பண்டைய விளையாட்டுகள் – 5

ஒண்ணுக்கும் புண்ணாக்கு 

இதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சிறு தேங்காய் அளவிற்கு உருண்டை கல் கொண்டு வர வேண்டும். ஒரு குழி தோண்டி வைத்துக் கொண்டு, சிறிது தூரத்தில் உள்ள கோட்டில் நின்று கொண்டு, குழியை நோக்கித், தங்கள் கற்களை வீச வேண்டும். யார் கல் குழியின் அருகில் இருக்கிறதோ அவருக்கு முதல் வாய்ப்பு. அடுத்தடுத்து இருப்பவர்களுக்கு, அடுத்தடுத்த வாய்ப்புகள். 

வாய்ப்பு கிடைத்தவர், ‘ஒண்ணுக்கும் புண்ணாக்கு’ என முதலில் குழிக்குள் போட வேண்டும். பின் தனக்கு விருப்பமானான கல்லை அடிக்கலாம்.  அவர் கல்லுக்கும் அவர் அடிக்கும் கல்லுக்கும் இடையில் குறைந்தது ஒரு சாண் இடைவெளி இருக்கவேண்டும். அப்போது பாடப்படும் அப்பாடல்;

ரெண்டுக்கும் பீச்சக்கொட்டை 

மூணுக்கும் மூச்சோடு 

நாலுக்கும்  நாற்காலி

அஞ்சுக்கும் பஞ்சவர்ணம்

ஆறுக்கும் பாலாறு

ஏழுக்கும் எழுத்தாணி

எட்டுக்கும் மொட்டை கொட்டை

ஒம்பதுக்கும் ஒரே பாகம் (இப்போது இரண்டு கற்களுக்கும் இடையில் குறைந்தது ஒரு பாகம் இடைவெளி இருக்கவேண்டும். இதனால் படுத்திருந்து இரு கைகளையும் நீட்டி அளப்பார்கள்).

பத்துக்கும் பாளையராசா

இப்போது அவருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். இவற்றில் தவறு ஏற்படும்போது ஆட்டம் அடுத்தவரின் வாய்ப்பு.

கிட்டிப்புள்/ கில்லி/ குச்சி கம்பு 

இது 1½ அடி நீள கம்பு, மற்றும் ½ அடி கம்பு ஒன்று வைத்து விளையாடும் விளையாட்டு.  பென்சிலைத் தீட்டுவது போல சிறிய கம்பு இருபுறமும் தீட்டப் பட வேண்டும். அப்போது தான் பெரிய கம்பு வைத்து அடிக்கும் போது அது மேலே எழும்பும். , 

வழக்கில், சிறு கம்பை, ‘குச்சி’ என்றும், பெரிய கம்பை, ‘கம்பு’ என்றும் சொல்லுவார்கள்.

தரையில், சுமார் ஒருமுழம் நீளத்தில் குறுகலாக (குச்சியின் நீளத்தை விடக் குறைவாக இருக்க வேண்டும்) குழி அமைக்க வேண்டும். குழியின் முன்பகுதியில், குச்சியை குறுக்காக வைக்க வேண்டும்.

ஆடுபவர் குச்சியை தன் கையில் இருக்கும் கம்பு வைத்து, தள்ளி விடுவார். அதை மற்றவர்கள் பிடிக்க வேண்டும். பிடித்து விட்டால், அவர் (கிரிக்கெட் மாதிரி) வெளியேறி விடுவார். பிடிக்க இயலாமல் கீழே விழுந்து விட்டால், அருகில் இருப்பவர் குச்சியை, குழியை நோக்கி வீசுவார். அடிப்பவர், அது குழிக்குள் விழாமல், அடித்து தூரத்திற்கு அனுப்ப வேண்டும். எத்தனை தடவை அடிக்கிறார்களோ அத்தனை புள்ளிகள். தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். 

ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவர் தவிர அனைவரும் குச்சியை அடிப்பார்கள். குறைந்த புள்ளிகள் பெற்றவர் அங்கிருந்தே கீ……….. என சத்தமிட்டவாறே தொடங்கிய குழிக்கு அருகில் வர வேண்டும். பார்ப்பதற்கே பாவமாக இருக்கும்.

மற்றொரு ஆட்டத்தில், கையில் வைத்து குச்சியைக் கையால் தட்டி முடிந்த தூரம் வரை அடிக்க வேண்டும். இதில் எவ்வளவு தூரம் அடிக்கிறார் என்பதைப் பொறுத்து அளந்து புள்ளிகள் கொடுக்கும் விளையாட்டும் உண்டு. முதலில் கையில் வைத்து தட்டும் போது, அவை பத்துக்களாக எண்ணப்படும்.

நெடுங்காலத்திற்குப் பின், சமீபத்தில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சின்ன முட்டத்தில் அதே அளவு உற்சாகத்துடன் குச்சிக்கம்பு விளையாடுவதைப் பார்த்தேன்.

கழச்சி/ கோலி / கோலிக்குண்டு/ கோலிக்காய் 

கழச்சி என்பது, கண்ணாடியால் செய்யப்பட உருண்டை. பார்க்க மிக அழகாக இருக்கும்.

கழச்சி விளையாட்டில், பல வகைகள் உண்டு .

ஒரு வட்டம் போட்டு அதனுள் ஆளுக்கு ஒரு கழச்சி வைக்க வேண்டும். சிறிது தூரத்தில் இருந்து கையில் இருக்கும் இன்னொரு கழச்சியைத் தூக்கி மெதுவாக போட வேண்டும். யார் கழச்சி வட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கிறதோ அவருக்கு முதல் வாய்ப்பு. அவர் வட்டத்தில் உள்ள கோலிகளை அடித்து வெளியே கொண்டு வரவேண்டும். வெளிவரும் கழச்சி, அவருக்கானது. பின் இரண்டாவது அருகில் இருப்பவரின், மூன்றாவது அருகில் இருப்பவரின் வாய்ப்பு.

மற்றொரு விளையாட்டில், ஆளுக்கு ஒரு சில கழச்சிகள் ஆட்டைக்கு (ஒரு ஆட்டத்துக்கு) வைக்க வேண்டும். சிறிது தூரத்தில் இருந்து கையில் இருக்கும் இன்னொரு கழச்சியைத் தூக்கி மெதுவாக போட வேண்டும். யார் கழச்சி வட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கிறதோ அவருக்கு முதல் வாய்ப்பு. பின் இரண்டாவது அருகில் இருப்பவரின், மூன்றாவது அருகில் இருப்பவரின் வாய்ப்பு.

எந்த கழச்சியை அடிக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் சொல்வார்கள். அந்த கழச்சியை அடிக்க வேண்டும். இரண்டு கழச்சியைகளுக்கும் இடையில் குறைந்தது ஒரு சாண் இடைவெளி இருக்க வேண்டும். தவறான கழச்சியை அடித்தாலோ, நாம் அடித்த கழச்சி வேறு கழச்சியில் பட்டாலோ ஆட்டம் அடுத்தவரின் வாய்ப்பு.

மற்றோரு விளையாட்டில், ஒருவர் சுவரில் தனது கழச்சியை எறிய வேண்டும். அதன் அருகில் விழுமாறு அடுத்தவர், தனது கழச்சியை எறிய வேண்டும்.  இரண்டு கழச்சியைகளுக்கும் இடையில் ஒரு சாண் இடைவெளிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.  

பம்பரம்

பம்பரம், மேல்பகுதி அகன்றும் கீழே வர வரக் குறுகியும் கூம்பு வடிவில் மரக்கட்டையால் செய்யப்படும் பொருள். அதன் மேலும் கீழும் ஆணி இணைத்தால், கயிறு வைத்து சுற்றி விட முடியும்.

தரையில் வட்டமிட்டு, பம்பரத்தை ஒரே நேரத்தில் அதனுள் சுற்றி விட்டு, பின் கயிறைப் பயன்படுத்தி, கையில் எடுக்க வேண்டும். எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைத்து, கையில் பம்பரம் உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுப்பார்கள். அந்த பம்பரத்தின் மீது குத்தி குத்தி தங்களது பம்பரத்தை எடுக்க, உள்ளே பம்பரம் வைத்தவர் கண்ணில் கண்ணீரே வந்து விடும். சில சமயம் பம்பரம் இரண்டாக உடைந்து விடுவதும் உண்டு. இவ்வாறு ஒவ்வொரு பம்பரமாக உள்ளே வரும். கடைசி வரை கையில் பம்பரம் வைத்திருப்பவர் வெற்றி பெற்றவர்.

எறிஞ்சான் பந்து 

அனைவரும் இரு அணிகளாக பிரிந்து கொள்வர்.  பெரிய வளாகத்தின் நடுவில், ஏழு தட்டையான கற்கள் அடுக்கி வைப்பர். அது தான் ஆடுகளம். ஒரு பந்தை வைத்து ஒரு அணி அடுக்கை தகர்க்க வேண்டும். அதை அடுத்த அணி தடுக்க வேண்டும். ஒரு முறை தகர்த்து அடுக்கி விட்டால், ஆட்டம் அடுத்த அணிக்கு போகும்.

————————

தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை போன்றவை புளியம்முத்து போன்றவற்றை ஒரு வட்டத்திற்குள் வைத்து, தட்டையான கல் கொண்டு, வட்டத்திற்கு வெளியே கொண்டு வர வேண்டும். இதன் பெயர் நினைவில் இல்லை. அதிகம் வெளியே கொண்டு வந்தவர் வென்றவர்.

நிறைவு

கட்டுரையின் முந்தைய பகுதி வாசிக்க:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.