குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே ஆண், பெண் உடல் அமைப்பில் இருக்கும் வித்தியாசங்கள் குறித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படிக் கேட்கும்போது அவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவதுதான் சரியானது.
மதி ஒருநாள்,”அம்மா, எனக்கும் அண்ணனுக்கும் ஒன்பாத்ரூம் வெளியேறும் இடம் ஒரே மாதிரியாகவும் ஆனால் அந்தப் பாப்பாவுக்கு வேற மாதிரியும் இருக்கு” என்றான்.
“ஆண்களுக்கும் பெண்களுக்கும் சில உறுப்புகள் வேற வேற மாதிரிதான் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் ஆண்கள், அதனால அப்பா மாதிரி உங்களுக்கு உறுப்புகள் இருக்கு. அந்தப் பாப்பா பெண். அது அம்மா மாதிரி இருக்கும்.”
“அப்படியாம்மா! அப்போ நம்ம தாத்தா, மாமாவெல்லாம் எங்களை மாதிரிதான் இருப்பாங்களா?”
“ஆமாம் மதி.”
“பாட்டி, அத்தை, சித்தியெல்லாம் உங்களை மாதிரி இருப்பாங்களா?”
“ஆமா…”
குழந்தைகள் நிலா, காற்றாலை மின்சாரம், ராக்கெட் பற்றியோ கேட்கும்போது, நீங்கள், ‘ஆஹா, என் குழந்தை எவ்வளவு அறிவா பேசுது’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் பெற்றோரே அதே மாதிரி குழந்தைகள் பாலினம் பற்றிக் கேள்வி கேட்கும்போதும் சற்றும் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும்.
“நாங்க நின்னுக்கிட்டே ஒன் பாத்ரூம் போறோம்… அது ஏன் உட்கார்ந்துட்டுப் போகுது?”
“உங்களுக்கு அந்த பிரைவேட் பார்ட் நின்னுட்டுப் போனாலும் காலில் எல்லாம் வடியாத மாதிரி இருக்கு. பெண்களுக்கு நின்னுட்டுப் போனால், காலில் எல்லாம் படும். அதனால எங்களுக்கு ஏத்த மாதிரி உட்கார்ந்துட்டுப் போறோம்.”
“ஓ… அப்ப நாங்க வேற… நீங்க வேற…”
“முழுசா சொல்ல முடியாது. நீங்களும் நாங்களும் மனிதர்கள். சில பார்ட்ஸ் மட்டும் வித்தியாசமா இருக்கும். அவ்வளவுதான்.”
குழந்தைகள் கேள்வி கேட்ட உடனே அம்மாக்கள், “உங்க அப்பாவிடம் போய் கேள்” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அப்பாவோ உங்கள் ஆசிரியரிடம் கேள் என்று சொல்லிவிடுவார். சில ஆசிரியர்கள் புரிந்துகொண்டு பதில் சொல்லலாம். சிலர் குழந்தைக்குப் பதில் தராமலும் போகலாம். அதனால் குழந்தை பெற்றோரிடம் கேள்வி கேட்கும்போது உரிய பதிலைக் கொடுத்துவிடுவது நல்லது.
(தொடர்ந்து பேசுவோம்)
படைப்பாளர்:
திருமலைச் செல்வி. தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் என் கிராமம். பொறியியல் பட்டதாரி. எழுத்துகள் மீது என்றும் தீராத தாகம் உண்டு. அனைத்தையும் மாற்றும் வல்லமை எழுத்துகளுக்கு உண்டு என்று நம்புகிறேன்.