கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh)’ எனத் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
கணவன் மனைவியை வன்புணர்தல் கடுமையானதல்ல, அதைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித்தல் கடுமையானது என்கிற நிலைப்பாடு பிற்போக்குத்தனமானது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகள் மட்டுமே இன்னும் இந்தப் பிற்போக்கான நிலைப்பாட்டை வைத்துள்ளன. மற்ற நாடுகளில் திருமண உறவில் இருந்தாலும் வன்புணர்வு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. விசாரணை செய்து, தீர்வு காணச் சட்டம் துணை நிற்கிறது.
திருமண உறவில் இருப்போர் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது இயல்பு. உடலுறவு வேண்டாம் எனச் சொல்லும் உரிமை இல்லை. எனவே வல்லுறவு குற்றமல்ல என்கிறார்கள். திருமண உறவுக்கும் கொத்தடிமை முறைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
திருமணத்துக்குச் சம்மதம் சொல்வதாலேயே வன்கொடுமைகளுக்கும் சேர்த்துச் சம்மதம் சொல்வதாகி விடாது. மனைவி உடலுறவுக்குச் சம்மதிக்கவில்லை எனில் கணவர், அந்தத் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வேறு பெண்ணை மணக்கலாம். அதை விடுத்துத் திருமணம் செய்துவிட்டதாலேயே வல்லுறவுக்கு உரிமை இருக்கிறது என வாதாடுவது அறிவின்மை.
கணவனையும் அவனைச் சார்ந்தோரையும் பதற்றத்தோடு வைத்திருக்கவே இது வழிவகை செய்யும் என்கிறார்கள். பதற்றப்படும் ஆண்களின் குரலாக நாடாளுமன்றத்தில் பெண்களே பேசுகின்றனர். ‘திருமணம் புனிதமானது’ என்றார் மேனகா காந்தி. ‘இந்தியாவின் ஒவ்வோர் ஆண் மகனையும் குற்றவாளியாக்குவதை ஏற்க முடியாது’ என்றார் ஸ்மிரிதி ராணி. எல்லா வீடுகளிலும் பாலியல் வன்முறை நடக்கிறது என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது போல இருந்தது இவர்கள் பேச்சு.
பெண்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்கிற அச்சமே இதை எதிர்க்கக் காரணம் என்கிறார்கள். வழக்கு பதியத்தான் சட்டத் திருத்தம். அதன் பிறகு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே தண்டனை கிடைக்கும். வழக்கே பதிவு செய்ய முடியாதெனில் அது எவ்வளவு பெரிய அநீதி.
தேசியக் குடும்ப சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பில் சுமார் 18 சதவீதம் பெண்கள் தங்கள் கணவர் தங்களை வற்புறுத்தி உடலுறவு கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். 15 – 49 வயதுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இது. முடியாது என்று சொன்னால் அடித்து உதைத்துத் துன்புறுத்துவதாக இந்தப் பெண்கள் சொல்கிறார்கள்.
பத்து சதவீதத்துக்கும் மேலான ஆண்கள் அடித்து உதைத்துத் துன்புறுத்துவதில் தவறில்லை என நம்புகிறார்கள். எனில், 90 சதவீத ஆண்கள் தான் செய்வது தவறுதானோ எனச் சந்தேகித்தாலும் சட்டமே இதைத் தடுக்கவில்லை என்பதால் தொடர்கிறார்கள்.
முதலில் வழக்கு பதிவாகுமா என்பதே கேள்விக்குறி. மும்பைப் பொதுச் சுகாதார மருத்துவமனையில் 2008லிருந்து 2017ஆம் ஆண்டுகளுக்குள் சிகிச்சைக்கு வந்தவர்களை ஆராய்ந்ததில் 1664 பேர் வன்புணர்வால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு வழக்குகூட இந்தக் காலக்கட்டத்தில் பதிவாகவில்லை. அதில் 18 பேர் மட்டுமே காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருந்தனர். அதிலும் 10 பேர் முன்னாள் கணவன், காதலனால் வன்புணர்வுக்கு உள்ளானவர்கள். உறவில் இருந்து வெளியேறிய பிறகும் வன்முறையில் இருந்து வெளியேற முடியவில்லை. இதில் பலரிடம் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று நேரடியாகவே தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டார். பதினாறு வருடங்களாக இவர் தன் பிறந்த வீட்டாருடன் தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறார். சிறைச்சாலையில்கூட இப்படி எல்லாம் நடந்து கொள்ள முடியாது. இந்தியக் குடும்பங்களில் இதெல்லாம் முற்றிலும் சாத்தியம். திருமணம் செய்து கொடுத்த நாளில் இருந்து பெற்றோர் அவரை வந்து சந்திப்பதையும் அந்தப் பெண் பெற்றோரிடம் பேசுவதையும் தடை செய்திருக்கிறார்கள் கணவன் வீட்டார். சில முறை முயன்ற பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோரும் கண்டுகொள்ளவில்லை. அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் விசாரித்துத் தங்களுக்குப் பேரப்பிள்ளைகள் பிறந்ததையும் பள்ளி செல்வதையும் அறிந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் பேரப்பிள்ளைகள் வேறு எங்கோ அனுப்பி வைக்கப்பட்டதும் இந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்பதும் பக்கத்து வீட்டார் மூலமே பெற்றோருக்குத் தெரியவருகிறது. அதன் பிறகு காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார் தந்தை. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் இந்தியக் குடும்பங்களின் யதார்த்தம்.
பத்திருபது பெண்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் எனக் காரணம் காட்டி இம்மாதிரியான கோடிக்கணக்கான பெண்களின் உரிமையைப் பறிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. சட்டப் பாதுகாப்பு ஒன்றே பெண்கள் குடும்ப வன்முறையில் இருந்து மீளும் வழி. சட்டம் இயற்றுவதாலேயே யாரும் வரிசையில் நின்று புகார் அளிக்க வரப் போவதில்லை. விழிப்புணர்வு உண்டாக்கவும் பெண்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டவும் இது ஒரு வாய்ப்பு. அவ்வளவே. அதையே மறுக்கிறது இந்திய அரசு.
பத்தாண்டுகளுக்கு முன்பு வன்புணர்வுக் குற்றங்களுக்கு விரைவான நீதியும் கடுமையான தண்டனையும் கிடைக்கும் பொருட்டு நீதிபதி வர்மா ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் கணவன் வன்புணர்வதும் குற்றம் எனக் கருதி நடவடிக்கை எடுக்கும்படி சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகே, பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தை எனில் அதை ’திருமண வல்லுறவு (Marital Rape)’ என்ற வரையறைக்குள் கொண்டுவரச் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
பின்னர் பொது நல வழக்கொன்றின் மூலம் 18 வயதுக்குட்பட்ட எந்தப் பெண்ணாக இருந்தாலும் அதை வன்புணர்வு என்றே கருதி தண்டனை வழங்க ஆணை கிடைத்தது. இதன் மூலம் அந்தப் பெண் திருமணமானவர், திருமணமாகாதவர், விவாகரத்தானவர், திருமண நிச்சயம் செய்யப்பட்டவர் என எந்த நிலையில் இருந்தாலும் அவர் சம்மதம் இன்றி உடலுறவு கொண்டால் அதை வன்புணர்வுக் குற்றமாகக் கருத வழிவகுக்கப்பட்டது.
18 வயதாகித் திருமணமான பெண் தன் உடல் மீதான உரிமையைக் கைகழுவ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிமை கோரும் சட்டங்கள், குடும்பம் என்கிற அமைப்பைச் சிதைத்துவிடும் என்பதை ஒரு காரணமாகச் சொல்லியிருக்கிறது அரசு. பெண்ணைச் சிதைத்துக் காப்பாற்றப்படும் குடும்ப அமைப்பு தேவைதானா என்று இளம் பெண்கள் சிந்தித்தால் குடும்பங்களே இல்லாமல் போகும்.
இப்போதே இந்தியாவில் இருக்கும் இளம் பெண்கள் அதை நோக்கித்தான் செல்கிறார்கள். தனியாக இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கல்யாணம் செய்யாத பெண்கள் நிறைய சம்பாதிக்கும் பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். திருமணம் செய்யப் போவதில்லை என்கிற முடிவை அதிகளவு பெண்களே எடுத்துள்ளார்கள். இதெல்லாம் வெவ்வேறு கருத்துக் கணிப்புகளில் கிடைத்த முடிவுகள்.
இரு பாலினத்தவருக்கும் சம உரிமையை நிலைநாட்டுவதன் மூலம்தான் இனிமேல் குடும்ப அமைப்பைக் காப்பாற்ற முடியும். கணவனின் வன்முறைக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுத்தால் திருமணங்களே நடக்காமல் போகும்.
படைப்பாளர்:
கோகிலா
இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.
References
பெண்ணின் உடல் ஆணின் உடைமை என்ற நிலவுடைமைச் சமுதாய சித்தாந்தம் இன்றைக்கும் கெட்டியாக ஊறிப்போயிருக்கிறது. அரசின் வாதம் அதன் எதிரொலிதான்.