பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசியும் எழுதியும் கொண்டிருந்த எனக்குச் சென்ற வருடம் ஹெர் ஸ்டோரீஸ் நடத்திய ‘பெண்ணெழுத்துப் பயிற்சிப் பட்டறை’யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பட்டறையில் கிடைத்த எழுத்து அனுபவங்களின் மூலம் நான் எனது முதல் தமிழ் கட்டுரையை எழுதி முடித்தேன். பல இலக்கணப் பிழைகள் நிறைந்த கற்றுக்குட்டி படைப்பாக இருப்பினும், என் எழுத்துகளையும் சொல்ல வந்த கருத்துகளையும் படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிறகென்ன! என் நண்பர்களுக்கு நான் எழுதியதைப் பகிர்வதற்காக என் திறன்பேசியின் மூலம் என் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்தக் கட்டுரையைப் பதிவேற்றினேன்.

அடுத்த நிமிடத்திலிருந்து திறன்பேசியும் கையுமாக ஏதாவது லைக்குகள் வந்திருக்கின்றனவா என்று பார்க்க ஆவல் கொண்டிருந்தது என் மனம்.

ஒரு மணி நேரம் காத்திருந்தேன், ஹ்ம்ம்… ஒருவரிடமிருந்தும் லைக் வரவில்லை. இரவு உணவு சாப்பிடும் போதும் சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல் திறன்பேசியையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு லைக்காவது வந்திருக்குமா என்று என் மனம் ஏங்கியது!

இரவு தூங்கும் நேரமும் வந்தது. படுக்கையில் படுத்தவாறே இருளில் திறன்பேசியை நோட்டமிட்டேன். இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. ஒவ்வோர் இரண்டு மணி நேரமும், யாரேனும் பதிவிற்கு லைக் செய்தார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னமா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா’ என்கிற தருணம். என்னடா சத்திய சோதனை இது! ஒரு லைக் கூட இல்லை.

இரவு முழுவதும் சரியான தூக்கத்தைத் தவறவிட்டதால், காலையில் பேய் அறைந்தது போல சோர்வாகவும் சோகமாகவும் இருந்தேன். நொந்து போன நூடுல்ஸ் போல என் திறன்பேசியை எடுத்துப் பார்த்தேன்.

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!

என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி!

அந்த ஒரு லைக் செய்த அற்புதம் இன்று நான் ஹெர் ஸ்டோரீஸில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒரு பாராட்டு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

ஒருவரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதை ஊக்குவிப்பது மிக முக்கியம்.

லைக்குகள்தான் நம் இருப்பின் சாராம்சம். ஒவ்வொரு லைக்கும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கிடைக்கும் சின்னச் சின்ன வெகுமதி.

வெகுமதி இல்லாத வாழ்க்கை வெறும் வெற்று வாழ்க்கையாக மறைந்து போகும்.

உங்கள் மனைவி, தான் யூடியூபைப் பார்த்துப் புதிதாக முயற்சி செய்த உணவை நீங்கள் ருசித்துப் பார்க்க ஆவலுடன் வீட்டில் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். உங்கள் மூன்று வயது செல்ல மகள், தான் சுவரில் வரைந்த முதல் கிறுக்கல் ஓவியத்தை உங்களிடம் காட்ட உங்கள் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள். உங்கள் எழுபது வயது அப்பா, இரவும் பகலும் உட்கார்ந்து தானே பழுதுபார்த்த பழைய ரேடியோ பெட்டியோடு ஆவலுடன் உட்கார்ந்திருக்கிறார். உங்கள் கார் டிரைவர் நேர்த்தியாகச் சுத்தம் செய்த உங்கள் காரின் முன் நின்று கதவைத் திறந்து வைத்தபடியே உங்களின் வருகைக்கு காத்திருக்கிறார்.

அவர்கள் அனைவரும் காத்திருப்பது உங்களின் ஒரே ஒரு லைக்குக்காக!

நேரம் தாமதிக்காமல் உடனே லைக் செய்துவிடுங்கள்! செய்யாவிடில் இந்த வாழ்க்கையின் இது போன்ற அற்புதமான பதிவுகள், நாம் தினம் தினம் நேரத்தை விரயமாக்கும் எண்ணற்ற அற்பமான பதிவுகளுக்கு இடையில் புலப்படாமல் மறைந்து போய்விடும்.

அப்படியே எனக்கும் ஒரு லைக்!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.