மோசஸ் தாத்தாவின் வீட்டு மாமரத்தின் கிளையில் மழைக்கு ஒதுங்கிய ஒரு சிட்டுக்குருவி தன் சிறகுகளைச் சிலிர்த்ததும் மழை நீர் தெறித்தது.
“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே” என்கிற பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வந்தபோது, மேஜையில் இருந்த அவள் கல்லூரி ஆசிரியர் துர்கா தந்த பாரதியார் கவிதைப் புத்தகத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதைத் தன் கைப்பையில் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
இன்று ஒரு விதத்தில் அவளுக்கு விடுதலைதான். பல வருடங்களாகத் தன் எண்ணங்களுக்குள்ளும் பயங்களுக்குள்ளும் சிறை இருந்தவளுக்கு முதல் முறையாகத் தன் கூட்டை விட்டு சிறகு விரித்துப் பறக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் தான் நேசிக்கும் மனிதர்களையும் இந்த ஊரையும் பல கெட்ட நினைவுகளால் தனக்குச் சிறையாகிப் போயிருந்தாலும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்த போது வருத்தமாகத்தான் இருந்தது.
“ஈவிம்மா, இந்தக் காபியக் குடி. தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியான்னு ஒரு தடவை செக் பண்ணிக்க. பைபிள் ஜெபமாலைலாம் மறக்காம எடுத்து வச்சிக்க. தினமும் ப்ரே பண்ணணும் என்ன? நீ தங்கப் போற ஹாஸ்டல், வேல பாக்குற ஹாஸ்பிட்டல் எல்லாம் சேஃப்தான? நல்லா விசாரிச்சுகிட்டியா?”
‘இத முதல்லயே ஏன்மா என்கிட்டே கேக்காம விட்டே? இந்த இடம் உனக்கு சேஃபா இருக்கான்னு ஏன் அப்பவே விசாரிக்காம விட்டே? வேல வேலைன்னு என்னை ஏன் இந்த நரகத்துல தனியா விட்டுட்டுப் போனே? அப்பவே கேட்டிருந்தா என் வாழ்க்கை மாறியிருக்குமே! ஒருவேளை மனசு விட்டுப் பேசுனாலும் பேசியிருப்பேனே. காலத்துக்கும் இப்படி என் உணர்வுகள வெளிய சொல்லாத ஊமையா இருந்துருக்க மாட்டேனே! வாழ்க்கை மேலயும் மனுஷங்க மேலயும் உள்ள நம்பிக்கை இழந்து இப்படி மனசால தனிமரமா ஆயிருக்க மாட்டேனே. குறைஞ்ச பட்சம் நான் நானாவாவது இருந்துருப்பேனே!’ என்று கேட்க நினைத்ததை வழக்கம்போல் மென்று முழுங்கினாள்.
“அப்பா எங்கேம்மா? நீதான் சண்ட போட்டுட்டு வந்துட்டியாமே? எதுக்குச் சண்ட போட்ட? எனக்கு அப்பா வேணும்” என்று தன்னைப் பாதுகாக்கத் தன் தந்தை தங்களுடன் இல்லாததற்கு அம்மாதான் காரணம் என்று எவ்வளவு சண்டையிட்டிருப்பாள்?
அப்போது அவள் அறிந்திருக்கவில்லை முதல் பெண் பிள்ளையாக அவள் பிறந்த காரணத்தினால்தான் கவலையில் குடிகாரனாக அவள் அப்பா மாறினார் என்கிற அரைவேக்காட்டுப் பொய்யைப் பத்து வயதில் கூட அவள் நம்பியிருக்க வாய்ப்புகள் கம்மிதான்.
ஒருநாள் அப்பாவின் இன்னொரு மனைவி இரண்டு மகள்களுக்கு ஆதரவு தேடி நாசரேத்தில் இருந்த அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, இனியும் அங்கு இருப்பதில்லை என்று முடிவு செய்து குரும்பூரில் குடியேறிய போது எதையும் புரிந்துகொள்ளும் வயதில் அவளோ அவள் தம்பியோ இல்லை.
“ஆம்பளன்னா அப்படி இப்படித்தான் இருப்பான். பொம்பளதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்.”
“குடிக்கிறது, அடிக்கிறது இல்லாம எந்தக் குடும்பம் இருக்கு? இப்படி அத்துக்கிட்டு வந்து ரெண்டு பிள்ளையளோட கஷ்டப்படணும்னு என்ன தலையெழுத்தா இவளுக்கு?”
“ஆம்பள வாரிசு வேணும்னு ஆசையில மனுசன் இப்படிப் பண்ணிட்டான். அந்த வாரிசையே கண்ணுல காட்டாம கூட்டியாந்துட்டாளே எப்படியாப்பட்ட கல் நெஞ்சக்காரியா இருந்துருப்பா!”
“புருஷன் இல்லாம புள்ளைங்க வச்சிட்டுத் தனியா கஷ்டப்படுவேல்லே பாவம்?” என்று தேனாகப் பேசிய வார்த்தைகள் தோளைத் தடவவும், தவறான எண்ணத்தோடு ஆதரவுக் கரம் நீட்டவும்தான் தயராக இருந்ததே ஒழிய உண்மையில் கரிசனம் காட்டியவர்கள் வெகு சிலரே.
குழந்தையே விட்டு வைக்காத இந்தச் சமூகம், கணவன் இல்லாமல் தனித்து வாழ்ந்த முப்பது வயது பெண்ணை என்னவெல்லாம் செய்யத் துடித்திருக்கும்? எதையெல்லாம் சொல்லாமல் அவள் அம்மா மறைத்துத் துடித்திருப்பாளோ?
தன் சுயமரியாதைக்காகக் கணவன் என்கிற உறவைத் தூக்கி எறிந்துவிட்டு, இருவீட்டார் ஆதரவுமின்றி தனி மனுசியாகத் தன் இரண்டு குழந்தைகளின் நல்ல எதிர்காலம் மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று இரவு பகல் பாராமல் உழைத்து, ஊரார் வாயில் விழுந்துவிடக் கூடாது என்று நெருப்பின் மேல் நடப்பது போல் ஒவ்வொரு நாளையும் கடந்த அவளை அத்தனை எளிதில் நிம்மதியாக இந்தச் சமூகம் வாழ விட்டிருக்குமா என்ன?
அவள் தாத்தா வயதிருக்கும் மனிதர். ‘இன்னும் எத்தன குடியக் கெடுக்க இங்க வந்துருக்காளோ! பாக்க வேற ஆளு நல்லா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கா’ என்று அவள் அம்மாவைப் பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் நாக்கு மேல் பல் போட்டுப் பேசிய சமயத்தில் எல்லார் வாயையும் அடைத்து அவளுக்கு ஆதரவாகப் பேசி, தன் வீட்டு மாடியில் இருந்த ஒற்றையறையை வாடகைக்குத் தந்ததோடு, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசுப் பள்ளியில் சத்துணவு டீச்சர் வேலை வாங்கித் தந்த ஆபத்பாந்தவன் அவர்.
இன்று வரை தன் முகத்தை ஏறிட்டுக்கூடப் பார்க்காத அந்த மாமனிதரை அவரால் எப்படிச் சந்தேகக் கண்ணோடு பார்த்திருக்க முடியும்? வெளி உலகம் தன் மகளுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்று அவரையும், நோய்வாய்ப்பட்ட அவர் மனைவியும் நம்பி பெண்பிள்ளையை விட்டுவிட்டுச் சென்றவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் தன் மகளுக்குச் சிறுவயதில் அவர் மூலம் நிகழ்ந்த கொடுமைகளை.
அவள் பாதுகாப்பு வேலியென்று நினைத்த மனிதரே தன் இளம்தளிரை நசுக்கத் துடித்திருப்பார் என்று யோசித்திருக்க முடியாததில் எந்த விதத்தில் குற்றம் சொல்ல முடியும்?
‘இத உங்கம்மாட்ட சொன்னா, அவளுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி நடுத்தெருவுல நிறுத்திருவேன் புரிஞ்சுதா?’ என்று மிரட்டியவாறே அரும்பாத அவள் முலையை கசக்கின அந்த மிருகத்தின் வக்கிரம் நிறைந்த இரக்கமற்ற கைகள்.
“நான் பேசுறது உன் காதுல விழுதா இல்லையா ? அந்த காபி டம்ளர்ல அப்படி என்னத்த மணிக்கணக்கா பாத்துட்டு இருக்கியோ?” என்று தன் இருண்ட நாட்களுக்குள் மீண்டும் மூழ்கப் போனவளை அவள் அம்மாவின் குரல் நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்தது.
“எப்படித்தான் ஹாஸ்டல்ல வேளைக்குச் சாப்பிட்டு உடம்பப் பாத்துக்கப் போறியோன்னு கவலையா இருக்கு. இங்க இருக்க ஆஸ்பத்திரியில இல்லாத வேலையா மெட்ராசுல கொட்டிக் கெடக்கு. இதுல வீட்ட காலி பண்ணிட்டு குடும்பத்தோட குடியேறணுமாம்ல. பெரிய மனுசி ஆர்டர் போட்டுட்டாங்க! தம்பிகாரனுக்கு வேலையும் பாத்து, வீடும் பாத்து கூப்பிடுவாளாம். நான் எல்லாத்தையும் உட்டுட்டு போணுமாம்” என்ற போது அதில் இளையோடிய கர்வம் கலந்த மகிழ்ச்சி அவளுக்கு மட்டுமே புரிந்தது.
“ஏன். போனா என்னவாம். இன்னும் எத்தன காலத்துக்குத்தான் இந்த வரப்பட்டிக்காட்டுலயே குப்ப கொட்டுறதாம்? வெளியூரையும் எப்பதான் பாப்பியாம்?”
என்று வழக்கம் போல் அவள் தம்பி ஜான் அவளுக்குப் பரிந்து பேசிவிட்டு, “நீ வீடு பாருக்கா. சட்டுன்னு படிப்ப முடிச்சிட்டு நான் அம்மய கூட்டீட்டு வாரேன். அப்படியே அங்க பெரிய கார் கம்பெனில மெக்கானிக்காயி. சொந்தமா வீடு காருல்லாம் வாங்கி பெரிய ஆளாயிரணும். அதான் நர்சிங் படிச்சவங்களுக்கெல்லாம் வெளிநாட்டுல ஈசியா வேல கெடச்சிருமாமே. அதையும் கையோட டிரை பண்ணுக்கா!”
“அடிங்க எடுபட்ட பயலே. புள்ளய வெளியூருக்கு அனுப்பவே பயந்துட்டு கெடக்கேன். இதுல எம்புள்ளய வெளிநாட்டு அனுப்ப பவுசா திட்டம் தீட்டுறியாக்கும்.”
“தெரியாத ஊரு. பாத்துப் பத்திரம் என்ன? எங்கையும் தனியா போவாத. துணைக்குப் பிள்ளைங்கள கூப்பிட்டுக்க என்ன?”
பல நேரம் குழந்தைகளுக்கு நடக்கும் அத்துமீறல்கள் முன்பின் தெரியாத அந்நியர்களைவிட, நன்கு தெரிந்த நம்பகமான பெரிய மனிதர்களால்தான் நடக்கின்றன.
“சுவட்டர் எடுத்து பெட்டி மேல வச்சிருக்கேன். போட்டுக்கையேன். அப்புறம் எதுவும் உதவி வேணும்னா, நம்ம தவமணி மாமாவோட பொண்ணு காத்தரின் நுங்கம்பாக்கத்துலதான் தங்கி வேல பாக்குறாளாம். அவட்ட கேட்டுக்க. அவ ஹாஸ்ட்டல் அட்ரசும், போன் நம்பரும் உனக்கு வாட்சப்புல அனுப்பிருக்கேன். அவகிட்ட நான் பேசிட்டேன் . நீயும் ஒரு தடவ நேரம் கிடைக்கிறப்ப சம்பிரதாயத்துக்கு பேசிக்க. என்ன?”
எட்டு மணிக்கு ஏற வேண்டிய ரயிலுக்கு ஆறரை மணிக்கே இட்லி கட்டிக் கொண்டிருந்தார். எப்படியும் வழக்கமாகத் தான் சாப்பிடுவதைக் காட்டிலும் அதில் அதிகமாகத்தான் இருக்கும் என்று பார்க்காமலே அவளுக்குத் தெரியும். அவள் அம்மா மட்டுமல்ல எல்லா அம்மாக்களும் அப்படித்தானே?
சில நேரம் விடுதலை என்பது நம் எண்ணங்களிடமிருந்து கிடைப்பதுதான். கொஞ்சம் கொஞ்சமாக என்றாலும் காலம் காயங்களை ஆற்றும் என்பது உண்மைதான்.
ஆனால் சில நேரம் காயம் ஆறும் வழியில் எதிர்பாராத சில வேதனைகளையும் கடந்துதான் ஆக வேண்டும் என்று வாழ்க்கை காட்டுகிறது. அவளுக்கும் காட்டியது.
(தொடரும்)
படைப்பாளர்:
பொ.அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.