நான் எழுதிய ‘அய்யா போராடி வென்ற உரிமையை இழக்காதே’ கட்டுரை கீழே!

‘காணிக்கையிடாதீங்கோ காவடிதூக்காதீங்கோ
மாணிக்கவைகுண்டம் வல்லாத்தான் கண்டிடுங்கோ
வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில்போடாதீங்கோ
நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே…’

அய்யா வைகுண்டர் என்று அழைக்கப்படும் முத்துக்குட்டியின் மீது பற்று கொண்டோருக்கு மேற்கூறிய நான்கு வரிகளின் பொருளை நான் சொல்லத் தேவையில்லை. இதில் இறுதிச் சொல் ‘சான்றோர்’, சான்றோர் எனப்படும் நாடாரின மக்களைக் குறிக்கும். இதை இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கிறேன்.

‘அய்யா வைகுண்டரின் வழிபாட்டு இடங்களுக்கு என்ன பெயர் வைப்பது சரி?’ இதுவே கேள்வி. பதிலை நான் சொல்ல போவதில்லை. கட்டுரையைப் படித்து முடிக்கும் என் சகோதர சகோதரிகளான நீங்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியானால் நான் என்ன செய்ய போகிறேன்? நான் உங்களுக்கு ஒரு உண்மை வரலாற்று நிகழ்வை சொல்லப் போகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1800களில்) நமது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் மன்னரின் அரசாட்சியின் ஒரு அங்கமாக இருந்தது என்பது நாம் அறிந்ததே.

அன்றைய காலகட்டத்தில் திருவிதாங்கூரில் சாதி வேறுபாடுகள் இந்து மனு தர்மத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அதன்படி நாடார், பறையர், சாம்பவர், புலையர், ஈழவர், முக்குவர் போன்ற சாதியினர் திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில்கள் அமைந்துள்ள தெருக்களில் கூட நுழைய அனுமதிக்கப்படாத தீண்டத்தகாத மக்களாக நடத்தப்பட்டார்கள். மேற்கூறிய சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு மார்பை சேலை அணிந்து மறைத்தல், இடுப்பில் குடம் தூக்குதல், பொன் நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தன.

தங்களை மேல் ஜாதியினர் என்று கருதிக்கொண்டவர்களால், கீழ்ஜாதிகளாக வரையறுத்து வைக்கப்பட்டிருந்த ஜாதிகளான, நாடார், ஈழவர், பறையர், புலையர், குழுவர், சாம்பவர், வள்ளுவர் போன்ற ஜாதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பை மறைக்க வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ளலாம் என்று கர்னல் மன்றோ 1813ஆம் ஆண்டு அனுமதி வழங்கினார். அந்த அனுமதியின் அடிப்படையில் தங்கள் மானம் காக்க கீழ் ஜாதியாக ஒதுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள். அவ்வாறு மாறிய பெண்கள் தங்கள் மார்பை(மானத்தை) மறைத்துக் கொள்வதால்கூட, தங்கள் சமூக அந்தஸ்து பாழ்பட்டு விடும் என்று நினைத்த உயர் ஜாதியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளிகளும் கிறிஸ்தவ ஆலயங்களும் தீக்கிரையாயின. பல வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

ஆடைக்கட்டுப்பாடுகள் மேற்கூறிய ஜாதிகளைச் சேர்ந்த ஆண்களுக்கும் இருந்தது. அவர்கள் இடுப்புக்கு கீழும் முழங்காலுக்கு மேலும் மட்டுமே பருமனான இழைகள் கொண்ட துண்டால் மறைத்து கொள்ளலாம். ஆண்கள் தலைப்பாகை அணியவும், மீசை வைக்கவும், வளைந்த பிடி வைத்த குடைகள் பயன்படுத்தவும் வரி செலுத்த வேண்டியிருந்தது.

இவ்வளவு ஏன்? உயர் சாதியினராகத் தங்களை கருதிக் கொண்டவர்களின் மொழியை பேசக்கூட அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எடுத்துக்காட்டாக “சாப்பிடப் போகிறேன்” என்று சொல்லக்கூடாது. “கஞ்சி குடிக்க போகிறேன்” அல்லது “வெள்ளம் குடிக்க போகிறேன்” என்றுதான் சொல்ல முடியும். ஓட்டு வீடுகள் கட்டுவதற்குக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. திருக்கோயில் கட்டுதல் போன்ற நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட ஜாதியினரின் குழந்தைகள் பலியிடப்பட்டார்கள். தங்கள் குழந்தைகளுக்கு இந்துக் கடவுள்களின் பெயரை சூட்டுவதற்குக்கூட அவர்களுக்கு அனுமதி இல்லை. பேச்சி, சுடலை, பிச்சாண்டி போன்ற பெயர்களை மட்டுமே சூட்டிக் கொள்ள இயலும்.

அந்த கால கட்டத்தில்தான் 02.03.1809 அன்று அன்றைய தென்திருவிதாங்கூரின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சாஸ்தாங்கோயில் விளை என்னும் கிராமத்தில், பொன்னு, வெயிலாள் அம்மையார் தம்பதியருக்கு மகனாக அய்யா வைகுண்டர் பிறந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சுவாமித் தோப்பு பதி (Wikipedia)

சாஸ்தாங்கோயில் விளை என்னும் கிராமமே இப்போது சுவாமித் தோப்பு என்று அழைக்கப்படுகிறது. அய்யா வைகுண்டருக்கு பெற்றோர் சூட்ட ஆசை கொண்ட பெயர் ‘முடி சூடும் பெருமாள்’ என்பதாகும். திருவிதாங்கூர் அரசின் கட்டுப்பாட்டுக்கு பயந்த வைகுண்டரின் பெற்றோரால் அவருக்கு முத்துக்குட்டி என்ற பெயரைத்தான் சூட்ட முடிந்தது.

இப்படிப்பட்ட சாதிய ஒடுக்குமுறைகளும் அநியாயமான கட்டுப்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், 1833ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர், தன் தோல் வியாதியை நீக்க திருச்செந்தூர் சென்று அங்கு இறையறிவு பெற்று தன் பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அய்யா வைகுண்டர், நாடார், பறையர், கம்மாளர், வாணியர், தோல் வணிகர், மறவர், பரதவர், சக்கிலியர், துலுக்கர், பட்டர் உள்ளிட்ட பதினெட்டு ஜாதியினருக்கு கடவுளாக வந்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

உழைக்கும் மக்கள் மீது நியாயமற்ற வரிகளைச் சுமத்தி கருவூலங்களை நிரப்பிய திருவிதாங்கூர் மன்னரின் அரசாட்சியை எதிர்த்தார் முத்துக்குட்டி. மக்களுக்கு நல் போதனைகளை வழங்கினார்.

‘பனை கேட்டடிப்பான் பதனீர் கேட்டடிப்பான்

கனத்த கற்கண்டு கருப்பட்டி கேட்டடிப்பான்

நாருவட்டி யோலை நாள்தோறுங்கேட்டடிப்பான்

வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்

கொடு வாவெனவே கூழ் பதனீர் கேட்டடிப்பான்

சாணான் கள்ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம்

வீணாக சான்றோரை விரட்டியடிப்பான் காண்

சாணுடம்பு கொண்டுதரணிமிக ஆண்டாலும்

வீணுடம்பு கொண்டு விரித்துரைத்தே பாராமல்

சாணான்* சாணானெனவே சண்டாள நீசனெல்லாம்

கோணா துளத்தோரை கோட்டி செய்தேயடித்தான்’

என்ற அகிலத்திரட்டு அம்மானையில் உள்ள வரிகள் அன்றைய காலகட்டத்தின் சாதிய அடக்குமுறை அவலங்களை படம் பிடித்துக் காட்டுகின்றன.

அகிலத்திரட்டு அம்மானை

மன்னனுக்கு எதிராகப் பேசுவது தெய்வ நிந்தனை என்று கூறி 1838ஆம் ஆண்டு 110 நாட்கள் திருவனந்தபுரத்தில் அய்யா சிறை வைக்கப்பட்டார். 1839ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறையிலிருந்து வெளிவந்த அய்யா வைகுண்டர், ‘அவன் பட்டம் பறித்திடுவேன், கொட்டி கலைத்திடுவேன்’ என்று வீர முழக்கம் இட்டார்.

திருவிதாங்கூர் மன்னரின் ஆளுமைக்குட்பட்ட இந்து திருக்கோயில்களில் பொது மக்களிடம் (எல்லா சாதியினரிடமும்) வசூல் செய்த வரிப்பணத்தில், ஊட்டுப்புரைகள் என்ற உணவு சாலைகள் நிறுவி, அதில் உயர் ஜாதியினருக்கு மட்டுமே இருவேளை இலவசமாக அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று வரையறுக்கப்பட்ட நாடார் முதலான ஜாதியினர் திருக்கோயில்கள் இருக்கும் தெருக்களில்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கூர வேண்டியது அவசியமாகிறது.

இந்தக் கொடுமைகளை எல்லாம் கண்டு வெகுண்டெழுந்தார் அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி. உழைக்கும் மக்களை சாதி மத பேதமின்றி ஒன்றுபடுத்தி அவர்களை சமபந்தி உணவு உண்ணவும், தனது நற்சிந்தனை கொள்கைகளை பரப்பவும் பல இடங்களில் சிறிய வழிபாட்டு இடங்களான நிழற்தாங்கல்களையும், பெரிய வழிபாட்டு இடங்களான பதிகளையும் அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி நிறுவினார். இதுவே அய்யா வைகுண்டர் என்று அழைக்கப்படும் போராளி முத்துக்குட்டி நிறுவிய நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளின் வரலாறு.

அரும்பாடுபட்டு அய்யா வைகுண்டர் என்னும் சமுதாயப்போராளி முத்துக்குட்டி நமக்கு வென்று தந்த உரிமைதான் ‘நிழற்தாங்கல்களும் பதிகளும்’ என்பது என் சிந்தனைக்கு எட்டிய கருத்து. பல போராட்டங்கள் செய்து அய்யா நிறுவியது நிழற்தாங்கல்களையும், பதிகளையும்தான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இப்போது நீங்கள் கூறுங்கள், என் அன்புக்கொடி சகோதர சகோதரிகளே… அய்யா வைகுண்டரின் வழிபாட்டு இடங்களுக்கு பெயர் என்ன? அய்யா வைகுண்டர் விரும்பும் பெயர் என்னவாக இருக்கும்?

சாதி, மத வேறுபாடு பேசுவது என் நோக்கம் அல்ல. வரலாற்றை என் சகோதர சகோதரிகளுக்கு நினைவுபடுத்துவது மட்டுமே என் நோக்கம். வரலாற்றில் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நடக்காதிருக்க நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம். ஏனென்றால், வரலாறு ஒருமுறை நடந்தால் அது சோகம், மீண்டும் நடந்தால் கேலிக்கூத்து. முடிவு உங்கள் கைகளில்….

குறிப்பெடுத்த புத்தகங்கள்:

அய்யா வைகுண்டரின் சீடர் அரிகோபால சீடர் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை,’ லஜபதி ராய் அவர்கள் எழுதிய ‘நாடார்கள் வரலாறு கறுப்பா? காவியா?,’ ‘கன்னியாகுமரி மாவட்ட வரலாறு’ ஆகிய புத்தகங்களின் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்.

சக்தி மீனா.

முகநூலில் பதிவிட்ட மேற்கண்ட கட்டுரையில் முத்துக்குட்டியின் பெயருக்கு பின்னால் நாடார் என்ற சாதியின் பெயரையும் சேர்த்து எழுதியிருந்தேன். அப்போது எனக்கிருந்த அரசியல் அறிவுப் பஞ்சத்தின் காரணத்தாலும் எங்கள் பெரியவர்கள், சாதிப் பெயர் சேர்த்து அழைப்பதை மரியாதை என்று என்னை பழக்கப்படுத்தி இருந்ததாலும், அந்த மாபெரும் பிழையைச் செய்துவிட்டேன்.

நாடார் சாதி மக்களின் துன்பங்கள் கண்டு, போராளியாக மாறிய அய்யா வைகுண்டர் பின்னாளில், ஒடுக்கப்பட்ட அனைத்து சாதி மக்களையும் அரவணைத்து, அனைவருக்காகவும் போராடியவர் என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே மேற்கண்ட கட்டுரையைத் திருத்தி, ‘முத்துக்குட்டி’ என்று மட்டும் எழுதியிருக்கிறேன். மேலும் நாடார் சமுதாயத்தினர்தான் சான்றோர் என்று நான் அழுத்தந்திருத்தமாக கூறியதற்கு காரணம், அய்யா வைகுண்டர் சொல்லி அரிகோபால் சீடர், அவர் எழுதிய அகிலத்திரட்டு அம்மானையில் பல இடங்களில், அம்மக்களை சான்றோர் என்று குறிப்பிடுகிறார் என்பதால்தான்.

முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் நான் எழுதிய கட்டுரைக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. அரசியலில் ஆனா ஆவன்னாகூட தெரியாத என்னை, திமுக சொம்பு, கம்யூனிஸ்ட், மாவோயிஸ்ட் என்றெல்லாம் விமர்சித்தார்கள்.

தோழர் ஒருவரின் அறிவுரைப்படி, என் கட்டுரை ஒலிப்பதிவை, சில புகைப்படங்களுடன் இணைத்து காணொளியாக்கி யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தேன். கமென்ட் செய்யும் வசதியை அணைத்து வைத்ததால் அங்கு தப்பித்தேன்.

நாள்கள் சில கழிந்த நிலையில், கன்னியாகுமரி காவல் துறை துணை ஆணையருக்கு ஒரு மொட்டைக் கடிதம் கிடைத்ததாக செய்தி கிடைத்தது.

மயிலாடிப்புதூரை சேர்ந்த யாரோ ஒருவரோ அல்லது சிலர் சேர்ந்தோ எழுதிய மொட்டைக்கடிதம் அது. மயிலாடிப்புதூரில் இருக்கும் அய்யா வழிபாட்டுத்தலத்திற்கு நிழல்தாங்கல் என்ற பெயரே சரி என்றும், ஊர் நிர்வாகம் சரியில்லை என்றும் மொட்டைக்கடிதத்தில் எழுதி இருந்ததாம்.

ஊர் நிர்வாகத்தினரும், அவர்களின் ஆதரவாளர்களும், காவல்துறையில் புகாரளித்த ஜெயச்சந்திரன்தான் மொட்டைக் கடிதம் எழுதிவிட்டதாகப் பேசினார்கள்.

நிழல்தாங்கல் சரி என்று ஒருசாராரும், திருக்கோயில் சரி என்று ஒருசாராரும் தீவிரமாக வாதிட்டு, வாதம் முற்றிய நிலையில், கலவரம் உருவாகிவிடக் கூடாது என்ற எண்ணம் இருதரப்பினரையும் அமைதியாக்கியது. இவ்வகையில் ஊர் மக்கள் படிப்பறிவும், பண்பும் கொண்டவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அய்யா வைகுண்டர் சொல்லித்தந்த,

ஒண்ணு சொன்னத ஒண்ணு கேட்டு

ஒண்ணுக்கொண்ணு நிரப்பா இருக்கணும்’ என்ற சொற்றொடர் மக்கள் மனதில் இருந்து அழிந்து விடவில்லை.

சில மாதங்கள் கழித்து என் காணொளியை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கி இருந்தார்கள்.

அட! என்ன இது? நானென்ன தீவிரவாத வீடியோவா பதிவு செய்தேன்? சிறு வயது முதலே என் வீட்டிலுள்ள பெரியோர்கள் சொல்லித்தந்த அய்யா வைகுண்டரின் வரலாற்றைத்தானே பேசினேன்? என்று அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. விடுவேனா? மீண்டும் பதிவேற்றினேன்.

இன்னொரு சந்தேகம் எனக்குள் உருவானது. மயிலாடிப்புதூரின் பழைய ஊர் நிர்வாகம் நிழல்தாங்கலை திருக்கோயில் என்று பெயர் மாற்றம் செய்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் நிர்வாகம் ஏன், நிழல்தாங்கல் என்று மாற்றி, தவறை சரி செய்யவில்லை?

இதைப்பற்றி விசாரித்தேன். ஊரின் முக்கியஸ்தர் ஒருவர் பழைய ஊர் நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இருந்து, நிர்வாகக்குழுவுக்கு  அறிவுரைகள் வழங்கி வழி நடத்தியிருக்கிறார். அதே முக்கியஸ்தர்தான் புதிய ஊர் நிர்வாகக்குழுவினரையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அதாவது ஊரின் நிர்வாகக்குழுவையும், ஊர்த்தலைவரையும் இயக்கும் அதிகாரம் கொண்டவர் அந்த முக்கியஸ்தர்.

காவல் துறையிடம் புகாரளித்த ஜெயச்சந்திரனிடம், நிழற்தாங்கலின் பெயரை திருக்கோயில் என்று மாற்றிய போது நீங்கள் தடுக்கவில்லையா? என்று நான் கேட்ட போது,

“பெயிண்ட் அடிக்கும் போது நானும் அங்க போயிருந்தேன். ‘திரு’வுக்கு பிறகு ‘நி’ எழுதாமல் ‘க்’ எழுதிய உடனே, ‘தப்பா எழுதுறீங்க’ என்று பெயின்ட் அடிப்பவர்களிடம் சொன்னேன். அவங்க அப்படித்தான் எழுத சொல்லிருக்காங்கன்னு சொல்லிட்டாங்க” என்றார்.

உடனே அப்போது ஊர் நிர்வாகக்குழுவில் ஒருவராக இருந்த, மேற்கூறிய முக்கியஸ்தரைத் தேடிச் சென்று நிழற்தாங்கல் என்று எழுதச் சொல்லும்படி சொன்னதாகவும், ஜெயச்சந்திரன் கூறினார். கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு சித்திரை மற்றும் கார்த்திகை மாத திருவிழாக்களில், போலீஸ் வழக்கு பதிவு செய்த ஜெயச்சந்திரன் ஊர் வரியிலிருந்து விலக்கப்பட்டார். அவருடைய மகனின் கல்யாணத்துக்கு ஆலங்கால் நடுவதற்கு கூட ஊர்க்காரர்கள் யாரும் வரவில்லை என்று ஜெயச்சந்திரன் சகோதரரின் மனைவி வருந்தினார். மேலும் ஊரின் பெரியவர்கள் பலரும் சேர்ந்து நிழற்தாங்கல் என்று எழுதும்படி சொல்லியும், ஊரின் வரிதாரர்கள் 245 பேர் கையொப்பமிட்டு, நிழற்தாங்கல் என்று பெயர் மாற்றம் செய்யும்படி மனு அளித்தும், அந்த முக்கியஸ்தர் அவர்களின் பேச்சை சற்றும் சட்டை செய்யாமல், உறுதியாக நின்று ‘நிழற்தாங்கல்’ என்ற பெயரை ‘திருக்கோயில்’ என்று மாற்றிவிட்டார் என்று ஜெயச்சந்திரன் சொல்கிறார்.

கன்னியாகுமரி நிழற்தாங்கல்

இன்னும் இரண்டு வருடங்களில், இப்போதிருக்கும் ஊர் நிர்வாகக்குழுவின் ஆட்சிக்காலம் முடிவுறப் போகும் நிலையில், அந்த முக்கியஸ்தர், ஊரின் தலைமைக்கான அடுத்த நிர்வாகக்குழுவை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஏன்? அந்த முக்கியஸ்தர் ஏன் அத்தனை உறுதியாக நின்று, நிழற்தாங்கலை திருக்கோயிலாக மாற்ற வேண்டும்? என்ன காரணம்? விசாரித்தபோது அவரைப் பற்றி கிடைத்த மிக முக்கியமான தகவல்களில் ஒன்று, அவர் RSS இயக்கத்தின் கொள்கைகளில் பற்றுதல் கொண்ட RSS உறுப்பினர். அவரது பெயர் நமக்கு தேவையில்லை. ஏனென்றால் ஒரு தனிமனிதனை குற்றம் சாட்டுவதற்காக நான் இவற்றை எழுதவில்லை. அந்த தனிமனிதருக்குள்ளும் இன்றைய பல இளைஞர்களுக்குள்ளும் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச சித்தாந்தத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதே என் நோக்கம்.

இந்த ஊரில் மட்டுமல்ல, இன்னும் பல ஊர்களிலும் இருந்த நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகள் பலவும் தற்போது கோயில்களாக மாற்றப்பட்டு வருவதை காணமுடிகிறது.

மசூதியை இடித்து கோயிலாக மாற்றுவதற்கும், நிழற்தாங்கல்களில்  பாசிச சித்தாந்தத்தைப் புகுத்தி கோயிலாக மாற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

முற்றும்.

*கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தச் சொல், பாடலில் உள்ளதால் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது. இச்சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, ஹெர் ஸ்டோரீசுக்கோ உடன்பாடு இல்லை என அறிக.

படைப்பாளர்:

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.