கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும் பிரபலமாக இருப்பது கேரளாவில் உள்ள மூணார்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப் பேட்டையிலிருந்து மூணாருக்குச் செல்லும் வழியில், சின்னார் கானுயிர்க் காப்பகத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், மூணாருக்கு 40 கிலோமீட்டர்கள் முன்பே, சந்தனக் காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது மறையூர். மூணார் போலவே இயற்கை அழகு கொஞ்சும் இந்தக் கிராமம், மூணாரைப் போல இன்னும் பிரபலமடையவில்லை.

மறையூருக்குச் செல்ல, உடுமலைப்பேட்டையிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை, பேருந்து வசதி உள்ளது. அதற்கிடையில் செல்வதானால், ஜீப் மூலம் மறையூருக்குச் செல்லலாம் (பதினைந்து நபர்கள் இருந்தால் மட்டுமே ஜீப் இயக்கப்படும்). உடுமலையிலிருந்து பதினேழு கிலோமீட்டர்கள் வரை, சமவெளிப் பாதை இருக்கும். அதற்குப் பிறகு மலைப்பாதையில் பயணம் தொடங்கும். இடையில் ஒரேயொரு கொண்டை ஊசி வளைவைக் கடந்தபிறகு சாலையின் இருபுறமும் நம் கண்களை நிறைக்கும் இயற்கை அழகு நிரம்பி வழியும்.
மறையூருக்குச் செல்லும் வழியில் உள்ள காடுகள், ஒரே மாதிரியானவை அல்ல. புல்வெளிகள், முள் புதர்க் காடுகள், தென்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மழைக்காடுகள், மேற்கு மலைகளின் உயர் சோலைகள் ஆகியவை இங்குள்ளன. இவை தவிர, தென்மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுப்பகுதிகளில் உள்ள ஈரப்பதமான இலையுதிர் காடுகள் மற்றும் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் வறண்ட இலையுதிர் காடுகள் ஆகியவையும் இப்பகுதியில் காணப்படுகின்றன.

இக்காடுகளில் இந்திய சிறுத்தை மற்றும் புள்ளிமான், இந்திய யானை, காட்டெருமை, வங்காளப் புலி, கடமான் (Sambar deer), லங்கூர், குல்லாய் குரங்கு (Bonnet macaque), சாம்பல் லங்கூர், நீலகிரி தார், துரும்பன் பூனை (Rusty-spotted cat) மற்றும் சாம்பல் நிற ராட்சத அணில் உள்ளிட்ட 28 பாலூட்டி இனங்கள் இங்குள்ளன. மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி (yellow-throated bulbul) இந்திய மயில், உள்ளிட்ட 225 பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன. இந்திய நட்சத்திர ஆமை, 29 வகையான பாம்புகள் உட்பட 52 வகை ஊர்வன; 156 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 101 வகையான சிலந்திப் பூச்சிகள் என பல வகை விலங்குகளின் புகலிடமாகவும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய இடமாகவும் மறையூர் உள்ளது.

உடுமலைப்பேட்டையிலிருந்து மறையூர் செல்லும் வழியில், குல்லாய் குரங்குகள், மான் கூட்டங்கள், மயில்கள், கோடைக் காலங்களில் தண்ணீர் தேடி உள்காட்டிலிருந்து சாலையருகே வரும் யானைக் கூட்டங்கள், இரவு நேரங்களில் கடமான், காட்டெருமை ஆகியவை அதிகமாக நம் கண்களில் தென்படும் விலங்குகள் ஆகும்.
அந்தக் காட்டுவழிப் பயணத்தைக் கடந்தால், கடல்மட்டத்திலிருந்து 990 மீட்டர் உயரத்தில், சில சமதளக் கிராமங்களையும் பல மலைக்கிராமங்களையும் உள்ளடக்கியது மறையூர் கிராமப் பஞ்சாயத்து. இதில் பதிமூன்று வார்டுகள் உள்ளன. அவற்றில் பலவும் பழங்குடி கிராமங்கள். அவர்களுக்கே உரிய பண்பாடு, ஊர்க் கட்டு என இன்றும் தொன்மை மாறாமல் வாழும் பழங்குடி மக்களின் கிராமங்கள் அவை.
மலையேறி, பழங்குடி மக்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளும் முன்பு, மறையூரின் சமதளத்தில் வாழும் மக்கள், அதன் வளங்கள் என்ன என்பதைக் காணலாம்.
மறையூரில் வாழும் மக்கள் தமிழும் மலையாளமும் பேசுகின்றனர். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து, மக்கள் பலர் மறையூருக்கு குடிபெயர்ந்துள்ளனர் என அங்குள்ள வயதானவர்கள் பதிவு செய்கின்றனர்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, சில குளறுபடிகளால் தமிழர்கள் அதிகம் வசித்த தேவிகுளம் தாலுகா, கேரளாவுடன் சேர்க்கப்பட்டது. அந்த தேவிகுளம் தாலுக்காவில்தான், மறையூர் கிராமப் பஞ்சாயத்து அமைந்துள்ளது. தமிழ் மொழியில் சமஸ்கிருதம் கலந்து உருவான மலையாளம், அங்கு ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனாலும், தமிழ் மொழிக்கு போதுமான முக்கியத்துவமும் பிரதிநிதித்துவமும் அளிக்கப்படுகிறது என்பதை, அரசு சார்பில் அங்கு முன்னெடுக்கப்படும் ஆட்சி மற்றும் கல்வித் திட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.
கிறிஸ்தவப் பாதிரியார்களும் சகோதரிகளும் மறையூரில் கல்விக் கூடங்கள் மற்றும் அத்தியாவசிய சிகிச்சை அளிக்கும் சிறு மருத்துவமனைகளை உருவாக்கி, அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர். அதன் பிறகு அரசு சார்பில் அவை மேலும் செம்மைப்படுத்தப்பட்டன. ஆனால் உயர் சிகிச்சை மற்றும் சிக்கலான பிரசவம் போன்றவற்றுக்கு 40 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மூணாருக்கோ, 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடுமலைப்பேட்டைக்கோ நோயாளிகளைக் கொண்டு செல்லும் சூழல்தான் இன்றும் நிலவுகிறது.
அங்கு வாழும் மக்களுக்கு பெரும்பாலும் வேளாண்மைதான் முதன்மைத் தொழில். பெருவாரியானவர்கள் வேளாண் கூலிகளாகவும் மற்றவர்கள் கூலித் தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர். 2015 ஆண்டுவாக்கில் தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் இங்கு உருவானார்கள் (அதுவும் சமவெளி மக்களிடையே!). மலையின் மேலுள்ள பழங்குடி கிராமங்களில் இருந்து முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சமீபத்தில்தான் உருவாகி வருகின்றனர்.
சமீபகாலமாக மறையூருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது அதிகரித்துள்ளது. அது ஏன் என்பதற்கான காரணத்தைத் தேடினால், இயற்கை வளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல அங்கு இருப்பது தெரியவரும்.
மறையூரின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று, அங்கு காணப்படும் கல்திட்டைகள் (Dolmen). இவை பெருங்கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த கல்லறைகளாகும். முருகன் பாறை எனும் இடத்தில் பரவலாக கல்திட்டைகள் காணப்படுகின்றன. அது தவிர குருசமலை, கோவில்கடவு ஆகிய உள்ளிட்ட இடங்களிலும் கல்திட்டைகள் காணக் கிடைக்கின்றன. அவை பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களின்மேல், கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றைக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பை அங்குள்ள மக்கள் ‘முனியறை’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இது பண்பாட்டு மற்றும் தொல்லியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பு ஆகும். ஆனால் அங்குள்ள மக்களுக்கு, இது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போது, இளைப்பாறும் இடமாக உள்ளது.
மேலும் அங்குள்ள பாறைகளில் இருக்கும் பாறை ஓவியங்கள், கேரளாவின் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவையும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை.

இன்று மறையூரில் பெரும்பான்மையாக கரும்பு விவசாயம் செய்யப் படுகிறது. 1980 – 90 களில் பெரும்பாலும் நெல் தான் விவசாயம் செய்யப்பட்டது, இரண்டாயிரங்களுக்குப் பிறகு தான் கரும்பு உற்பத்தி பரவலானது என அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.
மறையூரில் விளையும் கரும்பிலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 – ஆம் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. மறையூரைச் சேர்ந்த ‘அஞ்சுநாடு கரும்பு உற்பத்தி விற்பனை சங்கம் (Anchunadu Karimbu Ulpadhana Vipanana Sangham)’ மறையூர் வெல்லத்தின் புவியியல் குறியீட்டைப் பதிவு செய்ய, மார்ச் 2018 இல் விண்ணப்பம் தாக்கல் செய்தது. பிறகு சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேடு, 2019 இல் மறையூர் வெல்லத்திற்கு புவிசார் குறியீட்டைப் வழங்கியது. இதனால் இப்பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு மட்டுமே ‘மறையூர் வெல்லம்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.


மத்திய திருவிதாங்கூர் வெல்லத்திற்குப் பிறகு, கேரளாவிலிருந்து இரண்டாவது வெல்ல வகையாக புவியியல் குறியீட்டைப் பெற்றுள்ளது மறையூர் வெல்லம் (மறையூர் ஷர்க்கரா).

மறையூரின் மற்றுமொரு சிறப்பு, அங்கு ஏராளமாக காணப்படும் சந்தனக் காடுகள். கேரளாவில் இயற்கையான சந்தனக் காடுகள் இருக்கும் ஒரே இடம் இதுதான். சந்தன மரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருள்களான எண்ணெய் உள்ளிட்டவற்றை பதப்படுத்துவது, உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கியப் பங்கு வகிக்கிறது.



இத்தனை அழகையும் சிறப்பையும் தனக்குள் வைத்திருக்கும் மறையூர், ஆழமான பண்பாட்டுத் தொன்மையையும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அருகே இருந்து கண்டால் மட்டுமே, அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொள்ளும் முயற்சியின் பலனாக எனக்குக் கிடைத்த அனுபவம்தான் இதை என்னை எழுத வைத்துள்ளது.
கர்ப்பூரக்குடி, கவக்குடி, பெரியகுடி, குத்துக்கல்குடி, வேங்கைப்பாறை, நெல்லிப்பட்டி, கம்மாலங்குடி, ரெட்டெலைக்குடி, வஞ்சிக்குளம்குடி, புதுக்குடி, வெள்ளக்கல்குடி, மொலகாம்பட்டி, தாயனங்குடி ஆகிய பழங்குடி மக்கள் குடியிருப்புகளில் முதுவார் மக்களும், ஈச்சம்பட்டி, ஊஞ்சம் பாறை, ஆலாம்பட்டி, புறவயல், கரிமுட்டி, கும்பிட்டாங்குழி, செருவாடு, ஒன்றரை ஏக்கர், பட்டிக்காடு, உழவன் தோப்பு ஆகிய பழங்குடி மக்கள் குடியிருப்புகளில், புலையர் மக்களும் வாழ்கின்றனர்.
விரல்நுனியில் உலகை வைத்திருக்கும் மக்களல்ல இந்த பழங்குடி மக்கள். 2024ஆம் ஆண்டு தான், கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பல பழங்குடி கிராமங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தும் வசதி வந்துள்ளது. அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால்கூட, பல கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, மலையிலிருந்து இறங்கி வர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இவர்கள்.
பண்பாட்டுத் தொன்மம் கொண்ட இம்மக்களின் அன்றாடம், அவ்வளவு எளிதானதல்ல. அம்மக்களின் வாழ்வும் வாழ்வியலும், வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய விஷயங்கள். அவர்களின் உலகிற்குள் செல்வதற்கு, அவர்கள் அனுமதித்தால் மட்டுமே முடியும். அவ்வாறு அவர்கள் தங்களைப் பற்றி என்னென்ன சொல்கிறார்கள், அவர்களின் உலகம் எப்படியுள்ளது என அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.
(தொடரும்)
படைப்பாளர்

மரு. நாகஜோதி
Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.
ஆடம்பரம் இல்லவிட்டாலும் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை என் சொந்த ஊர் மறையூரில் மேட்டுமே …. வாழ்த்துக்கள் நாகஜோதி .. தொடருங்கள்
மறையூர், அனைவரும் பார்க்கவேண்டிய, தங்கி, அருவிகளில் குளியல் போடவேண்டிய இடம். அருமையான கட்டுரை நாகஜோதி.
இந்த ஆண்டு விடுமுறைக்குப்்போகனும்