரவழைத்து விட்டார். எளிமையான அந்த அன்பு மனதில் இன்னும் நிற்கிறது. வாழ்வைத் துணிவுடன் எதிர்கொண்ட அந்தப் பெண்மணி எனக்குள் ஏற்படுத்திய சலனங்கள் ஏராளம்.

பிருந்தா சேது கட்டுரை, கழிவறை இல்லாத வீடு குறித்த நினைவுகளைக் கிளறிவிட்டது. மொட்டை மாடிக்கான எனது ஏக்கம் இன்னும் தீரவேயில்லை. ஷக்திப்ரபாவின் ‘பிரபஞ்ச பயணி’ நம்மையும் கேள்விகள் கேட்க, மரணம் குறித்து ஆராய வைக்கிறது. சல்மாவின் ‘ஆளுமைக்கான அச்சாணிகள்’ துணிச்சலை நமக்குள்ளும் கடத்துகிறார்கள். தீபலட்சுமி எழுதிய ‘அகவுலகி’ அழகு. அவரைப் போலவே புத்தகங்களே துணையாக இருந்தவள் நான். என் அகவுலகும் புத்தகங்களால் மட்டுமே நிரம்பியிருக்கிறது. மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது இந்தக் கட்டுரை. தீபலட்சுமியைப் போலவே மனிதர்களையும் கற்கத் தொடங்கியிருக்கிறேன். மோகனா சோமசுந்தரம் எழுதிய கட்டுரை அருமை. பெரிய ஆளுமைகளை நேரில் கண்ட அனுபவங்கள் சிறப்பு. கல்விதான் ஒருவரை உயர்த்தும் என்று அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

லாவண்யா சுந்தரராஜன் எழுதிய ‘அகம் என்பதொரு மாய இடம்’ கட்டுரை நெகிழ்வாக இருந்தது. அவர் குறிப்பிட்ட இடங்கள் சிலவற்றை அறிவேன் என்பதால் இந்தக் கட்டுரை அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. நிர்மலாவின் ‘இதுவரை’ கட்டுரையில் குறிப்பிட்ட ராஜம்மாள் பாட்டியைப் போலவே பயணங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவை வாய்ப்பதில்லை. வாழ்வில் நம்மைச் சந்திப்பவர்களும் நம்மை வளர்த்தெடுக்கிறார்கள் என்பது உண்மைதான். சுகிதா சாரங்கராஜ் எழுதிய ‘அகமும் அடையாளமும்’ கட்டுரை அப்படியே என்னை ஸ்கேன் செய்து பார்ப்பது போலவே இருந்தது. நானும் அப்படி ஒரு புத்தகப் பைத்தியம், ப்ரியை, புழு என்று சொல்லலாம். என் தந்தையும் நான் பாடப் புத்தகங்கள் தாண்டிப் படிப்பதை கண்டு கொள்ளவில்லை. மாறாக ஊக்குவித்தார். குழந்தை பிறந்த போதும் நான் புத்தகங்களில் மூழ்கியிருந்தேன். நர்ஸ் அனிலா இதேபோல் தலைவலிக்கும் என்று செல்லமாகக் கடிந்து கொண்டது நினைவுக்கு வருகிறது. புத்தக அலமாரி மட்டுமல்ல. புத்தக அறை வைக்க வேண்டும் என்கிற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. விரைவில் கைகூடுமென்று நினைக்கிறேன். சுகிதா அருமையாக அவரது அகத்தை நமக்குக் காட்டியிருக்கிறார். உள்ளுணர்வு குறித்த முபீன் சாதிகாவின் நீண்ட அறிவியல் கட்டுரை கொஞ்சம் கடினமாக இருந்தாலும் சுவாரசியம்.

‘அகம் தாண்டி’ கட்டுரை என் அகத்துக்குள்ளேயே இருக்கிறது. பெண்கள் மட்டுமான சிறு சுற்றுலா எவ்வளவு ஆசுவாசமாக இருக்கும் என்று அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். சுஜாதா சென்ற வருடம் நாங்கள் பெண்கள் மட்டும் வால்பாறை சென்ற அனுபவத்தை அசை போட வைத்துவிட்டார். லதா சரவணனின் ‘தித்திப்பான குவளைகள்’ அகமெங்கும் தித்தித்தது. உண்மைதான். நமக்குள் இருக்கும் ரசனைக்காரியை நாம்தான் கண்டறிய வேண்டும். அதுபோல நம் மகிழ்ச்சியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அற்புதமாகச் சொல்லியிருக்கிறார். டெய்சி மாறனின் ‘இதுதான் என்னுடைய பாதை’ தாயைக் காலம் கடந்து புரிந்து கொண்டது நெகிழ்த்தியது. ‘கண்ணுடையர் என்பார் கற்றோர்’ கட்டுரையில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விளக்கியிருக்கிறார் பத்மா அரவிந்த். இன்றும்கூட கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் குறித்து வருந்தியிருக்கிறார். நாமும் பெண் கல்விக்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ராமச்சந்திரன் உஷாவின் ‘நான் எண்ணும் பொழுது’ நெகிழ்வாக இருந்தது. நானும் ஒவ்வொரு முறை வீடு மாறும் போதும் முருங்கை, செம்பருத்தி, வாழை என்று விட்டு வந்தேன். மன வருத்தத்தில் இப்போதுள்ள வீட்டில் எந்தச் செடியும் வைக்கவில்லை.

ஜெஸிலா பானுவின் ‘சுவடுகள்’ அழுத்தமாகவே பதிந்தன. தனக்கான நிதி சுதந்திரம், பொருளாதார மேம்பாடு இவற்றுக்காகப் பெண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் கூறியுள்ளார். ‘பெண் – விருட்சமாகும் விதை’ கோ.லீலாவின் பதிவு உற்சாகமூட்டியது. தன்னை உணர வைத்தது. தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லியின் ‘அகமெனும் அகங்காரம்’ வித்தியாசமாக இருந்ததோடு சுவாரசியமாகவும் இருந்தது. ஷைலஜாவின் ‘ஜகத்தில் நான் கண்ட அகம்’ அவரது எழுதும் தாகத்தைத் தெரிவித்தது. தேனம்மை லெக்ஷ்மணனின் ‘வீடென்று எதனைச் சொல்வீர்’ நெகிழ்வாக இருந்தது. வீடு புதிதானாலும் மனிதர்கள் மாறிவிடுகிறார்களே? ஆகப் பெருந் துயரம் அது.

சித்ரா ரங்கராஜன் எழுதிய ‘அன்புத் தொழிற்சாலை’ நிஜம்தான். படிக்கும் போதே மனம் குறும்பில் குதூகலித்தது. கே.பத்மலக்ஷ்மி எழுதிய ‘பொன்வயல் சூழ்’ பதிவில் சிறப்பான ராணி கர்ணாவதி குறித்து அறிந்து கொண்டேன். வரலாறும் தொல்லியலும் எனக்கும் பிடித்த பாடங்கள். அவர் சொன்ன இடங்களை நேரில் காணும் ஆவல் பெருகியிருக்கிறது. மதுமிதாவின் ‘அகம் உணரும் அன்பின் தரிசனம்’ நமக்கும் கிடைக்கிறது. காளியம்மாள் பாட்டியின் கூட்டாஞ்சோறை நானும் ருசித்தேன். நா.பார்வதியின் ‘மனம் உணர்த்திய தருணம்’ கொரோனா பேரிடர் காலத்தில் நேரத்தைப் பயனுள்ளதாக்கி, தனக்குள் இருக்கும் எழுத்தாளராகக் கண்டறிந்த தருணம். அருமையான தருணம். ‘அகம் தழைக்கும் ஆன்மீகம்’ டாக்டர் ஆர். பானுமதியின் கட்டுரை அருமை. சித்த மருத்துவத்தின் பெருமைகளைச் சொன்னதோடு அகத்தில் அன்பு வேண்டும் என்று அழகாகச் சொல்லி இருந்தார்.

லதா எழுதிய ‘அகம் நிறைந்த தன்னம்பிக்கை’ நமக்கும் தன்னம்பிக்கை அளிக்கிறது. மணிமேகலையின் ‘அகம் நினைவுகள்’ வீரத்தையும் தைரியத்தையும் போதித்தன. ‘அன்பு உள்ளங்களுக்குள்’ ராஜலஷ்மியின் புத்தக ஆர்வம் போன்றதே என் வாசிப்பு போதையும். பாலகுமாரன் என் கல்லூரி நாட்களில் ஆதர்ச எழுத்தாளராக இருந்தார். எழுத்தாளர்களை அகத்தில் உணர வைத்த கட்டுரை இது. கார் மெக்கானிக் புஷ்பா ராணி வாழ்க்கையில் எத்தனை துயரங்களைச் சந்தித்தாலும் ‘சாதிச்சுக் காட்டணும்’ என்கிற வெறி அவரது உந்து சக்தியாக இருக்கிறது. அவங்க அனுபவங்களைப் படிக்கும் போது மனசு கனமா இருக்கு. மல்லிகா சாரியின் ‘அகத்தின் வர்ணங்கள்’ பளபளப்பாக இருந்தன. ஓவியம், கவிதை, ஹைகா போன்றவை படிக்கும் போதே சிலுசிலுவென்று இருந்தது.

அகத்தில் நுழைந்தேன். அகத்தில் அமிழ்ந்தேன். அகத்தில் கரைந்தேன். அகத்தை நுகர்ந்தேன். அகமாகவே ஆனேன். இந்த அழகிய அகத்தில் எனது எழுத்துகளுக்கும் ஓர் அறையை ஒதுக்கிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

அகம், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு

விலை: 300 ரூபாய் தொடர்புக்கு: 755-0098666


படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.