நிச்சயதார்த்த விழாவை இரண்டுமுறை செய்வது ஏன் எனச் சென்ற அத்தியாயத்தில் கேட்டிருந்தேன், அதைப் பற்றி மநுதர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது எனப் பார்க்கலாம்.

திருமணத்தில் சாந்தி ஹோமம், பிராஜாபத்திய ஹோமம் போன்றவை மங்கள நோன்புகளாகவே இயற்றப்படுபவனவே அன்றி, நிச்சயதார்த்தத்தில் செய்யும் வாக்குதத்தம்/வாக்கு தானமே ஓர் ஆடவனை ஒரு பெண்ணின் தலைவன் என்று விதிப்பதாகும் (மநு-5 : 152).

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் திருமணம் பேசி பரிசப் பணமும் கொடுத்த பிறகு, மணமகன் இறந்துவிட்டால், அந்த மணமகனின் தம்பிக்கு அவளை மணம் முடித்துக் கொடுக்கலாம். ஆனால் அப்பெண் ஒப்புக் கொண்டால் மட்டுமே செய்யலாம் (மநு-9 : 97).

ஒரு கன்னிகையை ஒருவனுக்குக் கொடுப்பதாக வாக்கு கொடுத்த பிறகு அவன் இறந்து விட்டால், அவன் தம்பி அவளை இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அடையலாம் (மநு-9 : 69).

அப்பெண்ணை அந்த மைத்துனன் மணந்து கொண்டு, வெள்ளை உடையுடன் மனம் மொழி மெய்கள் தூய்மையுடையவளாய் இருக்கச் செய்து, அவள் கர்ப்பமடையும் வரை ஒவ்வொரு முறையும் அவள் ருதுஸ்நானம் செய்த பிறகு அடைய வேண்டும் (மநு-9 : 70).

என் பெண்ணை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன் என வாக்குதத்தம் செய்த பிறகு பெண்ணின் தந்தை இறந்துவிட்டால், கன்னிகாதானத்தின் பான்மை அறிந்தவன், அந்த வாக்கை மாற்றி, வேறொருவனுக்கு அந்தக் கன்னிகையைக் கொடுக்கலாகாது. அவ்வாறு செய்பவன் புருஷா அங்ருதம் எனும் தோஷத்துக்கு ஆளாகிறான். அப்படிச் செய்பவனுக்கு, ஆயிரம் உறவினரைக் கொன்ற பாவம் வந்து சேரும் (மநு-9 : 71),

ஆனால் (சுல்கம்) பரிசம் பெற்றுக்கொண்டு பெண்ணைக் கொடுப்பது என்பதைச் சாத்திரம் அனுமதிப்பதில்லை. விலைக்குரிய தொகையை வாங்கிக் கொண்டு பெண்ணை விற்றதற்கே அது சமம் (மநு-9 : 98).

அதேபோன்று ஒருவனுக்குக் கொடுப்பதாக வாக்களித்த பெண்ணை இன்னொருவனுக்குக் கொடுப்பதை நல்லவர்கள் யாரும் செய்வதில்லை . இதற்கு முன் நம் முன்னோர்கள் யாரும் இவ்வாறு ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு பெண்ணை விற்கும் இழிச்செயலைச் செய்ததில்லை (மநு-9 : 99&100).

ஒரு பெண்ணை ஒருவனுக்கு அளிப்பதாக வாக்கு தத்தம் செய்த பிறகு அந்தப் பெண் இறந்தால், நிச்சயம் செய்யப்பட்டவனுக்கும் அவன் பங்காளிகளுக்கும் மூன்று நாட்கள் தீட்டு. திருமணம் ஆன பிறகு இறந்தால் அவளின் தந்தை, தந்தையின் பங்காளிகளுக்கு மூன்று நாட்கள் தீட்டு. (மநு-5 : 72)

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

நிச்சயம் செய்தபிறகு அந்த மணப்பெண் இறந்தால், நிச்சயிக்கப் பட்டவனுக்குத் தீட்டு என்றும், மணமகன் இறந்தால் அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் மநு நீதி சொல்வதன் பொருள், அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

பெண் விரும்பினால், நிச்சயிக்கப்பட்டவனின் தம்பிக்கு அவளை மணம் செய்விக்கலாம் என்று சொன்னாலும், சுற்றி வளைத்து அது தகாத செயல் என்கிறது. மீண்டும் மீண்டும் மநு சொல்லும் நிபந்தனைகளின் படி அவளை ஒரு கைம்பெண்ணுடன் ஒப்பிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அப்படியே, அந்த வரனின் தம்பிக்கு அவளை மணமுடிப்பதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. அவனுக்குத் தம்பியே இல்லை என்றால்? அல்லது அவன் அவளை விட இளையவனாக / சிறுவனாக இருந்தால்? இப்படிப் பல.

சுல்கம் எனப்படும் பரிசப்பணம் என்பது, மணமகளின் (மணமகளுக்கு இல்லை) பெற்றோருக்கு மணமகன் கொடுப்பதாகும். அப்படிப் பணத்தைப் பெற்றுக்கொள்வது வியாபாரம் போலத்தான் அல்லவா? அதை மநு தர்மமும் மறுக்கவில்லை.

பரிசப்பணம் கொடுக்கல் வாங்கல் தவறு என்று மநு சொன்னாலும்கூட, அது தொடர்ந்து நடைமுறையில் இருந்திருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், பெண்ணுக்காகப் பணம் வாங்குவதை விட, கொடுப்பதில் தவறில்லை என்று சொல்வதன் மூலம், ஆணுக்குப் பரிசப்பணம் (வரதட்சணை) கொடுப்பதை மநு தர்மம் ஆதரிக்கிறது என்றும் கொள்ளலாம்.

நிச்சயதார்த்தம் செய்யும்போது, ஒரு சந்தனக் கிண்ணத்தின் மேல் பணம் வைத்து மணமகனுக்குக் கொடுப்பதென்பது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன். அந்தப் பணமானது, ஜானவாசம் எனப்படும் மாப்பிள்ளை அழைப்புக்கு, மணமகனுக்கு உடைகள் வாங்க என்று சொல்லப்படுகிறது.

இதில் இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது, நடைமுறைச் சிக்கல்களைக் கருதி, ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

நிச்சயம் செய்து உடனே திருமணம் செய்துவிடும் பட்சத்தில், இரண்டு நிச்சயதார்த்தத்துக்கு அவசியமே இருக்காது. ஆனால் திருமணம் நிச்சயித்து, ஆண், பெண் சவுகரியங்களை முன்னிட்டு, மூன்று மாதம், ஆறு மாதம், ஏன் ஒரு வருடம் கடந்துகூட திருமணம் வைத்துக்கொள்ளும் நடைமுறைக்கு வந்த பிறகு, இரண்டாவது முறையாக, மாப்பிள்ளை அழைப்புக்கு முன்பாக ஒரு நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, மநு சொன்னதைச் செய்துவிட்டதாகப் பாவலா செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

காலப்போக்கில் ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் எல்லோரும் இதைக் கடைபிடிக்கின்றனர்.

முன்பெல்லாம் திருமணங்களை, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடத்துவார்கள். ஆனால் இன்று அனைத்தையும் சுருக்கி, இரண்டே தினங்களில் நடத்தி முடிக்கின்றனர்.

நிச்சயம் செய்துவிட்டு, பல திருமணங்கள் நடக்காமலேயே நின்றுபோயிருக்கின்றன. அதை ஆட்சேபிக்கும் உரிமை இங்கே யாருக்கும் இல்லை என்பதை நாம் நன்றாகவே அறிவோம். எனவே, மநு சொல்வது போல, திருமணம் மட்டும் இல்லை, நிச்சயதார்த்தமும்கூட ஒரு மங்களச் சடங்காக மாறிவிட்டது என்பதே உண்மை. இங்கே வாக்கு தத்தம் எனப்படும் ‘சொன்ன சொல் தவறாமை’ என்பது மதிப்பற்று போகிறது. ஆனால், பெண்களுக்கு இதன் மூலம் பாதுகாப்பு இருப்பதால், தவறு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

இது மட்டுமில்லை இதுபோல பல சடங்குகள் மீண்டும் மீண்டும் இரண்டுமுறை செய்யப்படுகின்றன. இதையெல்லாம் ஏன் செய்கிறோம் எதற்காகச் செய்கிறோம் என்றே பலருக்குத் தெரிவதில்லை. பத்துடன் பதினொன்றாகச் செய்துவிட்டுப் போவதால், நடைமுறையில், இதுபோன்ற சில சடங்குகளைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று கூட பலருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் செய்துகொண்டே இருக்கிறோம்.

ஒரு குழந்தை பிறந்து, தொப்புள்கொடி அறுக்கும் முன் நெய்யும் தேனும் குழைத்து நாவில் தடவி ‘ஜாதகர்மா’ எனும் சடங்கைச் செய்யவேண்டும். அதன்பின் தீட்டுக் கழித்து (பெயர் சூட்டல்) நாமகரணம், ஆறாம் மாதம் அன்னப்பிராசனம், ஐந்து வயதுக்குள் ஆண்களுக்கு சவுளம் போன்ற சடங்குகள் செய்யப்படவேண்டும் என்கிறது மநுதர்மம்.

இவற்றுள் எல்லாமே பெண்களுக்கு மந்திரப்பூர்வமாக இல்லாமல், சடங்காக மட்டுமே செய்யப்படவேண்டும் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆனால், ஜாதகர்மா, நாமகரணம் போன்ற சடங்குகள் குழந்தை பிறந்து பதினோராம் நாள் தீட்டு கழிக்கும் புண்ணியாக வசனம் செய்யும்போது ஒரு முறையும், ஆண்களுக்கு உபநயனத்தின் போதும், பெண்களுக்குத் திருமணத்துடன் சேர்த்து ஒரு முறையும், ஆக இரண்டு முறை செய்யப்படுகின்றன.

குழந்தை பிறந்து ஆறாம் மாதத்தில் செய்யப்படும் அன்னப்பிராசனம் (சாதம் ஊட்டுதல்), குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவான அப்த பூர்த்தி ஆயுஷ்ஹோமத்துடன் ஒரு முறையும், மீண்டும், ஆண்களுக்கு உபநயனத்தின்போதும், பெண்களுக்குத் திருமணத்துடன் சேர்த்து ஒரு முறையும் செய்யப்படுகிறது.

நன்கு வளர்ந்து, வயதை எட்டிய மகனுக்கோ, மகளுக்கோ, காதில் பெயர் சொல்லி, சாதம் ஊட்டி, அப்பா செய்யும் இந்தச் சடங்குகளை நினைக்கையில் உண்மையில் நகைப்பாக இருக்கிறது!

மேலே குறிப்பிட்ட விழாக்கள், சடங்குகள் எல்லாமே, அதிகச் செலவு செய்து நடத்தப்படுபவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்குச் செலவு என்றாலே அது மற்றொருவருக்கு வருமானம் கொடுப்பது என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை.

இதற்குப் பின்னெல்லாம் ஆயிரம் பொருள் இருக்கிறது என யாராவது சொல்லிக்கொண்டு வந்தால், தயவு செய்து உங்கள் மனசாட்சியிடம் கேள்வி கேட்டுத் தெளிவு பெறுங்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல இயலும்.

மற்ற அனைத்தையும் தள்ளிவிட்டுப் பார்த்தாலும், திருமணம் என வரும்போது, இருப்பவர்கள் இன்பமாகச் செலவு செய்கிறார்கள். இல்லாதவர்கள் கடன் பட்டாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். சரிசமமான நிலை என்பது துளியும் இல்லை.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே, முன்னமே திட்டமிட்டு மங்களகரமாக, கொண்டாட்ட மனநிலையுடன் மகிழ்ச்சியுடன் செய்யப்படுபவை. எனவே இதைக்கூட அரை மனதாக ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் துக்கச் சடங்குகளும் கூட இதே போன்று இரண்டு முறை செய்யப்படுகின்றன என்பதுதான் வேதனையிலும் வேதனை.

பார்ப்பன வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது என்றால், இறந்த நிமிடம் தொடங்கி, அதன் பின்னான ஒரு வருடம் முழுவதும், செத்தவர்களுக்காக, உடலை வருத்திக்கொண்டு செய்கிற ஈமக்கடன்களிலேயே கழிந்துபோகும். கூடவே செலவுகளும் அதிகம்.

சுப நிகழ்வுகளைச் செய்துவைக்கும் வாத்தியார்கள், ஈமக் கிரியை செய்து வைக்க வரமாட்டார்கள். குறிப்பாக, முதல்நாள் பிரேதத்தை எடுக்கும் பணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்கென்று பிரத்தியேகமாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

தகவல் சொல்லிவிட்டால், காண்ட்ராக்ட் அடிப்படையில், சடங்குகள் செய்யத் தேவையான பொருள்களுடன் வந்துவிடுவார்கள். ஆங்காங்கே இருக்கும் மின் மயானங்களில் நேரம் ஏற்பாடு செய்வதைக் கூட அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். செலவுகள் மற்றும் சடங்குகள் சேர்ந்து அந்த ஒரே நாளிலேயே விழி பிதுங்கிப் போய்விடும் என்றால் அது பொய்யில்லை.

முதல் நாள் பிரேதத்தின் கைகளாலேயே கொடுக்கப்படவேண்டிய தானங்கள் அனைத்தும், மந்திர பூர்வமாகச் சொல்லி பெயருக்குச் செய்துவிட்டு, மீண்டும் பன்னிரண்டாம் நாள் செய்யப்படும் சபிண்டீகரணத்தன்று செய்யப்படுகின்றன. ஏன்?

இந்த நேரத்தில் செய்யப்படும் பலவித தானங்களில் கன்னிகாதானமும் அடக்கம் என்பது தெரியுமா?

பிணத்தைத் தகனம் செய்யும்போது செய்யவேண்டிய ஏகோதிஷ்ட்டம் எனும் சடங்கு பதினோராம் நாள் செய்யப்படுவது ஏன்?

ஒருவர் இறந்து முதல் வருடம் முடிய, செய்யப்படவேண்டிய சபிண்டீகரணம் பன்னிரண்டாம் நாளில் செய்யப்படுகிறது, அது ஏன்?

இதுபற்றி அடுத்த பதிவில் விளக்கமாகப் பார்க்கலாம்.

இங்கே, புனிதமாக எண்ணி நாம் செய்துகொண்டிருக்கும் பல சடங்கு சம்பிரதாயங்கள், பெண்களின் உழைப்பையும் ஆரோக்கியத்தையும் அதிகமாக விழுங்குகிறது. உளவியல் ரீதியாகவும் பெண்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதை முற்றிலும் உணர்ந்ததால்தான், பழமையிலிருந்து விடுபட இயலாமலும், கால மாற்றத்தை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள இயலாமலும் தவிக்கும் நாற்பதைக் கடந்து, பெரிமெனோபாஸ் பிரச்சினைகளுடன், இவற்றையெல்லாம்கூடச் சேர்த்துச் சுமக்கும் பெண்களுக்காகவே இந்தத் தொடரை எழுதுகிறேன்.

ஒரு சிலராவது உண்மைகளை உணர்ந்து, மாற்றத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தாலும் போதும், அடுத்த சந்ததி பயனடையும்.

மேலும் எழுதுவேன்.

  • உள்ளிருந்து ஒரு குரல்.