சௌதாமினி சமையலறைக்குள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். இட்லி மாவை ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வைத்திருந்தாள். தேங்காயைத் துருவிக் கொண்டே கடிகாரத்தின் மீது பார்வையைப் பதித்தாள்.

முட்கள் ஏழைத் தாண்டிக் கொண்டிருந்தன. ‘அச்சோ… வந்திருவாங்களே!’ மனம் படபடத்தது. விருந்தாளிகள் குறித்து முன்பே தகவல் சொல்லாத கபிலன் மீது கோபம் எழுந்தது. ‘ப்ச்.. பாவம் அவன்தான் என்ன செய்வான்? மதிய உணவு முடித்து மீட்டிங்கில் மாட்டிக் கொண்டானே’ மனசு ஒரு பக்கம் சமாதானம் செய்தது.

வரப் போகும் திடீர் விருந்தினர்கள் வேறு யாரும் அல்ல. அவளது பெரிய மாமியார் காமாட்சியும், அவரது மகள் பரிமளாவும் அவளின் இரண்டு சிறு குழந்தைகளும், இரண்டு கொழுந்தன்களும் என்ற உருப்படிகள் தான். பரிமளா துபாயில் வசித்துக் கொண்டிருந்தாள். அம்மா வீட்டுக்கு வந்து ஒரு மாதம் தங்கியிருந்துவிட்டு மீண்டும் துபாய் புறப்படுகிறாளாம். 

இவர்கள் வீட்டில் இருந்து விமானநிலையம் அரைமணி நேரம்தான் என்பதாலும், விடியற்காலை இரண்டு மணிக்கு விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்பதாலும் இரவு அவர்கள் வீட்டில் தங்கியிருந்துவிட்டு செல்லலாம் என்று ஏற்பாடு. பரிமளாவை வழியனுப்பிவிட்டு மற்றவர்கள் ஊர் திரும்புவார்கள். கபிலன் சிறு வயதில் பெரியம்மா வீட்டில் வளர்ந்ததால் அவனிடம் (மட்டும்) மிகவும் உரிமை எடுத்துக் கொள்வார்கள். சௌதாமினியெல்லாம் அவர்களுக்கு பொருட்டில்லை.

அவள் தக்காளி, வெங்காயம், பூண்டு எல்லாம் காரச் சட்னிக்கு வதக்கி வைத்து விட்டு, தேங்காய் சட்னியை அரைத்தாள். இட்லியை ஊற்றிவிட்டு காரச் சட்னியையும் அரைத்தெடுத்தாள். சாம்பார் வைக்கலாமா என்று யோசித்து, நேரமின்மையால் அந்த முடிவைக் கைவிட்டாள். அவசரமாக பச்சரியைக் கழுவி, பாசிபருப்பை வறுத்துப் போட்டு வெண்பொங்கலுக்கு தயார் செய்தாள். கைகள் பரபரவென்று வேலை செய்ய, மனசோ பறக்கத் தொடங்கியது.

அவள் கபிலனைக் கைப்பிடித்து இந்த ஆவணியோடு ஏழு வருடங்கள் ஆகின்றன. திருமணம் ஆகி ஆறு மாதங்களில் தன் பெரியம்மா வீட்டுக்கு தங்கையின் வளைகாப்பு விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான் கபிலன். அங்கே எல்லோருடனும் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் சௌதாமினி. நலங்கு வைக்கும் நேரம் வந்ததும் கபிலன் மனைவியை நலங்கு வைக்கப் பணித்தான். அவள் பரிமளா அருகில் போகும்போது, வேகவேகமாக ஓடிவந்தார் காமாட்சி.

“இந்தா… நில்லு. நீ மொதல்ல வைச்சிறாதே. நாலு குழந்தை பெத்த மீனா வைக்கட்டும். நீ இப்படி வா” என்றதும் சௌதாமினியின் முகம் மாறியது. விழிகளில் துளிர்த்த நீரோடு ஒதுங்கிச் சென்று அமர்ந்தாள். கபிலன் அவளருகில் வந்து சமாதானப்படுத்தும் நோக்கில் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

எல்லோரும் நலங்கு வைத்த பிறகு, நான்கைந்து பெண்களுடன் காமாட்சி அங்கு வந்தார். “இந்தாம்மா… இங்க வா” என்றதும் புரியாமல் எழுந்தாள் சௌதாமினி. பரிமளா அமர்ந்திருந்த நாற்காலியில் அவளை அமரச் சொன்னார்கள். புரியாமல் கபிலனைப் பார்த்தவாறே அமர்ந்தாள். இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு அம்மிக் குழவியைக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தார்கள். திருதிருவென்று விழித்தவாறே வாங்கினாள்.

“இந்தா.. இதைக் குளிப்பாட்டி, துடைச்சு, மேல இந்த சின்ன துணியைப் போர்த்தி, பொட்டு வெச்சு மடியில் போட்டு தாலாட்டு. அப்புறம் பால் கொடுக்குற மாதிரி பாவ்லா பண்ணு. இதுதான் இப்ப உன் குழந்தை. அப்புறம் பாரு. இப்படி பரிகாரம் பண்ண நேரம், அடுத்த வருஷம் உன் மடியில் ஆம்பளப் புள்ளை தவழும்” உரத்த குரலில் சொல்லிச் சிரித்த காமாட்சியை வெட்டி வீசும் கோபத்தோடு முறைத்தாள் சௌதாமினி.

கையில் இருந்த குழவியைக் கீழே ‘நெக்’கென்று வைத்து விட்டு எழுந்து அங்கிருந்து வெளியேறினாள். அங்கிருந்த பெண்கள் அதிர்ந்து போனார்கள். கபிலன் அவள் பின்னால் ஓடினான். இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளாமல் ஊர்வந்து சேர்த்தார்கள்.

காமாட்சியின் கைங்கர்யத்தால் உறவினர் மத்தியில் இந்த நிகழ்வு சரசரவென்று பரவியது. எங்கு போனாலும் சௌதாமினியைப் பார்த்து கிசுகிசுக்கத் தொடங்கினார்கள். முதுகுக்குப் பின்னால் பேசியவர்களில் சிலர் முகத்துக்கு முன்னாலும் பேசத் தலைப்பட்டனர்.

“என்ன சௌதா.. கல்யாணமாகி அஞ்சு வருஷமாகப் போகுது. இன்னுமா நீ உண்டாகலே?”

“உனக்குப் பின்னால் கல்யாணமானவளுங்க கைல ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமா சுத்துராளுங்க. உனக்கு ஒத்தப் புள்ளைக்கே வழியக் காணுமே.” ஊசியால் குத்தினார்கள்.

“டாக்டரைப் பாரு. கொறை எதாச்சும் இருக்கப் போவுது.”

“குழவியை வீசி எறிஞ்ச பாவந்தான் உனக்கு இப்படி இருக்கு.” விதவிதமான பேச்சுக்கள். சௌதாமினி நாளடைவில் சுருங்கிப் போனாள். தானுண்டு, தன் வீடுண்டு என்று வட்டத்தைச் சுருக்கிக் கொண்டாள். கபிலனும் அவள் மனதைப் புரிந்து கொண்டு, தான் மட்டும் விசேஷங்களுக்குப் போய்த் தலையைக் காட்டி விட்டு வரத் தொடங்கினான்.

இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டார்கள். கபிலனின் உயிரணுக்கள்தான் பலவீனமாக இருப்பதாக பரிசோதனை முடிவு சொன்னது. சௌதாமினி மனதை மடைமாற்ற தஞ்சாவூர் ஓவியங்கள் வரையக் கற்றுக் கொண்டாள். நாளடைவில் அதில் நன்கு தேர்ச்சி பெற்று நிறைய ஓவியங்கள் தீட்டி வெளியிலேயும்‌ விற்கத் தொடங்கினாள். கணிசமான வருமானம் வரத் தொடங்கியது. மனதை அமைதிப்படுத்திக் கொண்டாள். கபிலனை ஒருபோதும் அவள் குறை சொன்னதில்லை. 

இரண்டு ஈடு இட்லி ஊற்றி பெரிய ஹாட்பேகில் எடுத்து வைத்தாள். பொங்கல், சட்னிகள் எல்லாவற்றையும் எடுத்து டேபிள் மீது வைத்து, தட்டுகளை தயாராக எடுத்து வைத்து, கண்ணாடித் தம்ளர்களில் நீரை நிரப்பி வைத்தாள். கை கழுவும் பீங்கான் அருகில் புதிய துவாலையைக் கைதுடைக்க ஏதுவாய் மாட்டினாள். வாசலில் கார் சத்தம் கேட்டதும் வெளியே விரைந்தாள். 

“வாவ் அண்ணி… வீட்டை‌ சூப்பரா வெச்சிருக்கீங்க” பாராட்டியபடியே உளளே வந்தான் மூத்த கொழுந்தன்.

“ம்க்கும். அடுக்கினதைக் கலைச்சிப் போட இங்க என்ன குழந்தையா? குட்டியா? அப்புறம் வெச்சது வெச்ச மாதிரி அப்புடியே தான இருக்கும்” குத்தலுடன் இறங்கினார் காமாட்சி. சௌதாமினியின் முகம் சுண்டிப் போனது.

அமைதியாக இருந்த வீடு சந்தைக்கடை இரைச்சலானது. தொலைக்காட்சியை இயக்கி சத்தமாகப் பாட்டுக் கேட்கத் தொடங்கினான் இளைய கொழுந்தன். பரிமளா தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குப் போய்விட்டாள். அவள் குழந்தைகள் இருவரும் கூச்சலிட்டு அமர்க்களம் செய்யத் தொடங்கினர். கபிலன் வரவேற்பறையில் அமர்ந்து  காமாட்சியிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சௌதாமினி அனைவரையும் சாப்பிட அழைத்தாள். பரிமளா குழந்தைகளுக்கு ஊட்டத் தொடங்கினாள். தட்டில் விழுந்த இட்லிகளைப் பார்த்து முகத்தைச் சுளித்தார் காமாட்சி. 

“சாம்பார் ஊத்து” என்றவரிடம், “சாம்பார் வைக்க நேரம் இல்லை அத்தை. ரெண்டு சட்னி அரைச்சு, பொங்கல் வெச்சிருக்கேன். சூடா தோசை வேணா ஊத்தித் தரேன்” என்றவாறே சட்னிகளை ஊற்றினாள் சௌதாமினி.

“எப்பப் பாரு இட்லி, தோசை. மட்டன் எடுத்துட்டு வந்து குழம்பு வெச்சிருக்கலாம்ல” உதட்டைச் சுளித்தார்.

“நீங்க வர்றீங்கனு இப்ப ஒருமணி நேரத்துக்கு முன்னாலதான் தெரியும். டைமில்லன்னு அவசரமா சமைச்சேன்.” 

“நான் மீட்டிங்ல மாட்டிகிட்டேன் பெரியம்மா. அதான் அவளுக்கு சொல்ல முடியலை. ஆபீஸ்லருந்து உங்களைப் பிக்கப் பண்ண வந்துட்டேனா… அதான் வேற எதுவும் சமைக்க வாங்க முடியலை” என்றான் கபிலன். அவர்கள் சாப்பிட்டு விட்டு எழுந்தனர்.

முன்னறைக்குச் சென்றபின், சௌதாமினி சாப்பிட மனமின்றி எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு, சமையலறையை ஒழுங்குபடுத்தினாள். கைகளைத் துடைத்துக் கொண்டு வந்து அவர்களுடன் அமர்ந்தாள். கொழுந்தன்கள் தரையில் பாயைப் போட்டுப் படுத்திருந்தனர்.

“என் பேரனை நீ தூக்கவே இல்லை. இந்தா பிடி” என்று காமாட்சி நீட்ட, வேறுவழியின்றி குழந்தையை வாங்கிக் கொண்டாள். “இவனைத் தூக்குற நேரமாச்சும் உனக்கு வயிறு திறக்குதான்னு பார்க்கலாம்”. சௌதாமினி கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

“இங்கேருந்து ரெண்டு மணி நேரப் பயணத்துல ஒரு அம்மன் கோவில் இருக்காமே. அங்க போயி, ஆத்துல தலை முழுகி, ஈரப்புடவையோட அங்கப் பிரதட்சணம் பண்ணி வேண்டிகிட்டா, எண்ணி பத்தே மாசத்துல ஆம்பளைப் புள்ள பொறக்குமாம். கொழந்த இருந்தாத்தான் ஒரு பொண்ணு வாழ்க்கை முழுமையடையும். இல்லேன்னா அவளுக்கு சொர்க்கத்தில இடம் கிடைக்காது. பாவம் பண்ண ஜென்மம் ஆயிருவா.”

காமாட்சி நீட்டி முழக்க, சௌதாமினி பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள். 

“இல்லேன்னா தத்தெடுக்கச் சொல்லலாம்னா, அந்த குழந்தை என்ன சாதியோ? என்ன கோத்திரமோ? நமக்கு எப்படித் தெரியும்?” என்றவர், “கொஞ்சம் தண்ணி கொண்டு வரியா?” என்றார் சௌதாமினியிடம். குழந்தையை அவரிடமே தந்து விட்டு உள்ளே போனாள் அவள். 

தம்ளரில் நீரை எடுத்து வரும்போது காமாட்சி அவசர அவசரமாக தாழ்ந்த குரலில் பேசுவது கேட்டது.

“நம்ம தூரத்து சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு. கொஞ்சம் முத்துனதுதான். இன்னும் கல்யாணம் ஆகல. குழந்தைக்காக நீ வேணா அவளை ரெண்டாங் கல்யாணம் பண்ணிக்கிறியா?” காமாட்சி கேட்டு வாய் மூடவில்லை. தண்ணீர் டம்ளர் அவள் முகத்தில் வந்து விசிறி அடித்தது. படுத்திருந்தவர்கள் பதறி எழுந்தனர்.

“எந்திரிங்க மொதல்ல. நானும் போனாப் போகுதுன்னு பேசாம இருந்தா உங்க மனசுல என்ன நெனச்சுகிட்டு இருக்கீங்க?” சௌதாமினி உறுமினாள். “எப்பப்பாரு குழந்தை இல்லை, மலடி, வெறும் வயிறுன்னு குத்திப் பேசறீங்களே, நீங்க மூணு புள்ளை பெத்து என்ன பிரயோஜனம்? உங்க மூத்த புள்ளை பொண்டாட்டியை டைவர்ஸ் பண்ணிட்டான். அடுத்தவன் பொண்டாட்டிகூட சண்டை போட்டு டைவர்ஸ் பண்ண போறான். அவனுங்க ரெண்டு பேருக்கும் குழந்தைங்க இருக்குதே; என்னிக்காச்சும் உங்க மக குழந்தைங்க மாதிரி அதுங்களை கொஞ்சி சீராட்டி இருக்கீங்களா? மருமகள்களை மகளா பாத்து இருக்கீங்களா?” ஆவேசத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு. அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் பரிமளா.

“குழந்தை பெத்துக்கறது, பெத்துக்காதது எங்க பர்சனல் விஷயம். அதுல தலையிட உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தது? நாங்க எப்ப வேணா பெத்துக்குவோம். பெத்துக்காம இருப்போம். நீங்க யாரு கேட்க? தத்தெடுக்கறது எங்க விருப்பம். அப்படியாச்சும் ஒரு குழந்தை பொறந்தே ஆகணுமா? இல்லேன்னா ஜென்ம சாபல்யம் கிடையாதா? உங்க மக வளைகாப்புல குழவியைக் கைல குடுத்து என்னை எவ்வளவு அசிங்கப்படுத்துனீங்க. உங்களை மாதிரி பொம்பளைகளுக்கு கல்யாணம் ஆனாப்போதும்; அடுத்த மாசமே ஒன்னும் இல்லியான்னு கேக்குறது. அப்படியே பொண்ணைப் பெத்துட்டா, ஆம்பளைப் புள்ளை இல்லையான்னு கேக்குறது? வேற வேலையே இல்லையா உங்களுக்கு? இப்படி அடுத்தவங்க பெட்ரூமை எட்டிப் பாக்குறதெல்லாம் என்ன பொழப்பு? போய் உருப்படுற வழியைப் பாருங்க” பொரிந்து தள்ளினாள்.

“அடுத்தவங்க மனசு நோகறது பத்தி கவலை இல்லை. பரிகாரம் சொல்றேன். ரெண்டாங்கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு உளறிட்டு திரியுறது. அப்படியும் குழந்தை இல்லன்னா, இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?”

கபிலன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல வந்தான்.

“வாயை மூடுங்க முதல்ல. உங்க பெரியம்மா குத்திக் காட்டி பேசும்போது வாய் அடைச்சிருந்ததா? அப்பவே என் பொண்டாட்டியை இப்படி பேசாதேன்னு அடக்கி வெச்சிருந்தா இப்படி என் வீட்லயே வந்து உக்காந்துட்டு, உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்றதைப் பேசுற தைரியம் வருமா? இன்னொரு தடவை என் பர்சனல் விஷயத்துல யாராச்சும் தலையிட்டீங்க,  நான் மனுஷியா இருக்க மாட்டேன்” அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள். அத்தனை வருடக் கோபமும் கண்களில் நீராய் வழிந்தது. அப்படியே உறங்கிப் போனாள்.

விடிந்ததும் வழக்கம் போல ஐந்து மணிக்கு எழுந்து வெளியே வந்தாள். சோஃபாவில் கபிலன் மட்டும் அமர்ந்திருந்தான்.

மெல்ல அவனருகில் வந்து நின்றாள். “சாரிங்க. ஏதோ எமோஷன்ல நைட் கத்திட்டேன்” என்றவளைக் கையைப் பிடித்து அருகில் அமர வைத்தான் கபிலன். அவளைத் தோளில் சாய்த்து தலையைத் தடவினான். சௌதாமினி கண்களை மூடிக் கொண்டாள்.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.