இங்கு ஏராளமான மக்கள் கல்வி வேலை, நிலவுரிமை போன்ற அடிப்படை தேவைகள் எதுவுமற்றவர்களாக இருக்கிறார்கள். தானும் மனிதன், தான் சமூகத்தால், அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதைக்கூட உணர முடியாத மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அடிப்படை தேவைகள் கிடைக்கப் பெறுவது தங்களது உரிமை என்றுகூட அறியாத மக்களை அனைத்து உரிமைகளும் பெற்றவர்கள் கடந்து சென்றால் எம்மவர்களின் நிலை எப்படி மாறும்?

 அவர்களுக்காகக் குரல் கொடுக்க, அவர்களும் தங்கள் மீதான சுய மதிப்பை உணரச் செய்ய, தங்களுக்கு எதிரான அநீதியைக் கண்டு வெகுண்டெழ அவர்களுக்கு வெளியிலிருந்து தீப்பொறி தேவைப்படுகிறது. ஆனால், அவர்களே காட்டுத்தீ மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்காக, செயல்படுவதற்காக, இங்கு பலர் சிறு குழுக்களாகவும், பெரும் அமைப்பாகவும், தனிநபர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்தப் பட்டியலில் தென் தமிழகத்தில் செயல்படும் ’இதயத்திலிருந்து குரல்’(Voice from Heart) என்கிற அமைப்பும் முக்கியமானது. 

ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த லிடியா என்னும் மாணவிக்கு எட்டிய யோசனைதான் இந்த அமைப்பு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. மாணவப் பருவத்தில் எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றுவது போல் ஆதரவற்றவர்களை, முதியவர்களைத் தத்தெடுத்தல், ஏழை எளியவர்களுக்கு  உதவுதல் போன்ற எண்ணங்களே லிடியாவிற்குத் தோன்றியவை.

அன்றாடச் செய்திகளை அரசியல் புரிதலோடு உற்றுநோக்கும் பக்குவம் கிட்டுவதற்கு முன் பல இளம் செயற்பாட்டாளர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும். லிடியா மட்டும் விதிவிலக்கா என்ன? 

தன்னுடைய சமூகப்பணியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே சாதியின் அடிப்படையிலும், வர்க்கத்தின் அடிப்படையிலும் மக்கள் ஒடுக்கப்பட்டு விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்கிற புரிதல் லிடியாவிற்கு ஏற்பட்டுள்ளது.

இதயத்திலிருந்து குரல் அமைப்பு தன்னுடைய நண்பரான கிஷோர் துணையுடன் இணைந்து தொடங்கியவர், காலப்போக்கில் பல கைகளுடன் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடக்கத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் செயற்பட்டுள்ளனர். கல்வி நிலையங்களில் சமூகத்தில் நிகழும் அநீதிகளைக் கரும்பலகையில் எழுதி, அவற்றைப் பற்றிய மாணவர்களின் புரிதல்களையும் கருத்துகளையும் பெறும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் எதிர்பார்க்காத சிறந்த கருத்துகளை வெளிக்காட்டியுள்ளனர். சில காலங்களிலேயே அமைப்பின் செயல்பாடுகள் பள்ளிகளிலிருந்து கிராமங்களுக்கு விரிவடைகின்றன.

கரோனா காலத்தில் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற பொருட்களை இவ்வமைப்பினர் வழங்கியுள்ளனர். 

அப்போது கிடைத்த அனுபவங்களை லிடியா நம்மிடம் பகிர்ந்தார்.

“நாங்கள் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது அவற்றைப் பெரும்பாலும் கோயில், அரசு அலுவலகம் அருகில் கிராமத்தின் மத்தியப் பகுதிகளில் வசிப்பவர்களே பெற்றனர். அந்தக் கிராமத்திலேயே இன்னொரு கிராமம் இருக்கிறது. அங்கு வலிமையற்ற, ஒடுக்கப்பட்ட, இன்னும் மோசமான நிலையில் மக்கள் வாழ்ந்து வருவதை உணர முடிந்தது. அடிப்படையில் கிராமங்கள் நகரங்களைவிட பின்தங்கியிருக்கின்றன என்பது ஒரு புறம் , மறு புறத்தில் பார்த்தால் கிராமங்களுக்குள் சாதியைக் காரணமாக வைத்து சில பிரிவுகளை ஆதிக்கச் சாதிகள் ஒடுக்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். இந்தப் புள்ளியிலிருந்து கிராமங்களுக்குள் இருக்கும் விளிம்புநிலை கிராமத்தை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது.

ஆறு மாதக் காலத் தேடலுக்குப் பின் பரமக்குடி, திருநெல்வேலி, கடலூர், விருதுநகர் போன்ற இடங்களில் வாழும் நரிக்குறவர் மற்றும் காட்டுநாயக்கன் வகுப்பைச் சேர்ந்த மக்களைக் கண்டறிந்தோம். அதன் பின் அவர்களுடன் தொடர்ச்சியாகப் பயணிக்கிறோம். சாதிச் சான்றிதழ், கல்வி போன்ற அடிப்படை தேவைகளுக்கான குரல்களை எழுப்பி வருகிறோம். மக்களுக்காகக் களத்தில் செயல்பட வேண்டுமென்றால் அரசியல்படுவது அவசியம். அதனால் எங்கள் குழுக்களுக்குள்ளேயே lets speak என்கிற தலைப்பில் வாரந்தோறும் ஆன்லைனில் உரையாடுகிறோம். சமூக பிரச்னைகள், அரசியல் சூழல்கள், முற்போக்கான புத்தகங்கள் ஆகிவற்றைப் பற்றி உரையாடுவோம். ஏராளமான கருத்துகள் ஆன்லைனில் விவாதிக்கப்படும். ஆன்லைனில் மட்டுமல்லாமல் பேசப்பட்ட கருத்துகளை அந்தந்தப் பகுதியில் நேரிலும் விவாதிக்கப்படும். தன்னார்வலர்களைச் சேர்ப்பதற்கான தளமாக lets speak தளம் பயன்படுகிறது ” என்றார்.

இதயத்திலிருந்து குரல் அமைப்பானது பல இடங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்துகிறது. அந்த வகையில் பரமக்குடியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பில் மாலை நேர வகுப்பை அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நம்மிடம் லிடியா பகிர்கிறார், ”சாலினி தற்போது பதினோராம் வகுப்பு முடித்துவிட்டார், ஆனால் அவள் அனுபவித்த வலிகள் ஏராளம். பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் குழந்தைத் திருமணத்துக்குள்ளாக்கப்பட்டாள். பேனாவைச் சுமக்க வேண்டிய கைகள் பாத்திரத்தைக் கழுவிக் கொண்டிருந்தன. ‘ எப்படியாவது படிக்க வைத்திருங்க அக்கா’ என்றாள். அக்கண்களில் தெரிந்த வலி என்னைப் பல நாள் தூங்க விடவில்லை. அவளுக்கான கல்வியை உறுதி செய்யும் பயணத்தில் நாங்கள் இருந்தோம்.  ஏராளமான வலிகளை அனுபவித்தவள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று, அப்பகுதி குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறாள்” என்று சொல்லும்போது லிடியாவின் முகத்தில் இனம் புரியாத உணர்வைப் பார்க்க முடிந்தது.

இன்னும் பல விஷயங்கள் எண்ணற்ற பட்டியல் மற்றும் பழங்குடியினருக்குச் சென்றடையவில்லை. பரமக்குடி மற்றும் திருநெல்வேலியில் காட்டுநாயக்கன் குடியிருப்பில் எந்த வீட்டிலும் மின்சாரம் இல்லை. அதனால் பிள்ளைகள் தெருவிளக்கில்தான் படிக்க வேண்டும். குழந்தைகள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் படிப்பதற்கான இடத்தை லிடியாவும் அமைப்பினரும் இன்னோர் அமைப்பின் உதவியுடன் உறுதிப்படுத்தியுள்ளார்கள். கிராமத்தில் ஓர் மூலையில் மின்சார வசதியில்லாமல், கழிவறை வசதியில்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், கால்நடையாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெறுவதே சாதனைதான். மதிப்பெண் அடுத்தபட்சம்தான். தேர்ச்சியே அந்த மாணவர்களின் வெற்றியாகக் கருதப்பட்டு இதயத்திலிருந்து குரல் அமைப்பு கல்விக்கு நிதியுதவி செய்கிறது.

கல்வி, பேரிடர் உதவி என்று மட்டும் சுருங்கி விடாமல் மக்களின் சாதிச்சான்றிதழுக்கும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது இவ்வமைப்பு. கல்விக் கூடங்கள் பரந்துபட்டு செயல்படுவதற்கு முன்பே சமத்துவத்தை நிலைநாட்டிய இடம் திரையரங்கு. எல்லா மக்களும் சாதி பேதங்களின்றிச் சமமாக அமர்ந்து திரைப்படத்தைப் பார்த்ததால் அங்கு சமத்துவம் மலர்ந்தது. ஆனால், இன்றுள்ள பல திரையரங்குகளுக்குள் பொருளாதாரத்தின் அடிப்படையில், உடை கலாச்சாரத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில் விளிம்பு நிலை மக்கள் செல்ல முடியவில்லை. அவ்வப்போது இந்த ஒடுக்குமுறைகள் செய்திகளாகவும்  வெளியாகின்றன. திரைப்படம் பார்ப்பதில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கு இதயத்திலிருந்து குரல் அமைப்பின் மூலம் ‘சமத்துவத்திரை’ என்கிற இயக்கம் அவ்வப்போது ஒருங்கிணைக்கப்படுகிறது. மண்டபம் அல்லது இடவசதி நிறைந்த அரங்கில் திரையில் படத்தை ஒலிபரப்புவதும், படத்திற்கு இடையில் உணவு மற்றும் தின்பண்டங்கள் கொடுப்பதுமே ஓர் இயக்கமாக ஒருங்கிணைக்கப்படுகிறது. இவையெல்லாம் சாதாரண நிகழ்வல்ல. வரலாற்றில் முக்கியமான அரசியல் நிகழ்வாகும். 

ராமநாதபுரத்தில் சிறந்த சமூகச் செயற்பாட்டாளாருக்கான விருது முதலமைச்சர் கைகளால் லிடியாவிற்குக் கொடுக்கப்பட்டது. லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.

குழந்தைகளின் பேரன்பை விட இவ்வுலகில் எது பெரிதாக இருக்க முடியும்!  

படைப்பாளர்:

கு.சௌமியா, பத்திரிகையாளர்