இவ்வுலகம் யாருக்கானது என்ற கேள்வி பலரையும்போல் எனக்குள்ளும் அடிக்கடி தோன்றும். ஒருவேளை இவ்வுலகை கடவுள் படைத்திருந்தால், அவர் படைத்த எல்லோருக்கும் எல்லாவற்றிற்குமானதுதானே இவ்வுலகம்? ஒருவேளை இவ்வுலகை கடவுள் படைக்காமல் இருந்திருந்தாலும், இயற்கையாக உருவான இவ்வுலகில் எல்லோரும் சமமானவர்கள்தானே?

இவ்வுலகம் வலியவர்களுக்கானதோ என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டேயிருக்கும். காலத்தின் ரத்தச் சகதியில் வலியவைகள் எளியவைகளை துவம்சம் செய்திருக்கிறது. காணாமல் போக்கியிருக்கிறது. கோடான கோடி மக்களை வதைத்திருக்கிறது. இன்னமும் வதைத்துக் கொண்டிருக்கிறது. வலிய தேசம் எளிய தேசத்தை அழிக்க எத்தனிக்கிறது. வலிய மிருகம் எளிய மிருகத்தை, வலிய மனிதன் எளிய மனிதனை என வலிமையான அத்தனையும் மிக மோசமாக எளியவற்றைத் தாக்கிக் கொண்டேயிருக்கின்றன. 

அரசர்கள் எளிய குடிகளை, வெள்ளையர்கள் கருப்பினத்தவர்களை, அதிகாரிகள் சாமானிய மக்களை, அரசியல்வாதிகள் மக்களை, பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை, அதிகாரமிக்க ஆண்கள் பெண்களை, அதிகாரமிக்க பெண்கள் ஆண்களை, பெரியவர்கள் குழந்தைகளையென எத்தனையோ வகையான அதிகாரப் பகை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது.

மனிதர்களாகிய நாம் நம் தேவைகளுக்காக இயற்கையை சூறையாடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறோம். காடுகளை, இயற்கை வளங்களை, நீர்நிலைகளை, மரங்களை, விலங்குகளை என எதை வேண்டுமானாலும் அழித்து மனிதன் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. 

புவி வெப்பமயமாதல் என்கிற பேராபத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் பல்வேறு உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. மனிதர்களும் விலங்குகளும் வாழ்விடத்தை இழக்கின்றன. கடல் மட்டம் உயர்கிறது. பெருவெள்ளம் போன்ற சேதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

இதை எதைப்பற்றியும் கவலைப்படாமல், அதிகார பலம் படைத்தவர்கள் நம் பூமியை கூறுபோட்டு தங்கள் விருப்பப்படி விற்று சுயலாபம் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Photo by Chris LeBoutillier on Unsplash

இதே நிலை தொடர்ந்தால் நம் எதிர்கால சந்ததியினர்களின் வாழ்வு குறித்த அச்சம் மேலோங்குகிறது. எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் தன் மாயவலை என்னும் நூலில் 2050 – ல் 13.2 கோடி மக்களும் 2080 – ல் 26.6 கோடி மக்களும் பட்டினியாலும் வறட்சியாலும் பாதிக்கப்படுவார்கள் என்ற கணிப்பை குறிப்பிட்டிருக்கிறார். இப்புள்ளி விவரம் நம் சமூக நிலையின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. 

இயற்கையை சூறையாடுவது ஒரு பக்கம் என்றால், எளிய மனிதர்களை பணம், சாதி, மதம், அதிகாரம் போன்ற எல்லா திசைகளிலிருந்தும் தாக்க நாம் தவறுவதேயில்லை. தென்ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களில் சிலருக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த பல இந்தியர்கள் நம் நாட்டில் நிலவும் சாதி மத பிரச்சினைகளுக்கு பிரிவினைகளுக்கு வருந்துவதோ கருத்து தெரிவிப்பதோ, கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எண்ணுவதோகூடக் கிடையாது. 

சென்ற வாரம் தன் மதத்திற்குரிய, பல காலங்களாக பின்பற்றக்கூடிய மிகவும் பாதுகாப்பான ஒரு உடையை ஒரு கல்லூரி மாணவி அணிந்து கொண்டு சென்றதற்காக, மாற்று மதத்தை சேர்ந்த பல்வேறு ஆடவர்கள் கோஷமிட்டு அப்பெண்ணை விரட்டியதை பல்வேறு மனிதர்களும் காணொலியாகப் பார்த்தோம். அதில் எத்தனைப் பேர் இதை தவறு என்று மனதிற்குள்ளாகவாவது நினைத்துக் கொண்டோம்? எத்தனை பேர் பிறரிடத்தில் இது தவறு என்ற நம் கருத்தைத் தெரிவித்தோம்? இதில் நமக்கான சமூகப் பொறுப்பு என்பது எதுவுமே இல்லையா? 

Image courtesy: Dawn

வெளிநாட்டில் வசிக்கும் என் தோழி இப்படிக் கேட்கிறாள், “பள்ளி கல்லூரிகளில்தானே இந்த மத அடையாளங்களை கலைந்து நாம் வாழ இயலும். ஹிஜாப் அணிவது தவறல்ல என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” இந்த வாழ்வில் சாதிய அடக்குமுறைகளை, சிறுபான்மையினர் மேல் ஏவப்படும் ஒடுக்குமுறைகளை ஒருவேளை இவள் கண்டதில்லையோ என்றே எனக்குத் தோன்றியது. பல்வேறு தனியார் பள்ளிகளிலும் அவரவர் சார்ந்துள்ள மதத்திற்கான வழிபாட்டு பாடல்கள் ஒலிக்கத்தானே செய்கிறது? அவரவர் உடை அவரவர் விருப்பம். இதில் கருத்து சொல்லவே மற்றவர்களுக்கு உரிமையில்லை என்னும்போது, இதை தடை செய்ய மத வெறுப்போடு பிறரைத் தாக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

சென்னை புறநகரில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நள்ளிரவு ஒரு அவசியத்திற்காக நான் பிரயாணம் செய்ய நேர்ந்தது. நான் வந்த பேருந்தில் என்னைத் தவிர வேறு பெண்கள் யாரும் அமர்ந்திருக்கவில்லை. வழிநெடுகிலும் அன்று சுற்றிச் சுற்றி ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். தேநீர் கடைகளில், உணவு வளாகங்களில் என பெரும்பாலும் ஆண்களாலேயே எல்லா இடங்களும் சூழப்பட்டிருந்தன. இது ஆண்களின் உலகமோ என்ற கேள்வி அந்த நள்ளிரவில் என்னை சூழ்ந்து கொண்டது.

படிப்புச் சுமை தரும் அதிக பாதிப்பில், கனவுகண்ட படிப்பைப் படிக்க இயலாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் கண்களுக்குத் தெரியாத கிருமி போல் படிந்திருக்கும் சாதி, மதம் தரும் அதிகப்படியான அழுத்தத்திலும் வீட்டுச் சுமை, காதல் தோல்வி, சமூக கட்டமைப்பு, உருவக் கேலிகள் கிண்டல்கள் போன்ற காரணிகள் தரும் மோசமான பாதிப்பினாலும் தற்கொலை செய்து கொண்ட இளைய தலைமுறையினருக்கான  உலகம் இது இல்லையா? இவ்வுலகமும், வாழ்க்கையும், மனிதர்களும், இவ்வரசும் அவர்களை ஏன் கைவிட்டது? இவ்வுலகம் யாருக்கானது? 

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு இளைஞன் ஒரு சாதியின் பெயரைச் சொல்லி நான் உயர்ந்தவன் என்றும் தன்னை விட சாதியில் தாழ்ந்த ஒருவனிடத்தில் நான் எப்படி திமிராக நடந்து கொள்வேன் என்றும் நடந்து காட்டுகிறான். சிலர் இப்படி வெளிப்படையாக வன்மத்தைக் கொட்ட, பலரும் மௌனமாக தன் சுய சாதிப் பெருமையோடே வாழ்கின்றனர் என்பதே நிதர்சனம். இந்தப் பன்னடுக்கு சாதி முறையில் உயர்ந்தவர் என்று கொக்கரிக்கும் சிலரும், இட ஒதுக்கீடு என்று வரும்போது பம்மிக்கொண்டு அதன் நன்மைகளை அடையமட்டும் தன்னை பிற்படுத்தப்பட்டவனாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பது நகைப்புக்குரிய விஷயம். 

ஆணும் பெண்ணும் காதலித்தால் ஆணவக்கொலை என்ற பெயரில் தன் சொந்த பிள்ளைகளையே கொல்ல முற்படும் மனிதர்கள் நிரம்பிய மண்தானே இது. காதலிப்பவர்களை வெட்டி வீழ்த்தும் இவ்வுலகம் யாருக்கானது? 

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தன் கவிதைகளில் ஒரு முறை இப்படி குறிப்பிட்டிருந்தார். நம் ஊரில் எங்கு சென்றாலும் ஒரு சக்கர நாற்காலியை வைத்துக்கொண்டு எளிதில் சென்று வர இயலாது.  பெரிய வணிக வளாகங்களிலும் தங்கும் விடுதிகளிலும் அவற்றின் கழிப்பிடங்களிலும் சக்கர நாற்காலியை உபயோகிக்கும் ஒரு மனிதனுக்கென்று எந்த பிரத்தியேக கட்டமைப்பும் வசதியும் இல்லை என்பது பெரிய மன உளைச்சலைத் தருகிறது என்பதைக் குறிப்பிட்டிருந்தார். கட்டிடங்களை கட்டும் போது பெரும்பாலும் இவர்களைப் பற்றியெல்லாம் நாம் ஏன் சிந்திப்பதேயில்லை? எளிய மனிதர்களை விடுத்தே சிந்திக்கும் இவ்வுலகம் யாருக்கானது? 

காட்டு விலங்குகளைக் கொண்டு சர்க்கஸ் காட்டி அதை மிகப்பெரிய கேளிக்கையாக வரவேற்கும் மனநிலையை இயல்பு என்று எண்ணும் எண்ணம் கொண்ட மனிதர்களாக நாம் இயல்பாகவே மாறி விட்டோமா? ஒரு காட்டை அழிப்பது குறித்த எந்த புகாரும் நம்மிடமில்லையா? 

தன் நாட்டின் பெருமைக்காக மன்னர்கள் வேட்டையாடிக் குவித்த யானைத் தந்தங்களும், புலி பற்களும் நமக்கு எதை பறைசாற்றுகின்றன? அடிமைகளாக மனிதர்களை விலைக்கு வாங்கியவர்களை, ஆண்ட பரம்பரை பெருமை பேசும் அயோக்கியர்களை நாம் எப்படிப் பார்க்கவேண்டும்? ஆளுக்கொரு நீதி என்று நிலைதடுமாறிய நீதி கொண்ட இவ்வுலகம் உண்மையிலேயே யாருக்கானது நண்பர்களே? 

trendingtamilnewsonline.com

‘மான்கள் வேகமாகப் புலிகளை துரத்துகின்றன’ என்று ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ புத்தகத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருப்பார். காலங்கள் மாறும். காலங்காலமாக ஓடி ஒளிந்த மான்கள் இனி அதிவேகமாக காட்டிலுள்ள புலிகளைத் துரத்தும் காலமும் வரக்கூடும். வரவேண்டும். வந்தே தீரும். இவ்வுலகம் எல்லோருக்குமானது. எல்லா உயிர்களுக்குமானது. எல்லா வகையான மனிதர்களுக்குமானது. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். ‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரை தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். நாம் மனநோயாளிகளாக வாழ்வதில் எந்தப் பெருமையும் இல்லை. சிந்திப்பதால் நாம் மனிதர்களாக வாழ்கிறோம். ‘I think, therefore I am’ – Descartes. 

தொடர்ந்து சிந்திப்போம். 

தொடர்ந்து விவாதிப்போம் 

கதைப்போமா ??? 

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.