“ம்மா, என் ஊதா கலர் பூப் போட்ட குர்தாவ பாத்தியளா?” என்று கேட்டவாறே  ஒவ்வொரு அறையாக அம்மாவைத் தேடி அலைந்தாள் .

மழை பெய்து கொண்டிருந்ததால் வழக்கமாக அவள் அறைக்கு வெளியே இருக்கும் மாடிக் கைப்பிடிக்குப் பதில் காலியாக இருந்த பக்கத்து அறையில் மின்விசிறிக்கு அடியில்தான் துணிகளைக் காய வைத்திருந்தாள். அவை நேர்த்தியாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. அவள் தேடித் திரியும் அந்த  ஒன்றைத் தவிர.

”கண்ணு முன்னாடி இருக்கறத எடுத்துத் தர பத்து மைலுக்கு அங்கன இருந்து நா வரணும் போல.”

கண்டுபிடிக்க முடியாத அனைத்துப் பொருட்களும், அம்மா வந்ததும் கண்முன் தோன்றும் மாயம்தான் என்ன என்று இதுவரை அவளோ அவள் உடன்பிறந்தவர்களோ கண்டுபிடிக்க முடியவில்லை.

அரைமணி நேரமாகச் சல்லடை போட்டு தேடியாகிவிட்டது. ஆனால், குர்தா கிடைத்த பாடில்லை.

தொண்ணூறு வயதிலும் கண்ணாடியின் துணையில்லாமல் ஜன்னல் வழியாக வெளியிலிருந்து வந்த மங்கலான வெளிச்சத்தில் அன்றைய செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்த ஆச்சியிடம் கேட்கலாம் என்று வாய் வரை வந்த, “ஆச்சி அம்மாவ பாத்தீங்களா?”

என்கிற பாலீஷான வார்த்தைகள் அப்படியே உறைந்தன. பள்ளி காலத்தில், ‘அது என்ன அவிய இவியன்னு பேசுற?’ என்று கிண்டலடித்த‌ தோழிகளும். கல்லுரியில் அவள் ஊர் எது என்று கேள்விப்பட்டதும், ‘உங்க ஊர்லல்லாம் எல்லார் வீட்டுலயும் அருவா, கத்தி, கம்புல்லாம் வச்சிருப்பாங்களாமே அப்படியா? பஞ்சாயத்து அடிதடி வெட்டுக் குத்து எல்லாம் சகஜமா நடக்குமாமே ? நீ பாத்துருக்கியா?  மாருதி ஆம்னி  காரு தான உங்க வீட்டுல வச்சிருப்பீங்க ? எத்தன படத்துல பாத்துருக்கோம்!’ என்று படங்களின் தவறான சித்தரிப்புகளால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டம் பரவலாக உள்ளது என்று படிப்புக்காகவும் வேலைக்காகவும் வெளியூர் சென்ற போதுதான் அறிந்துகொண்டாள்.

அவர்கள் சொன்னதில் அவளறிந்த ஒரே ஒரு உண்மை.  அவர்கள் வீட்டில் முதலில் இருந்த சிவப்பு ஆம்னி வண்டிதான். ஆனால் அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை. தன்னை காட்டிக் கொடுக்கும் ஊர் வாடையை வெளியில் உள்ளவர்களிடம் பேசும் போது கஷ்டப்பட்டு தவிர்த்தாள்.

‘நீங்க திருநவேலி மாவட்டமா?’ என்று ஏதோ ஒரு வார்த்தைப் பிரயோகத்தில் சென்னையில் வசித்த சமயங்களில் யாரேனும் ஒரு கடைக்கார அண்ணாச்சி கண்டுபிடித்துக் கேட்கும் போது அப்படி ஒரு மகிழ்ச்சி தோன்றும்.

‘நம்மெல்லாம் ஒரே ஊருல்லா! எனக்கு மெஞ்ஞானபுரம், நம்ம வீட்டம்மாவுக்குப் புதுக்குடி. உங்க பரமங்குறிச்சில தம்பி டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்து நடுச்சாமம் வரைக்கும் காத்து கிடப்போம்லா. இங்குன வந்து என்ன ஒரு பத்துப் பதினஞ்சு வருஷம் ஆயிப்போச்சி. சொக்காரன் பங்காளில்லாம் இன்னும் ஊர்லதான் கெடக்கானுவ. கோயில் கொட , நல்லது கெட்டதுக்கு மட்டுந்தான்னு இப்ப போக்குவரத்து . அம்ம இன்னும் அங்கதான் கெடக்கா. வயக் காட்டையும் ஆடு மாட்டையும் வுட்டுட்டு வர மாட்டேன்னுட்டால்லா. சரி கெடன்னு உட்டாச்சு. பெருசுவள அது போக்குல வுட்டுரணும். சரி தானடே .‌ என்ன நான் சொல்றது? ‘

இப்படி நினைவுகளில் மூழ்கித் தன் நரையோடிய மீசையை நீவியவாறு அவர் சொல்லி சிரிக்கும் போது  முன்பின் அறிந்திறாத அவரிடம் கூட ஏதோ ஒரு பந்தம் தோன்றிவிடுகிறது.

மண் வாசனை! 

ஒரு காலத்தில் அவமானமாகத் தோன்றிய தன் வட்டார வழக்குதான் தன் அடையாளம் என்று கர்வத்துடன் ஏற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்பது உண்மைதான் என்று நினைத்தவாறு, “ஏ ஆச்சியோ, அம்மய பாத்தியளா?” என்று படி இறங்கி வந்து அறையின் டியூப்லைட்டை போட்டவாறு, அவர் அமர்ந்திருந்த நார் கட்டிலில் உக்காந்து  அவரை வழக்கம் போல் கட்டிக் கொண்டவாறே கேட்டாள்.

“யாரு இவ பட்ட பகல்லையே விளக்கப் போடுறவ. உங்கப்பன் ஓடியாடி கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிற காசெல்லாம் கரியாப் போவவா? அமத்து அத.”

“க்கூம் . இந்த ஒரு லைட்டு போடுறதால உங்க மவன் சொத்து ஒண்ணும் அழிஞ்சிறாது. இருட்டுல வாசிச்சா உங்க கண்ணுதான் ஃப்யூஸ் போயிர போவுது.”

“எனக்கு வயசு நூறாவப் போவுது, எமராசா என்னய இன்னைக்குக் கொண்டு போவப் போறானோ நாளைக்கோன்னு காத்துக்கிட்டு கெடக்கேன். இதுல இனிதான் என் கண்ணு கொள்ள போவப் போவுதாக்கும். போவியா.”

அந்த வார்த்தைகள் உண்மைதாம். அவருடன் வழக்கமாக வாயாடும் அடுத்த வீட்டு ரெங்கம்மாள் ஆச்சி, நடுத்தெருவில் அவர்கள் சிறு வயதில் திண்பண்டம் வாங்கித் திண்ணும் பெட்டிக்கடை வைத்திருந்த சொர்ணாச்சி,

அதுக்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த பாம்படம் போட்ட சுளுக்கு எடுக்கும் சித்திரக்கனி ஆச்சி எல்லாரும் ஒவ்வொருவராக எப்போதோ போய்ச் சேர்ந்துவிட்டார்கள். ஆனால், அவள் ஆச்சிக்கோ சிறுவயதில் வயக்காட்டில் உழைத்துப் புடம் போட்ட இரும்பு உடம்பு. ஐந்து வருடத்திற்கு முன்பு வரை பண்ணை வீட்டில் இருந்த நிலத்தில் பனங்கிழங்கு , நிலக்கடலைப் பயிரிடுவது, ஆடு மாடுகளுக்குத் தீவனம் போட்டு வேளாவேளைக்குத் தண்ணீர் காட்டுவது, பால் கரக்க வரும் பால்கார முத்தண்ணன் வேலையைச் சரியாகப் பாக்கிறாரா என்று மேற்பார்வை பார்ப்பதெல்லாம் செய்து கொண்டு தான் இருந்தார். அங்கு நிற்கும் தென்னை மரங்களும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மாமரம், கொய்யா மரம் எல்லாம் அவர் நட்டதுதான்.

இப்போதும் சமையலுக்கு அம்மாவுக்குச் சிறு உதவிகள் செய்வதோடு, அம்மா துவைத்த துணிகளை இஸ்திரி போட்டது மாதிரி சுருக்கம் இல்லாமல் மடிப்பது, பின்வளவைச் சுத்தம் செய்வது என்று தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்து, தன்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி தான் உடுக்கும் வெள்ளைத் துணிகளைத் தானே துவைத்து, நீலமிட்டு  உடுத்தும் நேர்த்தியை வயதான எல்லாரிடமும்  காண முடியாது.

”எனக்கு ஏலுவ இருக்குந்தட்டி என் துணிய நானே துவச்சிக்கிறேன். நான் கிடைல உழுற அன்னைக்கு உங்கம்ம ஊத்துர கஞ்சிய குடிச்சிக்கிட வேண்டியதுதான். ஆனா அப்படில்லாம் கெடந்து சீரழியாம என்னய கைகால் கெதியா இருக்கயிலயே நல்லபடியா எடுத்துக்கம்மான்னு தான் நம்ம பிரம்மசத்திட்ட தினம் வேண்டிக்கிறேன்.”

”எமன் வரும்போது நீ ஒரு எடத்துல இருந்தாதானே. சுத்திகிட்டே இருந்தா. நாங்களும் ஒவ்வொரு வருஷமும் தாத்தாவுக்குக் கும்புடும் போதும்கூட ஒரு படையல சேத்து போட்டுறலாம்னுதான் பாக்குறோம். நீ ஒத்துழைக்க மாட்டேங்குறியே கிழவி.”

“என்ன? வச்ச கண்ணு வாங்காம பாக்குற ? நம்ப பாரீனுக்கு போற நேரமா பாத்து கிழவி கம்பிய நீட்டீட்டா , லீவு போட்டுட்டு ஓடியாரணுமேன்னு யோசிக்கிறியாக்கும்? அதுலாம் உன் கல்யாணம் முடிஞ்சு, நீ குடியும் குடித்தனமுமா இருக்கத கண்குளிரப் பாத்துட்டு, என் கொள்ளுப்பேரங் கையால நல்ல தண்ணி வாங்கிக் குடிச்சிட்டுதான் இந்த கட்ட வேகும்.”

அப்போது அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த அரவிந்தன், “ஆக மொத்தத்துல இந்த வருஷமும் நீ டிக்கெட் வாங்கப் போறதில்ல. அப்படிதான? எத்தன தடவ லீவு லெட்டர்ல உன்னய போட்டுத் தள்ளுனாலும் இன்னும் கெழங்காட்டம் அசையாம சுத்துறியே கிழவி!” என்றான்.

“ஏண்டா சோம்பேறிப்பயலே. உங்கப்பன் நிதம் கோழி கூவு முன்னாடி எந்திரிச்சி , தோட்டந் துரவ ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்து கடையில் போய் உக்காருறான். நடு மதியத்துல எந்திரிச்சு, நாரவாயி காப்பிய குடுச்சின்னு  செல்லங் குடுத்து கெடுத்து வச்சிருக்கா உங்கம்ம. அவளச் சொல்லணும். “

“என்ன? காலைலயே என் தல உருளுது” என்று கேட்டபடியே நுழைந்த அம்மா, திருநீற்றை மாமியாரிடம் காட்டினார்.

“எப்பா முருகய்யா, உசுறு கூட்டுல கெடக்கிற வர என்னய கட்டுன மவராசன் வருசந் தவறாம தைப்பூசத்துக்கு நடையா நடந்து காவடி எடுத்து உன் கோட்டைக்கு வந்து நேமிசம் செலுத்தி நீயே கதின்னு உன் கால புடிச்சிக்கிட்டு கெடந்தாரே, அவரு ரத்தம் உன் சன்னதில இருந்து கடல் கடந்து தூர தேசத்துக்குக் கெளம்புது . அந்தப் புள்ளைக்கு நீதான்யா தொண. உன்கிட்ட தவுட்டுக்கு வாங்கின புள்ளய்யா. உம் புள்ளய்யா அது . அதுக்கு ஒரு தீங்கும் வராம நீதான்யா உன் வேல எடுத்துகிட்டு அது கூட காவலுக்கு போவணும்” என்று அவள் தலையில் திருநீறு போட்டு , இரு கைகளிலும் திருநீர் தேய்த்து நெற்றியிலும் பட்டையாக அடித்துவிட்டார் ஆச்சி.

“கிழவி, அவரு வராரோ இல்லயோ. நீ இவள திருநீத்துல முக்கி எடுத்துராத. அப்புறம் அடையாளம் தெரியாம பிளைட்டுல ஏத்தாம போவப் போறாங்க!” என்றதும் இந்த கிண்டல் கேலிகளை எல்லாம் மீண்டும் பார்க்க இரண்டு வருடங்கள் ஆகிவிடும் என்று நினைத்த போது அவளையும் அறியாமல் கண்கள் கலங்கின.

அவள் மன ஓட்டத்தைச் சொல்லாமலே உணர்ந்த  அம்மாவின் மஞ்சள் பூசிய  முகமும் சற்று வாடியது.

“இருங்கத்த டிபன் எடுத்துட்டு வாரேன். நீயும் வா” என்று அவளைப் பார்த்தும் பாராமல் சமையலறை நோக்கிச் சென்றார்.

“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச்  சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .

தன் கண் கலங்கியதுக்கே துடிக்கும் உறவுகளை விட்டுவிட்டு எங்கோ கண்காணாத தூர தேசத்துக்குப் போகிறோமே என்று வருந்தியவளுக்கு அப்போது தெரியாது, இன்னும் சில மணி நேரத்தில் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கலங்கடிக்கப் போகிறோம் என்று.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.