ஆண் பெண் யாராக இருந்தாலும் பருவ வயதில் காதலில் விழுவதும், காதலைக் கடந்து போவதும் வழமையானது. சில காதல்கள் கல்யாணம் வரை செல்லும். பல காதல்கள் பாதி வழியில் நின்றுபோகும். இதற்குப் பல்வேறு சமூகக் காரணிகளோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ காரணமாகி விடுகின்றன.
காதல் தோல்வியிலிருந்து மீண்டு மறுபடியும் வேறு ஒருவரை காதலிப்பர். இல்லாவிடில் ‘கல்யாணச் சந்தைக்கு’ தம்மை தயார் படுத்திக் கொள்வர். இது யதார்த்தமான போக்காக இருப்பினும், ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் கடந்த காலம் என்பது அதிகமாக பெண்களையே பாதிக்கிறது. ஆண்கள் பல காதல் முறிவுகளையோ மணமுறிவுகளையோ கொண்டிருந்தாலும், அவற்றை நம் தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்கிறது. ‘மாயக்கண்ணன்’ என்றெல்லாம் போற்றவும் செய்கிறது. ஆணின் கடந்த கால உறவுகள் களங்கமாக இங்கே பார்க்கப்படுவதில்லை. ஆனால் பெண்களுக்கோ நிலைமை நேர் எதிராக உள்ளது. திருமண பேச்சுக்களில் பெண்களின் கடந்தகால காதல் முறிவுகள் பாரியளவு கவனத்தை ஈர்த்துக் கொள்கின்றன.
ஆண்கள் பிற நண்பர்களின் மனைவிமாரின் பழைய காதல் கதைகளை பொது வெளியில் பேசி சக ஆண் நண்பர்களை கேலிக்குள்ளாக்குவதும் காணக்கூடியதொன்று. இதனால் குறித்த தம்பதிகளிடையே பிரச்சினைகள் வந்து அவர்களின் உறவு சீர்குலைவது உண்டு. பல ஆண்கள், தங்கள் ஆண் நண்பர்களை பழி தீர்ப்பதற்காக ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.
கல்யாணப் பேச்சு என்று வந்தவுடன், கடந்த கால காதல் விடயங்களை முதன்மையாக நாக்கு கூசாமல் என்னிடம் கேட்ட நபர்கள் உண்டு.
முன் பின் தெரியாத அல்லது அவ்வளவாக பரிச்சயமில்லாத ஆண்களிடம் எப்படி ஒரு பெண் தனது தனிப்பட்ட வாழ்க்கை விலாவாரியாக பகிர்ந்து கொள்வாள்? எந்த வகையில் சம்பந்தபட்ட ஆணையோ அல்லது அவரின் குடும்பத்தாரையோ நம்பி தன் கடந்த கால வரலாறை ஒப்புவிப்பாள்? அதனை எவ்வாறு நம் சமூகம் ஒரு பெண்ணிடத்தில் எதிர்பார்க்கிறது?
எத்தனையோ திருமணப் பேச்சுகள் பாதியிலே பல்வேறு காரணங்களால் முறிவதுண்டு. அந்நிலையில் ஒரு பெண் மறுபடியும் இன்னொரு வரனிடம் தனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டிய கட்டாயத்தை நமது கல்யாண சந்தைகள் ஏற்படுத்துகின்றன.
இத்தனைக்கும் அவளின் கடந்த கால காதல் உறவுகள் முறிந்து பல வருடங்கள்கூட ஆகியிருக்கும். இருப்பினும் அந்த பழைய உறவைக் குறிப்பிட்டு பெண்களை அவமானப்படுத்தியும் முத்திரை குத்தப்பட்டு, அவர்களை இழிவுபடுத்தும் கேவலமான செயல்களை நமது தமிழ்ச் சமூகம் இன்றும் நிகழ்த்தி கொண்டிருக்கிறது. ‘கற்பு’ என்ற விடயத்தை பெண்களுக்கு மட்டும் பொருத்தி பார்த்து அளவுகோல் அமைக்கின்றனர். கற்பு என்பது ஒரு ஒழுக்கவியல் சார்ந்த விடயம் எனில் அது பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கப்படுவது ஏன்? ஆண்களுக்கு மட்டும் ஒழுக்கத்தில் விதிவிலக்கு என்று கூறி அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்கிறது.
திருமணத்துக்குத் தயாராகும் தம்பதியர் தம்மிடையே பரஸ்பரமான நல்லுறவை வளர்த்துக் கொண்ட பின்னர், தமது முந்தைய காதல் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது வேறு; அது திருமணத்தின் பின், சில வருடங்களுக்கு பிறகும் நிகழக்கூடும். இவ்வகையான உரையாடல்கள் ஆரோக்கியமான அழுத்தங்கள் அற்ற சூழ்நிலையில் இடம்பெறுவது முக்கியமாகும். ஆனால் பல பெண்கள் தமது முந்தைய காதல் விடயங்களை முன்னமே தெரிவித்தமையால் அதனால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தும் உள்ளனர். இப்பிரச்னையை இருபாலரும் எதிர்கொண்ட போதும், பெண்களின் நிலை ஒப்பீட்டளவில் மோசமாக உள்ளது. வாழ்க்கைத் துணை சந்தேகம் கொள்வதாலும் அதனால் ஏற்படும் மன உளைச்சலாலும் பல திருமண உறவுகள் முறிந்துபோகின்றன.
ஆணோ பெண்ணோ, தமது முந்தைய காதல்கள் நிமித்தம் அவர்களின் தற்போதைய உறவுகள் பாதிப்படையாமல் இருக்கக்கூடிய ஒரு சமுகத்தை உருவாக்கா விடில், விவாகரத்துகள் அதிகரிக்கவே செய்யும். இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் நீக்கப்பட வேண்டும். ஒருவர் தன் கடந்த கால உறவு பற்றி இஷ்டப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளாலாம். அதை இரண்டு வரிகளில்கூட சொல்லிவிடலாம். அதை ஒரு முன் நிபந்தனையாக திருமணத்திற்கு முன் விதிப்பது எவ்விதத்திலும் ஒரு இனிமையான சூழலை உருவாக்க போவதில்லை.
பெண்களின் உடல்களுக்கும் ஆண்மைக்கும் அதன் ‘கௌரவத்துக்கும்’ உள்ள நேர்கோட்டுத் தொடர்பு நம் தமிழ் சமூகத்தின் சாபக்கேடாகும். சில வருடங்களுக்கு முன், சமூகப் பணி புரியும் தோழர் ஒருவர் கூறிய அறிவுரை வார்த்தைகளை இங்கு நினைவு கொள்கிறேன்.
“உன் முந்தைய காதல்களை எல்லாம் வரிசைப்படுத்தி பட்டியலிட்டு ஆவணமாக சமர்பித்து, உன்னைக் கல்யாணம் செய்பவர் அவற்றை சரி பார்த்து ஒப்பமிட்டு உன்னை ஏற்றுக் கொள்வராயினும், அது எவ்வாறான உணர்வை உனக்கு தருகிறது?” என்றொரு கேள்வியை என்னிடம் முன் வைத்தார். அந்த வினா என்னை சிந்திக்க வைத்தது மட்டுமல்ல, இனி எவரிடமும் என் கடந்த காலத்தை ஒலி நாடா பதிவு போல் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அறவே இல்லை என்ற உண்மையை உணர்த்தியது.
இப்போதெல்லாம் முறிந்த காதல் பற்றியோ திருமணம் பற்றியோ யாராவது பேசினால், அது பற்றி நான் பேச விரும்பவில்லை, வேறு ஏதாவது பேசுவோமா என்று புன்னகையுடன் செல்லும் மனப்பாங்கை ஏற்படுத்திக் கொண்டேன். நெருங்கிய தோழர்களிடம் அதிலும் மனம் ஒத்துழைத்தால் மட்டுமே அது பற்றிப் பேசுவேன். நம் தோழியர்களும் தம் கடந்த கால வாழ்வை அவமானமாகக் கருதாமல், தன்னம்பிக்கையோடும் தைரியத்துடனும் உலகை எதிர் கொள்ள வேண்டும்.
படைப்பாளர்
அஞ்சனா
பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.