உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது.
24.04.2025 அன்று நிவேதிதா தோழர், ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக மரபுநடை ஒன்றை அங்கு ஏற்பாடு செய்திருந்தார். 20க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து வந்திருந்தனர்.
எல்லாரும் உள்ளே செல்வதற்கு முன்னால், நூலகத்தின் நுழைவு வாயிலில், பர்மா நாட்டு பீரங்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், ‘ராபர்ட் போர்க்’ பற்றி, நிவேதிதா தோழர் கூற ஆரம்பித்தார். அங்குதான் கன்னிமரா நூலகத்தின் அடிக்கல் கல்வெட்டு இருந்தது.

ராபர்ட் போர்க், பரோன் ஆப் கன்னிமரா என்று பட்டம் பெற்று 1886ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்படுகிறார். கன்னிமரா என்பது அயர்லாந்து மேற்குப் பகுதியில் உள்ள கன்னிமரா என்ற அழகான பகுதியின் பெயர் ஆகும்.
லேடி சூசன், (எவ எலிசபெத் சூசன் போர்க்), ‘லார்ட் டல்ஹவுசி’யின் மகள். கணவர் லார்ட் கன்னிமராவிற்கு தனிப்பட்ட நபர் இடம் காதல் விவகாரம் இருந்ததால், சூசன், தன் கணவர் கன்னிமரா மீது துரோக குற்றச்சாட்டை ராணி எலிசபெத்திடம் வைத்தார். நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்.
அந்த நாள்களில் கணவரோடு இருக்க விரும்பாமல், தனி முதல் பெண்ணாக விடுதியில் தங்கினார். அப்படி தங்கியதால் அந்த அல்பேனி விடுதிக்கு ஹோட்டல் கனிமரா என்று பெயர் வந்தது.
கன்னிமரா நூலகத்தில் பல்வேறு வகையான நூல்கள், பழைய இதழ்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு -1891 போன்ற நூல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

கன்னிமரா பொது நூலகத்தை வடிவமைத்தவர் ஹென்றி இர்வின் என்ற பிரபலமான கட்டிடக் கலைஞர். அவர்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம், சென்னை உயர் நீதிமன்றம் , மைசூரு அரண்மனை ஆகியவற்றை வடிவமைத்து உள்ளார். இவரின் பெரும்பாலான வடிவமைப்புகள் இந்தோ சாரசனிக் வகை சிவப்பு வண்ணக் கட்டடங்கள் ஆகும்.
இவர் இந்தோ-சரசெனிக் ரிவைவல் – (இந்திய, இசுலாமிய, ஐரோப்பிய பாணி), ராஜஸ்தானி – தெக்காண முறை என பல வகைக் கட்டடக் கலையைக் கலந்து உருவாக்கப்பட்ட கன்னிமரா நாலகக் கட்டடத்தை வடிவமைத்துள்ளார்.


அங்கு உள்ள வண்ணக் கண்ணாடிச் சாளரங்கள், சர்ச்சில் வடிவமைக்கப்பட்ட சாளரங்கள்போல் இருந்தன. 120 ஆண்டுகளுக்கு முன்பாக எலிசபெத் மகாராணி பரிசளித்த பழங்கால மரநாற்காலிகள் நூலகத்தில் இருந்தன.
நூலகத்திற்கு வெளியில் உள்ள நாகலிங்க மரம் (Cannon -ball tree), மேற்கு ஆஃப்ரிக்காவில், வடக்கு தென்அமெரிக்காவில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.

நுலகத்திற்கு உள்ள நீண்ட பாதையில் சென்றுகொண்டு இருந்தோம். அப்பொழுது திடீரென ஒரு வெள்ளை ஆந்தை வேகமாக நூலகத்தற்குள் பறந்து சென்றது. அது ஹாரி பாட்டரில் வரும் ‘ஹெட்விக்கை’ நினைவு படுத்தியது.
பழங்கால இடங்களின் வரலாற்றை அதற்குரிய இடத்திற்கே போய் அறிந்து கொண்டது நன்றாக இருந்தது. நாம் அறிந்த வரலாற்றை புதிதாக பெண்ணியப் பார்வையில் தோழர் நிவேதிதா காண்பித்தது முற்றிலும் புதுமையாக இருந்தது.

படங்கள் நன்றி: ஹெர் ஸ்டோரிஸ் டீம்
படைப்பாளர்

ரித்திகா
சுதந்திர மனம், சிந்தனை வளம், பயணத்தின் மீது விருப்பம் கொண்ட மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி இவர். பதின்பருவ வாழ்க்கையின் தன்னனுபவப் பிரதிபலிப்பான 'கற்கள் நட்சத்திரங்கள்' புத்தகத்தின் ஆசிரியர்.