ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?

சுய பராமரிப்பின் மற்ற வழிமுறைகளைக் காண்போம்.

  • தனக்கென ஓர் இலக்கை நிர்ணயிப்பது:

இந்த மண்ணில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் பிறக்கிறோம். சிலர் அதைக் கண்டறிந்து வெற்றி பெறுவர். சிலர் அதைப் பற்றிய எந்த எண்ணமும் இன்றி வாழ்ந்து மடிவர். நமக்கென ஒரு லட்சியத்தோடு வாழும் போது நாம் வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும் சுவாரசியமாகவும் ஆகிறது. சலிப்பிற்கு இடமே இருக்காது. உங்கள் இலக்கைத் தேர்ந்தெடுக்க வயதோ, பொருளாதார நிலையோ, உடல் நிலையோ மற்ற எந்தச் சூழ்நிலையோ தடையே இல்லை. நீங்கள் அடைய விரும்பும் லட்சியத்தை, நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது மட்டும்தான் முக்கியம். சரி லட்சியத்தோடு வாழ்வது எப்படிச் சுய நேசத்தை அதிகரிக்கும்? உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் நகர நகர, உங்கள் மேல் உங்களுக்கு மரியாதை கூடும். ஒவ்வொரு சிறிய வெற்றியும் உங்கள் நம்பிக்கையைக் கூட்டும். உங்களின் வெற்றி புதிய நட்புகளைத் தேடித்தரும். உங்கள் சிறகுகள் விரிவதை நீங்களே உணர ஆரம்பிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தின் மேல் கவனம் கூடும். உங்களை நீங்களே இன்னும் நன்றாக மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

  • புதிது புதிதாக ஏதும் முயற்சி செய்வது:

நம்மை நாமே தினமும் புதுப்பித்துக் கொள்ள மிகவும் உதவும். புதிதாக ஒரு மொழி கற்றுக் கொள்ளலாம், ஆர்வமுள்ளவர்கள் இசை, நாட்டியம், ஓவியம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளலாம். உடனே ஒரு சிலரின் மைண்ட் வாய்ஸ், “ஆமா, இதெல்லாம் சின்ன வயசுல ஆசைப்பட்டேன், இப்போ கத்துக்கிட்டு என்ன பண்ண?“

அப்போது நமக்கு வாய்ப்பு வசதியோ இல்லாமல் போய் இருக்கலாம். இன்று முடிகிறபோது செய்வதில் என்ன தவறு? ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள ஆர்வமும் வாய்ப்பும்தானே அவசியம்? வயது ஒரு தடையே இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் எதை வேண்டுமானாலும் யூடியூப்  கற்றுத் தருகிறது. அப்படி இல்லாவிடில் இருக்கும் இடத்தில் இருந்தே கற்றுக்கொள்ள நிறைய ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. இங்கே தேவை ஆர்வமும் கொஞ்சம் மெனக்கெடலுமே. ஆனால் இது தரும் பரிசு மிகப் பெரிது. மனம் எப்போதும் உற்சாகத்தில் இருக்கும். பெங்களூருவில் இருந்த போது என்னுடைய தோழி நடனம் கற்க ஆரம்பித்தாள். பள்ளிக்குப் போகும் பிள்ளை ஒருவன், ஒரு வயதில் ஒரு குழந்தை கையில். சிறிய பிள்ளையையும் கையில் எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் செல்வாள். ஒருமுறை அதைப் பற்றிப் பேச்சு வரும் போது, முதலில் கற்றுக்கொண்டது பின்னர் பிரசவம், கணவருக்கு ஊர் ஊராக மாறும் வேலை போன்ற காரணத்தால் தொடர முடியவில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்ததும் தொடருகிறேன் என்றாள். ஆனாலும் கையில் குழந்தையுடன் வகுப்புக்குச் செல்வதில் உள்ள சங்கடங்கள் கொஞ்சமில்லை. அதைப் பற்றிக் கேட்ட போது, “கஷ்டம்தான், ஆனால் அதைப் பார்த்தால் நான் எப்போதுமே ஆசைப்பட்டதைச் செய்ய முடியாதே, என் ஆசைக்காக நான்தானே மெனக்கெட வேண்டும்“ என்றாள். அந்த வலிமைதான் அவளை வெற்றிகரமான நடன மங்கை ஆக்கியது. அனைவருக்கும் ஒரு செயலைச் செய்ய முடியாததற்கு மிகவும் நியாயமான ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் தன்னை முழுதாக நேசிக்கும் ஒருவர் அந்தக் காரணங்களை எல்லாம் புறந்தள்ளி தனக்காக மெனக்கெடுகிறோம் என்கிற மகிழ்ச்சியோடு லட்சியத்தை நோக்கிச் செல்வார். லட்சியத்தை நோக்கிப் பறக்க முடிந்தவர் பறக்கலாம், ஓட முடிந்தவர் ஓடலாம், நடக்க முடிந்தவர் நடக்கலாம். எதுவுமே முடியாதவர் தவழ்ந்தாவது செல்வர். ஏனெனில் காரணங்களைவிடத் தன்னையும் தன் லட்சியத்தையும் அவர் மிகவும் நேசிப்பார்.

நான் சென்னை வந்த பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் அவளை பெங்களூருவுக்குச் செல்லும்போது சந்தித்தேன். இடையே அவள் இரண்டு நாடுகளுக்கு மாற்றலாகி, வேறு ஊருக்கும் மாற்றலாகி மறுபடியும் பெங்களூருவுக்கே வந்திருந்தாள். இப்போது அவள் ஒரு முழு நேர நடன தாரகை. அவள் முகத்தில், பேச்சில் ஒளிர்ந்த தன்னம்பிக்கையும், தெளிவும் அவளது சுய நேசம் அவளுக்குத் தந்த பரிசு.

எத்தனை ஊர், நாடு மாறிப் போனாலும் அவள் முதலில் தேடுவது அங்குள்ள நடன வகுப்புகளைத்தான். ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் தனது இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்பதற்கு அவள் சிறந்த உதாரணம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.