கேளடா, மானிடவா – 10
குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது யாரோ அறியாதவர்களால் அல்ல; நன்கு அறிந்து பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெற்ற உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்களால்தான்.
தான் குழந்தையாக இருந்தபோது, தனது சொந்தக்காரர் ஒருவர் இறுக்கி மடியில் உட்கார வைத்தது இன்று வரை தன் மனதைத் தொந்தரவு செய்வதாக, முகநூலில் ஒரு தோழி பகிர்ந்திருந்தார். 90 சதவிகிதக் குழந்தைகள் டூ வீலரில் அப்படித்தானே பள்ளிக்குச் செல்கின்றன. பழகி விட்டதால் இந்தத் தவறு, சரியாகி விடாது. இது அப்யுஸ் இல்லையா?
எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறது. (தி இந்து தமிழ் 22.07.18 செய்தி)
இரண்டில் ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கிறது. கூடுதல் தகவலுக்கு சுட்டி இங்கே:
குற்றவாளி என்பவர் எங்கோ தனியே இல்லை; தனியாகப் பிறந்து வர வில்லை; நம்மிடையே இருக்கிறார்; நமக்குள்ளேயே இருக்கிறார்; எப்போது யாரிடமிருந்து எவ்வாறு வெளிப்படுவார் என்பது யாருமே அறியாத ஒன்று. பொதுவாக நாம் நம்பிக்கைக்குரிய நமது உற்றார் உறவினர்களை சந்தேகப்படுவதில்லை.
அயனாவரம் சிறுமிக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிப் பார்த்தால் அல்லது அவர்கள் நடந்து கொள்வதை சொல்லச் சொன்னால் தெரியும் – அவர்கள் ஒரு குற்றவாளியைக் கண்காணிப்பதை விட அதிகமாய் பயங்கரக் கட்டுப்பாடுகளுடன் தம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது.
சாதாரணமாக சாலையில் பயணிக்கும் போது, எதிலாவது இடித்து விடுவோமோ, யாரையாவது மோதிக் கொன்று விடுவோமோ, அடிபட்டுக் கொள்வோமோ என்று யோசிப்பதுதான் மனித மனம். ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுக்கும் போது கூட, அது விழுந்து சிதறுவது போல மனதில் ஒரு சித்திரம் எழும். எனும்போது, இப்படிப்பட்ட செய்திகளுக்குப் பிறகு, மனம் எப்படியான சித்திரங்களை எழுதும்?
நம் உடலிலிருந்து பிறந்து தனி உயிராய் ஆன பிறகும், குழந்தைகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டும், கூடவே கண்பார்வையிலேயே வைத்துக் கொண்டும் இருப்பது சரியா? எல்லா உறவினர்கள், நண்பர்கள் எல்லாரையும் எப்போதும் சந்தேகம் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது முறைதானா?
நான் கொஞ்சநாள் கேஷில் வேலை பார்த்தேன். ஒரு ரூபாய் வெளியே போனாலும், ஒரு ரூபாய் உள்ளே வந்தாலும் என்ட்ரி போட வேண்டும் என்பது நெறிமுறை. எந்த அவசர சூழலிலும் இதைப் பின்பற்றினால் தவறு நிகழாது; நிகழவே முடியாது. அலுவலகத்தில் பணம் வாங்க வருபவர் நமக்கு ரொம்ப காலம் தெரிந்தவராக இருப்பார், ‘அப்புறம் கையெழுத்து போடுறேன் மேடம்; என் மேல நம்பிக்கை கிடையாதா’ என்பார். எனது பதில் எப்போதும் ஒன்றுதான் – ‘பணம் வாங்குறதுக்கு கையெழுத்து போடுறீங்க; இது நெறிமுறை. உங்க மேல நான் வச்சிருக்கிற நம்பிக்கை என்பது தனி. இரண்டையும் குழப்பக் கூடாது.’
இதுதான் இதேதான் குழந்தைகள் விசயத்திற்கும். நாம் நமது உறவினர்கள், நண்பர்கள்மேல் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது தனி. அந்த நம்பிக்கையை நம் குழந்தைகள் மேல் சோதித்துப் பார்க்க விடக்கூடாது. அவர்கள் அன்போடு குழந்தையை நோக்கலாம். பேசலாம். ஆனால் அவர்களின் எப்படியான எவ்வளவு அன்பையும் (கோபத்தையும்) குழந்தையின் உடலில் காண்பிக்க அவர்களுக்கு – ஏன் பெற்றோர்களான நமக்கே கூட – எந்த உரிமையும் கிடையாது என்பதை அன்பான வார்த்தைகளில் சொல்லி விட வேண்டும்.
அதில் எப்போதும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு வித்தியாசம் புரிய வேண்டுமானால், தன் மேல் ஆருயிர்க் காதல் கொண்ட பெண்களிடம் கூட நிஜத்திலும், திரையிலும் ஜெமினி கணேசன் எவ்வளவு ஜெண்டிலாக நடந்து கொள்கிறார் என்பதையும், பழைய மற்ற ஹீரோக்கள் படங்களில் ஹீரோயின்கள் ஜூஸ் பிழியப் படுவதையும், பார்த்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஃ
சில வருடங்களுக்கு முந்தைய கணக்கெடுப்பின்படி 54 சதவிகித ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களின் பாலீர்ப்புத் தேர்வு என்னவாக இருக்கிறது? இப்படி நடந்து கொள்ளும் மனிதர்கள் தனது சின்ன வயதில், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களா?
நமது நாட்டில் ‘கே’ யே (gay) இல்லையா? பிறகு எப்படி 54 சதவீதத்திற்கும் அதிகமான ஆண் குழந்தைகள் அப்யுஸ் செய்யப் படுகிறார்கள்? (இந்த கேள்வி நிச்சயமாக ‘கே’ நண்பர்களைப் புண்படுத்த அல்ல).
ஆண்கள் எல்லோரும் இது பற்றி வாய் திறக்க வேண்டும். சமீப காலத்தில் ‘மீ டூ’ என்று பெண்கள் அநேகம் பேர், தங்களது குழந்தைப் பருவத்தில் நடந்து சைல்ட் அப்யுஸ் பற்றி, வலைத்தளங்களில் பகிர்ந்தது போல, ஆண்களும் செய்ய வேண்டும். இரகசியம் காக்கிறேன் பேர்வழி என்று நடந்த குற்றத்திற்கு துணை போகாமல், உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
வெட்கித் தலை குனிய வேண்டிய உண்மை என்னவெனில், இந்தியாவில் ஓர் ஆண் குழந்தை, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கு தண்டனை வாங்கித் தர முடியாது. அதற்குச் சட்டங்கள் இல்லை. அதே போல ஒரு வளர்ந்த ஆண், தன்னை இன்னொரு ஆணோ அல்லது பெண்ணோ பாலியல் வன் கொடுமை செய்ததாகப் புகாரளிக்கவோ, அப்படிச் செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரவோ சட்டங்கள் நம்மிடம் இல்லை.
உரிமையோ/ குற்றமோ பெண்களை சமமாகப் பாவிக்காத ஆணாதிக்க மனோபாவமும், வலதுசாரிகளால் நிரம்பியிருக்கிற, இருக்கும் இடது சாரிகளும் பெண்கள் விசயத்தில் ஆணாகவே நடந்து கொள்கிற, பெண்கள் – தாய் என்றால் புனிதம் அவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்கிற முன்முடிவு காரணமாகவே – நமது நாட்டில் அருமையான சட்டங்கள் இருந்தும், அதனை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
சமூகத் திருத்தத்திற்கு, எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் திரு. ஞாநி சொல்வார் ‘இப்போதைய பெண் குழந்தைகளை வளர்ப்பது போல, ஆண் குழந்தைகளை இரு மடங்கு கவனம் கொண்டு வளர்க்க வேண்டும்; ஆண் குழந்தைகளைச் சுதந்திரமாக விடுவது போல பெண் குழந்தைகள் வளர்த்தப்பட வேண்டும்’ என்று.
குழந்தைகள் ஏதும் தெரியாதவர்கள் அல்ல. குட்டி மனிதர்கள் அவ்வளவே.
‘ஆறு வயதுக் குழந்தைக்கும் புரிகிறபடி உங்களால் ஒன்றை சொல்ல முடியவில்லை என்றால், அதை நீங்களே தெளிவாக அறியவில்லை என்றுதான் அர்த்தம்’ என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளுக்கான சட்டங்களை, குழந்தைகள் அறியச் செய்தோமா? அவற்றை முதலில் நாம் அறிந்தோமா? அவர்களுக்கான சட்டங்களில் அவர்களின் கோணத்தைக் கேட்டோமா? சாக்லெட் வேணுமா, பர்கரா என்பதிலெல்லாம் அவர்கள் கருத்தைக் கேட்கிறோம். பள்ளி ஆக்டிவிட்டி செய்வதில் காட்டுகிற அக்கறையை அவர்கள் வாழ்க்கை பற்றிய முடிவுகளில், தீர்மானங்களில் காட்டுகிறோமா? ட்ராஃபிக்கில் உயிரைப் பணயம் வைத்து சரியான நேரத்தில் பள்ளியில் கொண்டு சேர்க்கிறோம், அவர்களின் வயதிற்கான அறிதல்களை அவர்களுக்குத் தருகிறோமா? தினமும் அரைமணி அவர்களோடு உரையாடுகிறோமா?
ஆள் பலம், அதிகாரம், பணபலம் எல்லாம் இருந்தால்தான் நாம் எதுவும் செய்ய முடியும் என்றில்லை. அவற்றிற்கு ஆயிரம் ஆயிரம் கட்டுப்பாடுகள் உண்டு. நம் கண்முன்னே இருக்கிற சின்னச் சின்ன விசயங்களில் இருந்து செய்யத் தொடங்குவோம். நம்மிலிருந்து தொடங்குவோம். ஒரு சைக்கிளை மில்லி மீட்டர் அசைத்துத் திருப்பியது போல; காலங்கள் (கிலோ மீட்டர்கள்) கடந்து பார்த்தால், சைக்கிளின் மொத்த திசையுமே மாறியிருக்கும்.
- எதையும் கேள்வி கேள்
இன்னும் கேட்போம்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.