சென்னை புறநகர் என்பது மறைந்து சென்னையின் முக்கியப் பகுதி என்று மருவி இருக்கும் ஊரில், இரண்டு தளங்களைக் கொண்டு விசாலமாக அமைந்திருக்கும் மேம்படுத்தப்பட்ட காவல் நிலையம் அது. ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் மற்றும் அலுவலகப் பணியில் இருப்பவர்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் இடம். வழக்கம்போல அன்றும் மிகப் பரபரப்பாகக் காணப்பட்டது.
தன்னுடைய இருக்கையில் சுணங்கிப் போய் கடுப்புடன் அமர்ந்திருந்தார் பரிமளா, குற்றவியல் பிரிவு துணை ஆணையர். அவரின் மேசை மேல் இருந்த டீ ஆடிக்கொண்டிருந்தது. அதிகாரி குதறி வைத்ததில் அவருடைய மனமதான் ஆறவில்லை.
அந்தப் பெண் அமுதா யூடியூப் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட நொடி ஆரம்பித்த தலைவலி, இன்றுடன் மூன்று நாட்களாகியும் சரியானபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்ததால், ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள் தொடங்கி காவல்துறை கடைநிலை ஊழியர்வரை அழுத்தம் உண்டாகிப் போயிருந்தது.
அதிகாரபூர்வமான பிரேதப் பரிசோதனை அறிக்கைகூட இன்னும் கையில் கிடைத்தபாடில்லை. போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் மூலமாக, அதுவும் மொட்டைத்தாத்தான் குட்டையில் விழுந்தான் என்கிறபடியில் தோராயமாக அந்தப் பெண்ணின் வயது, ரத்த வகை போன்றவை மட்டுமே வாய் வார்த்தையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே சகஜமாகப் பலருக்கும் இருக்கும் ஓ பாசிட்டிவ் ரத்த வகை. வயது 22இல் தொடங்கி முப்பதுக்குள் இருக்கலாம் அவ்வளவுதான். மரணம் நிகழ்ந்த இடத்தைச் சல்லடை போட்டுச் சலித்தாயிற்று, அந்தப் பெண்ணின் சொந்த ஊர், அவளின் பின்புலம் போன்ற தகவல்கள் எதுவும் கிடைத்தபாடில்லை.
அவள் உடலின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து போனதில் கைரேகைகூடக் கிட்டவில்லை. சமூக வலைத்தளங்களிலிருந்து அவளின் படங்களை எடுத்துப் பொருத்திப் பார்க்க, அவளுடைய ஆதார் அட்டைத் தகவல்கள் கிடைத்தன. அதிலும் அவளின் பெயர், தகப்பனார் பெயர், அவள் இப்போது தங்கி இருக்கும் விலாசம், அதற்கு மேல் எதுவும் கிட்டவில்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டது போல் இருந்தது.
காணொளியில் குறிப்பிட்டிருந்த பட்டியலில் உள்ளவர்கள் கூட்டாகத் தலைமறைவாகி இருக்க, அவர்களைத் தேடும் பணி வேறு ஒரு பக்கம் நடந்து நடந்துகொண்டிருக்கிறது.
இப்படியே அமர்ந்திருந்தால் வேலைக்காகாது, இதை வேறு அந்த இன்ஸ்பெக்டர் பார்த்துத் தொலைத்தால் இன்னும் கடித்துக் குதருவார் என்று தோன்ற, குவளையில் இருந்த தேநீரை அப்படியே தொண்டையில் சரித்துக் கொண்டார். தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு, சாவியை எடுத்துக்கொண்டு, சம்பவம் நடந்த இடத்தில் ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் எனக் கிளம்பினார் பரிமளா.
சரியாகக் காவல் நிலையத்தின் வாயிலைக் கடக்கும் நேரம் அவருக்குக் கீழ் வேலை செய்யும் கான்ஸ்டபிள் தாமு குறுக்கே வந்து அவரை வழிமறித்து நின்றார். எந்த ஒரு விஷயத்துக்கும் இவருடன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிற ரகம் அவர்.
“இப்ப எதுக்கு வந்து நந்தி மாதிரி என் வழிய மறிக்கறீங்க?”
“ஆங், விமல் சார் உங்கள உடனே வரச் சொன்னாரு” என்று அதிகாரமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
‘ஐயோ முதல்ல இருந்தா’ என்கிற சலிப்புடன் இன்ஸ்பெக்டர் விமலின் கேபினுக்குள் நுழைந்து சல்யூட் செய்தார்.
“ஆமா, அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட?” என்று கேட்டார் விமல்.
“அந்த யூடியூபர் பொண்ணு இறந்து போச்சே, அந்த க்ரைம் ஸ்பாட்டுக்குதான் சார்.”
“அத அப்புறம் பாத்துக்கலாம், சோழிங்கநல்லூர் டிவிஷன்ல இருந்து ஒரு மிஸ்ஸிங் கேஸ். பொண்டாட்டியைக் காணும்னு ஒரு ஆளு கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காரு. அந்தப் பொண்ணோட மொபைல் போன் நம்ம ஏரியாலதான் கடைசியா சுவிட்ச் ஆஃப் ஆயிருக்கு. அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வருவாங்க. அவங்ககூட கோ-ஆர்டினேட் பண்ணி லொகேஷன்ல போய் விசாரணை ஸ்டார்ட் பண்ணு. அத முடிச்சிட்டு இந்த கேச ஃபாலோ பண்ணு.”
“சரிங்க சார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி தன் இருக்கையில் வந்தமர்ந்தார் பரிமளா.
சில நிமிடங்களில் விமல் குறிப்பிட்ட சப் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வந்தார். மிகவும் சீனியராகத் தெரிந்தார்.
“உக்காருங்க மேடம்” என்று சொல்லிவிட்டு, “சிந்தூ, ஒரு டீ” என்று அருகே இருந்த காவலரைப் பணித்தார்.
“என்ன கேஸ் மேடம்?”

“மூணு நாளா பொண்டாட்டியக் காணும்னு சொல்லி, ஆனந்த்னு ஒருத்தர் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கார். பொண்ணு பேரு சுப்ரியா. இருபத்தி ஒம்பது வயசு. செல்போன் நம்பர் வெச்சு டிரேஸ் பண்ணிப் பார்க்கும்போது, இந்த ஏரியால இருக்கிற செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கூல் பக்கத்துலதான் லாஸ்ட்டா ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருக்கு. நேர்ல விசாரிக்கச் சொல்லி என்ன இங்க விரட்டிவிட்டாங்க… ஹா… ஹா…”
“ஆமாம், குடும்ப கெளரவம் லொட்டு லொசுக்குன்னு பார்த்துட்டு முதலிலேயே வராம, கோல்டன் ஹவர்ஸ எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டு, ஆற அமர நம்மகிட்ட வந்து உசுர எடுப்பாங்க.”
“என்ன செய்ய நம்ம பிழைப்பு அப்படி.”
சிந்து தேநீருடன் வர, அதைப் பருகிவிட்டு, உதவிக்குத் தாமுவை அழைத்துக் கொண்டு, இருவருமாகச் சேர்ந்து காணாமல் போன அந்தப் பெண்ணின் செல்போன் கடைசியாக சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்த பகுதிக்குச் சென்றனர்.
ஒரு சந்துபொந்துகூட விடாமல் அந்தப் பகுதி முழுவதும் அலசி ஆராய்ந்தும், அங்கே இருந்த ஒன்றிரண்டு சிசிடிவி கேமரா பதிவுகளைப் பொறுமையாகப் பார்த்து முடித்தும்கூட எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
இதிலேயே பல மணி நேரம் விரயமாகி இருக்க, தனலட்சுமியைத் திருப்பி அனுப்பிவிட்டு, மிகுந்த களைப்புடன் காவல் நிலையத்திற்குத் திரும்பினார் பரிமளா.
அவரின் இரு சக்கர வாகனம் உள்ளே நுழைந்ததுமே, “அக்கா உங்களப் பார்க்கணும்னு இவங்க இங்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றார் கான்ஸ்டபிள் சிந்து.
“யாராம்பா?”
“யூடியூபர் அமுதா கேஸ்ன்னு நினைக்கிறேன். ஏதாவது கேட்டா பெரிய போலீஸ்கிட்டதான் சொல்லுவேன்னு சொல்றாங்க. இன்ஸ்பெக்டர் சார் ரொம்ப நேரமா ஸ்டேஷன்ல இல்ல. கொஞ்சம் அழுத்திக் கேட்டதும் அழ ஆரம்பிச்சிட்டாங்க” எனக் கிசுகிசுத்தார் சிந்து.
கையசைத்து அங்கே நின்றிருந்த பெண்மணியை அருகில் அழைத்தார் பரிமளா. அவள் நெருங்கி வரவும், “ஆமாம், யார் நீங்க? என்ன விஷயமா பாக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்.
“என் பேர் கஸ்தூரிங்க மேடம். நெருப்பு வெச்சிட்டு செத்துப் போச்சே அந்தப் பொண்ணோட அம்மா” என்றார் அந்தப் பெண்.
*
சூரியன் மறைந்து இருள் கவிழத் தொடங்கி இருக்கும் நேரம், ‘மாயா லா அசோசியேட்’ என்கிற பெயர்ப் பலகையைத் தாங்கி இருந்த அலுவலகத்துக்குள் நுழைந்தார் அந்தப் பெண்.
வேலைகளை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, கதவை அடைத்து வீட்டிற்குக் கிளம்பலாம் எனும் நேரம் பார்த்துவந்து நிற்பவரைக் கடுப்புடன் நோக்கியபடி, “ஆபிஸ் டைம் முடிஞ்சிடுச்சு, ஏதாவது கேஸ் விஷயம்னா மட்டும் பேசலாம். இல்லனா நாளைக்கு டே டைம்ல வந்து பாருங்க” என்றார் மனோகர்.
“இல்ல…ல்ல. அர்ஜன்ட்லி ஐ நீட் எ லீகல் ஹெல்ப்” என்றார் அவசரமாக.
“சரி வாங்க, கேபின்ல உட்காந்து பேசலாம்.”
“ம்ம்… இல்ல பரவால்ல. மாதினி மேடம் கிட்டதான் பேசணும்.”
“ஹலோ, நானும் லாயர்தாங்க, இங்க ஒன் ஆப் த பார்ட்நர்ஸ்.. என்கிட்டகூடச் சொல்லலாம்.”
“இல்லங்க, எனக்கு அவங்ககிட்டதான் பேசணும்.”
“அப்படின்னா நீங்க நாளைக்கு கால் பண்ணிட்டு வந்து பாருங்க. அவங்க முடிச்சிட்டுக் கிளம்பிட்டாங்க”
அவரின் முகம் அப்பட்டமாக ஏமாற்றத்தின் சாயலை வெளிப்படுத்தியது.
“சரி, உங்க கார்ட் இருந்தா குடுங்க. கால் பண்ணிட்டு வரேன்.”
மனோ நீட்டிய அட்டையை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தார்.
“ஆமாம், உங்க நேம் என்ன? மாதினி கிட்ட சொல்லி வைக்கறேன்” என்று அவர் கேட்டதற்கு, “சுப்ரியா” என்றார்.
(தொடரும்)
படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.




