‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தில் அம்பேத்கரிய கொள்கை கொண்ட ‘ரெனே’ என்ற பெண் கதாபாத்திரம், உண்மையான ஒரு தலித் பெண்ணை பிரதிபலிக்கவில்லை என்று ஏன் சாடுகிறார் செம்மலர்?

இயக்குநர் பா. ரஞ்சித் சமீபத்தில் இயக்கி வெளியாகி உள்ள நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் திரைப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக ரெனே என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெனே என்கிற அந்தக் கதாபாத்திரம், தன்னைப் பற்றி, தன் காதலைப் பற்றி, காதலர்களைப் பற்றி, இந்தச் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த சில உறுதியான கருத்துகளைக் கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படம் சாதி, பாலின அடையாளங்கள், ஆணவக்கொலை போன்ற பல சமூக பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறது. பாடலாசிரியர் உமா தேவி எழுதியிருக்கும் ‘என் ஜனமே’ பாடல் ஆணவக்கொலை என்ற பெயரில் கொல்லப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் உணர்ச்சிபூர்வமாக வெளிக்கொணர்ந்துள்ளது. அந்தப் பாடல் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் யாரும் ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை பெயர்களை உபயோகப்படுத்தும் அளவிற்குத் தைரியம் உள்ளவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

ஆனால், பா. ரஞ்சித் திரைப்படத்தில் சித்தரித்துள்ள அம்பேத்கரிய தலித் பெண்ணியவாதி கதாபாத்திரம் உண்மையான தலித் அம்பேத்கரிய பெண்களுக்கு நேர் எதிராக உள்ளது.

தலித் பெண்களின் வாழ்வியல் தற்போதைய அரசியல் சூழலில் மிகவும் போராட்டமாகவே உள்ளது. தலித் பெண்கள் சந்திக்கும் இனபேத போராட்டங்கள் எப்போதுமே தர்கங்களுக்குள்ளாவது என்பது மறுக்க முடியாதது. ஆனால், பா. ரஞ்சித் இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் தலித் பெண்களின் பிரச்னைகள் வேறு கோணத்தில் தவறாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சித் மற்றும் அவரது திரைப்பட ஆதரவாளர்கள் புரிதலின்படி ரெனே என்ற பெண் கதாபாத்திரம் ஓர் அழுத்தமான, தைரியமான, துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள். ஆனால், என் கூற்றுப்படி ரெனே என்ற பெண் கதாபாத்திரம் ஓர் அனுபவமற்ற, தான் எவ்வாறு தோழமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு பெண்ணாக நான் பார்க்கிறேன்.

அவளது ஆண் நண்பர் இனியன் உடனான தொடர்பு குறித்துப் பேசுவதற்கு முன், நாடகக் குழுவுடன் அவளுக்கிருந்த தொடர்பு குறித்துப் பேசுவது மிகவும் அவசியமாகிறது. அந்த நாடகக்குழுவின் தலைவர் ஆணவக்கொலை குறித்த கருத்தில் ஒரு நாடகத்தை வடிவமைக்கிறார். ஆனால், அந்த நாடகக் காட்சி முறையாகத் திட்டமிடப்படவே இல்லை. நாடகக் காட்சியில் வரும் காதல் ஜோடிகள் தங்களது சாதி அடையாளத்தை வெளிப்படுத்தவே இல்லை. ஒத்திகையின்போதுகூட, ஏதோ ஒரு புதிய யோசனையைப் போல, சாதி அடையாளத்திற்குப் பதிலாக காட்டுப்பூனை, நாட்டுப்பூனை என்று பெயரிடப்படுகிறார்கள். இந்தத் திரைப்படத்தில், இவர்கள் ஒரு பகுதி நேர நாடகக் குழு கிடையாது, முற்போக்குக் கருத்துகளைப் பறைசாற்றுபவர்கள். இந்தத் திரைப்படத்தில், இந்த நாடகக்குழு, வலதுசாரிகளின் நேரடி எதிரியாக காட்டப்படுகிறார்கள் (இறுதி காட்சியில்). ஆனால், ஆணவக்கொலை குறித்த ஓர் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், கூடுதலாக இந்தத் திரைப்பட குழுவிற்கும் பார்வையாளர்களுக்குமேகூட ஒரு குழப்பம் நிலவுவதாகவே தெரிகிறது.

இவற்றின் அடிப்படையில் பார்த்தால், நல்ல அறிவார்ந்த, படித்த, உலகமறிந்த பெண்ணான ரெனே, தாம் என்ன செய்கிறோம் என்ற தெளிவே இல்லாத ஒரு குழுவில் இணைந்திருக்கிறார்.

ரெனே தன்னை ஓர் அம்பேத்கரிய பெண்ணாக பாவித்துக்கொள்வதில் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. திரைப்படத்தில், ரெனே என்ன காரணங்களின் அடிப்படையில் ஓர் அம்பேத்கரியவாதியாக காண்பிக்கப்படுகிறாள் என்பதில் தெளிவே இல்லை என்று கூறலாம். அவளுக்கு ஒரு முக்கிய வேலையோ மக்கள் விடுதலைக்கான எந்தவிதத் திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக எப்பொழுதும் பப்களில் வளைய வருவதும் பார்ட்டிக்குச் செல்வதும் குடிப்பதும் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பவராகக் காண்பிக்கப்படுகிறார். இது உண்மையான தன் அன்றாட வாழ்க்கைக்குக் கடினமாகப் போராடும் தலித் பெண்களின் வாழ்வியலுக்கு மிகவும் முரணாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அடைப்புக்குப் பிறகு ஏறிய விலைவாசியால் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் தலித் பெண்கள். உயர்சாதி ஆண்களால் காதல் என்கிற பெயரில், பாலியல் ரீதியான சுரண்டலுக்கு தலித் பெண்கள் ஆளாகிறார்கள், இதெல்லாம் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை. இத்திரைப்படத்தில், அரியலூர் நந்தினி கொலை தழுவிய காட்சியமைப்பு உள்ளது. உண்மையில், நந்தினி பாலியல் ஏமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண். இளவரசன் இறப்பு ஒரு தற்கொலை என்று இனியன் கூறும்போது கிளர்ந்தெழும் ரெனே, அரியலூர் நந்தினி சம்பவத்தினை பாலியல் ஏமாற்று என்ற கோணத்தில் குறுக்கீடு செய்யவில்லை.

ரெனே, இனியன் சாதியைப் பற்றி அவதூறாகப் பேசும்போது அவனிடம் மட்டும் கொந்தளிக்கிறாள். அவள் ஓர் உண்மையான அம்பேத்கரியவாதியாக இருந்திருந்தால், இனியனின் குணத்தைப் பற்றி இன்னும் சாதுரியமாக முன்கூட்டியே அறிந்திருக்க இயலும். அடிப்படையாகச் சாதி பாகுபாட்டிற்கும், வர்க்க பேதத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவனோடு நீண்ட நாட்கள் அனுசரித்துப் போயிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ரெனே இனியனின் ஆரம்பகால பிளாஷ்பேக் காட்சிகளில்கூட உரையாடல்களின் போது நேரிடையாக இனியனின் அரசியல் கொள்கைகளில்தாம் தனக்கு உடன்பாடு இல்லையென்று கூறுகிறாள். ஆனால், மயக்கும் ஒரு கவிதையை அவன் வாசித்தவுடன் அவனை முத்தமிடுகிறாள். ஆனால், இனியனுடனான அடுத்த சந்திப்பின்போது முத்தத்தை மீண்டும் எதிர்பார்க்காதே என்று கூறுகிறாள். இனியன், அவளிடம் நீ அழகாக இருப்பதாகக் கூறும்போது, “அது எனக்குத் தெரியும், அதனால்தான் நீ என் பின்னால் சுற்றுகிறாய்” என்று ரெனே கூறுகிறாள். ஆனாலும் அவனது காதலில் விழுவதாகக் காண்பிக்கப்படுகிறது. தன்னை ஓர் அம்பேத்கரியவாதியாகக் காண்பித்துக்கொள்ளும் ரெனே, அரசியல் உறுதிப்பாடு கொண்டிருக்கும் ஒரு பெண் இனியனைத் திருமணம் செய்வதில் குழப்பம் இருப்பதாகக் காண்பிக்கப்படுகிறாள்.

எனக்குத் தெரிந்த நிஜ வாழ்க்கை அம்பேத்கரிய பெண்கள் எந்த உறவாகினும் தங்கள் சுயமரியாதை, சுய கௌரவம், சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருபவர்களே. ஆனால், இந்த ரெனே கதாபாத்திரம், தன் பாலியல் தேவைகளுக்காக ஓர் இளைஞனுடன் வழிவதைப் போல காண்பிக்கப்படுகிறாள். அவளது அறிமுகக் காட்சியிலேயே அவள் செய்யும் நாடகத்தனம் (தானாகச் சிரிப்பது) இனியன் உடனான கொள்கை மாறுபாடு பிரச்னையுடன் ஒத்துப்போகவில்லை. அனைத்திற்கும் மேலாகத் தனது ஆண் தோழனுக்கு இளையராஜாவின் இசை பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறாள். உண்மையில், அந்தக் காட்சி மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது. ரெனே இளையராஜாவையும் அவரது இசையையும் புகழ்வது திரைப்படத்தில் அவளது குணப்படைப்புக்கு ஒத்துப்போகவில்லை.

கடைசியாக, இனியனிடம் இருந்து பிரியும்போதுகூட, அத்தனை வார்த்தைப் போர் நடந்து முடிந்த பின்பும், பெரிய பிளவிற்குப் பின்பும் அவனை, தன்னைக் கட்டிப்பிடிக்கச் சொல்லி கேட்பது, அவன் அத்தனை கொடுமையாகத் தன்னிடம் நடந்த பின்பும்கூட சமாதானப்படுத்த முயலும் விதமாகக் காட்சி உள்ளது.

ஓர் அறிவுள்ள, புத்திசாலிப் பெண்ணாக இருக்கும் ரெனே, கருத்து வேறுபாடுகள் உள்ள ஓர் ஆணுடன் தரம் தாழ்ந்து பாலியல் சுகத்தைத் தர ஏன் நினைக்கிறாள்? இனியன், தன்னைப் பாலியல் சுரண்டல் செய்து ஏமாற்றுகிறான் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறனற்ற பெண்ணா ரெனே? இது தலித் பெண்ணியம் குறித்து மிகவும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது. ஒரு பாலியல் தேடலுக்காக எந்தவொரு தலித் அம்பேத்கரிய பெண்ணும் தனது சுயமதிப்பையும் சுயமரியாதையும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டாள்.

ரெனே கதாபாத்திரம் ஓர் அம்பேத்கரிய பெண்ணாக தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதைத் தாண்டி இத்திரைப்படத்தில் பல தவறுகள் உள்ளன. ஆனால், இதுவே என்னை அழுத்தும் கவலைப்பட வைக்கும் தவறாக உள்ளது. இத்திரைப்படத்தில், உடல் கேலிக்கு உள்ளாக்கப்படும் பெண்ணியப் பிரச்னையின் மத்தியில் தலித் பெண்ணியம் நீர்த்துப் போகச் செய்து, குறைத்தும் மதிப்பிட வைத்துள்ளது. தலித் பெண்ணியம் என்ற போர்வையில் பா. ரஞ்சித் தலித் பெண் விடுதலை என்பதை ஒன்றுமில்லாததாகச் செய்துள்ளார். ஒரு பெண் பாலியல் தேடலை துவக்கி, முன்பின் தெரியாத தனக்குப் பிடித்த ஆணுடன் படுக்கையைப் பகர்வது, பின் அந்த உறவிலிருந்து விலகிச் செல்வது என்று காண்பித்துள்ளார் இயக்குநர். இது அரசியல் அல்லவே, இது தலித் பெண் விடுதலை அல்லவே, இவள் அம்பேத்கரிய பெண்ணாக இருக்க வாய்ப்பே இல்லை. ஓர் உண்மையான தலித் பெண்ணியவாதியின் போராட்டங்கள் இதையெல்லாம் கடந்தது. அவளது கனவு பெரிய அளவிலான தலித் விடுதலை, அதில் தலித் ஆண்கள், பெண்கள், தலித்தல்லாத பெண்கள் அனைவரும் அடக்கம். இங்கு ரெனே ஒரு தைரியசாலி போன்ற முகமூடி போட்ட ஒரு குழப்பம் நிறைந்த பெண், நிதர்சனமான சாதி மற்றும் பாலியல் பாகுபாடு குறித்த பிரச்னைகளைக் கையாளாமல், தன்னை முற்போக்கு நாகரிக சமூகத்தோடு இணைத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒரு பெண்.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது திரைப்படங்களில் எப்போதும் பெண் கதாபாத்திரங்களை நல்ல ஆளுமையுடன் காட்டுவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காலா திரைப்படத்தில் புயல் எனும் பெண் கதாபாத்திரம் விளிம்பு நிலை மக்களுக்காக முதலாளித்துவத்தையும், கறைபட்ட அரசியல்வாதிகளையும் எதிர்க்கும் தைரியசாலி பெண். அதேபோல், ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் கலையரசி கதாபாத்திரம் நேர்பட அரசியல் பேசாதவள். ஆனால், இறுதிக் காட்சியில் சமூகத்தில், விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக முனைகிறாள்.

இந்தத் திரைப்படத்தில் ஏனோ பா. ரஞ்சித், சமூகத்தில் உள்ள நிதர்சன தலித் பெண்களின் நிலையை இணைத்துக் காட்டாமல், பொதுவான பெண்ணியக் கருத்துப் பின்னல்களை ரெனே கதாபாத்திரத்துடன் சேர்த்து தைத்துள்ளார். தலித் சினிமா என்ற பெயரில், பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேச முயற்சிக்கும் இவர், பாலின மற்றும் சாதி பாகுபாடு குறித்த உண்மையான நிலையைப் படம் முழுவதிலும் எடுத்துரைக்கவே இல்லை.

தலித் சினிமா என்கிற பெயரில், வியாபார யுக்தியாக அம்பேத்கர் அவர்களைப் பயன்படுத்துவதை ரஞ்சித் நிறுத்த வேண்டும். இது அந்தத் தலைவருக்குப் பெரும் இழுக்கு என்பது மட்டுமல்லாது தொடர்ந்து ஒடுக்கப்பட்டோருக்கும் வறுமையிலுள்ளோருக்கும் போராடும் தலித் அம்பேத்கரிய பெண்களுக்கும் இழுக்கு.

செம்மலர் செல்வி

பேராசிரியர், சமூகப் பணித் துறை, லயோலா கல்லூரி. இங்கு சாதியும் ஆணாதிக்கமும் கைகோத்திருப்பதாக வலியுறுத்துகிறார். ஆகவேதான், தலித் பெண்களுக்காக மட்டும் குரல் எழுப்பாமல், தலித் ஆண்கள், மற்ற சாதி எதிர்ப்பு பெண்கள் ஆகியோரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். மேலும், #Metooவிற்குத் தொடர்ச்சியாக #WhyOnlyMe என உயர்சாதி ஆண்களிடம் சிக்கி ஏமாறும் தலித் பெண்கள் குறித்தும் முன்னிலைப்படுத்துகிறார்.