பண்டைய விளையாட்டுகள் – 4

கிளியாந்தட்டு 

விளைந்த கதிரைக் கொத்தவரும் கிளிகளை விரட்டுவதுபோல இந்த விளையாட்டின் விதிமுறை இருப்பதால் கிளியாந்தட்டு என பெயர் வந்தது. அதாவது நடுவில் இருக்கும் கிளிகள், பறவை பிடிக்க வைக்கப்படும் தட்டின் ஓரங்களில் இருக்கும் முடிச்சுகளில் மாட்டிக் கொள்வதுபோல, இங்கும் அடுத்த கட்டத்துக்கு ஓரம் வழியாகச் செல்லும்போது, அந்த கட்டத்தில் அவர்களை மறைப்பவர் தொட்டு விட்டால், தொடப்பட்டவரின் மொத்த குழுவும் தோல்வி அடைந்ததாகக் கருதப்படும். 

தட்டு என்பதைப் பாத்தி என எடுத்துக் கொண்டால், பாத்தியில் விளைந்த கதிர்களைத் தின்னவரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போல இருப்பதால், விளையாட்டு இப்பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் நடைமுறையில் யார் மறிக்கிறார்களோ, அவர்களின் தலைவரே ‘கிளி’ எனப்படுகிறார். ஆட்டத்தைத் தொடங்குவதை, ‘கிளி பாடி வருகிறது’ என்றுதான் சொல்வோம்.

“கிளிகள் பெருந்தொகையாய் விளைபுலங்களில் வந்து வீழ்ந்தபோது, உழவர் அப்புலங்களிற் புகுந்து தட்டுத்தட்டாய் நின்று அக்கிளிகளை அடித்துத் துரத்தியும் அவை கொய்துகொண்டு போகும் கதிர்களைக் கவர்ந்ததும் வந்தனர். இவ் வழக்கத்தினின்றே கிளித்தட்டு என்னும் விளையாட்டுத் தோன்றியது. தட்டு என்பது பாத்தி வரிசை” என்கிறார் தேவநேயப் பாவாணர்.

கிளியாந்தட்டு, இரு குழுக்களாக விளையாடும் விளையாட்டு. ஒரு குழுவிற்கு எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை செவ்வகங்கள் போட வேண்டும். அவற்றிற்கு நடுவில் குறுக்கு கோடு போட வேண்டும். ஒரு குழு இடை மறிக்கும்; அடுத்த  குழு உட்புகும். மறிக்கும் அணியினர் முதல் செவ்வகத்தில் மட்டும் நிற்க மாட்டார்கள். கோட்டில் நின்று மறிப்பவர், தனது செவ்வகத்தில் மட்டும் தான் நிற்க முடியும். அந்த முதல் கட்டத்தின் ஆள் தான் கிளி.

கிளி எந்த கோட்டிலும் செல்லலாம். கிளி முன் பக்கம் இருந்து உள்ளே போகும். புகுபவர்கள் பின் பக்கம் இருந்து உள்ளே புகுவார்கள். கோடு தாண்டும்போது உட்புகும் குழுவில் இருந்து யாராவது, கிளியாலோ, மறிக்கும் குழுவின் உறுப்பினராலோ தொடப்பட்டால் குழு ஆட்டமிழக்கும். உட்புகும் குழுவில் இருந்து யாராவது ஒருவர் கடைசி கட்டைத் தாண்டி விட்டால், குழு வெற்றி பெறும். 

இலங்கை கிளித்தட்டு, படம்: விக்கிபீடியா

மிகவும் விறு விறுப்பான விளையாட்டு. விளையாடுவதற்கு எவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறதோ அவ்வளவிற்குப் பார்ப்பதற்கும் மிகமிக விறுவிறுப்பாக இருக்கும். நாம் பள்ளிகளில் கோகோ விளையாடுவது போல இலங்கையில் கிளித்தட்டு விளையாடுகிறார்கள். அதற்கான விதிமுறைகள் கொண்ட அவர்களது பாடநூலை வாசித்து இருக்கிறேன்.

பச்சைக்கிளியே வரலாமா?

இது நாங்கள் பள்ளியில் பெரும்பாலும் விளையாடிய விளையாட்டு. எங்கள் பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையே சுவர் எல்லாம் கிடையாது. ஒரு நீளமான அறையில், தேவைக்கேற்ப தட்டி வைத்து மறைப்பார்கள். நாங்கள் தட்டியைச் சுற்றி ஓடி விளையாடுவோம். ஒருவர் தொட்டு வருவார். அவர் ‘பச்சைக்கிளியே வரலாமா’ எனக் கேட்பார். மற்றவர்கள் வரலாம் என்பார்கள். அவர்  எந்தாலோடி (எப்படி)? என கேட்க இந்தாலோடி (இப்படி)… என தட்டியின் ஏதாவது ஒரு பக்கத்தைக் காட்டுவார்கள். அவர், அந்த பாதை வழியே தொட்டு வர வேண்டும்.

வகுப்பிற்கு வெளியில் விளையாடினால், தட்டிக்குப் பதில், இருவரை இரு புறமும் உட்கார வைத்துக் கொள்வோம். அவர்களுக்குப், போடு கருப்பட்டி என பெயர். போடு கருப்பட்டி என்பது சும்மா ஒப்புக்கு வைப்பது போன்ற சொல். இப்போதைய வழக்கில் சொல்வதென்றால், ‘டம்மி பீஸ்’ அவர்கள் விளையாட்டில் தான் இருக்கிறார்கள்.  இந்த விளையாட்டில், கீழே அமர்ந்திருப்பவர்கள் விளையாட வில்லை. அதனால் அவர்கள் போடு கருப்பட்டி. ஆட்டத்தில், விரட்டுபவர் (தொட்டு வருபவர்) போடு கருப்பட்டிகளைச் சுற்றி தான் ஓட வேண்டும். மற்றவர்கள் குறுக்கே ஓடிக் கொள்ளலாம்.

அந்திமழை செப்டம்பர் 25, 2018  மின்னிதழில்,கருப்பட்டியின் கதை என்ற கட்டுரையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்,  “சாமர்த்தியமாக ஏதேனும் செய்தால், சாதுர்யமாக ஏதும் பேசினால் பெரியவர்கள் அன்று சொன்னது, ‘போடு கருப்பட்டி!’ என்று” எனக் குறிப்பிடுகிறார். இது நாஞ்சில் நாட்டின் (வட கன்னியாகுமரி மாவட்டம்) வட்டார வழக்கு போலும்! 

அக்கா அக்கா… கிளி செத்துப் போச்சு

இந்த விளையாட்டில், சிறுவர் தங்கள் கால்களை நீட்டி இணைத்தவாறே வட்டமாக அமர வேண்டும். ஒருவர், தனது தலையை வலப்புறமோ இடப்புறமோ சாய்த்து, ‘அக்கா அக்கா கிளி செத்து போச்சு’, என்று சொல்லவேண்டும். எந்த பக்கம் திரும்புகிறாரோ அவர் தனது ஒரு காலை மடக்கவேண்டும். இவ்வாறு எவர் தனது இரண்டு கால்களையும் மடக்குகிறாரோ அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். கடைசியில் இருப்பவர் வெற்றியாளர்.

இதே மாதிரி அமர்ந்து நடுவில் இருக்கும் இடத்தைக் கிணற்றின் தொவளம் (விளிம்பு சுவர்) என கற்பனை செய்து, அதில் வைத்த ஈறுவலி (ஈறு என்றால், பேனின் முட்டை. அதை நீக்க மர அல்லது கொம்பு சீப்பு ஒன்று பயன்படுத்துவார்கள். அதற்கு ஈறுவலி என்று பெயர்.) கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக ‘ஈறுவலி அம்மா ஈறுவலி’ என பாடிக்கொண்டே கைகளைத் தரையில் ஊன்றி நகர்ந்தவாறே விளையாடுவார்கள். அது என்ன விளையாட்டு என இப்போது நினைவில் இல்லை.

ஆடு  புலி ஆட்டம் 

இந்த விளையாட்டில், ஒருவர் ஆடு ; இன்னொருவர் புலி. மற்றவர்கள் வட்டமாக சங்கிலி போல் கை கோர்த்து நிற்க வேண்டும். ஆடு வட்டத்திற்குள் நிற்க வேண்டும். புலி வெளியே நிற்க வேண்டும். புலி முயற்சி செய்து அந்த சங்கிலியை உடைத்து உள்ளே நுழைய வேண்டும். அதே நேரம் ஆடு தப்பித்து வெளியே ஓடி வேண்டும். கைகளை உயர்த்தி ஆட்டைத் தப்பியோட விட்டு விடுவர். புலி திமிறிக் கொண்டு உடனே வெளியே ஓட முயற்சிக்கும். இவ்வாறு ஆடு புலியிடம் இருந்து தப்பிப்பதுதான் ஆட்டம்.

தொட்டு விளையாட்டு 

வட்டம் போட்டு அதற்குள் ஓடுவர். அவர்களைப் ‘பட்டவர்’ நொண்டி அடித்துச் சென்று தொடவேண்டும். கால் வலித்தால் நடுவில் ஒரு சிறு வட்டத்திற்குள் கால்களை ஊன்றிக் கொள்ளலாம். தொடப்பட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். 

தொட்டு வருபவர், கண்களைக் கட்டிக்கொண்டு தொட்டு விளையாடுவதும் உண்டு. இதில் நொண்டி அடிக்க வேண்டிய தேவை இல்லை. 

கல்லா மண்ணா 

கல்லா மண்ணா, படம்: விக்கிபீடியா

கல்லா மண்ணா, தொட்டு விளையாடும் விளையாட்டு. தொட வேண்டியவர் கல் என்று சொன்னால் கல்லில் நிற்பவரை மட்டுமே தொடுவார். மண் என்று சொன்னால் மண்ணில் நிற்பவரை மட்டுமே தொடுவார். அவர் மாற்றி மாற்றிச் சொல்லி தொட வருவார்.

கச்சபுச்சா

இது, நிறைய மணல் இருக்கும் இடத்தில் விளையாடும் விளையாட்டு. விளையாட்டின் விதிமுறை இதுதான். அனைவரும் முதலில் ஒரு காலுக்கு மேல் இன்னொரு காலை போட்டு உட்கார (பத்மாசனம்) வேண்டும். பின் ஒரே நேரத்தில், கைகளை மட்டும் தரையில் ஊன்றி உடம்பை தூக்கி பத்து முறை ஆட வேண்டும். இடையில் விட்டவர் அல்லது முதலில் கையை விட்டு உடம்பால் தரையைத் தொட்டவர் அல்லது கடைசியில் ஆடி முடித்தவர் எழும்பி மற்றவர்களின் பாதத்தை மண்ணில் படுமாறு செய்ய வேண்டும். அவரிடமிருந்து உட்கார்ந்திருப்பவர் தப்பிக்க வேண்டும். தோற்று எழும்பியவர்கள் அனைவருமே முயற்சி செய்யலாம்.

இப்போது சரிவர சம்மணம் போட்டே உட்கார முடியவில்லை. அப்போது ஓடி விளையாடுவது போல மிகவும் இலகுவாக விளையாடுவோம். கோவில் முன் தான் பெரும்பாலும் விளையாடுவோம்.

கண்ணாமூச்சி / ஐஸ்பால் ரெடி 

I Shall be ready என்பது தான் மருவி, ஐஸ்பால் ரெடி என ஆகிவிட்டது.

இந்த விளையாட்டில், ஒருவர் 1-100 வரை கண்ணை மூடிக்கொண்டு எண்ண வேண்டும். அந்த நேரத்திற்குள், மற்றவர்கள் அனைவரும் ஒளிந்து கொள்ள வேண்டும். எண்ணியவர், ஒளிந்தவர்களைக் கண்டுபிடித்து, எந்த இடத்தில் நின்று எண்ணினாரோ, அந்த இடத்தில் வந்து யாரைக் கண்டுபிடித்தாரோ, அவரின் பேரைச் சொல்லி ஐஸ்பால் ரெடி என்று சொல்லவேண்டும். அவருக்குமுன், கண்டுபிடிக்கப்பட்டவர் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து  ஐஸ்பால் ரெடி என்று சொல்லிவிட்டால், மீண்டும் அனைவருக்காகவும் அவர் எண்ண வேண்டும்.

குறைந்தது எத்தனை பேரைக் கண்டுபிடிக்க வேண்டும் என ஆட்டம் தொடங்கும் முன்பே விதிமுறை வைத்து விடுவார்கள். அத்தனை பேரைக் கண்டுபிடித்து விட்டால், ‘அனைவருக்கும் சலாம்’ என்று சொல்ல வேண்டும். அனைவரும் வெளியே வந்து விடுவார்கள். முதலில் யார் கண்டுபிடிக்கப்பட்டாரோ, அவர் எண்ண வேண்டும்.

மெல்ல வந்து கிள்ளிப்போ

அனைவரும் இரு அணிகளாக பிரிந்து கொள்வர். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு பெயர் வைப்பார்கள். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை மூடி, ஏதாவது ஒரு பெயரைச் (ரோஜாப்பூவே ரோஜாப்பூவே) சொல்லி ‘மெல்ல வந்து கிள்ளிப்போ’ என்பார். உடனே ரோஜாப்பூஎன்ற பெயர் வைக்கப்பட்டவர்  வந்து கிள்ளிவிட்டுச் செல்லவேண்டும். அவர் அமர்ந்ததும், எல்லோரும் ‘தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க’, என்று சொன்னதும்,  ரோஜாப்பூ அணியைச் சார்ந்த எல்லோரும், கீழே குனிந்து கொள்வார்கள். அதன் பிறகு கண்களை திறந்து விட்டால், அவர் கிள்ளியவர் நடந்து வரும் வேகம்… போன்றவை வைத்து யார் என சொல்ல வேண்டும். 

சிறுவீடு விளையாட்டு / சோறு பொங்கி விளையாட்டு 

சிறுவீடு விளையாட்டு, நன்றி: Quora

மே மாதம் பகல் முழுவதும் தெரு சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து ஏதாவது ஒரு இடத்தை தூய்மை செய்து, அதில் விளையாடுவோம். வீடு, கோவில், கடை, வங்கி என அனைத்தும் உள்ள ஊராய் அதை வடிவமைத்து விளையாடுவோம். சோப்பு டப்பாவில் மண்ணை குழைத்து காய வைத்து, கோவில் கட்டியதும் உண்டு. துண்டு பிலிம் கொண்டு திரையரங்கம் நடத்தியதுண்டு. 

பணத்திற்கு, அந்த ஆண்டு படித்து முடித்தபின் கிடைக்கும் கட்டுரை நோட்டின் எழுதிய பக்கங்களை வெட்டி, ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு அச்சிட்டுப்  பயன்படுத்துவோம். எல்லோரும், கட்டுரை நோட்டு கொண்டு வர வேண்டும். சிலரது கட்டுரைகள் மிகவும் சுவாரசியமாக, நகைச்சுவையாக இருக்கும்.  உண்மையான சோறுகூட அவ்வப்போது பொங்குவோம். அதன் ருசிக்கு, அதை நாய்கூட தின்னாது; ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாய் சாப்பிடுவோம்.

தொடரும்…

கட்டுரையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கலாம்:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.