கேள்வி:

நான் சாஃப்ட்வேர் கன்சல்டன்ட் விஜிதா. தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள விதிமுறைகளும், நிபந்தனைகளும் (Terms and Conditions) என்ன?

பதில்:

வியாபார மொழியில் தாய்ப்பால் ஊட்டும் முறைகளை விளக்குவது சற்று கடினம். செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று வரிசையாகச் சொல்லட்டுமா?

வியாபார விளம்பரங்களில், எங்கள் பொருள் உலக தரம் உள்ளது. விண்ணை எட்டும் புகழ் கொண்டது என்றெல்லாம் கூறிவிட்டு கண்ணுக்குத் தெரியாத பொடி எழுத்தில் (Terms and Conditions) என்று ஒரு வரி போட்டிருக்கும். அந்த மாதிரியான ஏமாற்று வேலை எல்லாம் தாய்ப்பால்  தருவதில் கிடையாது. தாயும் குழந்தையும் மன மகிழ்வுடன் சிரமங்கள் ஏதுமின்றி இந்த மிகவும் உன்னதமான செயல் நடைபெற வேண்டும். அதற்காகத் தான் சில Do’s சில Dont’s பட்டியலை இங்கு தருகிறேன்.

1. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் (இது அதிகபட்ச நேரம்) தாய்ப்பால் ஊட்டப்பட வேண்டும். இந்த ஒரு சிறு (மிகப் பெரியதும் கூட) செயலால் உலக அளவில் 10 லட்சம் குழந்தைகள் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் என்கிறது புள்ளி விவரம்!

2. சுகப்பிரசவம், சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் எதுவாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் பாலூட்ட வேண்டும்.

3. அம்மாவிற்கு உடல் அளவில் சோர்வு, இடுப்பு வலி, பிறப்பு உறுப்பில் வலி எல்லாம் இருந்தால் கூட உதவிக்கு இருப்பவர்கள் குழந்தையை எடுத்து தாயின் மார்பகத்தை சுத்தப்படுத்தி மார்புடன் சேர்த்தால் குழந்தை தானாக சப்பிக் குடிக்க ஆரம்பிக்கும். அறுவைசிகிச்சை அரங்கத்திலேயே தாய்ப்பால் ஊட்டலாம். வலைதளங்களில் Baby Crawl என்கிற ஒரு அருமையான வீடியோ காட்சி இருக்கிறது அதை பாருங்களேன்! ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

4. முதல் 2-3 நாட்கள் சுரக்கும் சீம்பாலில் அதிகமான ஊட்டச்சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்திகளும் இருக்கின்றன. குழந்தையின் குடலுக்கு ஒரு மலமிளக்கி போல் சீம்பால் செயல்படும். தாய்ப்பால் உயர்ந்தது, சீம்பாலோ மிக மிக உயர்ந்தது. அதற்கு ஏன்தான் Witch Milk என்று பெயர் வைத்தார்களோ?! Angel Milk என்றால்தான் பொருத்தம்!

5. குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் தரவேண்டும் (On Demand Feeding). 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. கடிகாரத்தைப் பார்த்து நேரம்  கணக்கிட்டு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

6. தூங்கும் குழந்தையை எழுப்பி பாலூட்டக் கூடாது. பிறந்த குழந்தை சுமார் 16 -18 மணி நேரம் தூங்கும். அந்த நேரத்தில் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது. செயல் திறன் பெறுகிறது.

7. ஒவ்வொரு முறை தாய்ப்பால் ஊட்டும் போதும் சுத்தமான துணியால் மார்பகத்தை லேசாகத் துடைத்துவிட்டு பால் கொடுக்க வேண்டும்.

8. தாய்ப்பால் தரும் தாய் தினமும் கட்டாயம் குளிக்க வேண்டும். முடிந்தால் இரண்டு முறை குளிக்கலாம். உடைகளை தினமும் மாற்றிக் கொள்ள வேண்டும். தளர்வான, பருத்தியினால் ஆன உள்ளாடைகளையும், உடைகளையும் அணிய வேண்டும். முகப்பவுடர், வாசனை திரவியங்கள் போன்றவற்றை அம்மா பயன்படுத்தக்கூடாது. குழந்தைக்கும் போட்டுவிடக் கூடாது.

9.  அம்மா தன் கைகளை, நகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

10. இரண்டு மார்பகத்திலும் மாற்றி மாற்றி பாலூட்ட வேண்டும்.

11.ஒவ்வொரு மார்பகத்திலும் குடித்து முடிக்க 15-20 நிமிடங்கள் ஆகலாம்.

12.தாய் தன்  முதுகிற்கு வசதியாக சாய்ந்து உட்கார்ந்து மடியில் உயரமாக தலையணை வைத்து அதில்  குழந்தையை வைத்து பாலூட்டலாம்.

13.பாலூட்டும் தாய் நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் போன்றவற்றையும் நல்ல ஊட்டச்சத்துள்ள, குடும்பத்துக்கு பழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சைவம், அசைவம் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

14.தாய்ப்பால் ஊட்டும் தாய்க்கு எந்தவிதமான உணவு கட்டுப்பாடுகளும் அறிவியல் ரீதியாக இல்லை. மாங்காய், பலாப்பழம் சாப்பிட்டால் குழந்தைக்கு மாந்தம் வரும், அம்மா ஆரஞ்சு, திராட்சை சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்பதெல்லாம் வருடக்கணக்காக நிலவிவரும் தவறான கருத்துகள் ஆகும். அதிக மசாலா, காரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். வீட்டிலேயே சுத்தமாக சமைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

15.காற்றோட்டமான அமைதியான இடத்தில் அமர்ந்து மகிழ்வுடன் பாலூட்ட வேண்டும். அப்போது தொலைபேசி, ‘தொல்லை பேசி’ எதுவும் வேண்டாம். குழந்தையின் முகத்தை பார்த்து, கண்களைப் பார்த்து பேசிக் கொண்டே பாலூட்ட வேண்டும்.

16. தாய்ப்பால் அதிகம் சுரக்க பூண்டு பயன்படும். பிரசவ லேகியம் என்பதும் பழக்கத்தில் உள்ளது. இதிலும் பால் சுரப்பதற்கான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. அதுவும் நல்லதுதான். இவை சிலருக்கு செரிமானத் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். யோசித்து உபயோகிக்கவும்.

17. பாலூட்டும் தாய், தன் தினசரி உணவுடன் சிறிது அதிகமான உணவு உட்கொள்ள வேண்டும். இரண்டு டம்ளர் பழச்சாறு அல்லது 2 டம்ளர் பால், 1-2 கரண்டி காய்கறிகள், ஒரு கப் சாதம், ஒரு முட்டை, சத்துமாவு உருண்டை அல்லது  கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு பெண்ணுக்கு  தினமும் 1800 – 2000 கலோரியும் 50 கிராம் புரதமும் தேவை என்பது கணக்கு. பாலூட்டும் காலத்தில் இன்னும் 500 கலோரியும் 15 -20 கிராம் புரதமும் அதிகப்படியாகத் தேவை. இதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். காலை முதல் இரவு வரை என்று இவற்றைப் பிரித்து இடைவெளி விட்டு உட்கொள்ளலாம்.

18. சத்து மாத்திரைகள், டானிக், பாலில் கலந்து குடிக்கும் மாவு வகைகள் எதுவும் தேவையில்லை. அம்மாவுக்கு ஏதேனும் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதற்கு ஏற்ற மருந்துகளை மருத்துவர் தருவார்.

19. குழந்தை தூங்கும்போது அல்லது விளையாடும்போது, அம்மா தூங்கி விட வேண்டும். பகலில் சிறிது தூங்கிவிட்டால், இரவில் கண்  விழிக்க வசதியாக இருக்கும். ஏனென்றால் உங்கள் குட்டிப்பிள்ளை எப்போதும் இரவில்தான் கச்சேரியைத் தொடங்குவார்.

20. ஒரு மார்பில் பாலூட்டும்போது, மற்றொரு மார்பில் பால் சுரப்பது இயற்கை. அதிகமாக வழிந்தால் சுரந்து எடுத்து அடுத்த முறைக்கு பாலாடையால் தரலாம். அப்படி வழிந்தால் உடைகளை மாற்றிக் கொள்வது நல்லது.

21. இரண்டு கைகளாலும் குழந்தையை மார்போடு அணைத்து மார்க்காம்பு அருகில் குழந்தையின் மூக்கு அல்லது வாயைத் திருப்பினால், குழந்தை கவ்விக் கொண்டு சப்ப ஆரம்பிக்கும்.

22. பாலை உறிஞ்சும் சத்தம், கிளிக் என்று விழுங்கும் சத்தம் கேட்கும். விழுங்கும் போது தொண்டைப் பகுதியில், கழுத்தில் அசைவு ஏற்படும்.

23. குழந்தையின் இரு கன்னங்களும் சிறிது  உப்பலாம். பாலை வாயில் வைத்திருப்பது போல் இருக்கும்.

24. வாயில் மார்பகம் இருந்தால் சில குழந்தைகள் விட்டுவிட்டு கூட சப்பும். மெதுவாக, நீடித்ததாக சிறிது இடைவெளி விட்டு குழந்தை பால் குடிக்கும்.(Slow, Sustained with Intermittent Pause)

25. குடித்து முடித்தவுடன் தானாகவே மார்பகத்தை விட்டு விலகும். அதன் பிறகு நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் குழந்தை சப்பாது.

26. குழந்தை தானாக விலகிய பிறகு தாயின் காம்பு உருண்டையாக இல்லாமல் நீண்டு இருக்கும். இது சிறிது நேரத்தில் சரியாகும்.

27. குழந்தை தூங்க அல்லது விளையாட ஆரம்பிக்கும் (22 -லிருந்து 26 வரை உள்ள 5 குறிப்புகளும் குழந்தை நன்கு சப்புகிறது என்பதையும், அதற்கு தேவையான பால் சுரக்கிறது என்பதையும் தாய்க்கு காட்டும்).

28. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை தினமும் 6-8 தடவை சிறுநீர் கழிக்கும். இது வெளிர் மஞ்சள் நிறமாக அல்லது நிறமற்றதாக, நாற்றம் இன்றி இருக்கும்.

29. தாய்ப்பால் அருந்தும் சில  குழந்தைகள், பளிச்சென்று மஞ்சள் நிறத்தில் லேசான ஒரு புளித்த வாசனையுடன் சிறிது இளகலாக 10- 15 மில்லி வரை, 5 – 6 தடவைகூட மலம் கழிக்கும். பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே மலம் கழிக்கும். சில குழந்தைகள் 4 -5 நாள்கள் மலமே கழிக்காது. இரண்டும் நார்மல்தான்.

30. சிறு குழந்தையின் வயிறு மிகவும் சிறியது. அது 50 மில்லி பால் குடித்தாலே நிறைந்துவிடும். சீம்பாலின் அடர்த்தி அதிகம். எனவே சுமார் 10 -15 மில்லி அளவு குடித்தாலே வயிறு நிரம்பி விடும்.

31. குழந்தை சப்பிக் குடிக்கக் குடிக்க தான் பால் அதிகம் சுரக்கும். தொட்டனைத் தூறும் மணற்கேணி என்ற திருக்குறள் தெரியும் அல்லவா?

32.பிறந்த ஒரு சில நாட்கள் குழந்தை மார்பகத்தை கவ்விப் பிடிக்கவும் (Latching) இழுத்து வேகமாக உறிஞ்சி பாலை எடுத்துக் கொள்ளவும் (Suckling) சிறுது சிரமம் இருக்கலாம். தாய்க்கு முதல் பிரசவமாக இருந்தால் அவளுக்கும் சிரமம் இருக்கலாம். பால் கொடுப்பது என் கடமை என் என நினைத்து தாயும், பால் குடிப்பது என் உரிமை என்று எண்ணி குழந்தையும் விடாது முயற்சி செய்தால், 3-4 நாள்களில் சரியாகிவிடும். இதனை Breast Shy baby, Baby shy breast என்றும் சொல்வோம். இந்த காலகட்டத்தில்தான் பால் பவுடர்/ மாட்டுப்பால்/ பாட்டில் என்ற குழந்தையின் நிரந்தர எதிரிகள் குழந்தையின் வாழ்வில் குறுக்கிட்டு விடுவார்கள்!அம்மாக்களே ஜாக்கிரதை!

Young Indian mother breastfeeding her newborn child, Amber near Jaipur, Rajasthan, India.

33. இரண்டு மார்பிலும் மாற்றி மாற்றி பாலூட்ட வேண்டும். ஒரே தடவையில் இரண்டு பக்கமும் தரலாம் அல்லது ஒரு தடவை வலது மார்பு அடுத்த முறை இடது மார்பு என்று தரலாம்.

34.ஒரு பக்கமாக படுத்துக் கொண்டு நிதானமாக  பாலுட்டலாம்.இரவெல்லாம் 2-3 தடவை எழுந்து உட்கார்ந்து  தான் பாலூட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

35. ஒவ்வொரு முறையும் பாலூட்டி முடித்தவுடன் குழந்தையைத் தோளில் போட்டு முதுகை லேசாக தட்டி , தடவி, ஏப்பம் எடுத்த பிறகு படுக்க வைக்க வேண்டும். இந்த முறையை செய்வதால் குழந்தைக்கு புரை ஏறுவது தவிர்க்கப்படும்.

36. பாலை கூட்டி விழுங்குவதை குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் கற்றுக் கொள்ளும். அதற்கு 3-4 மாதங்கள்கூட ஆகலாம். அதனால் பாப்பா வாயில், கன்னப்பகுதியில் பாலை வைத்திருக்கும். பாலூட்டி நிமிர்த்தினாலே திரியாக பால் வாயில் இருந்து வரும். இது வாந்தி அல்ல. சில சமயம் திரிந்த பாலாக வரும். இதுவும் இயற்கைதான். தானாக சரியாகும். அதிகமாக வாந்தி எடுத்து குழந்தை எடை ஏறவில்லையானால், மருத்துவரை அணுகலாம்.

37. இரட்டைக் குழந்தைகளுக்குக்கூட முழுமையான தாய்ப்பாலை மட்டுமே ஊட்ட முடியும். இரண்டு குழந்தைகளும் மாற்றி மாற்றி சப்பினால் பால் அதிகமாக சுரக்கும்.

38.குழந்தை சப்ப ஆரம்பித்தவுடன் முதல் 5-10 நிமிடங்கள் வரும் பால் முன்பால் (Fore Milk). இது வெளிர் வெள்ளையாய் நிறைய நீருடன் இருக்கும். சப்ப சப்ப முழு வெள்ளையாகஅடர்த்தியான, பின்பால் (Hind Milk) வெளியாகும். நீர்த்த பால் குழந்தைக்கு  வாய்க்கு மற்றும் நாக்குக்கு ஈரத் தன்மையையும், குழந்தைக்கு வேண்டிய தண்ணீரையும் தருகிறது. அதில் மாவுச் சத்து அதிகம். குழந்தையின் பசியை உடனடியாக நீக்குகிறது. பிறகு வரும் பின் பால் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மற்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்டது. இது குழந்தையின் வளர்ச்சிக்கும்,நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுகிறது. எனவே இரண்டு பால் வகைகளும் குழந்தைக்கு தேவை. ஒவ்வொரு மார்பிலும் சுமார் 15 -20 நிமிடங்கள் குழந்தை சப்ப வேண்டும்.

39.மார்க்காம்பை சுற்றியுள்ள கருமை படலம் (Areola) முழுதும் குழந்தையின் வாயில் இருக்குமாறு செய்து பாலூட்டும் போதுதான் பால் சரியாகச் சுரக்கும்.

40. குழந்தை மார்க்காம்பை மட்டும் சப்பினால் பால்  சுரக்காது. மார்க் காம்பு புண்ணாகிவிடும்.

41. மார்க் காம்பு புண்ணுக்கு (Nipple Sore) பின் பாலை தடவினாலே போதும்.

42. வேலைக்குப் போகும் மகளிரும் தொடர்ந்து தாய்ப்பால் தரலாம். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு வருடம் Maternity Leave தருகிறார்கள். லீவு கிடைக்காத தாய் தன் பாலை  கறந்து எடுத்து ஒரு சுத்தமான எவர்சில்வர் டப்பாவில் (பிளாஸ்டிக் டப்பா கூடாது) மூடி வைத்துவிட்டு போகலாம். ஆறு மணி நேரம் வரை அறையில் வெப்பநிலை இருக்கலாம். அதற்கு மேல் தேவை என்றால் பிரிட்ஜில் வைக்கலாம். டப்பாவை மூடியுடன் அப்படியே வெந்நீரில் 1-2 நிமிடம் வைத்து வெளியில் எடுத்து குழந்தைக்கு சங்கு அல்லது ஸ்பூனால் பாலை ஊட்டலாம். எதையும் நேரடியாக அடுப்பில் வைக்கக் கூடாது.

43.தேவைப்பட்டால் வீட்டில்  உங்கள் நாத்தனார், அண்ணி ஆகியோருக்கு குழந்தை பிறந்திருந்தால், அவர்கள் பாலை உங்கள் குழந்தைக்கும், உங்கள் பாலை அவர்கள் குழந்தைக்கு தரலாம். முற்காலத்தில் பாலூட்டும் பாட்டிகள் இருந்திருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சேவையல்லவா!

44.தாய்க்கும், குழந்தைக்கும் எந்த நோய் இருந்தாலும் நீங்களாக பாலை நிறுத்த வேண்டாம். மருத்துவர் சொன்னால் மட்டும் பாலைத் தவிர்க்க வேண்டும்.

45.பாலூட்டும் தாய் மருத்துவர் பரிந்துரைத்த சத்து மாத்திரைகளை தவிர எந்த மருந்துகளையும் கடையில் வாங்கி பயன்படுத்தக்கூடாது.

46. தாய் உடல் நலமின்றி மருத்துவரிடம் சென்றால் பாலூட்டுவதை தெரிவிக்க வேண்டும். அதற்குத் தகுந்தபடி அவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

47. தாய்க்கு சளி, இருமல் இருந்தால் பரிந்துரைத்த மருந்துகளுடன் முக கவசம் அணிந்து பாலூட்ட வேண்டும்.

48. பிறந்த ஓரிரு நாட்கள் வேறு பால் வகைகளை கொடுத்துவிட்டால்கூட குழந்தை தாயிடம் பால் குடிக்க தயக்கம் காட்டும். ஏனெனில் மற்ற பால் வகைகள் தாய்ப்பாலை விட இனிப்பு சுவை அதிகம் உள்ளவை. குழந்தை அறியும் முதல் சுவை இனிப்புதான்.

49. பாட்டிலை பயன்படுத்தி ஒருமுறை பால் கொடுத்துவிட்டால்கூட தாயிடம் பால் குடிக்க குழந்தை மறுத்துவிடும். ரப்பர் நிப்பிளின் மிருதுதன்மை, அதிலுள்ள துவாரத்தை பொறுத்து ஈசியாக அதிக பால் வெளியாவது போன்றவற்றை ருசி கண்ட குழந்தை தாயின் மார்பகத்தை கவ்விப் பிடித்து, தன் முயற்சியால் இழுத்து பால் குடிக்க தயங்கும். குழந்தை சோம்பேறியாகி விடும். இதனை Nipple Confusion என்பார்கள்.

50. தாயும் குழந்தையும் 24 – மணி நேரமும் ஒன்றாக இருக்க வேண்டும். கூடியவரை  தாயின் அரவணைப்பில்  வெப்பத்துடன் இருப்பது தாய்க்கும், சேய்க்கும் நல்லது. இது தாய்ப்பால் அதிகம் சுரக்க பெரிதும் உதவும். தாய் சேய் பாசப்பிணைப்பு அதிகமாகும். அதனால் குழந்தையின் உணர்வுகளும் திடம் பெறும்.

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.