இலங்கையின் குடியரசுத் தலைவர் தேர்தல் செப்டம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தல் 14ஆம் திகதி நவம்பரில் இடம்பெறவுள்ளது.
‘அரகலய’ என்றழைக்கப்பட்ட 2022 மக்கள் புரட்சிக்குப் பின்னர் உருவான அரசியல் கட்சி, நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் போராட்ட முன்னணி என்ற பெயரில் முதன்முதலாகக் களமிறங்கியது. மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கை அறிக்கை, அதன் அடிப்படை உரிமைகள், சரத்துகளில் பாலின சமத்துவம் வலியுறுத்தியது மட்டுமன்றி, வீட்டு வேலைகளில் பெண்கள் உழைப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துப் பேசியுள்ளமை இலங்கைத் தேர்தல் அரசியலில் மிக முக்கியமான மைல்கல். நான் அறிந்தவரை வேறு எந்த கட்சியும் இது பற்றி தமது கொள்கைகளில் உள்ளடக்கவில்லை.
பெண்களே பெருமளவில் செய்துவரும் வீட்டு வேலைகளும் பராமரிப்புப் பணிகளும் சமூகத்தில் ஏன் குறைந்த மதிப்பீட்டைப் பெறுகின்றன? அதையொத்த வேலைகளுக்கு ஊதியத்துக்கு, பெண்கள் அழைக்கப்பட்டால் ஏன் அவற்றுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது? எடுத்துக்காட்டாக சமையல், துப்புரவு பணிகளைச் செய்யும் தொழிலாளர்களைச் சமூகம் எவ்வாறு நடத்துகிறது? ஊதியம் தரும் வேலைகளில் ஈடுபடும் பெண்கள், வீடு திரும்பிய பின்னர், அவர்களே மீண்டும் வீட்டு வேலைகளுக்கான உழைப்பில் ஈடுபடுகிறார்கள். இந்த இரட்டைச் சுமையை பெண்கள் எப்படிக் கையாளுகிறார்கள்?
இப்படிக் கேள்விகள் இன்று எமது பெண்களின் சிந்தனைகளிலும் பேச்சுகளிலும் தென்பட ஆரம்பித்துவிட்டது. 20களில் எனக்கு இந்த வினாக்கள் எழும்போது, நான் மட்டும் இப்படி சிந்திக்கிறேனோ என்ற ஐயம்தான் எழுந்தது. ஏனெனில் அன்றைய சூழல் என்னைக் கல்யாணச் சந்தைக்குத் தயார்படுத்துவதற்கான வீட்டாரின் முனைப்புகளில் நிரம்பியிருந்தது.
இது போன்ற பெண்ணியச் சிந்தனைகள் விநோதமாகப் பார்க்கப்பட்டது. 35 வயது கடந்து பல தேடல்களின்பின் புரிகிறது, பல தசாப்தங்களுக்கு முன்னரே பல பெண்கள் இது பற்றிச் சிந்தித்து, போராடி எழுதிவிட்டும் சென்றுவிட்டார்கள். மேல் கல்வியையும் வாசிப்பையும், அதுவும் குறிப்பாக பெண்ணிய வரலாறு மற்றும் அரசியல் தொடர்பாகப் பெண்கள் படிப்பதையும் விவாதிப்பதையும் பல குடும்பங்கள் ஏன் விரும்புவதில்லை என்று இப்போது நன்றாகவே புரிகிறது.
பாலின ரீதியான வேலைப் பகிர்வும் பாகுபாடும், குறிப்பாகக் குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் பெண்களின் உழைப்பைச் சுரண்டுகின்றன என்பதை உழைப்பு-ஊதியம் என்ற அடிப்படையில் நோக்குவோம். ‘ஆண்களைவிட நாளொன்றுக்கு இரண்டரை மடங்கு அதிகமான மணித்தியாலங்கள் ஊதியமற்ற வேலைகளில் பெண்கள் ஈடுபடுகின்றனர்’ என ஐக்கிய நாடுகள் பெண்கள் சபையினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஊதியம் இல்லாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பராமரிப்பை வழங்கும் பொறுப்பு அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, அவர்கள் கல்வி, ஊதியம் ஈட்டும் வேலை, சுய பராமரிப்பு (self care) என பலவற்றையும் இழக்கிறார்கள்.
பெண்களே பெரும்பாலான ஊதியம் ஈட்டும் பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். ஆனால் அத்தொழில்கள், அடிப்படைச் சமூகப் பாதுகாப்பு இல்லாத, குறைந்த ஊதியத்துக்கு நீண்ட நேரம் வேலை செய்யும் நிலைமையைக் கொண்டிருக்கிறது. சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலை உள்பட, பராமரிப்புத் துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்.
இந்த ஏற்றத்தாழ்வு, பெண்களும் சிறுமிகளும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை முழுமையாக உணரவிடாமல் தடுக்கிறது. பெண்களும் சிறுமிகளும் எல்லா இடங்களிலும் மோசமான ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணியை வழங்குபவர்களாக இருக்கிறார்கள். மேலும் மிகவும் பின்தங்கிய பெண்கள் – வறுமையில் வாழ்பவர்கள், புலம்பெயர்ந்த பெண்கள், முறைசாரா வேலையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் – ஊதியம் இல்லாத பராமரிப்புப் பணியின் மிகப்பெரிய பங்கைச் சுமக்கிறார்கள். உலகளவில் ஊதியம் பெறும் வீட்டுப் பணியாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள்.
“சமூக மறு உற்பத்தி” என்பது, சமூகக் கட்டமைப்புகள் மற்றும் நிலைஅமைப்புகள் பராமரிக்கப்பட்டு காலப்போக்கில் தொடரும் செயல்முறை எனச் சமூகவியலாளர்களால் விளக்கப்படுகிறது. இச் செயல்முறையில், எடுத்துக்காட்டாக, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, பாலியல் வேலை, அத்துடன் பல நாடுகளில் வீட்டு வேலைகளின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் வேளாண்மையின் வாழ்வாதார வடிவங்கள் ஆகியவை அடங்கும்.
சமூக மறு உற்பத்திக் கோட்பாடு (Social Reproduction Theory) ஒரு சிக்கலைத் தீர்க்கும் முயற்சியாகத் தொடங்கியது: தொடக்கத்தில் இருந்தே, பெண்ணியவாதிகளுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்க முடியாததாகத் தோன்றியது. அடிப்படைப் பிரச்னை எது – பாலினமா அல்லது வர்க்கமா? முதலாளித்துவத்தை ஆணாதிக்கத்தின் அடிப்படையில் விளக்க முடியுமா அல்லது நேர்மாறாக விளக்க முடியுமா? அவ்வாறு செய்வது பெண்ணியவாதிகளையோ அல்லது மார்க்சிஸ்டுகளையோ தங்கள் வேலையை மற்றவர்களுக்கு அடிபணியச் செய்ய நிர்பந்திக்குமா? முதலாளித்துவமானது ஆணாதிக்கத்தை நிச்சயமாக ஊட்டி வளர்க்கிறது. ஆனால் ஆணாதிக்கத்தின் தொடக்கப்புள்ளி அதுவல்ல என்பதே என் புரிதல்.
பெண்ணியவாதிகள் நீண்ட காலமாக பெண்களின் மறு உற்பத்தி உழைப்பு, கண்களுக்குப் புலப்படாதத் தன்மை கொண்டுள்ளதை நிரூபித்துள்ளனர். எடுத்துக்காட்டு : குழந்தைகளைப் பெற்றெடுப்பது வளர்ப்பது, குடும்பங்களைப் பராமரித்தல் மற்றும் சமூக ரீதியாக ஆண் உழைப்பைத் தக்கவைத்தல் என நடைபெறும் உற்பத்திப் பொறிமுறைகள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து வந்த பெண்ணியப் போராட்டத்தின் ஒவ்வொரு அலையும், ஊதியம் பெறாத வீட்டு மற்றும் பராமரிப்பு வேலை, வீட்டு வேலை அல்லது பராமரிப்புப் பணி எனப் பலவிதமாக குறிப்பிடப்படும் இத்தகைய வேலைகளில் பெண்களின் செயல்திறனைக் குறிக்கும் ஏற்றத்தாழ்வுகளைத் தீவிரமாக வினவியது.
தொழிற்புரட்சிக்கு (Industrial revolution) முன்னர், ‘உற்பத்திக்கும்’ இப்போது ‘சமூக மறு உற்பத்தி’ என்று அழைக்கப்படுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை. மேலும் பாலின தொழிலாளர் பிரிவு இருந்தபோதிலும், ஆண்களும் பெண்களும் திட்டவட்டமாக வேறுபட்ட செயல்பாடுகளைச் செய்யவில்லை. எனவே, நாம் பேசும் தனித்தனி பிரிப்பு உருவாக்கம், ஒப்பீட்டளவில் சமீபத்தியது. தொழில்துறை புரட்சியானது பணியிடத்துக்கும் குடும்பத்துக்கும் இடையேயான பிளவைக் கூர்மைப்படுத்தியது. எங்கெல்ஸ், குடும்பத்துக்குள் பெண்கள் ஒடுக்கப்படுவதை அவசியமாக்கிய தனியார் சொத்துரிமை, முதலாளித்துவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறினார்.
இருப்பினும், மார்க்சிஸ்டுகள்கூட வீட்டுக்குள் பெண்கள் செய்யும் ஊதியம் இல்லாத வேலையை ஒப்புக்கொள்ளவில்லை; எங்கெல்ஸ் குழந்தைகளை வளர்ப்பதிலும் பாலூட்டுவதிலும் பெண்களின் உழைப்பை, உற்பத்தி சக்திகளுக்குப் பதிலாக இயற்கையின் நியதி என்றக் கட்டமைப்புக்குள் தள்ளினார். மாறாக, மார்க்சிஸ்டுகள் பாலின சமத்துவத்திற்கான திறவுகோல் பெண்கள் ஊதியம் பெறும் வேலையில் நுழைந்து பொருளாதார ரீதியாக சுதந்திரமாக மாற வேண்டும் என்பதே.
பொதுவுடைமை கோட்பாட்டுப் (socialism) பெண்ணியம், பெண்களுக்குள்ள வீட்டுக்குள் ஊதியம் இல்லாத வேலை மற்றும் வீட்டுக்கு வெளியே ஊதியம் தரும் வேலை என்ற இரட்டைச் சுமை பற்றிப் பேசியது. இதனூடே பாலியல் ஒடுக்குமுறையானது பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான வன்முறை மற்றும் தொழிலாளர்களுக்குள் பாலின ஊதியப் பாகுபாடு போன்ற வடிவங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் ஊதியம் ஈட்டும் தொழிலில் இயங்கினாலும், தொடர்ந்தது.
இது 1970களின் வீட்டு வேலைக்கான ஊதியம் (Wages For Housework – WFH) பிரச்சாரத்திற்கும் 1980 களின் உள்நாட்டு தொழிலாளர் விவாதங்களுக்கும் வழிவகுத்தது. ஃபெடரிசி (2012) சமூக மறுஉற்பத்தியின் முக்கிய கோட்பாட்டாளர், இதை மேலும் எல்லோருக்கும் புரியும் படியாக வெளிப்படுத்தினார்: வீட்டைச் சுத்தம் செய்வது மட்டும் வீட்டு வேலை அல்ல. இது ஊதியம் தரும் வேலை செய்பவர்களுக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சேவை செய்து, அவர்களை நாளுக்கு நாள் வேலைக்கு ஆயத்தப்படுத்துதல், நமது குழந்தைகளை அதாவது எதிர்கால தொழிலாளர்களை அவர்களுக்குப் பிறப்பிலிருந்து அவர்களின் பள்ளிப் பருவம் வரை பராமரித்தும் கண்காணித்தும், அவர்களும் முதலாளித்துவத்தின் கீழ் அவர்கள் எதிர்பார்க்கும் வழிகளில் செயல்படுவதை உறுதிசெய்கிறது.
இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு தொழிற்சாலையின் பின்னால், ஒவ்வொரு பள்ளியின் பின்னால், ஒவ்வொரு அலுவலகத்தின் பின்னால், அந்தத் தொழிற்சாலைகள், பள்ளிகள், அலுவலகங்கள் அல்லது சுரங்கங்களில் வேலை செய்யும் உழைப்பு சக்தியை, அதாவது தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் லட்சக்கணக்கான பெண்களின் உழைக்கும் பணி மறைந்துள்ளது.
பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் சமூகத்தில் குறைந்த அந்தஸ்தை பெறக் காரணம் அதற்கு ஊதியம் கொடுக்கப்படாத வேலை என்பதால் மட்டுமா? பெண்கள் இயற்கையாகக் குழந்தை பெறும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், குழந்தைப் பராமரிப்பும் அதனைச் சார்ந்த உணவு தயாரித்தல், துப்பரவுப் பணி அடங்கலாக வீட்டு வேலைகள் செய்வது, பெண் என்ற பாலினம் காரணமாக முதன்மை அந்தஸ்தைப் பெறவில்லையா? இதே வேலைகள், ஊதியம் தரும் தொழில்களாக மாறும் தறுவாயிலும் குறைந்த ஊதியத்தையும் குறைவான சமூக அந்தஸ்தையும் மதிப்பீட்டையும் பெறுவது ஏன்?
தொடர்ந்து சிந்திப்போம்.
படைப்பாளர்
அஞ்சனா
பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.