கதிரவனின் அனல் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஊடே இறங்கி, காற்றாடி வழியாக வெப்பக்காற்றை அறைக்குள் செலுத்திக் கொண்டிருந்தது. அந்த வெப்பத்திலும் சூடான தேநீரில் விழுந்துவிடாதபடி லாவகமாக பிஸ்கட்டை நனைத்துக் கடித்தவாறு, “இந்த கணக்குக்கு விடை கிடைச்சாச்சு. இதோ இந்த புத்தகத்தில விடை இருக்கு பாருங்க”, என்று என் இரு தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். என் பெயர் சத்யா(சத்தியவாணி).
“ஓ…கிடைச்சாச்சா? எழுதி வெச்சிக்கலாம். எப்படி எந்த புத்தகத்திலிருந்து கேள்விகள் வரும்னே தெரியலை” என்று கூறியவாறு மும்முரமாக எழுத ஆரம்பித்தாள் மீனா. “இந்த முறையாவது அரசுத் தேர்வுல பாஸ் ஆகி ஒரு நிரந்தர பணிக்கு போகணும். வீட்டில நிலைமை கவலைக்கிடமா இருக்குது”, என்று வருத்ததுடன் சொன்னாள் சவிதா. படித்து முடித்துவிட்டு மூன்று ஆண்டுகளாக அரசாங்க பணிக்காக நேரத்தையும், ஆயிரக்கணக்கில் தனியார் பயிற்சி மய்யத்திற்கு பணத்தையும் செலவழித்துக் கொண்டிருந்த நாங்கள் மூவரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தேநீரை ருசித்தவாறு படிப்பில் மூழ்கியிருந்தோம். மீனாவும், சவிதாவும் என் கல்லூரி தோழிகள்; அடிக்கடி என் வீட்டுக்கு படிக்க வருபவர்கள்.
சவிதா திடீரென வயிற்றில் கைவைத்து பிடித்து கொண்டாள். நான் அனுமானித்தது சரிதான். அவளுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி வந்திருப்பதாகக் கூறினாள். சிறிது நேரம் படுத்துக்கொள்கிறேன் என்றாள். “சரிப்பா… உள்ளே போய் படுத்துக்க”, என்றேன். “இல்லை, பரவாயில்லை… இங்கேயே ஓரமா படுத்துக்கறேன்”, என்றாள்.
நானும் மீனாவும் சிறிது நேரம் படித்துவிட்டு, மதிய உணவு சாப்பிடத் தயாரானோம். சவிதாவை எழுப்பி சாப்பிட அழைத்தோம். எப்போதும் கொண்டுவரும் பாத்திரம் அல்லாது, இன்று வேறொரு பிளாஸ்டிக் டப்பாவில் உணவு கொண்டுவந்திருந்தாள் சவிதா. “ஏன் இந்த சின்ன டப்பா? இது எப்படி பத்தும்? நான் வேற தட்டு தரேன்”, என்றேன். அவள் வேகமாகத் தலையசைத்து மறுத்தாள்.
சவிதா தயங்கித் தயங்கி என்னிடம் பல கேள்விகளை அடுக்கினாள்.
“சத்யா, உன் வீட்டில மாதவிடாய் சமயத்தில வீட்டுக்குள்ள அனுமதிப்பாங்களா?”
“ஏன் அனுமதிக்க மாட்டாங்க? இது என் வீடு தானே! அதெல்லாம் அந்தக் காலம். மாதவிடாய் தீட்டுலாம். இப்பவுமா அதையெல்லாம் பார்க்கிறாங்க?” ஆச்சிரியத்துடன் கேட்டேன் . சவிதாவின் கிராமம் மிகத் தொலைவில் இருந்தது. எங்கள் வீடிருந்த பக்கத்து டவுனிலிருந்து 45நிமிடங்களுக்கு மேல் பேருந்துப் பயணம் செய்ய வேண்டும்; பின் அங்கிருந்து ஊருக்குள் அரைமணி நேரம் நடக்க வேண்டும். தன் ஊரைப் பற்றி மெதுவாக சவிதா சொல்ல ஆரம்பித்தாள். நானும் மீனாவும் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினோம்.
“எங்க ஆளுங்க எல்லாம் பீரியட்ஸ் டைம்ல வீட்டுக்குள்ள போகமாட்டோம். வெளிய திண்ணையில கட்டில் போட்டு தான் படுத்துக்குவோம். சாப்பாடு இதுமாறி பிளாஸ்டிக் டப்பாவுல தான் சாப்டுவோம். முதல் நாள் அம்மா தான் குளிப்பாட்டுவாங்க. அதுக்கப்பறம் நாங்க குளிச்சிக்கலாம். குளிக்க வீட்டுக்குள்ள இருக்குற பாத்ரூமுக்கெல்லாம் போகக்கூடாது. வெளிய நானே மரத்துல புடவை வச்சி மறைச்சி கட்டி, குளிச்சிப்பேன்”, என்று அவள் சொல்லச்சொல்ல எனக்கு பல நடைமுறை சிக்கல்கள் மனதில் கேள்விகளாக எழ ஆரம்பித்தன.
“ஆமா…கிண்டல் இருக்கும், பார்க்கிறவங்க பார்க்கத் தான் செய்வாங்க. ஆனா இதுதான் எங்க வழக்கம். இதை நாங்க செய்யத் தான் வேணும்”
“சரி, உன் துணிகளை துவைச்சு காயவைக்கவாவது இடம் தருவாங்களா?”
“தீட்டான துணிகளை எல்லாம் நாங்க துவைக்க மாட்டோம். அந்தத் துணிகளை துவைக்க வேற ஆளுங்க இருக்காங்க. அவங்க கிட்ட கொடுத்துருவோம்”.
“உங்க வீட்டுல உள்ள எல்லா துணிகளையும் அவங்க தான் துவைப்பாங்களா, சவிதா?”
“இல்லை சத்யா..தீட்டு துணி மட்டும் துவைப்பாங்க”.
“இது என்ன கொடுமை? அவங்களும் மனுஷங்க தானே! இது சரியில்ல சவிதா… இதை கேட்கும் போதுதான், அறிவியல், இயந்திரக் கண்டுபிடிப்புகள் நம்ம சமூகத்துல, சமூக நீதியில எவ்வளவு முக்கியப் பங்காற்றுதுன்னு புரியுது. ஒரு வாஷிங்மிஷின் இருந்தா இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வு, தீட்டுக்கு அவசியம் இல்லாம போயிரும் இல்லையா?”, என்றேன். சவிதா மௌனமாக இருந்தாள்.
அடுத்து மீனாவிடம், “மாதவிடாய் சமயத்தில உன் வீட்டில் எப்படி?” என்றேன். “எங்க வீட்டில சமையல் அறையில மற்றும் கோவில்களுக்குப் போக அனுமதி இல்லை சத்யா! பெண்கள் அந்த சமயத்தில வேலை செய்யாம ஓய்வில இருக்கணும்னு தானே இதெல்லாம் செய்றாங்க, இதுல என்ன தப்பு?” என்றாள் மீனா.
“வேலை செய்யக்கூடாது அப்டிங்கறது தான் எண்ணம்னா, ‘அங்கே வராதே, இங்கே வராதேன்னு’ தடுக்கவேண்டிய அவசியம் இல்லையே! ஓய்வு எடுக்கவிடலாம் இல்லையா? வீட்டுப் பொருள்களைத் தொடக்கூடாது, தீட்டாயிடும்னு சொல்றதெல்லாம் மூடநம்பிக்கை தானே மீனா?? “, என்று கேட்டேன்.
“கண்டிப்பா. இதெல்லாம் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில திணிக்கப்பட்ட விசயங்கள். நம் தலைமுறை தான் இதிலிருந்து வெளிவரணும்”, என்றேன். “இதை எங்க ஆளுங்க கிட்டலாம் பேசமுடியாது சத்யா. அவங்க மத மூடநம்பிக்கையில ஊறிப்போனவங்க…”, என்று சோர்வான பதில் ஒன்றைத் தந்தாள் சவிதா.
“ஏன் சவிதா உங்க ஊருல நூலகம் இல்லையா? பள்ளிக்கூடம்? படிச்சவங்க? ஆசிரியர்கள்? இல்லையா? அவுங்க புரியவைக்கலாமே?”, என்று கேட்டேன்.
“எங்க ஊருக்குள்ள பள்ளிக்கூடம் இல்லை சத்யா. நாங்க பக்கத்து ஊருக்குத் தான் போய்ப் படிச்சோம். எங்க ஆளுங்க பெரும்பாலும் நிலம் வெச்சிருக்கறதுனால ஆண்கள் படிப்பது பற்றி பெரிசா அக்கறை காட்டமாட்டாங்க. பெண்களும் சீக்கிரமே கல்யாணம், குடும்பம்னு போயிடுவாங்க. நாங்க ஒரு சிலர்தான் ஓரளவு படிச்சிருக்கோம். எங்க ஊருக்குள்ளயும் மத்த ஆளுங்கள விடமாட்டாங்க”, என்றாள் சவிதா.
“என்ன சொல்ற சவிதா? அப்போ நான் வந்தாலும் விட மாட்டாங்களா?” என்றேன் குழப்பத்துடன்.
“நீங்க என்ன ஆளுங்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா விடமாட்டாங்க. சொல்லாம வேணா போகலாம் சத்யா… நான் உங்க வீட்டில வந்து படிக்கிறேன்னு தெரிஞ்சாலே, வீட்டிக்குள்ள போகும்போது குளிச்சுட்டு தான் போகணும்”, அவளது சொல் ஒவ்வொன்றும் என்னைக் கத்தி போல் குத்தியது.
ஒரு நொடி தான். சட்டென சுதாரித்துக்கொண்டேன். அவர்களின் அறியாமையை எண்ணிப் பரிதாபம் வந்தது. “உன் ஊரில மத்த பெண்களும் மாதவிடாய் சமயம் வீட்டுக்குள்ள போகமுடியாது இல்லையா? நீ படிச்சு அரசு வேலை வாங்கினதும், உங்க ஊருல உள்ள சிறுவர், சிறுமியர் கிட்ட நீ பேசு சவிதா. இந்த மடைமைகள் – சாதி ஏற்றத்தாழ்வு , பெண்கள் தீட்டு போன்றதெல்லாம் உங்க அடுத்த தலைமுறையாவது உதறித்தள்ளட்டும்”, என்றேன்.
அதற்குள் மீனா, “ஆமா சத்யா… எங்க வீட்டுல கூட என் சித்தப்பா சாதி பார்க்குற ஆள். எங்கள் சித்தப்பா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ரொம்ப அழகா அடுக்குமாடிவீடு கட்டியிருக்கார். அரசாங்க வேலை பார்க்கிறார். ஆனாலும் என் சித்தப்பா அவரை, ‘என்னதான் வசதி வந்தாலும் அவன் என்னை விட தாழ்ந்த சாதி பயதானே?’ன்னு பேசுவார். எங்க வீட்ல உங்க சாதியைக் கேட்கும் போது, ‘ நம்ம ஆளுங்கன்னு’ பொய் சொல்லித்தான் படிக்க வர்றேன்”, என்று நான் காயப்படுவேன் என்பதை உணராமல், தன் பங்கிற்கு அனைத்தையும் கொட்டித்தீர்த்தாள்.
என் வீட்டுக்குப் படிக்க வரும் இருவருக்கும், அதில் எப்படிப்பட்ட சாதி சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்த என்னால், சில ரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை. 21ம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாக நாம் விரும்பும் பொருள்கள் அத்தனையுமே நம் வீட்டுக்குள் வரும் வசதி இருக்கிறது. இந்தக் காலத்திலும் இந்த கிராமங்கள் எப்படிப்பட்ட மடைமைகளை இன்றும் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன என்று பாருங்கள்.
படிக்க வருவதற்கே இவ்வளவு சிரமம் என்றால், தனக்குப் பிடித்த ஒரு ஆண் துணையை பெண்கள் எப்படி யோசித்துப் பார்க்க முடியும்? ‘சாதி மதங்கள் பார்த்து வருவது நட்பில், காதலிலோ இல்லை’, என்று சினிமா பாடல் வரிகளில் தான் சமத்துவம் இருக்கிறது போல. ஒவ்வொரு குடும்பமும், குறிப்பாக குடும்பத்திலுள்ள பெண்களின் நட்புகூட எப்படிபட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகளில் மூழ்கியிருக்கிறது! இந்தத் தீண்டாமையிலும் தீண்டாமை மனிதத்தன்மையை சுக்குநூறாக சிதைக்கும் செயல் இல்லையா?
கட்டுரையாளர்
ஜெயபாரதி
ஆசிரியர். குரலற்றவரின் குரலாக என்றும் பயணிக்க விரும்பும் சமூக செயல்பாட்டாளர்.
சத்யவாணி(சத்யா) அழகா எழுத்துறீங்க தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்.சாதி ஒழிப்பு களத்தில் எப்போதும் துணை செய்வோம்.
அழகா எழுதிருக்கிங்க தோழர் 😍
நன்றாக உள்ளது…. மாணவர்கள் இடையே நடக்கும் உரையாடல் என்பதால் மாதவிடாய் பற்றி அறிவியல் பூர்வமாக கருத்து உரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்… இன்னும் நிறைய பெண்களிடம் அதைப்பற்றிய அறிவியல் பூர்வமாக கருத்து இல்லை….சாதிய தீண்டாமை பற்றிய உரையாடல்கள் இயல்பாக உள்ளது…
Please give me your cell number
வரலாற்று குரலாய் எப்போதும் பயணித்துக் கொண்டே இருங்கள்.
வாழ்த்துக்கள் 💙
தோழருக்கு வாழ்த்துக்கள்.
உரையாடல்களே புரிதலை உண்டாக்குகிறது….. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நட்பே… அருமையான பதிவு..
Really superb 💓💓💓