1940ல் நடந்த ஆய்வு இது. வெள்ளை, கறுப்பு நிறத்திலான இரண்டு பொம்மைகளைக் குழந்தைகளிடம் காட்டி அந்த பொம்மைகளின் நிறம் என்னவென்று கேட்கிறார்கள். அதன் பிறகு விருப்பம் சார்ந்த கேள்விகள் அணிவகுக்கின்றன.

எந்தப் பொம்மையுடன் விளையாட உனக்குப் பிடிக்கும்? எது நல்ல பொம்மை? எது அழகான பொம்மை? அனைத்துக்கும் விடை, வெள்ளை நிறப் பொம்மையாகவே இருக்கிறது. கடைசிக் கேள்வி. எந்தப் பொம்மை உன்னைப் போலவே இருக்கிறது? அதுவரை பதில் சொல்லிக்கொண்டிருந்த கறுப்பினக் குழந்தைகள் இதற்கு விடை சொல்லத் திணறுகிறார்கள்.

தன்னைப்போல இருப்பவர்களை முன்மாதிரியாகக் கொண்டுதான் குழந்தைகள் வளர்கின்றன. தன்னை நேர்மறையாக அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத சமூகக் கட்டமைப்பில் வாழும் குழந்தையின் மனத்தை வெளிச்சமிட்டுக் காட்டிய ஆய்வு இது. டாக்டர் கென்னத் மற்றும் மேமி கிளார்க்கின் இந்த ஆய்வு பிரவுன் வெர்சஸ் போர்ட் வழக்கில் சாட்சியாக இணைந்தது. கறுப்பினத்தவருக்கான உரிமைகள் மறுக்கப்படுவதை உறுதி செய்யும் புள்ளிவிவரங்கள் புரிய வைக்கமுடியாத ஒன்றை இந்த ஆய்வு புரியவைத்தது. சிவில் உரிமைப் போராட்டங்களில் கறுப்பின உரிமை காக்கும் பல தீர்ப்புகளை வழங்க இந்த ஆய்வு காரணமானது என்கிறது பிளாக் பார்பி ஆவணப்படம்.

https://thedig.howard.edu/all-stories/mamie-phipps-clark-pioneering-psychologist-behind-famed-dolls-test

உயர்வான எந்த ஒன்றுடனும் தன்னை அடையாளப்படுத்த ஏதுமில்லாத சமூகத்தில் வளரும் குழந்தை மனத்தில் ஏற்படும் பாதிப்பைப் புரிந்துகொள்ளும் குணம் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சலுகைபெற்ற சமூகம் அதைக் கண்டுகொள்ளாமலே கடந்துவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதை உணர்வதற்குள்ளாகவே அவர்களின் பாதி ஆயுள் முடிந்துவிடுகிறது. பிளாக் பார்பி ஆவணப்படம் இதில் சற்றே வெளிச்சம் பாய்ச்சுகிறது. பொம்மைகளோடு விளையாடப் பிடிக்காத குழந்தைப் பருவம் கொண்ட லஜுரியா டேவிஸ் (Lagueria Davis), தன் அத்தைக்குப் பொம்மைகள் மீது இருக்கும் பிரியத்தை ஆராயத்தொடங்கினார். ஆவணப்படம் அப்படித்தான் உருக்கொண்டது.

Lagueria Davis, https://www.oklahoman.com/videos/entertainment/2023/06/09/ou-grad-lagueria-davis-talks-her-documentary-black-barbie/12070378002/

லைட் இன் தி டார்க், ஒன் இன் த்ரீ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டேவிஸ். டேவிஸை ஈர்க்காத பார்பி பொம்மைகள், அவர் அத்தையின் வீடு முழுவதும் நிறைந்திருக்கின்றன. காரணம், அவை அறிமுகமான காலத்தில், அதை உருவாக்கிய நிறுவனத்தில் அவரின் அத்தை வேலை பார்த்தார். பியூலா மே மிச்சல் அவர் பெயர். வெள்ளை நிறக் குழந்தை பொம்மைகளுடன், ஜாம் பாட்டில்களில் தானே பொம்மை செய்து விளையாடிய குழந்தைப் பருவம் அவருடையது. தாம் விளையாடும் பொம்மைகள் தன்னைப் போன்ற தோற்றத்தில் ஏன் இல்லை என்கிற கேள்விகூட எழாத தலைமுறை.

பார்பி பொம்மைகள், அக்காலத்தில் புரட்சியின் அடையாளம். மார்பகங்களுடன் இருக்கும் பொம்மையை ஆண்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதை உருவாக்கிய ரூத் ஹாண்ட்லர் பல போராட்டங்களுக்குப் பிறகே அதைச் சாதித்தார். சந்தையில் கிடைத்த வரவேற்பு ஆண்களை வேறுவழியின்றி ஒப்புக்கொள்ள வைத்தது. அடுத்து அறிமுகமாகிய கென் பொம்மையில் ஆணுறுப்பு இருக்கும் இடத்தில் சிறிய மேடான வடிவம் இருந்ததற்கும் எதிர்ப்பு எழுந்தது. தன் வடிவமைப்பைச் சந்தையில் சிறப்பாக விற்றுக்காட்டினார் ரூத். ஆண்கள் கோலோச்சிய வியாபாரத்துறையில் சாதனைப் பெண்ணாக வலம் வந்தார்.

வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெற்றாலும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்புடையவராக ரூத் இல்லை. பெண்கள் உடல் வடிவத்தை, அழகை முன்னிலைப்படுத்தும் பார்பி, இளம் பெண்கள் மத்தியில் அழகு பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்தியது. பெண்ணியவாதிகள் இதனை எதிர்த்தனர். தன்னுடைய நோக்கம் அதுவல்ல என்று கூறி பொம்மைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தினார் ரூத். டேவிஸின் அத்தை பியூலா, ரூத் திறமையாளர் என்றே கூறுகிறார். வேலை செய்யும் தங்களிடம் வந்து என்னென்ன மாறுதல்களை ஏற்படுத்தலாம் என்று கேட்டுச் செயல்படுத்த முயல்வார் என்கிறார் பியூலா.

மட்டேல் நிறுவனம், கறுப்பு பார்பிகள் தயாரிக்க ஆரம்பித்தது அப்படியான யோசனைகளின் அடிப்படையில்தாம். ஆனால் அந்த பொம்மைகளுக்கு, பார்பியின் நண்பர்கள் என்பதே அடையாளம். அமெரிக்கத் தொலைக்காட்சியில் முதன்மைக் கதாபாத்திரத்தில் தோன்றிய முதல் கறுப்பினப் பெண் ஜூலியா. அவர் முக அமைப்பை ஒத்த பார்பியும் தயாரிக்கப்பட்டது. இப்பொம்மைகள், வெள்ளை நிற பார்பி பொம்மைகள் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை.

அதுமட்டுமின்றி வெள்ளை நிற பார்பியின் அதே வடிவில் நிறத்தை மட்டும் மாற்றிய பொம்மைகளே அதிகம் இருந்தன. அதையும் மாற்றிக் கறுப்பினக் குழந்தைகளின் உதடுகளும் கண்களும் எப்படியிருக்குமோ அதைப்போலவே பொம்மைகள் வரத் தொடங்கின. இவையும் பார்பி பெயருடன் வந்தவை அல்ல. கறுப்பினப் பெண்ணான கிட்டி பிளாக் பெர்கின்ஸ், வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்த பிறகு தோற்றம், உடை அனைத்திலும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்படி மாற்றினார். பிளாக் பார்பி பொம்மைகள் குட்டை முடியும், கட்டையான நகையும் கொண்டு மிளிரத் தொடங்கின. முதல் பிளாக் பார்பி வெளியானது 1980ஆம் ஆண்டில்.

கிட்டி பிளாக் பெர்கின்ஸ்

பார்பி அலுவலகத்தில் பணிபுரியும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிட்டியைத் தேடி வந்து பார்த்துவிட்டுச் செல்வார்களாம். ஸ்போர்ட்ஸ் காரில் வேலைக்கு வரும், உயர் பதவியில் இருக்கும் கிட்டியின் வெற்றியைத் தம் வெற்றியாகவே பாவித்தனர் அவர்கள். இவர் தனக்குக் கீழே வேலைபார்க்கவும் கறுப்பினப் பெண் ஒருவரையே தேர்ந்தெடுத்தார்.

மருத்துவர், வழக்கறிஞர் எனப் பல்வேறு வேலைகள் பார்க்கும் பார்பிகள் வந்தன. கார் ஓட்டும், பார்ட்டி செய்யும் பார்பிகளும் இருந்தன. மனிதப் பெண்களுக்குச் சம்பந்தம் இல்லாத அளவுகளில், சிறுத்த இடை கொண்ட பார்பிகள் மட்டுமே வந்த நிலை மாறி வெவ்வேறு அளவுகளில் பார்பி பொம்மைகள் தயாரிக்கப்பட்டன.

ஷோண்டா ரைம்ஸ்

முன் மாதிரிகளாகக் கொள்ளத் தக்க பெண்களை ஒத்த உருவில் சிறப்பு பொம்மைகள் தயாராகின. தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஷோண்டா ரைம்ஸ், என் வயிறு இதைவிடப் பெரிதாக இருக்குமே அதைப் போலவே என்னுடைய பொம்மையும் இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார். ஹிஜாப் அணிந்த ஒலிம்பிக் வாள்வீச்சு வீரர் இப்திஹஜ் மொஹமத் உருவில் ஒரு பார்பி இருக்கிறது. அந்த பார்பியும் ஹிஜாப் அணிந்திருக்கிறது. பாலே நடனக்கலைஞர் மிஸ்டி போல ஒரு பார்பி உள்ளது.

35 விதமான தோல் நிறங்கள். 97 வகையான முடியலங்காரம், முடி நிறம். ஒன்பது அளவிலான உடல் வடிவங்கள். இவை மட்டுமன்றி, கண்ணாடி அணிந்த பார்பி, காது கேட்கும் கருவி அணிந்த பார்பி, சக்கர நாற்காலியில் இருக்கும் பார்பி என இயல்பான மனிதர்களைப் பிரதிநிதிப்படுத்த முயல்கிறார்கள். இதைச் சாத்தியப்படுத்தியவர்களில் சிலரை பிளாக் பார்பி ஆவணப்படம் அறிமுகம் செய்துவைக்கிறது.

டேவிஸ் மாதிரி பொம்மை பிடிக்காதவர் எனில் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கையில் ஒரு பொம்மைக்கு இவ்வளவு அக்கப்போரா எனத் தோன்றலாம். பொம்மையைக் கொண்டாடும் குழந்தைகள்தாம் பெரும்பான்மை. தம் இளம் வயதில் தன்னுடைய நிறத்தைச் சுமையாகக் கருத வேண்டியிருந்த அவலத்தை இதில் பல பிரபலங்கள் பதிவு செய்கின்றனர். இதை மாற்றி, உலகப் புகழ்பெற்ற பார்பி பிராண்ட் மெல்ல மெல்ல பன்மைத்துவத்தைக் கைக்கொண்ட கதை இது.

கென்னத் மற்றும் மேமி கிளார்க்கின் பொம்மைச் சோதனையை நம்மில் பலரும் அறிந்திருப்போம். குழந்தைகளின் மனத்தில் ஏற்பட்ட எதிர்மறைத் தாக்கத்தை நமக்கு உணர்த்திய ஆய்வு அது. இன்றும் இந்நிலைமையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. எனினும் அந்த ஆய்வுக்கு எதிர்த்திசையில் பன்முகத்தன்மை கொண்ட பார்பி எப்படியொரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குகிறது ஆவணப்படம். பொம்மை விற்பனை, வியாபாரம். பணம் முதன்மை நோக்கம் என்றாலும் பன்முகத்தன்மையும் விற்பனையாகும் பொருள்தான் என உணர்த்திய விதத்தில் பார்பி முக்கியத்துவம் பெறுகிறது.

முக்கியமாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த ஷோண்டா ரைம்ஸ், ஆளுமைமிக்க பெண்களை முதன்மைக் கதாபாத்திரங்களாக வைத்துத் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பவர். இதெல்லாம் யதார்த்தம் இல்லைங்க, யாரும் பாக்க மாட்டாங்க என்று சொல்லும் திரைத்துறையினரின் கருத்துகளை மாற்றும் வகையில் பணம் ஈட்டும் வெற்றிகரமான தயாரிப்பாளராக இருக்கிறார். தலைமைப் பொறுப்பில், அதிகாரம் மிக்க பதவியில், முடிவுகள் எடுக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. நல்லது செய்ய நினைத்தால் அதிகாரம் தலையாயது.

அம்பேத்கர், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவம் கேட்டபோது காந்தி அதைப் பிரிவினையாகப் பார்த்தார். காந்தி நல்லவர்தான். ஆனால், அதிகாரத்தில் ஒடுக்கப்பட்டவர் இருக்கவேண்டும் என அம்பேத்கர் சொன்னது அவருக்கு எந்த அளவுக்குப் புரிந்தது?

முடிவுகளை எடுக்க வேண்டிய இடத்தில் இருந்த காந்தி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நல்லது செய்ய எண்ணியதற்கும் ஒடுக்கப்பட்டவரான அம்பேத்கர் நல்லது செய்ய நினைத்ததற்கும் உள்ள இடைவெளி நம்மில் எத்தனை பேருக்குப் புரிகிறது?

இந்திய அரசியல் களத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி பல ஆண்டுகளாக விவாதம் நடப்பது நாம் அறிந்ததுதானே. இத்தனைக்கும் இந்தியாவில் இருக்கும் எல்லா கட்சிகளும் பாகுபாடின்றி இதன் தேவையை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இது நடைமுறைக்கு வருவதில் சிக்கல் இருக்கிறது. தலைமைப் பொறுப்பை, அதிகாரத்தை நோக்கி முன்னேறும் பெண்களில் யாருக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கிறதென்று கொஞ்சம் பாருங்கள்.

இத்தாலியின் வரலாற்றில் அதிகபட்ச அடிப்படைவாதம் பேசும் பிரதமராக மெலனி இருக்கிறார். அமெரிக்க வெள்ளைமாளிகையில் இளம் வயதில் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் கரோலின். எந்தக் கேள்வி வந்தாலும் சிக்ஸர் அடிக்கிறார். பெண்களின் உரிமையை மதிக்காத அதிபர் டிரம்ப்பை ஆதரித்துத் தன் திறமையைப் பயன்படுத்துகிறார் கரோலின்.

இந்திய அளவில் பார்த்தால் தமிழ்நாட்டுப் பெண்கள் கல்வி, வேலை, பொருளாதாரம், அறிவு எனப் பல தளங்களில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளனர். எந்தச் சந்தேகமும் இன்றி திராவிடக் கட்சிகளே இதற்குத் தலையாய காரணம். ஆனால் அவர்களின் வேட்பாளர் பட்டியல், அமைச்சர் பதவி என்று வரும்போது, அதில் பெண்களைத் தேடவேண்டியிருக்கிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் செர்சி பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டு ஒருவன் மிரட்டுவான். Information is power என அவன் சொன்னதுமே செர்சியின் கண்ணசைவில் நான்கைந்து வீரர்கள் அவனைப் பிடித்துக் கழுத்தில் கத்தியை வைப்பார்கள். Power is Power என்பார் செர்சி. அதிகாரத்தின் வலிமையை அந்தக் காட்சி எளிமையாகச் சொல்லும். அதிகாரத்தில் இருப்பதின் மூலம் சாதிக்கக் கூடியவற்றைக் குறைத்து மதிப்பிடலாகாது.

அதிகாரம் மிக்க பதவிக்கு வரவேண்டும் என ஆசைப்பட, முன்மாதிரிப் பெண்கள் அன்றாட வாழ்வில் மீண்டும் மீண்டும் நம் பார்வையில் படும்படி இருக்கவேண்டும். விஞ்ஞானியை வரையச் சொன்னால், பெண் விஞ்ஞானிகளை வரையும் அமெரிக்கப் பள்ளிக்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளைவிட அதிகம் என்கிறது பிபிசி செய்தி.

பொம்மை முதல் காட்சி ஊடகங்கள் வரை, முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கப் பெண்களைக் கொண்டாடுவதன் வழி ஏற்படும் மாற்றத்தை பிளாக் பார்பி பதிவு செய்கிறது. இந்த மாற்றத்தைப் படிப்படியாகச் சாத்தியப்படுத்தியோர் மரியாதைக்குரியவர்கள்.

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

பிளாக் பார்பி டிரைலர்

கென்னத் பொம்மைச் சோதனை – https://www.naacpldf.org/brown-vs-board/significance-doll-test

பொம்மைச் சோதனை மறுஉறுவாக்கம்

ரூத் ஹாண்ட்லர், பிபிசி நேர்காணல் – https://www.bbc.com/culture/article/20230714-barbie-creator-ruth-handler-on-the-real-life-inspiration-for-the-doll

பன்முகத்தன்மை கொண்ட பார்பி – https://shop.mattel.com/pages/barbie-diversity

செர்சியின் பவர்

பெண் விஞ்ஞானிகளை வரையும் குழந்தைகள் – https://www.bbc.com/news/science-environment-43460528