20.04.2021

இன்று மதியம் ஆசிரியர்களில் ஒருவர் கூழ் கொண்டுவந்தார். மூவருமாக கூழ் அருந்தியதில் கொண்டுசென்ற உணவை உண்ணாமல் வைத்திருந்தோம். கூழ் பருகிய பாத்திரங்களை டேங்க் குழாயில், கழுவிக்கொண்டிருந்தோம். ஒரு பத்து வயது பெண் சைக்கிளில் வந்து, காம்பவுண்டு சுவரின் அந்தப் பக்கம் நின்று கொண்டு, “சாப்டீங்களா டீச்சர்?”, என்றாள்.

“சாப்டாச்சு”, என்று சொன்னதுடன், “நீ சாப்டியா?”, என்றபோது, “இல்லையே”, என்றாள். “ஏன்?”, என்றபோது, “அம்மா சமைக்கவில்லை”, என்றாள். “சாப்பாடு தருவீங்களா?”, என்றாள் கூடவே. இவள் விளையடுகிறாளோ என்று எண்ணி அமைதியாய் இருந்தோம். “நிஜமாதான் கேட்கறேன். சாப்பாடு தரீங்களா?”, என்றாள்.

கூழ் அருந்தியதால் உணவு அப்படியே இருந்ததால், “சரி வா உள்ளே”, என்றோம். அவள் டக்கென்று காம்பவுண்டு சுவரின் அந்தப் பக்கமிருந்து இந்தப் பக்கம் எகிறிக் குதித்து வந்தாள். எங்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது இந்தச் செயல்பாடுகள். பிறகு ஆசிரியர்கள் அறையில் அவளை உட்கார வைத்து தட்டில் சாப்பாடு போட்டுக்கொடுத்து, “சாப்பிடு”, என்றபோது அவள் கடகடவென்று சாப்பிட்டு முடித்தாள்.

இடையில் எங்களுடன் பேசிக் கொண்டும் இருந்தாள். “இந்த ஜூன் வந்தாதான் ஆறாம் வகுப்பு இங்கு வந்து சேரணும். நான் பிரியாவோட தங்கச்சி”, என்றாள். நாங்கள் நினைவுகூர்ந்த பிரியாவுக்கும் இவளுக்கும் தொடர்பு இருப்பது போல தெரியவில்லை. ஆனாலும் குழந்தை பாவம் மிகுந்த பசியில் எவ்வளவு அழகாக எங்களோடு உரையாடி உணவின் தேவையைச் சொல்லி பிறகு எங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டு விட்டு பை சொல்லிச் செல்கிறாள் என்று அதிசயித்து இருந்தோம்.

இங்கே அவளின் சாமர்த்திய நடத்தையைக் காட்டிலும் அவளின் உணவுத் தேவை அவளை எவ்வளவு திறமையை வெளிப்படுத்த வைத்தது என்றே தோன்றியது.
இரண்டு விஷயங்கள் இங்கே யோசிக்க வேண்டியதாக இருந்தது….
1.பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் பிள்ளைகளின் தேவைகளை கவனிக்கும் நிலையிலில்லை பெரும்பாலும்.
2.சத்துணவின் அவசியம் உணரவைத்தாள் அந்தக் குட்டிப்பெண்.
இன்னும் ஏராளமான குழந்தைகளுக்காக சத்துணவு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையிருக்கிறது ….

  • உதயலட்சுமி