ஒரு கதை சொல்லட்டுமா – 2

இன்றைய சமூகத்தில் மனித இனத்தின் மிகப்பெரிய ஆசையே, “தான் சிறந்தவன்” என்று கோடிக்கணக்கான மனிதர்களை விட உயர்ந்ததாக தன் இடத்தை நிரூபிக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அந்த வார்த்தைக்காக உடல் அளவிலும், மனதளவிலும் நிறைய வேலைகள் செய்கிறான். இப்படி தன்னைத் தானே செதுக்கும் மனிதர்களை சமூகம் எப்பொழுதும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கும்; இது இந்த உலகிற்கு புதிதும் அல்ல.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி அடையாளம் என்றுமே இருக்கும். மொழி, இனம், மதம், பண்பாடு, கலாச்சாரம், உடல் நிறம், உடல் வடிவமைப்பு என்று பல்வேறு அடையாளங்கள் மூலம் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். அந்த அடையாளங்களோடு சமூகத்தில் வாழவும் செய்கிறான்.

“எங்கும் பாரடா இப்புவி மக்களை, பாரடா உனது மானிட பரப்பை”, என்று பாரதிதாசன் குறிப்பிட்டது போல், உலகெங்கும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டத்தில் பல்வேறு வகையான அடையாளங்களை ஒருங்கே சுமந்து கொண்டு வாழும் மனிதன், தனக்கென சூட்டப்பட்ட பெயரின் அடையாளத்தோடு இயங்கி வருகிறான்.

தனித்தனி அடையாளங்களோடும், தனித்தனி பெயரோடும் இயங்கும் மனிதன், தான் பெற்ற கல்வி அறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான்.

அப்படி ஒருவருடைய தனித்தன்மையை கட்டமைப்பதில் இன்றைய சூழலில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், மீடியாக்கள் என அனைவரும் மிகப்பெரிய ஆதிக்கத்தை கூட்டாக செதுக்குகிறார்கள்.

Success vector created by freepik – www.freepik.com

“செருக்கு” என்றுமே மிக அழகான, உயர்வான உணர்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் செருக்குடன் வாழ்வது மிகவும் பிடிக்கும். செருக்கு என்றைக்குமே எந்தவொரு தனிப்பட்ட மனிதனையும் அண்ணாந்து பார்க்க வைக்கும். தனிப்பட்ட மனிதனால் எதையும் சாதிக்க முடியும் என்றும், தோல்விகளில் இருந்து மீள முடியும் என்றும், அவை எல்லாம் கடந்தும் அவனுடைய சமூகத்திற்கு உதவ முடியும் என்றும் அவனை நம்பி ஒரு ஊரை ஒப்படைக்கலாம் என்றும் ஒரு அங்கீகாரத்தை வழங்கும் மிகப்பெரிய உணர்வு தான் செருக்கு.

ஆனால் இன்று அந்த “செருக்கு” என்ற அழகான உணர்வு மறைந்து “ஆணவம்” (தன்முனைப்பு) என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. “தான்” என்கிற அடையாளத்தை மட்டுமே கொண்டு, சிறை போல் ஒற்றை அறைக்குள் அடைந்துகொள்கிறார்கள். ” இது தான் உலகம், இதில் என்னைத் தவிர வேறு யாரும் மேலோங்கி இல்லை”, என்கிற மாய பிம்பத்தோடு அச்சிறையில் வாழ்கிறார்கள். அதனோடு இன்று ஒவ்வொரு நபரும் முட்டி மோதுகிறார்கள். “தான்” என்ற பிம்பத்தோடு மோதி மனதளவில் ஆரோக்கியம் இழந்து, மன அழுத்தத்திற்கு உள்ளாகி மிகப்பெரிய இழப்பை இன்றைய மாணவ சமுதாயம் உருவாக்கி கொண்டு வருகிறது.

தனித்தன்மையை கட்டமைத்தல்: 

இன்று அனைத்து பெற்றோரும் தன் குழந்தையை யாரும் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, வெளி உலகம் அவனை/அவளை கொண்டாட மட்டுமே வேண்டும் என்ற மிகப்பெரிய பேராசையை உருவாக்கியிருக்கிறார்கள். ‘அவமானம் இல்லாமல் வாழ்வில் வெற்றி இல்லை’, என்று நம் முன்னோர்களில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பல ஜாம்பவான்கள் கூறுகின்றனர்.  (Pampering) தடவி கொடுத்தல் என்பது வேறு, செல்லம் என்பது வேறு. ஆனால் இன்று அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை தடவிக்கொடுத்து அவர்களை காயத்தின் வலியை உணர விடாமல் தடுக்கின்றனர். 

பெற்றோர்கள் தங்கள் வருமானத்திற்கு மீறி அளவு கடந்த செலவினம் செய்வதை இன்று அனைத்து வீடுகளிலும் காண முடிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் குழந்தைகள், புது வருடப்பிறப்பின் போது ஒரு உறுதிமொழி எடுத்தனர். ” தி.நகர் ரங்கநாதன் தெருவில் எந்த விதமான பொருளையும் வாங்க மாட்டோம்”, என்று உறுதி எடுத்தனர். அதற்கு அந்தப் பெற்றோர் அனைவரும், ‘அவர்களது குழந்தைகளின் ‘ஸ்டேட்டஸ்’ உயர்ந்து இருக்கிறது என்றும், அவர்களது கல்வியறிவு அவர்களை மாற்றி விட்டது’, என்றும் பெருமை பேசினார்கள். இது ஒரு வகையாக பொருட்களின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்துவதே! தான் பயன்படுத்தும் பொருளை வேறு எந்த மனிதனிடமும் பார்க்கக்கூடாது என்கிற மனோபாவம் இது. அந்தப் பொருளை பயன்படுத்தும் தகுதி தனக்கு மட்டுமே உள்ளது என்கிற வெறித்தனத்தை இது உருவாக்கும்.    

கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் அவள். தன் தோழி வைத்திருந்த ‘காலர் டியூன்’ அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் பாடலை தரவிறக்கி, அதைத் தன் காலர் டியூனாக மாற்றினாள். ஆனால் அவள் தோழியோ, அந்தப் பாடல் அவளது காதலன் அழைப்புக்காக வைத்திருந்த ‘ஸ்பெஷல்’ பாடல் என்று சொல்லி, இந்தப் பெண்ணின் மொபைலைப் பிடுங்கி அதிலிருந்த அந்தப் பாடலை அழித்து விட்டாள். யாரோ பாடிய பாடலை “தன்” பாடலாகக் கருதி, வேறு யாரும்…அவளுக்கு நெருங்கிய நபராக இருந்தால் கூட, அதை வைத்துக் கொள்ள உரிமை கிடையாது என்கிற மனோபாவத்தில் இருக்கிறாள் அந்தத் தோழி. 

இவ்வாறாக இன்றைய மாணவ சமூகம் தன்னை சிறந்தவன் என்றும், தன்னிடம் இருப்பது வேறு யாரிடமும் இருக்க கூடாது என்றும், அதற்கு அவனது/ அவளது உயிரை விட சிறப்பானவன் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். இவன் சிறப்பானவன்/சிறப்பானவள் என்கிற எண்ணத்தை பெற்றோர் விதைக்கிறார்கள்.

இதனால் அவன்/அவள் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை விட தன்னை மேலானவர்களாகவும், சிறப்பு மிக்கவனாகவும் கருதி கொள்வதால் அவன் /அவள் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு நடவடிக்கையிலும், தன்னுடைய தனித்தன்மையை நிரூபிக்கும் வகையில் அவனது சொற்களும், செயல்களும், அமைந்து விடுகின்றன. வயது ஏற ஏற தனித்தன்மையின் குணாம்சமும், தனித்தன்மையின் பரிணாமமும் பல்வேறு வகைகளில் அதிகரிக்கின்றது. தன்னுடைய உணர்வுகளைக்கூட குறிப்பிட்ட வடிவங்களில் மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.

தான் சிறந்தவன்” என்பது தன்னுடைய குணநலன்/ குணாம்சத்தை மேம்படுத்தக்கூடிய தன்மையுடையதாக இருக்க வேண்டும். வீண் பிடிவாதமாகவும், வறட்டு ஜம்பமாகவும், முட்டாள் தனமான உணர்வுகளின் வெளிப்பாடாகவோ இருக்க கூடாது. 

பேஸ்புக், வாட்சப், ட்விட்டர் எபோன்றவற்றில் தன்னை அனைவரும் பாராட்ட வேண்டும், ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும் என்பதற்காக ‘தன்னை’ நிரூபிக்கக் கூடாது. 

“சிறந்தவன்” என்ற எண்ணத்தோடு வாழ்வது அழகு. ஆனால் நான் மட்டும் தான் சிறந்தவன் என்ற எண்ணம் ஒரு வித மாய தோற்றமே ஒழிய, நிஜம் அது அல்ல, இதை புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர்கள் மிகைப்படுத்தாமல் ஒரு தனித்துவத்தை உங்கள் குழந்தைகளிடம் உருவாக்குங்கள்.

உங்கள் திறமை, பழகும் விதம், குணநலன் இதைப் பொறுத்தே இந்த சமூகம் உங்களைக் கொண்டாடும். சமூகத்திற்கு என்றுமே கொண்டாட்டம் பிடிக்கும். அதும் மனிதனை கொண்டாடுவது என்பது சக மனிதனுக்கு தனி மகிழ்வாக இருக்கும். அதனால் தான் பதவிக்காகவும், நடிப்பின் மீதும் ஒரு தீரா காதலுடன் பலரும் பயணிக்கின்றனர். இப்படி பயணிப்பவர்கள் ‘எப்போதும் சிறந்தவன்’ என்கிற அங்கீகாரத்தை அடைய பல மனிதர்களை சம்பாதிப்பார்கள். மனிதக் கூட்டத்தோடு பயணிப்பார்கள். மனிதனை ஒதுக்க மாட்டார்கள். நிறை, குறையுடன் உள்ள மனிதக் கூட்டத்தை தனக்கென்று சம்பாதிப்பார்கள்.

அதனால் சிறந்தவன் என்ற வார்த்தையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். தனித்தீவாக மாறாமல், உங்களுடன் படிக்கும் மாணவர்களுடனும், நண்பர்களுடனும், அக்கம்பக்கத்து வீட்டினருடனும் பழக வேண்டும். அனைத்து பொருட்களையும் பயன்படுத்தத் தெரிய வேண்டும். அனைத்து வகையான உணவும், தண்ணீரும், காலநிலையும் நமக்குச் சேர வேண்டும். அப்படி என்றால் தான் இயற்கையோடு நாம் முழுமையாக ஆரோக்கியமாய் இருக்கிறோம் என்று பொருள். என் இளைய தலைமுறையே, வாழ்க்கையை மனித சமூகத்துடன் வாழ்ந்து, அதில் ‘சிறந்தவன்’ என்ற பெயரோடு கொண்டாட்டமாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

செருக்குடன் இருங்கள், ஆனால் ஆணவத்துடன் இருக்கவேண்டாம்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

காயத்ரி மஹதி

காயத்ரி மஹதி மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர். தனிப்பட்ட முறையில் கவுன்ஸலிங் செய்து வருகிறார். உளவியல் ரீதியாக குடி நோயாளிகள் மற்றும் குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2016ம் ஆண்டு ஈஸ்டர்ன் பூமிகா நிறுவனம் இவருக்கு “சிறந்த பெண்மணி” விருது வழங்கி கவுரவித்தது. உளவியல் ரீதியாக பள்ளிகளில விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக 2019ம் ஆண்டு நந்தவனம் நிறுவனம் “சிறந்த பெண்மணி” விருது அளித்தது. நாளிதழ்கள், செய்தித் தாள்களில் மனநலம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.