“தம்பி, நான் ஒண்ணு சொன்னா கேப்பியா?” என்று உடன் நடந்து வந்த மகனிடம் திடீரென கேட்டவர் முகத்தை அதிர்ச்சியோடு பார்த்தான் அன்பு.

தான் அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே வந்ததைக் கண்டு கொண்டாரோ என்று ஒரு நொடி படபடத்தான்.

அவன் பதிலுக்குக் காத்திராமல், “அபி தான் என் ரெண்டாவது மருமகன்னு நான் முடிவு பண்ணிட்டேன்” என்ற அம்மாவின் தீர்மானம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், ஏற்கெனவே மறுத்து விட்டவளிடம் போய்ப் பேசுவது சரியாகுமா என்று யோசித்தான்.

“வேலைக்காகத்தானே கல்யாணம் வேண்டாம்னு சொல்லியிருக்கா? உன் ஸ்டார்ட் அப் நல்லா போற வரைக்கும் கல்யாணம் வேணாம்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சவன் தானே நீயும். அப்புறம் என் மருமகள பாத்து பல்டி அடிச்சிட்டே” என்று பேசியவரை மெதுவாகப் பேசுமாறு சைகை காட்டிவிட்டு, எங்கே அவள் காதுகளில் விழுந்து விட்டதோ என்று பதற்றத்துடன்  திரும்பிப் பார்த்தான். அவள் நிறையவே இடைவெளி விட்டு நடப்பது கண்டு சற்று அமைதியானான்.

“அவ அங்க வேலய முடிச்சிட்டு வரவும், உன் கம்பெனி நல்லா வரவும் சரியாதான இருக்கும். ஒரு வருஷமா காத்துக் கெடந்தவன், இன்னும் இரண்டு வர்ஷம் காத்துக்கிட்டு இருக்க மாட்டியா என்ன?” என்று மகனின் குட்டை உடைத்து அவர் சிரித்தபோது, அவன் எதிர்பார்த்தது போல் அண்ணனோ அண்ணியோ அவன் விஷயத்தை அம்மா காதில் போட்டுவிட்டதைப் புரிந்து கொண்டான்.

அண்ணியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் . இருவரும்தான் அடிக்கடி குசுகுசு வென்று பேசிக் கொள்வார்கள்.

“அது அப்படி இல்லம்மா. வெளிநாடு போற எல்லாருக்கும் திரும்பி இங்கே வர மனசு இருக்கும்னு சொல்ல முடியாது.”

“அவ மனச இங்க இருக்க வைக்கிறது உன் பொறுப்பு. அவங்க வீட்டுல பேசுறத நான் பாத்துக்குறேன்” என்று அர்த்தமான ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்ற அம்மாவிடம் பதில் சொல்ல முடியாமல் அவன் திணறிக் கொண்டிருக்கவும், அபி இருந்த பெட்டிக்கு வெளியே அவர்கள் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவன் வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவளே அம்மாவின் கையைப் பிடித்து பெட்டிக்குள் ஏற்றி விட்டுவிட்டு வந்தவள் அவனைக் கண்டு, “இங்க ஆட்களோட இருக்குறது பரவால்லையேன்னுதான்”

என்று அவள் முடிக்காத வார்த்தைகளைப் புரிந்து கொண்டவன் நன்றியுணர்வுடன் பார்த்துவிட்டு, ஒன்றாக நடந்து சென்றார்கள்.

அவர்களை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜோதீஸ்வரி அம்மாவின் மனம் குளிர்ந்தது.

‘கண்ணியம்மா, என் மனசுல இருந்த பாரத்த  புரிஞ்சுகிட்டு அதுக்கு ஒரு வழி காட்டிட்டியே ‘ என்று மனதார தன் குலதெய்வத்துக்கு நன்றி சொன்னார்.

இருவரின் ஜோடிப் பொருத்தம் அமோகமா இருந்தது. அவனைவிட அவள் சற்று உயரம் கம்மி. அந்த இடைவெளியும் பொருத்தமாகவே இருந்தது.

வளரத்திக்கேற்ற உடம்பாக இருந்த இருவருக்கும் வயது முப்பதுகளில் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். படிப்பு , குணம், குடும்பம் என்று எல்லா விதத்திலும் நல்ல அமைப்பான சம்பந்தம்.

அது எல்லாவற்றையும் தாண்டி மகன் மனம் அவளிடம் சென்றுவிட்டதை அவன் கண்களே காட்டிக் கொடுக்கின்றன. கண்ணுக்கு லட்சணமான பெண். எத்தனை கரிசனம் நிறைந்தவளாக இருக்கிறாள்!  

கனிவான குணம். பிறருக்குத் தயங்காமல் உதவும் மனம்.

வர்தா புயல் வந்து வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழல். கீழ்த் தளம் முழுவதும் தண்ணீரில் நிறைந்துவிட மேல் தளத்தில் தனியாக மாட்டிக் கொண்டார்.

கணவர் ஆபீசில் மாட்டிக் கொள்ள, பெரியவன் நிலவுச்செழியனும் மூத்த மருமகள் ஶ்ரீதேவியும் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூர் சென்றிருக்க, சின்னவனும் வெளிநாட்டில்.

இரண்டு நாட்களாக யாருமற்று தனியாக உணவின்றி தவிக்க, படகுகளில் வந்து உதவிய குழுவில் அவளும் இருந்தாள்.

ஏதோ கடனே என்று சாப்பிட கொண்டுவந்து  கொடுத்துவிட்டுப் போகாமல்  வேற ஏதும் வேண்டுமா, மருந்து எதுவும் சாப்பிடுவாரா? அவை இருக்கிறதா என்று கேட்டவாறே மருத்துவர்கள் குழு அவரைப் பரிசோதித்த போது அருகில் நின்று உதவினாள்.

தனியாக எப்படிச் சமாளித்தார் என்றெல்லாம்  உண்மையான அக்கறையுடன் அவள் கேட்ட போது  மீறிக் கொண்டு வந்து அழுகையை உணர்ந்தவள் வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து எவ்வளவு நேரம் கைகளையே பற்றிக் கொண்டு இருந்தது நேற்று நடந்தது போல் நினைவில் இருக்கிறது.

அவளை எப்படி மறப்பார்? அவளோ அதே போல் எத்தனை பேரைத் தேற்றி ஆறுதல் கூறினாளோ?

பதற்றத்தில் அவள் பெயரைக் கூட கேட்காமல் விட்டு விட்டோமே என்று எவ்வளவோ தடவை தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். அந்தப் பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று எத்தனை முறை மனதார வேண்டியிருக்கிறார்.

பத்து வருடங்களுக்கு முன் பார்த்தவளை மீண்டும் கண் முன்னே கெண்டு நிறுத்திய தெய்வம், மகனின் மனம் நிறைந்தவளையே மருமகளாகக் கொண்டுவர வழி செய்யும் என்று நம்பினார்.

”நீதான் என் முருகன பாத்தா தான் ஆச்சுன்னு ஈட்னு வந்த‌. இப்பப் பாரு புள்ளிக்கு பரிச்சக் கீது, அதுக்குள்ள  மெட்ராசுக்குப் போவோமோ இல்லியோன்னு தெரிலயே” என்று குரலை உயர்த்திய கணவனுக்கு, “ஐய, சும்மா என்னான்ட சௌண்டு குடுக்குற வேலல்லாம் வச்சினுக்காத.‌ நா எங்க கண்டேன், இப்புடி வண்டி பேஜாரா பூவும்னு. உன்கூடதான நானும் குந்தினுக்கீறேன். என் காதுல ஆரோ வந்து சொன்ன கணக்கா என்னான்ட கேட்ணுக்கீறியே. போய் டேஷனுல கேட்னு வாரது தான” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த ஓசை அடுத்த பக்கத்திலிருந்து கேட்டது.

“இன்னாதான் ஆவப் போதோ தெரிலயே. அல்லாரும் இங்கனயும் அங்கனயும் போறாங்களே ஒழிய, எதும் சொல்ல மாட்டீங்கறாங்களே. “

“எல்லாம் சரியாயிரும்மா. நம்பிக்கையோட இருப்போம்” என்று புதிதாக வந்திருந்த பெண்மணி சொல்லவும்.

“நீங்க அபியக்காவுக்கு சொந்தமாம்மா?”

என்றாள் இசக்கி. அவள் மனது வைத்தால் சொந்தம்தான் என்று நினைத்தவர் ஆமாம் என்று தலையசைத்தார்.

“இங்க உங்கள கூட்டடியாந்தது உங்க மவந்தான?” என்கிற கேள்விக்கும் ஆம் என்று தலையசைத்தார்.

“அபியக்கா உங்களுக்கு எப்படிச் சொந்தம்?”

“மருமகள்” என்றார். வெளியே நின்று அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஜோடிக் காலணிகள் ஒரு நொடி ஸ்தம்பித்து, உள்ளே வருவதற்குப் பதிலாகத் தயங்கி விலகிச் சென்றதைப் பேச்சு மும்முரத்தில் யாரும் கவனிக்கவில்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.