ஒரு கதை சொல்லட்டுமா- 6

15 வயது மாணவன் ஒருவனின் குடும்பம் மிகவும் நொந்து போய் பேச ஆரம்பித்தார்கள். ” நாங்க இப்படி எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, எங்க குடும்பப் பையன் மது மற்றும் போதை பழக்கத்துக்கு ஆளாகிவிட்டான் என்பதை நம்பவே முடியவில்லை”, என்றும், அதோடு, ” அவன் எங்களிடம் பேசும் முறையும், பழகும் விதமும் மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது”, எனவும் கூறினர்.

மக்கள் எல்லோரும் கொரோனா என்று சொல்லி நோய் எதிர்ப்புக்கும், காப்புக்கும் ஓடிக்கொண்டு இருக்கும் போது, மாணவர்களோ வேறு பாதையில் ஓட ஆரம்பித்து விட்டனர். நான் எப்போதும் சொல்வதுதான்- மாணவர்களுக்கு எனர்ஜி லெவல் அதிகமாக இருக்கும். அந்த எனர்ஜி லெவலுக்குத் தீனி போட வேண்டும் என்றால் பல தரப்பட்ட விஷயங்கள் அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் ஒரு கிராமமே வேண்டும் என்று சொல்வோம். அது போலத்தான் மாணவர்களைக் கையாள, அவர்கள் கேட்பதைச் செய்ய பெற்றோரும், பள்ளிக் கூடங்களும், அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்களை முறையாக நாம் கையாள முடியும். 

அப்படிப்பட்ட மாணவர்கள் தடம் மாறிப்போவதை எப்படித்தான் வெளியே சொல்ல முடியும் என்கிற பதட்டம் தான் அதிகமாக இருக்கிறது. இங்கு   ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை பெரிய வரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று குழந்தைகள் ஏதாவது தவறு செய்து விட்டார்கள் என்று அவர்கள்மேல் குற்றச்சாட்டு எழும்போது எளிதாக எந்தப் பெற்றோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதுவும் 12 வயதிலிருந்து 18 வயதுவரை பலவித புதுப் பிரச்சனைகளை குழந்தைகள் வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அவர்கள் என்ன செய்வார்கள், எப்போது செய்வார்கள் என்று யாராலும் ஊகிக்க முடியாது. இவ்வாறு நேரும்போது பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அதிலும் வளரிளம் பருவ வயதில் தான் குழந்தைகளுக்கு மதுப்பழக்கத்துக்கும், புகைபிடித்தலுக்கும் ஆரம்பப் புள்ளி விழும்.

மாணவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், ஒரு காலத்தில் 16 வயதில் தொடங்கிய புகைபிடிக்கும் பழக்கம் தற்போது 12 வயதிலேயே தொடங்கிவிடுகிறது எனவும், முன்பு குறைந்தபட்சம் 18 வயதில் தொடங்கிய மதுப்பழக்கம் இப்போது 13 வயது முதலே குழந்தைகளை ஆட்கொள்கிறது என்று தெரியவருகிறது.

Photo by Mathew MacQuarrie on Unsplash

மிகச்சிறிய வயதில் குழந்தைகள் போதை பழக்கத்துக்கு உள்ளாகிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகள் ஆமோதிக்கின்றன. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான கல்வி (DARE) Drug Abuse Resistance Education மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு இருந்தனர். ஆனால் இந்த லாக்டவுன் காலம் இது அனைத்தையும் மாற்றிவிட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. யூ டியூப் வலைக்காட்சிகள் மூலம் போதைப் பழக்கம் காட்சிகளாக (visuals) அவர்கள் பார்வையில் விரிகிறது. யாரோ ஒரு மாணவனுக்கு ஒரு ஹீரோ பிடிக்கிறது என்றால், அவனை வைத்தே பல மாணவர்களுக்கும் அந்த ஹீரோவை பிடிக்க வைத்து விடுவார்கள் (peer pressure).

Photo by Toni Reed on Unsplash

அப்படித்தான் மாணவர்களுக்கு தற்போது பாப் மார்லி (Bob Marley) என்கிற இசைக்கலைஞரை மிகவும் பிடித்துப்போய் இருக்கிறது. இவரது பாடல் காட்சிகளைக் கொண்டே  போதைப்பழக்கத்தை சக மாணவர்களிடம் பரப்புகின்றனர் என்று பல ஆசிரியர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். உண்மையில் இவரது பாடல்கள் மூலம் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பல விஷயங்களை முன்னெடுத்தவர் இவர். ஆனால் மாணவர்களுக்கிடையே இவரைப் பற்றிய தவறான பிம்பம் தான் உருவாகியிருக்கிறது.  

மாணவர்களுக்கு அவர்கள் வயதுக்கு உகந்த ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்புகள் எதுவும் தற்போதைய சூழ்நிலையில் கிடைக்கவில்லை. பள்ளிகளில் நடன வகுப்புகள் போவார்கள், கட்டுரை எழுத போட்டிகள் நடக்கும், விளையாட்டு போட்டிகள் நடக்கும், பாட்டுப் போட்டி நடக்கும்… இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புதிது புதிதாகத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் தானோ என்னவோ படிப்பு, கலை, விளையாட்டு எல்லாமே அவர்களை ஒரு கொண்டாட்ட மனநிலையில் வைத்திருந்தது. இவை தவிரவும் கோவில் விசேஷங்கள், வீட்டு விசேஷங்கள் என்று பல்வேறு சமூகக் காரணங்கள் அவர்கள் மனதை கோலாகலமாக வைத்திருந்தன.

ஆனால் இப்போது அவர்கள் மனங்களுக்கு இந்தக் கொண்டாட்டத்தைத் தர எதுவும் இல்லை. அவர்களுடைய கற்பனை உலகிற்கு போதை பழக்கம் பெரும் உந்து சக்தியாக இருக்கிறது. ஒரு பக்கம் சிகரெட், குடி, போதை என்று வெளியே வாங்கி முயற்சிக்கிறார்கள். சில நேரங்களில் வீட்டில் இருக்கும் நெயில் பாலிஷ், தின்னர் இவற்றின் வாசம் மூலம் போதையை ‘உருவாக்கிக் கொள்கிறார்கள்’ (அது எவ்வளவு ஆபத்தானது என்று பல ஆய்வுகள் வந்திருக்கின்றன).

இது ஒரு வகையான கொண்டாட்ட மனநிலையை அவர்களுக்குத் தருகிறது. இதனால் தான் வளரிளம் பருவ மாணவர்கள் அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதக்க ஆசைப்படுகிறார்கள். அதற்கான நியாயப்படுத்தலாக நிஜ வாழக்கையில் அவர்கள் ஆசைப்பட்டது எதுவும் நடக்கவில்லை என்று அவர்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

Photo by Ariel on Unsplash

தங்கள் குழந்தைகளை குழந்தைகளாகவேப் பார்க்கும் பெற்றோர், இது போன்ற செய்திகள் கவனத்துக்கு வரும்போது மொத்தமாக உடைந்து போகிறார்கள். அவர்கள் வளர்த்த விதத்தில் ஏதோ குறையோ என்று சொல்லி, அவர்களுக்குள்ளே ஒரு குற்ற உணர்வை உருவாக்கி கொள்கிறார்கள். இதன் எதிரொலியாக வீட்டில் கணவன், மனைவிக்குள் ஏதோ ஒரு பிரச்னை தொடர்ந்து உருவாகிவிடுகிறது. இதனால் கணவன், மனைவி தங்களுக்குள் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள். இந்த சண்டைகள் இன்னும் மாணவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது. வீட்டில் தொடர்ந்து சண்டை நடப்பதால் தான் இப்படி மாறிப் போகிறேன் சொல்லி அவர்கள் மேல் பழியை தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.

வழக்கமாக இப்படி வீட்டில் சண்டை என்று மாணவர்கள் சொல்லும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், சீனியர் மாணவர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விவாதிப்பார்கள். நல்லது எது கெட்டது எது என்று அலசி ஆராயும் வகையில் பல ஆலோசனைகள் நடக்கும். அதில் சிலர் இந்த விவாதங்கள் முடிந்தபின் சிந்தித்து, சில விஷயங்கள் செய்வதை தள்ளிப்போடவாவது முடிவு செய்வார்கள். ஆனால் தற்போது யாரிடமும் முறையாக சொல்ல முடியாததால், மாணவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் சரி செய்ய குழுக்கள் அமைத்து மாணவர்களை மடைமாற்ற வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடக்கும் விழிப்புணர்வு முகாம்கள் என எல்லோரும் சேர்ந்து செயலில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த சூழல் மாறியவுடன், விரைவில் மாணவர்களை மீட்டு எடுக்க பல விஷயங்களைத் தொடர்ந்து நாம் செயல்படுத்த வேண்டும். பலரும் சேர்ந்து செயல்படும் போது மாணவர்களிடம் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். கொரோனா நாடடங்கு காலத்தில் நம் குழந்தைகளின் எண்ணங்களை படிப்பு, கலை, விளையாட்டு என்று திசைதிருப்ப வேண்டிய அத்தியாவசியத்தில் இருக்கிறோம்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.