சினிமா என்றொரு சக்தி!
பாடல்களும் சினிமாவும் பெரும்பாலானோர் வாழ்க்கையில் பிரிக்க முடியாததாகவே அமைகிறது. எத்தனையோ சினிமாக்கள் நம் அடிமனதை கீறிப் பார்த்திருக்கின்றன. அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கின்றன. மயிலிறகுகளாய் வருடவும் செய்திருக்கின்றன.
மிகவும் சக்தி வாய்ந்த மீடியா சினிமா. அதை வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, தன் உந்து சக்தியாக நினைப்பதால்தான், நாட்டை ஆளும் அதிகாரத்தைக்கூட சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.
அப்பேர்ப்பட்ட சினிமா, பெண்களின் வாழ்க்கையைப் பதம் பார்த்திருக்கிறது. ஓரவஞ்சனை செய்திருக்கிறது. பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சமுதாயத்திற்கு நியாயம் கற்பித்திருக்கிறது. பெருமை, கலாச்சாரம் என்று சமூகம் பெண்களுக்கு விலங்கு பூட்டிய பாவத்தில், சினிமாவிற்கும் பங்கிருக்கிறது.
எந்தக் காலத்திலும் சினிமா பெண்களுக்கான நியதிகளை சொல்லித் தர மறந்ததில்லை. கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாம்… பணக்காரன், சகலகலாவல்லவன், புதிய பாதை, நாட்டாமை இந்தப் படங்கள் நமக்கு சொல்வதென்ன? யாராக இருந்தாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினால், அவனது ‘ஒழுக்கத்தை’ ஆய்வு செய்யாமல், அவனையே மணம் செய்ய வேண்டும் என்பதுதான். அதுதான் பெருமை, கலாச்சாரம் என சொல்லித் திரியும் வசனங்கள் வேறு. இதை இத்தனை காட்டமாகச் சொல்லலாமா? பின் வேறெப்படி சொல்வது? இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என எடுத்துக்காட்டாய் மக்களுக்குள் புகுத்தியிருப்பது சினிமா தானே?
நாட்டாமை சொன்ன பாடம் என்ன?
‘நாட்டாமை’ படத்தில், ‘ எத்தனை படித்த பெண்ணாக இருந்தாலும், புருஷன் வீட்டில் தலைகுனிந்து சொம்பை தூக்கிக் கொடுக்கும் வேலையைத்தான் பெண்கள் செய்ய வேண்டும்; தலைகுனிந்துதான் நடக்க வேண்டும்’, என மீனாவுக்கு போதிக்கப்படும் வசனங்களைப் பார்ப்போம். சொல்லப் போனால் ஆரம்பத்தில் அந்தப் படத்தில் மீனாவின் குணம் யதார்த்தமானது. ஆனால், ” அப்படியெல்லாம் இருக்கவே கூடாது. கேள்வி கேட்கக் கூடாது. சொம்பை தூக்கிட்டு உன் கணவன் பின் நில்லு, மத்த சமயத்துல கதவுக்கு பின்னாடி இரு”, அதுதான் பெண்மை எனச் சொல்லி , கம்பீரமாக இருக்கும் பெண்ணை இறுதியில் அடக்கி வைத்திருப்பார்கள். அதுதான் கலாச்சாரமாம்!
அது கூட பரவாயில்லை. அதே படத்தில் இன்னுமொரு காட்சி இருக்கிறது. அதுபோல் பெண்ணினத்திற்கு இழுக்கான விஷயம் வேறெதுவுமில்லை. ஒரு ஏழை அப்பாவிப் பெண்ணை கொடூர வில்லன் பாலியல் வன்புணர்வு செய்திருப்பான். அதற்கு நாட்டாமை தீர்ப்பு சொல்வாராம். அவர்கள் இருவரையும் ஒருசேர பார்த்த மற்றவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணுக்கு உறவினர்கள் என்பதால் சாட்சிகள் செல்லாது என சொல்வார்.( அதாவது நேர்மையாக இருக்கிறாராம்) . ஒரு சிறுவயது பிள்ளை சாட்சி சொன்னவுடன் நாட்டாமை, தனது உறவினர் என்று கூட பாராமல் வில்லனை, அந்த ஏழைப் பெண்ணுக்கு வாழ்க்கை(?) தர வேண்டும் என்று தீர்ப்பு சொல்வார். ( அதாவது பாராபட்சமின்றி நீதி சொல்கிறாராம்) அந்த படத்தின் ஹைலைட்டான காட்சியே அதுதான்.
அப்போதெல்லாம் அதுதான் அந்த படத்தில் மிகச் சிறந்த காட்சியாக சிலாகிக்கப்பட்டது. எத்தனை இழிவான செயலுக்கு எல்லாரும் வியந்தோதியிருக்கிறோம் என நினைத்தால் சிரிப்பாக வருகிறது. அந்த படம் மட்டுமா? பணக்காரன் , சகலகலாவல்லவன் என சூப்பர் நடிகர்களின் படத்திலும் பெண்களுக்கு இதே கதிதான். பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கே தனது தங்கையை மணம் செய்யப் போராடும் ஆபத்பாந்தவன்களாக இருப்பார்கள் நம் ஹீரோக்கள் .
அறுதப் பழமை பேசிய ‘புதிய பாதை’
” புதுமை” என மக்களால் சிலாகிக்கப்பட்ட இன்னொரு படம் புதிய பாதை. பெரும் படிப்பு படித்த பணக்காரப் பெண்ணை, மோசமான ரௌடியான ஒருவன் வீடு புகுந்து பாலியல் வன்புணர்வு செய்வான். அவனைத் தேடி அவன் வீட்டின் எதிரிலேயே குடிவந்து, அவனை மணம் செய்வதற்குப் போராடுவாள் (?)அந்தக் கதாநாயகி. அந்தப் படத்தை 100 நாள்களுக்கும் மேல் நாம் ஓட வைத்தோம்.
திரைப்பாடல்கள் சொன்ன ‘கருத்து’
“இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள”, ” பொட்டெங்கே, பூவெங்கே”, “செந்தமிழ் நாட்டு தமிழச்சியே”, என பாடல்களில் கூட மறந்துவிடாமல் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள். ‘ஜென்டில்மேன்’ படத்திலும் ஒரு ஒப்பீடு அர்ஜுன் செய்வார். அடக்க ஓடுக்கமாய் இருக்கும் கதாநாயகியைப் பார்த்து மாடர்னாக இருக்கும் அவளது தங்கையிடம் இப்படி சொல்வார். ” பார்த்தியா அவளை.. எவனாவது அவளை கையை புடிச்சு இழுப்பாங்களா? இப்படி அரைகுறை உடையோடு, சகஜமாக பழகினால் இப்படித்தான் நடக்கும் “, என அர்ஜுன் பொங்கல் வைப்பார்.
சினிமாவைப் பொழுது போக்காக நினைக்கும் கூட்டமில்லை நமது சமூகம். சமூகத்தின் ரோல் மாடலாக, எடுத்துக்காட்டாக மக்கள் நினைக்கும் இடத்தில் உள்ள சினிமாக்காரர்கள் கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் படங்கள் எடுத்திருந்தால், பல நல்ல விஷயங்களை சமூகத்துக்கு அவர்கள் சொல்லியிருக்கலாம். பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள மோசமான கட்டமைப்புகளை உடைத்திருக்கலாம். ஆனால் அதை சினிமா செய்யவில்லை. ஒவ்வொரு தசாப்தத்திலும் பெண்களுக்கு இலக்கணம் தரவே முனைந்திருக்கிறது.
சிறு ஆறுதல்
ஆறுதலாய் ஒரு படம் வந்தது. “என் புருஷன் குழந்தை மாதிரி”. இந்தப்படத்தில் வந்த ஒரு காட்சி பலரையும் யோசிக்க வைப்பதாய் அமைந்திருக்கும். இதே போல் ஒரு பாலியல் வன்புணர்வு வழக்குக்கு வழக்கம் போல் கெடுத்தவனையே மணம் செய்து கொள்ளும்படி லிவிங்ஸ்டன் தீர்ப்பு சொல்வார். அப்போது தேவயானி வந்து அந்தத் தீர்ப்பை மாற்றுவார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ” உன்னை ஒரு தெரு நாய் கடிச்சா என்ன செய்வ? போய் ஊசி போட்டுக்குவில்ல. அப்படி ஒரு தெரு நாய் கடிச்சதா நீ நினைச்சுக்கோ”, எனச் சொல்லி அவள் காதலித்த காதலனையே மணம் செய்ய வைத்து, அந்த அயோக்கியனை காவல்துறை கைது செய்ய வைப்பார். மிகச் சரியான நீதிகள் காலம் தாழ்த்தியே போதிக்கப்படுகின்றன. அந்த டைரக்டருக்கு எத்தனை அப்ளாஸ் கொடுத்தாலும் தகும். இப்படியான படங்கள்தான் சமுதாயத்தை யோசிக்கவைக்கும்.
அடுத்த பகீர் டிரெண்ட்
பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணை மணம் செய்து வைக்கும் ட்ரெண்ட் ஓய்ந்து, அடுத்த ட்ரெண்ட் கொண்டு வந்தார்கள் . ‘சேது’ என்ற படம் வந்த புதிது. ஒரு முரட்டுப் பையன், ரௌடி போல் கல்லூரியில் இருப்பவன், ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தி காதல் செய்ய வைப்பான். அவளை ஒரு அறையில் அடைத்து வைத்து, நீ என்னைக் காதலித்தே ஆக வேண்டும் எனச் சொல்லி மிரட்டுவான். இந்த படம் வந்த புதிதில் ஒரு கல்லூரிக்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுத சென்றிருந்தேன். அங்கே ஒரு பையன் அங்கிருந்த வராந்தாவில் ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போல் கண்களை வைத்துக் கொண்டு, திமிராய் பெண்களை இடித்துக் கொண்டு சென்றான்.
அவன் பின்னாடியே பல மாணவர்கள் அவனை, ” டேய் சியான் சியான்”, என அழைத்துக் கொண்டே வந்தார்கள். அவன் அந்த வராந்தாவில் அங்கும் இங்கும் போகிறான், அவன் என்ன செய்கிறான் என்று அவனுக்கே பாவம், தெரியவில்லை. அவன் என்னமோ வாழ்வில் பெரும் சாதனை செய்த மமதையில் சட்டையை மடிப்பதும், காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதும், வாயில் சூயிங்கம் மெல்வதும், பெண்களை எகத்தாளமாய்ப் பார்ப்பதும், தெரியாமல் இடிப்பதும், தெனாவெட்டாய் மன்னிப்புக்கூட கேட்காமல் செல்வதுமாய் இருந்தான். அவன் செய்வதை ரசிப்பதற்கு அவன் பின் ஒரு கூட்டம் வேறு.
மனமுதிர்ச்சி இல்லாத விடலைப் பையன்களும், இளைஞர்களும் சினிமாவில் வரும் ஹீரோக்கள் போல் இருப்பதைதான் விரும்புவார்கள். ஆனால் சினிமாவில் ஹீரோக்கள் எப்படி காண்பிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியமல்லவா? ஒரு ரௌடி, ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி காதல் செய்வது போலக் காண்பித்தால் அவனும் அதையேதான் தொடர்வான். ஒரு ரௌடி எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காண்பிப்பது வேறு. ஆனால் ஒரு ரௌடி பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதை ஹீரோயிசமாகக் காண்பித்தால் அது சமுதாயத்திற்கு கேடல்லவா? பெண்ணை வற்புறுத்தி, அவளைக் காதலிக்க வைத்து, அந்தக் காதலை புனிதமாகக் காட்டும் படங்கள் ‘அர்ஜுன் ரெட்டி’ வரை தொடர்கிற அவலங்களையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணை அடிப்பது காதலா?
மனைவியை தாறுமாறாக அடிப்பதும் காதல்தான் என ஆயுத எழுத்தில் மணிரத்னம் சொல்லியிருப்பார். அது போல், ” என் புருஷன் அடிப்பார், சாயங்காலம் வந்து கொஞ்சுவார்…இதிலெல்லாம் நீ தலையிடாத”, என “சேதுபதி” படத்தில் கணவன் அடிப்பதை கர்வமாகக் கதாநாயகி படத்தில் சொல்வார். இந்த காட்சியைப் பார்க்கும் எத்தனை கணவமார்கள் தங்கள் மனைவியிடம், “பார்த்தியா அவ புருஷன லவ் பண்றா, அதான் அது அவளுக்கு பெரிசா தெரியலை”, என உதாரணமாகக் காண்பித்தார்களோ தெரியவில்லை. இப்படிச் சிறுசிறு விஷயங்களில் பெண்களை இழுத்துவிட்டு, இதெல்லாம் சகஜம் என பூடகமாகச் சொல்வது, நிஜ வாழ்விலும் இது சரிதான் என சகித்துக் கொள்ள வைக்கும். இது போல் படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆண் பெண் பாகப்பிரிவினை செய்த சினிமா
ஆணையும் பெண்ணையும் பாகப்பிரிவினை செய்து, பல அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கிறது தமிழ் சினிமா. ‘முதல் மரியாதை’ என்ற படம். பாராதிராஜா இயக்கியது. முதிய வயது ஆண்களால் காவியமாய்ப் பார்க்கப்பட்ட திரைப்படம். திருமணமாகி, வயதான பின்னும் இன்னொரு பெண் மீது கதாநாயகனுக்கு வந்த காதலை அந்தப்படம் புனிதமாய் காண்பித்தது. ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற படம் வந்தது. மணமான ஒரு பெண், வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பார். அதைக்கண்ட கணவன் அவளை கொலை செய்வான்.
அப்போது சிறு வயது கமல், “குத்துங்க எசமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படித்தான்”, என சொல்லும் காட்சி இன்று வரை பிரபலமாக இருக்கிறது. முதல்மரியாதை எடுத்த அதே இயக்குனர்தான் இந்த படத்தையும் எடுத்தார்! இதில் பெண்களை மோசமாக வேறு சித்தரித்திருப்பார். முந்தைய படம் காவியம். பிந்தைய படத்தில் ஒழுக்கக்கேடு என்ற கான்செப்டில் படம் எடுத்த அவர்தான் விளக்க வேண்டும், எப்படி ஒன்று காவியமாகவும் மற்றொன்று ஒழுக்ககேடாகவும் இருக்கும் என்று!
சிந்து பைரவி வேறு உயிர் வேறா?
அதே போல் வந்த இன்னொரு படம் ‘சிந்து பைரவி’. மணமான ஹீரோவிற்கு தன் மன நிலையொத்த வேறொரு பெண் மீது காதல் வரும் படம். அதிலும் அந்தக்காதலை புனிதப்படுத்தி, நியாயப்படுத்தியிருப்பார் இயக்குனர் பாலச்சந்தர். இதில் இந்த காதல் சரியா, தவறா என்ற கேள்விக்குள் எல்லாம் போக விரும்பவில்லை. ஆனால் இந்தப் படங்கள் ஆண் பார்வையில், ஆண்களுக்கு மட்டும் மணமான பின் வரும் காதலைப் புனிதப்படுத்தி எடுத்திருக்கும் படங்கள்.
சமீபத்தில் ‘உயிர்’ என்ற படம் வந்தது. அதில் மணமான பெண் வேறொருவனிடம் காதல் கொள்வதால் அவளை வில்லியாக, கொடும் பாவியாக சித்தரித்திருப்பார்கள். அப்படி கட்டாயப்படுத்தி மோசமானவளாக சித்தரிப்பதன் காரணமென்ன? ஆணிற்கு வேறொரு பெண்ணிடம் காதல் வந்தால் காவியமாகவும், பெண்ணிற்கு அது போல் வந்தால் அவளது காதலை மட்டும் ஒழுக்ககேடு என்றும் வேறு கோணத்தில், சாமார்த்தியமாக எத்தனை நாசூக்காய் சினிமாவில் புகுத்தியிருக்கிறார்கள்!
சீரியல்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவற்றையும் பார்ப்போம்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
ஹேமி கிருஷ்
பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம் மற்றும் இலக்கிய மின்னிதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள் டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.
சிறப்பு
மறுக்கவோ எதிர்க்கவோ முடியாத நேர்மையான பார்வை.