ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்- 14
இந்தக் கட்டுரை விவாதத்துக்கான கட்டுரை. இதில் குறிப்பிடப்படும் கருத்துகள் ஆசிரியருடைய சொந்த கருத்துகள். எந்தக் கருத்துக்கும் முரண் உண்டு. குழந்தை பிறப்பு பெண்ணின் ஒட்டுமொத்த உரிமையா, அல்லது ஆணுக்கும் அதில் பங்கு இருக்கிறதா என்பதை இன்னும் ஆழமாக நாம் அலசவேண்டும். உங்கள் கருத்துகளை முன்வைத்து, உரையாடலை பின்னூட்டங்களில் தொடருமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சாராஸ் என்ற திரைப்படம் வந்தபிறகு குழந்தை பெறுவதும் பெறாததும் பெண்ணின் சுய உரிமை என்று பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. காலங்காலமாக ஆணாதிக்கத்தின் சாட்சியாக ‘கட்டாயம் குழந்தை பெற’ பெண் திணிக்கப்படுகிறாள், குழந்தை பெறுவதும் எப்போது பெறலாம் என்பது அவளது உரிமை மட்டுமே என்ற ரீதியில் பல இணைய இதழ்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தப் படம் பார்த்த பின்தான் அதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ள உதவியது.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மாதிரியான பக்குவங்கள் நமக்கு உருவாகின்றன. கல்லூரியில் படிக்கும்போது கேட்டால், ‘நான்லாம் குழந்தை பெத்துக்கமாட்டேன்பா’ எனச் சொல்லாத பெண்கள் குறைவு. ஆனால் மணமாகி குடும்ப பொறுப்பு என்று வந்தவுடன் குழந்தைபற்றிய ஆசைகளும் வந்துவிடுகின்றன.
” இந்தக் காலப் பொம்பள பிள்ளைகள் குழந்தை பெத்துக்கவே யோசிக்கறாங்க. நாங்கல்லாம் பத்து பதினஞ்சு புள்ளைங்கள அசால்டா பெத்துகிட்டோம் எனப் பாட்டிமார்கள் சொல்வதுண்டு. யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்தில் குழந்தைகளைப் பெற்று போகும் இயந்திரமாகவே பெண்கள் இருந்தார்கள். பிரசவத்தில் இறப்பதும், காலம் முழுக்க வலிகளால் அவதிப்படுவதுமாய் அவர்களின் காலம் இருந்தது. காரணம் கர்ப்பத்தடை, கருக்கலைப்பு என்பதே கிடையாது. கரு உண்டானால் வேறு வழியின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றபோது பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாகவே மாறிப் போனார்கள். 1800 ஆண்டுகளில் இது பெரும் விவாதமாகவும் போராட்டமாகவுமே இருந்தது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட கருக்கலைப்பு, கருத்தடை மருந்துக்களால் உண்டான பக்கவிளைவுகளால் அந்த மருந்துகளுக்குத் தடை உண்டாகியது.
பெண்கள் குழந்தை பிறப்பால் இறப்பதும், மிகப்பெரிய மனச்சோர்வுமாகவே அந்தக் காலகட்டம் இருந்தது. மீண்டும் கருத்தடையை அனுமதிக்கக் கோரி 1900களின் ஆரம்பத்தில் பெண்ணிய அமைப்புகளால் போராட்டம் தீவிரமானது. அதன் பின் வந்த ஆண்டுகளில்தான் கருத்தடை மாத்திரைகளும், கருக்கலைப்பும் சட்ட அமலுக்கு வந்து பெண்களின் வலியும் குழந்தை பெறுவதும் குறைந்தது. ஆக ஒரு பெரும் நெடும் போராட்டத்திற்கு (ஏறக்குறைய 100 ஆண்டுகள்) பின்தான் பெண்களுக்கு கருக்கலைப்பு மற்றும் கர்ப்பத்தடைக்கான உரிமையும் வந்தது.
இன்று எளிதில் நம்மால் கருக்கலைப்போ, அல்லது குழந்தை பெறாமல் கர்ப்பத்தடை போட்டுக் காலதாமதமாக்கவோ முடிகிறது. அதனை இந்தக் காலப் பெண்கள் ” டேக் இட் ஃபார் க்ரான்டெடாக ” எடுத்துக் கொள்கிறார்களா, ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள யோசிக்கிறார்கள் எனப் பார்த்தால் அவர்கள் கோணத்தில் யோசிக்க வேண்டியதாகிருக்கிறது.
யோசித்துப் பாருங்கள் குழந்தை பெற்றால் அதனை முழுக்க வளர்க்க வேண்டிய பொறுப்பை பெண்தான் ஏற்க வேண்டும். பிறந்ததிலிருந்து அந்த குழந்தை வளரும் வரை முழுக்க பொறுப்புக்கள் அவளையே சாரும். ” என் பிள்ளைங்க என்ன க்ளாஸ் படிக்கிறான்னு கூட தெரியாது. எல்லாம் அவளே பாத்துக்கறா” என பெருமையாக ஆண்கள் இன்றுவரை சொல்கிறார்கள். ஏதாவது குழந்தை தவறு செய்தால், ” எல்லாம் அவ அம்மாதான் காரணம்”, என்று அவளுடைய சுற்றம் அவளை நோக்கி கை காண்பிக்கும். ஏன் அப்பா பொருளீட்டுவதை தவிர்த்து குடும்ப பிரச்சனைகளில் தலையிடுவதில்லை? இன்றுமே அப்படித்தானே. இப்போது இருவரும் சமமாக வேலைக்கு போய் சம்பாதித்தாலும், பெண்மட்டும்தான் குழந்தை வளர்ப்பை முன்னின்று செய்ய வேண்டும்.
இதனைப் பற்றிப் பேசினாலே, “அந்தக் காலத்துல எங்கம்மா வளக்கலையா என் பாட்டி வளக்கலையா? நீ மட்டும் சலிச்சுக்கற” எனச் சொல்லிவிடுவார்கள். பெண்களை எந்த வகையில் ஒப்பீடு செய்கிறார்கள் எனப் புரியவில்லை. இன்று அவர்கள் வேலைக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் கனவுகளும் விசாலமாக இருக்கின்றன.
இந்தப் படம் சொன்ன சாராம்சமும் அதேதான். ஒரு பெண் குழந்தை பெற்றால் அவள் மட்டுமே குழந்தை வளர்ப்பிற்கு பொறுப்பாகிறாள். அவளிடமே குழந்தை வளர்ப்பு திணிக்கப்படுகிறது. சரியாக வளர்க்கப்படாத பிள்ளைகளைப் பெறுவதற்கு பதில் பெறாமலேயே இருக்கலாம் என்ற கருத்துக்களையே அந்தப் படம் பிரதானமாக முன்வைக்கிறது.
குழந்தை பெற மறுப்பது பெண்ணுரிமை, அவளைப் பெற்றுத் தரச் சொல்வது ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. இதுவே பெண்ணிற்கு இருப்பது போல் ஆணுக்கும் கருப்பை இருந்து, அவர்கள் பெண்ணை மட்டுமே குழந்தை பெற கட்டாயப்படுத்தினால், அதை அடிமைத்தனமாகவோ, அல்லது சிறுமைபடுத்துவதாகவோ தோன்றலாம்.
இந்த விஷயம் ஓரிரு வருடங்கள் முன்னேயே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் குழந்தை பெற இயலாது .எனவே இதில் ஆணுடைய சம்மதமும் முக்கியம். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் திருமணத்திற்கு முன்னரே விவாதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.
திருமணத்திற்கு முன் மனமொப்பி இருவரும் சேர்ந்து முடிவெடுக்கும் பட்சத்தில் இதில் நாம் கருத்து சொல்ல ஏதுமில்லை. குழந்தை பெறுவதால்தான் கனவுகள் , லட்சியங்கள் சிதைகிறது என்ற கருத்தில் எனக்கு வேறுபாடுண்டு. அவரவர் குடும்ப ஒத்துழைப்பின்மைதான் லட்சியங்கள் நீர்த்துப் போக காரணமாகிறது. நீங்கள் குழந்தை பெறாவிட்டாலும், வீட்டில் கணவனோ ,அல்லது கண்வன் வீட்டினரோ உங்கள் லட்சியங்களுடன் முரண்பட்டால் அங்கு உங்கள் கனவுகள் சாத்தியமில்லாமல் போகலாம். அல்லது போராடும் நிலைமை உண்டாகலாம். கடமைகளை தட்டிக் கழிக்கும் ஆண்களிடம் முக்கியமாக இதனைப் பற்றி பேச வேண்டும்.
வரப்போகும் கணவனிடம் அவனுடைய வேலை , பின்புலம் கேட்பதை விட ” குழந்தை பிறந்தால் அதனை வளர்ப்பதில் சரிசமமாய் பங்கெடுக்க வேண்டும் ” எனத் தெளிவாக சொல்லிவிட வேண்டும். ஆண்கள் சம்பாதிப்பதை வீட்டில் கொடுத்துவிட்டால் தன் வேலை முடிந்தது என நினைக்கிறார்கள்.
குழந்தை வளர்ப்பு அத்தனை எளிதல்ல. குழந்தைக்கு ஒரு நாள் உடல் நலம் சரியொல்லையென்றால்கூட விடியும் வரை தூங்காமல் பார்த்துக் கொண்டு, மறு நாள் வீட்டுவேலை செய்துவிட்டு எரியும் கண்களுடனேயே வேலைக்கு செல்லும் பெண்கள் நம் நாட்டில் கணக்கில் அடங்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்குவதும், மேனேஜர் போல் ‘குழந்தை எப்படி இருக்கு’ என அவ்வப்போது அப்டேட் தெரிந்து கொண்டும், தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்லும் கணவன்மார்கள்தான் நமக்கு வாய்க்கிறார்கள். எத்தனை ஆண்கள் பிள்ளைகளின் படிப்பில் ஈடுபாடு காட்டுகிறாகள். எல்லா குழந்தைகளும் ஒன்று போலில்லை. போட்டி நிறைந்த இந்த காலக்கட்டத்தில் அவர்களின் படிப்புடன் மல்லுக்கட்ட வேண்டியது பெண்கள் மட்டும்தான்.
” நான்தான் ஓடியாடி உழைச்சு கொட்டுகிறேனே. நீங்கள்லாம் ஜாலியாக வீட்ல இருக்கீங்க?” எண்று ஆண்கள் வேதம் போல் எல்லா சமயத்திலும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவர்கள் சம்பாதிக்கிறார்கள் சரி. அந்த பணத்தைக் கொண்டு ஜீபூம்பா என்றால் சோறு தயாராகிவிடுமா? துணிகள் துவைத்துவிடுமா? அதுவாகவே காயவைத்து மடித்து வைத்துவிடுமா? அவர்களின் விருப்பபடி வீடு சுத்தமாகிவிடுமா? எல்லாவற்றையும் விட குழந்தை அதுவாகவே படித்து வளர்ந்துவிடுமா? இதற்கெல்லாம் ஆள் வைத்துக் கொண்டால் ஒரு நடுத்தர வர்க்கத்து ஆண், சம்பாதிப்பதில் முக்கால்வாசியை தர வேண்டும். இதையெல்லாம் ஒரு பைசா வாங்காமல் செய்ய ஒரு பெண்ணிருக்கிறாள் என்ற அருமை தெரியாததால் அவர்கள் எல்லாவற்றையும் எளிதாக நினைக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் எண்ணித்தான் ஒரு பெண் குழந்தை பெறுவதற்கு யோசிக்கிறாள். இங்குதான் அவளது உரிமையைப் பற்றி பேச வேண்டியதாகியிருக்கிறது.
அப்படித்தான் குழந்தை பெறுவதும் பெறாததும் பெண்ணுரிமை சார்ந்தது என்ற முடிவும் எடுக்க வேண்டியதாகிருக்கிறது.
இருப்பினும் சகலமும் தனி மனித உரிமை என்றால் இங்கு இன்னும் பல விஷயங்களை நாம் பேச வேண்டியதிருக்கும். எனது உடல் எனது உரிமை என சொல்லி குடிப்பதும், பலர்களுடன் கலவி கொள்ளுதலும், நிர்வாணமாய் அலைவதும் எல்லாம் தனி மனித உரிமை என்று பலர் சொல்வதைப் பார்க்கும்பொழுது இளைய தலைமுறைக்கு இதையா நாம் சொல்லித் தருகிறோம் எனத் தோன்றுகிறது. சினிமாக்கள் மெல்ல அவற்றை செய்து கொண்டிருக்கின்றன.
என்னுடைய வண்டி , சாலைக்கு வரி செலுத்துகிறேன், என் விருப்பத்திற்குதான் போவேன் , நான் ஏன் மெதுவாக போக வேண்டும். நான் ஏன் சிக்னலுக்கு கட்டுப்பட்டு போக வேண்டும் என்பதில் கூடத்தான் நியாயம் இருக்கிறது. ஆனால் அப்படி போனால், என்ன விளைவுகள் உண்டாகும் எனத் தெரியாமலா இருக்கிறோம்?
எனக்கு தெரிந்தவரின் அலைபேசியை எவரோ ஹேக் செய்து பணத்தை அபகரித்திருந்தனர். உடனே நானும் அவரும் சைபர் க்ரைமிற்கு சென்று புகாரளித்தோம். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சொன்னது, ”ஹேக்கிங் பண்ணிட்டா அவ்வளவு ஈஸியாலாம் கண்டுபிடிக்க முடியாது மேடம் … சின்னச் சின்னப் பொண்ணுங்க கேஸெல்லாம் நிறைய வருது. நியூட் போட்டோ ஹேக் பண்ணி மிரட்டி காரியம் சாதிக்கவே பெரிய கும்பல் இருக்கு. தினமும் லட்சம் கேஸ் வருது மேடம்… எதைக் கவனிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியல” என்ற அதிர்ச்சியை கொடுத்தார்.
சட்டென 18 வயது ஆனதும் உடனே மனமுதிர்ச்சியும் பக்குவமும் வந்துவிடுகிறதா? ஆன்லைனிலேயே காதல், ரொமான்ஸ், நம்பும் காதலுனுக்காக நிர்வாணமாய் புகைப்படம் அனுப்புதல் எனக் காதல் செய்துவிட்டு, அதனால் வரும் சிக்கல்களை எதிர்க்கொள்ளும் அளவிற்கு மனமுதிர்ச்சி எல்லோருக்கும் இருக்கிறதா?
நிர்வாணம் ஒன்றுதான் காம இச்சைகளை போக்கும் என்பதே அபத்தம்தான். இவ்விசயத்தில் நம் நாட்டைவிட பல மடங்கு முற்போக்கும் நாகரிகமும் கொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில்தான் பாலியல் தொல்லைகளும் பலாத்காரமும் அதிகம் நடைபெறுகின்றன. எனவே, மறைக்கும் உடைகளோ, மறைக்கப்படும் உடலோ பாலியல் உணர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை. ஆண், பெண் பாகுபாடு , காமத்தின் அளவுகோல் ஆகியவை மட்டுமே தீர்மானிக்கின்றன.
நிற்க…இவையெல்லாம் விட முக்கியமான எத்தனையோ சட்ட உரிமைகள் நமக்குத் தெரியாமல் கிடக்கின்றன. நாம் முன்னேறவும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், இது போன்ற சட்டங்கள் இருக்கின்றதா எனக் கூடப் பெண்களுக்குத் தெரிவதில்லை. பொதுவாகச் சொத்துரிமை, வரதட்சணை கொடுமை தாண்டி வேறு சட்ட உரிமைகள்பற்றிப் பெண்கள் தெரிந்து கொள்ள முனைவதில்லை.அந்தச் சட்டங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளலாமே.
- 1. எல்லா நிறுவனங்களிலும் ஐசிசி கமிட்டி இருக்கும், இருக்க வேண்டும். பெண்களைப் பாதுகாக்க வேண்டி அமைக்கபட்ட குழு அது. ஒரு அலுவலகத்தில் ஒரு பெண் அங்கிருக்கும் உயரதிகாரி அல்லது வேறொரு ஆணால் பாலியல் தொல்லைக்கு ஆளானால், கமிட்டியிடம் சென்று புகாரளித்தால் சம்பந்தபட்ட நபரை வேலையிலிருந்து தூக்கலாம். ஆனால் பல பெண்கள் அதைச் செய்வதில்லை. ஒன்று அவர்கள் அந்த நிறுவனத்தை விட்டுச் செல்கிறரகள் அல்லது வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிச் செல்கிறார்கள். இந்தச் சட்டத்தை அவர்கள் பயன்படுத்துவதுதான் சரி.
- 2. ஜீரோ அஃப் ஐ ஆர் (zero FIR) – ஹைதராபாத்தில் ஒரு கால் நடை மருத்துவ மாணவி காணாமல் சென்றபோது பெற்றோர்கள் புகாரளிக்க காவல் நிலையம் சென்றபோது அந்த எல்லைக்கு வராது இந்த எல்லைக்கு வாராது எனக் காவல் நிலையங்களில் அலைகழிக்கப்பட்டு, இறுதியில் அந்தப் பெண்ணைக் கற்பழித்து எரித்துக் கொன்ற சம்பவம் நாட்டையே பரபரப்பாக்கியது. அத்தனை எளிதில் மறந்து போகாது. ஆனால் உண்மையில் பெண்களுக்கு ஆபத்து இருந்தால் அவ்வாறு குறிப்பிட்ட காவல் நிலையம்தான் செல்ல வேண்டும் என்ற சட்டமில்லை. நிர்பயா வழக்கின் போதே இச்சட்டம் அமலுக்கு வந்தது பெண்களின் பாதுகாப்பு சட்டத்தில், zero FIR என்ற சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்ணோ, அவளது பெற்றோர்களோ, உறவினர்களோ எந்தக் காவல் நிலையத்திலிருந்து புகார் கொடுத்தாலும், அந்தக் காவல் நிலையங்கள் ஏற்று நடவடிக்கையெடுக்க வேண்டும்.
அதே போல பாலியல் தொல்லை மற்றும் வன்முறைக்கு ஆளானால் எத்தனை ஆண்டுக் காலம் கழித்தும்கூட புகாரளிக்கலாம். இதற்குக் காலம் நேரம் தேவையில்லை. மீடூ பிரச்சனை வந்தபோது கேலி செய்தவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. - 3. குடும்பத்தில் கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்துவது மட்டுமல்ல; மனைவியை அவமானப்படுத்துவது, வார்த்தைகளால் காயப்படுத்துவது, தரக்குறைவாகப் பேசுவது, பயமுறுத்துவது ஆகியவற்றிற்கும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம்.
- 4. எந்த ஒரு பிரச்னைக்கும் காவல் நிலையம் சென்று புகாரளிக்க வேண்டுமே என்ற தயக்கத்தினாலேயே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை வெளியில் சொல்வதில்லை. அவர்களுக்கான இலவச சட்ட உரிமையை அரசு வழங்குகிறது. அவர்கள் தங்கள் பிரச்சனைகளை வீட்டிலிருந்தே தபால் அல்லது ஈமெயில் மூலமாகக் கமிஷனருக்கு புகாரளிக்கலாம். பாலியல் தொல்லைகள், குடும்ப வன்முறைகள் எல்லாமே இதில் அடங்கும்.
காலங்காலமாகவே பெண்ணுடல், உரிமை சார்ந்து எல்லா சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இது சரியா தவறா என நிறைய அவதானிப்புகளை நாம் பார்த்துக் கொண்டே வருகிறோம். சொல்லப்போனால் மனித இனமே அப்படியான மறுப்பிலும் ஏற்பிலும்தானே உலகம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. எந்த நிலைப்பாடும் நிலையாக இருந்ததே இல்லை. காலத்தின் சுழற்சியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தீர்மானங்கள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன.
பூமி தட்டையென்பதில் தொடங்கி நிலவில் உண்மையாகவே ஆம்ஸ்ட்ராங்க் கால் பதித்தாரா என்பது வரை பல பல கேள்விக் கட்டுமானங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இது இப்படி இல்லையெனத் தீர்மானம் தரப்பட்டன. அப்படித்தான் குழந்தைகள் கடவுள் கொடுக்கும் வரம் எனச் சொல்லி வீட்டுக்குப் பத்து இருபது பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்த பெண்ணின் நிலைமை, இன்று ஒரே ஒரு குழந்தை பெறுவது கூடப் பெண் விருப்பம் சார்ந்தது என்பது வரை வந்திருக்கிறது.
************************************************************************************************
உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்
************************************************************************************************
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
ஹேமி கிருஷ் பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம் மற்றும் இலக்கிய மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவர இருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். நான்கு ஆண்டுகள் டிஜிட்டல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.