(கல்யாணமே வைபோகமே – 5)

மனைவி பிள்ளை பெறாதவளாக இருந்தால் எட்டு ஆண்டுகள் வரை குழந்தை பிறக்கிறதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு இன்னொரு பெண்ணை மணந்துகொள்ளலாம் (மநு 9 : 81).

ஒரு பெண் திருமண உறவுக்குள் நுழைந்தாளோ இல்லையோ, ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே அவள் கருவுற்றே ஆகவேண்டும் என எதிர்பார்க்கிறது நம் சமூகம். இல்லாமல் போனால் அந்தப் பெண்ணை ஏளனம் செய்து, அவள் வாழவே தகுதியற்றவள் என்பதுபோல சித்தரிக்கிறது.

காலாகாலத்தில் கருவுற வேண்டும். பிள்ளையைச் சுமந்து வலி பொறுத்துப் பெற்றெடுக்க வேண்டும். ஆண் பிள்ளையாக இருந்தால் 31 நாள்களும், பெண்ணாக இருந்தால் 41 நாள்களும் தீட்டு காக்க வேண்டும். அதன் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, குழந்தையையும் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளைக் குறைவின்றிச் செய்யவேண்டும். அதன் பிறகு மீண்டும் கருவுறுதல், பிள்ளை பெறுதல் ‘ரிப்பீட்டு’ என இளமை முழுவதும் பிள்ளை பெறும் இயந்திரமாகவே  பெண்கள் வாழ்கையைத் தொலைத்தனர். 

 ‘குழந்தை தூங்கும்போது மத்த வேலையெல்லாம் முடிச்சிக்கணும், அப்பதான் அது முழிச்சு அழும்போது அதை கவனிக்க முடியும்’ – இதுதான் வழக்கமாக எல்லா மாமியார்களும் மருமகள்களுக்குக் கொடுக்கும் உபதேசமாக இருக்கும்.

 சுகப்பிரசவம் என்றால் இயற்கையாக நிகழும் யோனி வழி பிரசவம் என்றும், அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் சுகப்பிரசவம் இல்லை என்றும் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். தாயும் சேயும் நலமாக இருந்தாலே அது சுகப்பிரசவம் என நாம் ஒப்புக்கொள்வதில்லை.

 ஆனால், நவீன மருத்துவ வசதிகள் இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்த காலங்களில் தாய் மரணம், சிசு மரணம், அல்லது இருவருமே மரணமடைவது போன்றவை தவிர்க்க முடியாத ஒன்று. அதன்படி பார்த்தால் பிரசவம் முடிந்து தாய் – சேய் இருவரும் பிழைத்துகிடந்தாலே, அதுதான் சுகப் பிரசவம். இல்லாமல் போனால் அது? ‘அகால மரணம்’ அவ்வளவுதான். குடும்பக்கட்டுப்பாடு வசதிகள் ஏற்படும் வரை இதே நிலைதான் தொடர்ந்தது.

 குடும்பப் பொறுப்புகளுடன், மீண்டும் மீண்டும் கருவைச் சுமந்து, வலி பொறுத்துப் பெற்றெடுத்து உடல் சோர்ந்து சலித்த பெண்கள், ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல், நாட்டுமருந்து உட்கொண்டு கருவைக் கலைக்கும் நடைமுறைகளைப் பின்பற்றியது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

 அதையும் மீறி அந்த மருந்துகள் பலன் கொடுக்காமல், உடல் உறுப்பு அல்லது மூளைத்திறன் குறைபாடுகளைக் கொண்டு பிள்ளைகள் பிறந்துவிடும். சமயத்தில் அது தாயின் மரணத்தில்கூட முடிந்துவிடும். குறைந்தபட்சம் பெண்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்.

 இதற்கெல்லாம் பெரும் தீர்வாக, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைமுறைகள் பிரபலமாக ஆன பிறகு, பெருவாரியான பார்ப்பன பெண்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டனர். ஆம், பெண்கள்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். இன்றுவரை கூட ஆண்கள் இதற்கு முன்வருவதில்லை. விதிவிலக்காக வெகு சிலர் மட்டுமே இருக்கக்கூடும்.

 தொடக்கத்தில் நான்கு, மூன்று பிள்ளைகள் என்பது போய், காலத்தின் வேகத்தில் இரண்டு அல்லது ஒரே ஒரு பிள்ளை எனக் குறைந்து போனது.

 இதற்கிடையில் 80களின் மத்தியில்தான் கர்ப்பகால ஸ்கேனிங் பிரபலமாகத் தொடங்கியது. தாய் சேய் நலனுக்காக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

 (இன்றளவும்கூட இது சட்டவிரோதமாகத் தொடர்கிறது என்பது நாம் அறிந்ததே. சமீபத்திய செய்தி இணைப்பு – https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dont-pretend-be-very-good-terrace-abortion-woman-who-trapped

இப்பொழுது இருப்பது போலத் தெளிவான சட்ட நடைமுறைகள் இல்லாததால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடித்து பெண் சிசுக்கள் அதிக அளவில் கருக்கொலை செய்யப்பட்டனர் (1990 வெளிவந்த பெண்கள் வீட்டின் கண்கள் திரைப்படத்தில் இதுபற்றிய கட்சிகள் இருந்தன). அடுத்தடுத்த காலகட்டங்களில், தங்கள் பணிகளை மனதில் கொண்டு பிள்ளைப் பேற்றை தள்ளிப்போட்டவர்களும் அதிகரித்தனர்.

இந்தக் காரணிகளால் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கைக்குப் பொருந்தாமல், பெண்களின் எண்ணிக்கை மிக மோசமாகக் குறைந்து போனது.

கண்களுக்குப் புலப்படாத இந்த மாற்றம், 2000க்கு பிறகு திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் பார்ப்பன ஆண்களுக்குப் பெரும் பிரச்சினையாகிப் போனது. 

முறையான சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தால் துல்லியமான எண்ணிக்கை நமக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ! மொத்தத்தில் பார்த்தால், 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் மட்டுமே இருந்தனர்.

இதுபற்றி தெளிவாகப் பேசும் BBCயின் கட்டுரை இணைப்பு

ஒரு பக்கம் இப்படி ஒரு சிக்கல் உருவாகி இருக்க, வரதட்சிணையுடன் கூடவே, மேலும் ஒரு நிபந்தனையாக வேலைக்குப் போகும் பெண்கள்தான் வேண்டும் எனப் பிள்ளையைப் பெற்றவர்கள், அதையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். விருப்பமோ அதற்கான அவசியமோ இல்லாமல் போனாலும்கூட பெண்கள் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் உருவானது. அதுவும்கூட பொருளாதார நிலையில் பின்தங்கிய பெண்களில் தலையில்தான் வந்து விடிந்தது.

வீட்டுவேலைகளைச் செய்ய எந்த இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் 9 – 5 நேரப் பணிகளே பெரும்பாலான பெண்களின் தேர்வாக இருந்தது. ஓய்வூதியத்துடன் கூடிய அரசுப் பணிகளுக்கு மட்டுமே மக்கள் முன்னுரிமை கொடுத்த காலம் அது. எனவே போட்டி அதிகம். அதிக ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதும் அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. 

கல்வித்தகுதி போதாமல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களிலும், வீடு வீடாகப் போய் பொருள்களை விற்பனை செய்வது போல உடலை வருத்தி செய்யக்கூடிய வேலைகளிலும் பெண்கள் அதிகம் ஈடுபட்டனர். அடுத்த தலைமுறை பெண்களின் வாழ்க்கையிலும்கூட பெரிதும் மாற்றங்கள் உண்டாகவில்லை. ஆனால் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலானோர் உணர்ந்து தெளிந்தனர். கல்வியில் ஆர்வம் செலுத்தாத பிள்ளைகளைக் கூட சாம, தான, பேத, தண்டம் அனைத்தையும் உபயோகித்து முழுமையான கல்வி பெறவைத்தனர்.

அதற்கேற்றாற்போல, 1990களின் இறுதியில் தகவல் தொழில்நுட்பம்,  வணிகச் செயல்முறை ஒப்பந்த சேவை (Business Process Outsourcing – BPO) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் எல்லாம் மிகச் சுலபமாக கைகூடியது.

பொறியியல் படித்தவர்கள் மட்டுமல்ல, கலை, அறிவியல் பட்டப் படிப்பு, பட்டையப் படிப்பு படித்த பெண்களும்கூட இதனால் அதிகம் பயனடைந்தனர். 

கீழ் நடுத்தட்டுப் பெண்கள் பலரும்  கல்வி மற்றும் அதிகச் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்று மேலே வந்த காலம் அது என்று சொல்லலாம். இவர்களில் பெரும்பாலான பெண்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும், முதல் தலைமுறையாக அதிக வருவாய் ஈட்டுபவர்களாகவும் இருந்தனர் என்றால் அது மிகையில்லை. சில வருடங்கள் வேலை செய்து, கணிசமாகப் பணம் சேர்த்துக்கொண்டு ஒரு தெளிவான திட்டமிடலுடன் தங்கள் திருமண வாழ்க்கையை முடிவுசெய்தனர்.

 மற்றெந்த மாநிலத்தையும் விட, பெரியார் விதைத்த  திராவிடச் சித்தாந்தம் வேரூன்றிப் போயிருக்கும் தமிழ்நாட்டில் பிறந்த பார்ப்பன பெண்கள் கொடுத்துவைத்தவர்கள் என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இவர்களில் நல்ல வசதி வாய்ப்புடன் சுகபோகம் அனுபவிக்கும் பல பெண்கள், இன்றும்கூட பழமைவாதம் பேசிக்கொண்டு மற்ற பெண்களைப் பின்னுக்கு இழுப்பதைப் பார்க்கும்போது சலிப்பு தட்டுகிறது.

 எண்ணிக்கை, சதவிகிதத்தில் வேண்டுமானால் முன்னே பின்னே இருக்கலாமே ஒழிய, எல்லாக் காலங்களிலும் சாதிகளைக் கடந்த காதல் திருமணங்கள் நடக்கவே செய்தன. அது சமகாலத்திலும் இருக்கிறது அவ்வளவுதான். மற்றபடி அதிக அளவில் பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

 இல்லாமல் போனால், ஜாதிக்கு ஜாதி எதற்கு இவ்வளவு ஜாதகப் பரிவர்த்தனை மையங்கள்?

 பொதுப் பத்திரிக்கைகள் மட்டுமல்லாமல் பல ஜாதியினருக்கும், அவரவர் உட்பிரிவுக்கும் கூட மாதாந்திர பத்திரிகைகள் வெளிவருகின்றன என்பது நாம் அறிந்ததே. அதிலெல்லாம்கூட திருமணத் தகவல்களுக்கு எனத் தனிப் பகுதியை ஒதுக்குகின்றனர் அல்லவா?

 பெண்கள் தங்கள் தகுதியை எந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று  தெரிந்துகொள்ள அந்தப் பத்திரிகைகளில் வரும் ‘மணமகன் தேவை’ பகுதியைப் புரட்டினாலே தெரிந்துவிடும். இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசினால், பெண்களின் இந்த முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் அல்லாவா?

அதை விட்டுவிட்டு, நாடகக் காதலை நம்பி பெண்கள் ஏமாந்து வேற்று ஜாதியினரைத் திருமணம் செய்துகொள்கின்றனர் என வெற்றுப் பிரச்சாரம் செய்வது சுலபம்தானே? உண்மை நிலை இப்படிப் போய்க்கொண்டிருக்க, தங்கள் மகன்களுக்குத் திருமணம் செய்ய ஒரு பெண் கிடைத்தால் போதும் என்கிற சூழலுக்குப் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தள்ளப்பட்டனர்.

 பிள்ளைகளுக்குப் பெண் தேட ஆரம்பிக்கும் தொடக்கக் காலத்தில், சுய ஜாதியை சேர்ந்தவளாகவும், அதே உட்பிரிவுகளுக்குள் வருபவளாகவும் இருந்தால் போதும் என்பது போன்ற வழக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், நாLகள் செல்லச் செல்லப் பிள்ளைகளைப் பெற்றவர்களின் சுருதி குறையத் தொடங்கிவிடும்.

 சுய ஜாதியைச் சார்ந்தவளாக இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் பொதுவான பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவளாக இருந்தால் போதும் (வெகு சிலர் மட்டும், எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, சைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால்போதும் என்றனர். இதுவும் தேவைக்காக மட்டுமே. மற்றபடி சமூக சீர்திருத்த மனப்பான்மையில் எல்லாம் இல்லை). ‘பெண் படிக்கவில்லை என்றாலும் எங்களுக்குச் சம்மதம்!’, வரதட்சிணை வேண்டாம்!”, ‘நகை நட்டு சீர்செனத்தி வேண்டாம்!’,   ‘பெண் ஏழையாக இருந்தால்கூட பரவாயில்லை; கல்யாணச் செலவுகளைக் கூட நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்!’என, ‘நீங்க வந்தா மட்டும் போதும்’ எனும்  சிவாஜி திரைப்பட வசனம் போல, அப்படியே தலைகீழாக மாறிப்போனார்கள்.

 திருமணத் தகவல் வலைத்தளங்கள் / செயலிகளில் பார்த்து, சலித்தெடுத்து, விசாரித்து, பெண் பார்ப்பதில் தொடங்கி ஒவ்வொரு படலமாகப் போய் திருமணமும் முடிந்துவிடும். ஆனாலும் கூட அடிப்படை புத்தி மாறாமல், திருமணம் முடிந்துவிட்டது என்பதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு பழைய கதையையே தொடர்ந்தவர்கள் ஏராளம். 

 நல்ல பணியில் இருக்கும் மென்பொறியாளரான என் தோழிக்கு நடந்ததை ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன். 2005இல் நடந்த சம்பவம் அது. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டது எனப் பிரசவம் நடந்த ஓரிரு தினங்களிலேயே அவள் கணவன் அவளைக் கன்னத்திலே அறைந்தானாம். மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவனும் ஒரு படித்த, மென்பொறியாளர்தான். 

 இன்றுவரையிலும் அவள் பல பிடுங்கல்களைப் பொறுத்துக்கொண்டு தனது திருமண வாழ்கையை வெற்றிகரமாகத் தொடர்கிறாள். இதுபோல, வெளியில் சொல்ல இயலாத எத்தனையோ பிரச்னைகளை சகித்துக்கொண்டு வாழ்பவர்கள் பலர் என்றால், இதையெல்லாம் உடைத்துக்கொண்டு விவாகரத்துப் பெற்று திருமண பந்தத்திலிருந்து வெளியேறியவர்களும் அதிகம் உண்டு. ஒரு சிலர் துணிந்து மறுமணம் செய்துகொண்டாலும், சிலர் முதல்முறை பட்ட சூட்டில் தனியாகவே தங்கள் வாழ்கையைத் தொடர்கின்றனர்.

இதுபோன்ற சிக்கல்கள்தான் திருமணம் என்று வரும்போது பெண்களை அளவுக்கு அதிகமாக முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வைக்கிறது. பாதுகாப்பான இடத்திலிருந்துகொண்டு எக்கச்சக்கமான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். திருமணம் தள்ளிப் போனாலும் கவலைப்படுவதில்லை. திருமணமே நடக்காமல் போகும் சூழல் ஏற்பட்டாலும், அதைப்பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை.

கடந்த பத்தாண்டுகளில், பெரியவர்களாகப் பேசி முடிவு செய்து நிச்சயதார்த்தம் வரை வந்து, ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாமல் நின்றுபோன திருமணங்கள் அதிகம். இவை அனைத்துமாகச் சேர்ந்து, பெண் கிடைக்காமல் குடும்பத்துக்கு ஓர் ஆண்பிள்ளையாவது திருமணம் ஆகாமல் தனித்து நிற்கும் சூழலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

பார்ப்பன சமூகத்தைப் பொறுத்தவரை மகனுக்குத் திருமணம் நடந்து அவன் நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று பெற்றவர்களும், ஆதிக்கம் செய்து, கிடைத்த வாழ்கையையும் கெடுத்துக்கொள்ளக் கூடாது என ஆண்பிள்ளைகளும் கூடுமான வரை பெண்களிடம் பணிந்துபோகிற அளவுக்கு அனைத்துக் கோட்பாடுகளையும் காலம் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது என்பதே உண்மை. 

சூழ்நிலை காரணமாக இதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டாலும், பொதுப் புத்தியில், பெண்களைக் குற்றம்சாட்டிக் கொண்டே இருப்பதை மட்டும் யாரும் நிறுத்திக்கொள்ள தயாராகவில்லை.

நான் மேலே குறிப்பிட்டது போல ‘திருமணத்தைப் பொறுத்தவரை எக்கச்சக்க நிபந்தனைகள் விதிக்கிறார்கள்’ என்பதே பார்ப்பன சமூகம் இன்றைய பெண்கள் மீது சுமத்தும் முதல் குற்றச்சாட்டு.

ஆண்களுக்கும் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் மட்டுமே நிபந்தனைகள் விதிக்க அனுமதிக்கப்பட்டவர்களா என்ன? இதையே பெண்கள் செய்தால் எல்லோருக்கும் ஆவி துடிக்கிறதா?

மேலோட்டமாகப் பார்த்தால் இதெல்லாம் புதிது போலத் தோன்றினாலும், கொஞ்சம் ஆராய்ந்து சிந்தித்தால் எல்லாமே காலந்தொட்டு நடந்துகொண்டே இருப்பவைதான். நடக்கும் களம்தான் வேறு.

ஆண்டாண்டு காலமாக, தலைமுறைத் தலைமுறையாக ஆண்களைப் பெற்றவர்கள் பெண்கள் மீது விதித்த நிபந்தனைகளை எல்லோருமே வசதியாக மறந்துபோய்விட்டார்களே! ஒரே ஒரு தலைமுறைப் பெண்கள் இதை ஆண்களுக்குத் திரும்பச் செய்யும்போது அதைக் கொஞ்சம் கூட சகித்துக்கொள்ள முடியவில்லைதானே.

பெரிதாக என்ன கேட்கிறார்கள்?

அடுத்த பகுதியில்…

 

  • உள்ளிருந்து ஒரு குரல்