“வணக்கம் மேடம்” என்று சொல்லிக்கொண்டு மன இறுக்கத்தோடு கணவனும் மனைவியும் என் எதிரே அமர்ந்தார்கள்.

கணவன் பெயர் முத்துக்குமார். வயது 30. படித்த அரசுப் பள்ளி ஆசிரியர். மனைவி ரஞ்சனி, 27 வயது. எம்பிஏ படித்தவர். தற்போது வீட்டில் இருக்கிறார்.

“உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றதும் முத்துக்குமார் பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்குக் கல்யாணம் ஆகி மூன்று மாதங்கள் ஆகிறது. என் மனைவி அடிக்கடி கோபமாகப் பேசுகிறார், சண்டை போடுகிறார். இவளோட அப்பா, அம்மா இருவரும் என்னை மரியாதை இல்லாமல் பேசிட்டாங்க…”

உடனே ரஞ்சனி குறுக்கிட்டார்: “இல்ல மேடம், கல்யாணம் ஆனதிலிருந்து இவர்தான் என்னிடம் அன்பாக இல்லை. பாசமாகப் பேசுவதில்லை. என்னைத் தொட்டுக்கூடப் பேசியதில்லை.”

முத்துக்குமாரை வெளியே அமரச் சொல்லிவிட்டு ரஞ்சனியிடம் தனியாகப் பேசினேன். கண்ணீரோடு பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்குள் தாம்பத்திய வாழ்க்கையே இல்லை மேடம். நான் பக்கத்தில் சென்றாலே கோபமாகப் பேசுகிறார். ஒரு பெண்ணாக என் உணர்வுகளுக்கு என்ன மதிப்பு? என் தேவைகளைப் பற்றி யாரிடம் பேசுவது? நாங்கள் சந்தோஷமாக இல்லை என்பது எங்க அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. துருவித் துருவிக் கேட்டபோது எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இதனால் இரு வீட்டாரும் சண்டை போட்டுக்கொண்டார்கள். ஆனால் என் பிரச்னையைப் புரிந்துகொள்ள யாரும் முயற்சிக்கவில்லை.”

ரஞ்சனியின் வார்த்தைகளில் ஓர் உண்மை தெளிவாகத் தெரிந்தது – இந்தச் சமூகத்தில் பெண்களின் உணர்வுகள், தேவைகள், விருப்பங்கள் எல்லாம் ’அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்கிற இரண்டு வார்த்தைகளால் அடக்கப்படுகின்றன.

ரஞ்சனியை வெளியே அனுப்பிவிட்டு முத்துக்குமாரிடம் பேசினேன். “உங்களுக்கு ரஞ்சனியைப் பிடித்துத்தான் கல்யாணம் செய்தீங்களா?”

“ஆமாம் மேடம். எனக்கு ரஞ்சனியை ரொம்பப் பிடிக்கும். ஆனால், கல்யாணம் செய்ததிலிருந்து அவளைப் பார்த்தாலே கோபமும் எரிச்சலும்தான் வருகிறது.சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டார். அம்மா கூலி வேலைக்குப் போய்த்தான் என்னைப் படிக்க வைச்சாங்க. அவங்க கஷ்டத்தை உணர்ந்து படித்து, இன்று அரசுப் பள்ளியில் வேலையில் இருக்கிறேன். அம்மாவை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் என் ஆசை.ஆனால், நான் ரஞ்சனியிடம் சிரித்துப் பேசினால் அம்மா கஷ்டப்படுவாங்களோ என்று பயமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் அறைக்குள் பேசிச் சிரிப்பது அம்மாவுக்குக் கேட்குமோ என்று கஷ்டமாக இருக்கிறது.”

முத்துகுமாரின் பிரச்னையை ஆழமாகப் பார்த்தால், இது வெறும் ’அம்மா பாசம் அல்ல. இது நம் சமூகம் ஆண்களுக்குக் கற்றுத்தரும் உணர்வுரீதியான அறியாமையின் (Emotional Illiteracy) விளைவு.

ஆண் குழந்தைகளுக்கு ’அழக்கூடாது, பலவீனம் காட்டக் கூடாது’ என்று சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால், உணர்வுகளை வெளிப்படுத்துவது, துணையின் தேவைகளைப் புரிந்துகொள்வது, சம உறவில் பங்கேற்பது – இவற்றைக் கற்றுத் தருவதில்லை.

“முத்துகுமார், உங்கள் அம்மாவின் தியாகத்தை மதிப்பது நல்லது. ஆனால், ரஞ்சனியும் ஒரு சுதந்திரமான மனிதர். அவருக்கும் உணர்வுகள், தேவைகள், கனவுகள் உண்டு. திருமணம் என்பது இரண்டு சமமான நபர்களின் கூட்டு – ஒருவர் மற்றவருக்கு அடிபணிவது அல்ல.”

“நீங்கள் அம்மாவிடம் அன்பாக இருப்பதால் ரஞ்சனியிடம் அன்பாக இருக்க முடியாது என்று யார் சொன்னது? அன்பு ஒரு குறுகிய பொருள் அல்ல – பகிர்ந்துகொள்ளப் பகிர்ந்துகொள்ளப் பெருகும்.முத்துக்குமார், தாம்பத்திய உறவு என்பது இருவரின் சம்மதத்தோடு, இருவரின் விருப்பத்தோடு நடக்க வேண்டியது. அம்மாவைக் காரணம் காட்டி ரஞ்சனியைப் புறக்கணித்ததும் மனம் விட்டுப் பேசாததும் ஒரு வகையான உணர்வுரீதியான வன்முறை. அவர் கோபப்படுவது இயல்பானது. அது அவரது உரிமை.ரஞ்சனியின் கோபத்தைப் ‘பிரச்னை’ என்று பார்க்காமல், அது ஒரு தகவல் என்று புரிந்துகொள்ளுங்கள். அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார், அதை மதியுங்கள்.”

முத்துக்குமார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின் கண்கலங்கினார்.

“நான் இவ்வளவு நாள் என்னோட பயத்தை மட்டும் பார்த்தேன். ரஞ்சனி என்ன அனுபவிச்சாங்கன்னு யோசிக்கவே இல்லை. மேடம், நான் என்ன செய்யணும்?”

“முதலில், ரஞ்சனியிடம் மனம் திறந்து மன்னிப்பு கேளுங்கள். உங்கள் பயத்தையும் குழப்பத்தையும் அவரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அவரும் உங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுங்கள்.இரண்டாவது, உங்கள் அம்மாவிடம் பேசுங்கள். நீங்கள் ரஞ்சனியை நேசிப்பது அவர்களுக்கு எதிரானது அல்ல என்பதைப் புரிய வையுங்கள். உங்கள் அம்மா உங்கள் மகிழ்ச்சியைத்தானே விரும்புவார்? மூன்றாவது, தொடர்ந்து கவுன்சிலிங் வாருங்கள். உணர்வுகளை வெளிப்படுத்துவது, உரையாடல் திறன்கள் – இவற்றைக் கற்றுக்கொள்ள நேரம் எடுக்கும்.”

ரஞ்சனியையும் அறைக்குள் வரச் சொன்னேன். முத்துக்குமார் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தார்.

“ரஞ்சனி, நான் உன்னை வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை. என்னோட பயமும் குழப்பமும்… நான் சரியா புரிய வைக்கலை. என்னை மன்னிச்சுடு.”

ரஞ்சனி அமைதியாக இருந்தார். பிறகு, “நானும் கோபத்தில் நிறைய தப்பா பேசிட்டேன். ஆனால், என் உணர்வுகளைப் புரிஞ்சுக்காம இருந்ததுதான் வலிச்சது.”

“இனிமேல் நாம இருவரும் பேசுவோம். எனக்கு என்ன தேவை, உனக்கு என்ன தேவைன்னு திறந்த மனசோட பேசுவோம்” என்றார் முத்துக்குமார்.

“ஒரு மாதம் கழித்து வாருங்கள். தொடர்ந்து பேசலாம்” என்று சொன்னேன்.

மூன்று மாத கவுன்சிலிங்கிற்குப் பிறகு முத்துக்குமாரும் ரஞ்சனியும் கடைசி சந்திப்புக்கு வந்தார்கள். இருவரின் முகத்திலும் நிம்மதி தெரிந்தது.

“மேடம், நிறைய மாறியிருக்கு. இப்போ நாங்க பேசுறோம். சண்டை போட்டாலும் தீர்த்துக்குறோம். அவர் என் கருத்தையும் கேக்குறார்.”

முத்துக்குமார், “அம்மாகிட்டயும் பேசினேன். அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. எங்க மகிழ்ச்சிதான் அவங்களுக்கு முக்கியம்னு சொன்னாங்க. நான் வீணா பயப்பட்டேன். ரஞ்சனி வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க எம்பிஏ படிச்சது வீட்ல இருக்கறதுக்கு இல்லைன்னு இப்போ புரியுது” என்றார்.

ரஞ்சனி சிரித்தார்: “எல்லாமே சரியாயிடுச்சுன்னு சொல்ல மாட்டேன். ஆனால், இப்போ நாங்க ஒரு டீமா இருக்கோம். பிரச்னைகளைச் சேர்ந்து சந்திக்கிறோம்.”

இதுதான் உண்மையான வெற்றி – குழந்தை பிறப்பதோ, “சந்தோஷமான குடும்பம் என்ற சமூக முத்திரையோ அல்ல. இரண்டு மனிதர்கள் சமமாக, மரியாதையோடு, புரிதலோடு வாழ்வதே வெற்றி.

முத்துக்குமாரை நினைக்கும்போது 1973இல் வெளியான மறுபிறவி என்கிற தமிழ்ப் படம் நினைவுக்கு வந்தது. பகுத்தறிவாளர் ஆபிரகாம் கோவூரின் உண்மைச் சம்பவக் குறிப்புகளின் அடிப்படையில் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா எடுத்த படம் அது.

50 ஆண்டுகளுக்கு முன்பே தாம்பத்ய உளவியல் பிரச்னைகளைப் பேசிய சினிமா இருந்தது. ஆனால் இன்றும் ’உளவியல் ஆலோசனை’ என்றால் ’பைத்தியக்காரர்களுக்கானது’ என்கிற மனநிலை மாறவில்லை.

தாம்பத்திய வாழ்க்கை என்பது இரண்டு உடல்கள் சார்ந்தது மட்டுமல்ல – இரண்டு சமமான மனங்கள் சார்ந்தது. ’அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்கிற குறள் சொல்வது இதைத்தான்.

அந்த அன்பு – ஒருதலைப்பட்சமானது அல்ல, சமமானது. அது புரிதலை உருவாக்கும். அந்தப் புரிதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும்.

*

இந்தியாவில் தாம்பத்ய உறவும் மனநலமும்

• இந்தியாவில் 33% திருமணங்களில் தாம்பத்ய பிரச்னைகள் உள்ளன. ஆனால், 3% மட்டுமே உதவி நாடுகின்றனர் (NIMHANS, 2023)

• திருமணமான முதல் ஆண்டில் 60% தம்பதியர் தொடர்பாடல் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் (Indian Journal of Psychiatry)

• பெண்களில் 70% தங்கள் உணர்வுகளைக் கணவரிடம் பகிர்வதில் சிரமம் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்

• ஆண்களில் 85% உணர்வுரீதியான தொடர்பாடல் திறன்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்று ஒப்புக்கொள்கின்றனர்

• கவுன்சிலிங் எடுத்த தம்பதியரில் 75% உறவு மேம்பாட்டைப் பதிவு செய்கின்றனர் .

• “மனநல ஆலோசனை = பைத்தியம்” என்கிற stigma காரணமாக 90% பேர் உதவிகளை நாடுவதில்லை.

__

சமத்துவமான திருமணத்தின் அடையாளங்கள்

✓ இருவரின் கருத்துகளும் சமமாக மதிக்கப்படுதல்

✓ வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு பொறுப்புகள் சமமாகப் பகிர்தல்

✓ நிதி முடிவுகளில் இருவருக்கும் சம பங்கு

✓ “இல்லை” என்று சொல்லும் உரிமை இருவருக்கும் உண்டு

✓ தனிப்பட்ட வளர்ச்சிக்கு (படிப்பு, வேலை, பொழுதுபோக்கு) இடம் கொடுத்தல் .

✓ உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பாகுபாடின்மை

சமத்துவமான உறவுகளே சமத்துவமான சமூகம்!

(இன்னும் சந்திப்போம்)

படைப்பாளர்:

ஜான்சி ராணி. BSc; BSMS ;MD & family’ councellor. தீவிர வாசிப்பாளர். பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறைகொண்டவர்.


___