கண்ணாடி முன் முழு அலங்காரத்தில் நின்ற மீனாவின் முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. உண்மையில் அவள் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்று அவளால் சொல்ல முடியவில்லை.

இல்லை சொல்ல முடியும்.

எதிர்பாராத விதமாக அவள் ஆசை நிறைவேறியதுதான். சிறுவயது முதலே நெருங்கிய தோழிகளான அவள் அம்மாவும் அத்தையும் தங்களின் நட்பும் விட்டு போய்விடக் கூடாதென்று பிள்ளைகளையும் கட்டி வைத்துவிட வேண்டும் என்று ஆசைப் பட்டார்களாம்.

ஒரே பந்தலில்  அவர்கள் இருவர் கல்யாணமும் வெகு விமரிசையாக நடந்ததாம். ஆனால் வாய்ச் சொல்லோ,ஊர் கண்ணோ, எது பட்டதோ, அவள் அத்தைக்குக் குழந்தை பிறந்து நான்கு வருடங்கள் கடந்த பின்னர், கோயில் கோயிலாக வேண்டிய பின்தான் அவள் பிறந்தாளாம்.

அவள் பிறந்த போது முதல் சீர் எடுத்து வந்து , ‘எம் மருமக புறந்துட்டடா . டேய் கார்த்தி, வா டா வந்து பாரு, உன் வருங்காலப் பொண்டாட்டிய ‘ என்று அவர்கள் திட்டத்தைச் செயல்படுத்த அன்றிலிருந்தே தொடங்கிவிட்டார்கள்.

அப்படிச் சொல்லிச் சொல்லி வளரத்ததாலோ என்னவோ, சிறுவயது முதலே அவனைப் பாரத்தாலே அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு. அவன் தம்பியிடம் சகஜமாகப் பேசுமளவுக்கு அவனிடம் எப்போதுமே பேச முடியாமல் கூச்சம் தலைதூக்கி வார்த்தைகள் வெளியே வராது.

விடுமுறைக்குப் போகும்போது அவன் அவளுக்குப் பிடித்த கிரிச்சா முட்டாய், சௌவுமிட்டாய் வாட்ச் என்று வாங்கி வந்து தரும் போதெல்லாம் இளையவன்,

“என்ன அண்ணியாரே, ஸ்பெஷல் கவனிப்பு நடக்குது போலயே, நடக்கட்டும் நடக்கட்டும்” என்று வயதுக்கு மீறிய கிண்டலடிக்கும் சமயங்களில் கூட அவளால் ஒன்றும் சொல்ல முடிந்ததில்லை. அம்மாவின் இறப்புக்கு பின்னும்கூட அவள் வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு நல்ல விஷயம் பாளையங்கோட்டையில் அத்தை வீட்டில் அவள் கழித்த விடுமுறை நாட்கள் தான்.

ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டது, காலம்.

அவள் பெரியவளானதும்,’ரண்டு வயசுப் பசங்க இருக்குற வீட்டுல போய் புள்ள தங்குறது சரிவராது’ என்று அத்தை எவ்வளவோ பேசிப் பார்த்தும் மறுத்துவிட்டார் சித்தி . அவர்கள் இருவருக்கிடையே இதனால்  அடிதடி சண்டை ஒன்றுதான் நிகழவில்லை.

“நேத்து வந்தவ நீ, எங்க புனிதா பொண்ண நான் கூட்டிட்டுப் போறதுக்கு யார கேக்கணும்?” என்று அத்தை ஒருபுறம் வரிந்து கட்டிக் கொண்டு நிற்க,

“என்ன கேக்கணும்? நாளைக்கே ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சினனா ஊருக்கு நான்தானே பதில் சொல்லணும்” என்று சித்தி மறுபுறம் மல்லுக்கட்ட என்று இறுதியில் அப்பாவிடம் விஷயம் சென்று சித்தியின் கட்சி ஜெயித்து, ஒருவிதத்தில் இரு குடும்பத்துக்கு இடையிலும்  விரிசலே வந்துவிட்டது.

பின் தாத்தா இறந்த போது அவனைக் கண்டவளுக்குள் ஏற்பட்ட ஒருவித ரசாயன மாற்றத்தைப் பருவ வயதில் வந்த இனக்கவர்ச்சி என்று சொல்வதா இல்லை அவர்கள் அம்மாக்களின் திட்டமிட்ட சதி வென்றது என்று சொல்வதா என்று தெரியவில்லை.

ஆனால் அவளையும் மீறிக் கொண்டு விழிகள் அவனையே பின்தொடர்ந்தன. நிறையவே மாறியிருந்தான். அழகாகத் தெரிந்தான்.

அவன் சென்னையில் கல்லூரியில் படிக்கிறான் என்று தெரிந்து கொண்டாள் . அவனுக்குச் சிறுவயதில் பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்க வாய்ப்பில்லை என்று நிராசையடைந்தாள்.

ஆனால் கல்லூரி செல்லத் தொடங்கிய போது அவள் முகநூல் கணக்கைத் தொடங்கிய சில நாட்களிலேயே அவளுக்கு வந்த ‘கார்த்திகேயன் பாலசுப்பிரமணியமின் பிரண்ட் ரெக்வர்ஸ்ட் ‘ சித்திரையில் பெய்த கோடை மழை போல் இதமாக இருந்தது.

குறுஞ்செய்தியில் தொடங்கி அவ்வப்போது அழைப்பு என்று மாறிய சமயத்தில் அவனுக்கும் அவள் மீது சிறுவயது முதலே விருப்பம் என்று தெரிந்து ஆகாயத்தில் பறந்தாள். ஆனால் அதற்கு மேல் என்ன நடக்கப்போகிறது என்று புரியாமல் இருந்தவளுக்கு நடந்த எல்லாமே ஒரு கனவு போல்தான் இருந்தது. கையில் அவர்கள் மாற்றிக் கொண்ட மோதிரத்தில் கார்த்திக் மீனா என்று ஒரு கல்லுக்கு இரு புறத்திலும் அவர்கள் பெயர்கள் இருந்தன. அவனுடையதில் முதலில் அவள் பெயர்.

அவள் ஆச்சி சொல்வது போல்  அம்மா தான் இந்த விஷயத்தை நடத்த அருள் புரிந்திருப்பார் போல என்று நினைத்த போது அவள் விழிகள்  அறையில் இருந்த அம்மாவின் பழைய படத்தில் சென்று நிலைத்தன.

கண்ணாடியில் இருந்த தன்னையும் கறுப்புவெள்ளை படத்தில் சிரித்த அம்மாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டாள்.

வந்திருந்தவர்களில் ஒருவர் விடாமல் எல்லோரும் சொன்ன ஒரே விஷயம் ‘அப்படியே புனிதாவ பாத்த மாதிரியே இருக்கு’ என்றதுதான். ஆனால் அவளுக்கு அப்படித் தோன்றவில்லை. ஒருவேளை அவள் அம்மாவைப் பார்த்த சிறுவயது நினைவுகள் மறைந்து விட்டதா என்று நினைத்த போது ஓர் ஏக்கப் பெருமூச்சு வந்தது.

கைபேசி டவர் அறைக்குள் எடுக்காததால் அறையைச் சாத்திவிட்டு மாடி பால்கனியில் இருந்து முயற்சி செய்த போதும் கிடைக்கவில்லை.

கீழே சென்று பார்க்கலாமா என்று யோசித்தவள் எண்ணத்தைக் கலைத்த குரல் அவளுக்கு ஒரு வெட்கப் புன்னகையை வரவழைத்தது .

” மீனு…”

அவளை உணர்ந்தாவனாய் அவள் அருகில் வந்து சற்று இடைவெளி விட்டு நின்றவன் பார்வை அவளைப் போல்  மழையை ரசித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றான்.

அறைக்குள் போக எத்தனித்தவளின் மென்கரங்களை உரிமையாகப் பற்றியது அவன் கரங்கள்.

“போன்ல மட்டும்தான் பேசுவியா? நேர்ல பேச மாட்டியா?” என்றவன் குரல் மயிலிறகால் வருடியதைப் போல தீண்ட உடலும் மனமும் சிலிர்த்து அவளுக்கு. வார்த்தைகளின்றி தவித்தாள்.

அவள் மௌனத்தைத் தவறாக எடுத்துக் கொண்டவன் சட்டென்று கைகளை விட்டான். அவள் அனுமதியின்றி அவளைத் தீண்டியதை அவள் விரும்பவில்லை போல என்று பதறியவன், “சாரி மீனா, நான் உன் கைய  பிடிச்சது உனக்கு புடிக்கலன்னனு நினைக்கிறேன்” என்று மன்னிப்பு கேட்கவும் , அவன் சங்கடத்தை உணர்ந்து திரும்பியவள் பார்வை கனிந்திருந்தது‌. ஆனால் அவனுக்கோ தான் செய்த செயல் அவளிடம் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கியது என்று புரியாமல் பேசிக் கொண்டே போனான்.

“உனக்குப் பிடிக்காத எதையும் நான் எப்பவும் பண்ண மாட்டேன். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூடதான். இந்த ஒரு தடவ என்ன மன்னிச்சிடு ப்ளீஸ்” என்று அடுக்கிக் கொண்டே போனவனுக்கு எப்படித் தன் மனதைப் புரிய வைப்பது என்று புரியவில்லை.

மெல்ல அவன் தோளில் சாய்ந்தாள். அதைச் சற்றும் எதிர்பாராதவன் ஒரு நொடி ஸ்தம்பித்து பின் ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான்.

எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை பிறந்தது. அவன் இருக்கிறான் அவளுக்காக. அவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை அவனை இறுக்கப் பற்றிக் கொள்ளச் செய்தது.

இங்கு நடந்தவை எல்லாவற்றையும் சற்றுத் தொலைவில் மறைந்து நின்று இவ்வளவு நேரம் பார்த்தபடி நின்ற அந்த உருவத்தையோ  அது சத்தமில்லாமல் கீழே இறங்கிச் சென்றதையோ அவர்கள் பார்த்திருக்க நியாயமில்லைதான்.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.