வீடுகள் இல்லாத சாலையில் ஓட்டும்போது இல்லாத ஆனந்தம் ஒவ்வொரு வீடாகத் தாண்டும்போது வருகிறதே ஏன்? யாராவது பார்த்து அப்பாவிடம் சொல்லி உன் ஆனந்தத்தில் மண்ணள்ளிப் போட்டால் தெரியும். ஊருக்குள் வராதே ஆபத்து என்று சொன்னால் கேட்கிறாயா என மனசாட்சி ஒரு பக்கம் நொந்துகொண்டது. மனசாட்சியாவது மண்ணாவது என றெக்கைக் கட்டி ஊருக்குள் பறந்து கொண்டிருந்தாள் சுஜாதா.
சற்றுத் தொலைவில் தன் அப்பா நடந்து போவது போலத் தெரிந்தது. அப்பாவிடம் மாட்டப் போகிற என்று மனசாட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வண்டி அருகில் வந்துவிட்டது. மெய்யாலுமே அப்பாவேதான். ஐயோ இப்பவே வண்டியை விட்டு இறக்கி, அடிக்கப்போகிறார். என்ன தைரியம் இருந்தால் வயசுக்கு வந்த பொம்பளைப் பொண்ணு வண்டியை எடுத்திக்கிட்டு இந்த ராத்திரி நேரத்துல ஊரைச் சுற்றிக்கொண்டு இருக்கிறே எனத் தரும அடி நிச்சயம் என நொடி நேரத்திலும் மின்னலாக வெட்டிச் சென்றது. ஊரில் யாராவது பார்த்துச் சொல்லிடுவார்கள் என்று நினைத்தேன், இப்போ நானே கையும் களவுமா மாட்டிக்கிட்டேன்.
அப்பா அருகில் வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு, கைதி போலிஸில் சரணடைவதுபோல சரணடைந்தாள். அப்பா இனி வண்டியை எடுக்க மாட்டேன். சொல்லாமல் எடுத்தது மகா தப்பு என டயலாக்குகளைத் தயாரித்து வைத்தாள். நடக்கிறது நடக்கட்டும், அடியோ திட்டோ எதையும் வீட்டில் போய் கொடுங்க என்று சொல்லிடுவோம் என வண்டியை அப்பா அருகே நிறுத்தினாள். அப்பாவோ சுஜாதாவை வண்டியில் பார்த்ததும், “வந்துட்டியா, வண்டி இல்லன்னு அப்படியே நடந்து வந்துட்டேன். பெரியப்பா வீட்டுக்குப் போ” என்றார். இது நம்ம அப்பாவா! அதுவும் பின்னாடி உட்கார்ந்து தோள்மீது கைவைத்து ஓட்டு என்கிறாரே! ஒரு வார்த்தை கேட்கலையே! இல்ல இது கனவா, நான் வேறு உலகத்தில் இருக்கேனா!
பெரியப்பா வீட்டுக்குப் போனதும் அங்கு அண்ணன்கள், பெரியப்பா எல்லாம் இந்த வண்டியை ஓட்டறியா எனச் சொன்னதும் வார்த்தையில் விவரிக்க இயலாத பெருமிதம் வந்தது. வண்டியைச் சொல்லிக் கொடுத்த ஜெகன் அண்ணன் வாரி அணைத்துக்கொண்டான். “சூப்பர் பாப்பா இப்படித்தான் தைரியமா விடாம ஓட்டணும்.” புதியதாகப் பிறப்பெடுத்த நெபுலாக்களெல்லாம் வாழ்த்துச் சொன்னது போல இருந்தது.
வீட்டுக்குப் போனதும் கச்சேரி உண்டு என்று தோன்றியது. வீட்டிற்குத் திரும்பியதும் சற்றுப் பயத்துடனேயே இருந்தாள் சுஜாதா.
“நீ எனக்குத் தெரியாம வண்டி எடுத்துக்கிட்டு போய் ஓட்றது எப்பவோ தெரியும். கியர் கொஞ்சம் டைட் ஆன மொத நாள்லயே கண்டுபிடிச்சிட்டேன். தம்பி எப்பவோ கத்துக்கிட்டான். நீ இப்பதான் கத்துக்கற. யாரு கத்துக்கொடுத்தா?” என்று அப்பா கேட்டார்.
“ஜெகன் அண்ணன்தான் காட்டுல மொத கியர் போட்டு ஓட்டக் கத்துக் கொடுத்தான். முதல்ல வயல்ல போயி விழுந்துட்டேன். பிறகு சுதாரிச்சிக்கிட்டு வண்டியை மொதகியர்ல எடுக்கத் தொடங்கிட்டேன். இப்போ நல்லாத்தான் ஓட்டறேன்.”
“அதான் பார்த்தனே எப்படி ஓட்டறன்னு. இப்போ பதினொன்னாவது படிக்கற. லைசென்ஸ் எடுக்க 18 வயசு ஆகணும். அதுவரைக்கும் வெளில எங்கயும் போகக் கூடாது சரியா?”
அப்பாடா, எப்படியோ அப்பாகிட்ட அடிவாங்காமல் பாராட்டு வாங்கிட்டோம் என்று அம்மாவிடம் சொல்லிச் சொல்லி புளங்காகிதம் அடைந்தாள். அம்மாவோ போதும் என்று சொல்லுமளவுக்குப் போய்விட்டது. அப்பா பொண்ணு பாசம்ல்லாம் திடீரென்று டாப் கியரில் எகிறி விண்வெளியில் நடைபோட்டதெல்லாம் அனைவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் அப்பா, “இனி கியர் வண்டியெல்லாம் எடுக்காத, அது ஆம்பளங்க ஓட்டறது… நீ டிவிஎஸ் வேணா ஓட்டு. பொண்ணுங்க கியர் பைக் ஓட்டுனா நல்லாவே இல்ல. ஊரெல்லாம் ஒரு மாதிரியா பேசறாங்க. எதுக்கு ஆம்பள மாதிரி பொண்ண வளர்க்கற, இப்படி வளர்த்தா எப்படி நாளைக்கி உன் பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கன்னு கேட்கறாங்க” என்றார்.
‘என்னடா தோள்ல தட்டிக்கொடுத்த அப்பா இன்னிக்கி வண்டியை எடுக்காதன்னு நாலு பேர் பேச்சைக் கேட்டுக்கிட்டு வந்து பேசறாரு. அதுவும் கல்யாணம் நடக்காதாம்… அதெல்லாம் யார் கேட்டதுன்னு தெரியலையே… அவன் கேட்டா இவரு ஏன் வந்து இப்படிச் சொல்றாருன்னு’ சுஜாதாவுக்குப் பெரும் குழப்பமா இருந்தது.
(தொடரும்)
படைப்பாளர்:
சாந்த சீலா
சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார். ஹெர் ஸ்டோரீஸில் இவர் எழுதிய குழந்தைகள் பற்றிய தொடர், ‘நாங்கள் வாயாடிகள்’ என்ற நூலாக வெளிவந்திருக்கிறது.