இந்தியக் குடும்பங்களில் குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கும் விருப்பமும் மட்டுமின்றி, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரின் தலையீடும் இருக்கின்றன. பெற்றோர் கொஞ்சம் முற்போக்காக இருந்தாலும் வெளியிலிருந்து வரும் உறவுகள் அவர்களின் எண்ணங்களை மாற்றி, தங்களின் பிற்போக்கான எண்ணங்களுக்கு இழுத்துவிடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அதிலும் அதிகம் வருமானமோ படிப்போ இல்லாத குடும்பங்கள் என்றால், அதிகாரத்தோடு தங்கள் எண்ணங்களை மடைமாற்றிவிடுவார்கள்.
மகள் பிறந்தவுடன் இந்திராகாந்தி போல் வளர்க்க வேண்டும் என்கிறார் தந்தை. மகனுக்கு ஜெயன் என்றும் மகளுக்கு ஜெயபாரதி என்றும் பெயர் வைத்து வளர்க்கிறார்கள். ஜெயனைவிட ஜெயபாரதி படிப்பில் கெட்டிக்காரராக இருக்கிறாள். ஜெயபாரதியின் தாய்மாமா அடிக்கடி வீட்டுக்கு வந்து, பெண் குழந்தை மரத்தில் ஏறி விளையாடக்கூடாது, அதைச் செய்யக் கூடாது, இதைச் செய்யக் கூடாது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவரை எதிர்த்து கருத்துச் சொல்ல அந்த வீட்டில் யாருக்கும் துணிச்சல் இல்லை.
கல்லூரியில் சேரப் போகும் ஜெயபாரதிக்கு எதுக்குப் படிப்பு, கல்யாணத்தைச் செய்து வைத்துவிடலாம் என்று மாமா சொல்லும்போதுதான், அவரை எதிர்த்து குடும்பமே அவள் படிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கிறது.
கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் வகுப்பிலும் கூட்டங்களிலும் பெண் உரிமை குறித்துப் பேசுகிறார். பெண்கள் பலருக்கும் அவர்மீது நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. ஒருநாள் ஜெயபாரதியைக் காதலிப்பதாகச் சொல்கிறார். தோழிகள் எல்லாம் இப்படிப்பட்டவரைக் காதலிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். ஜெயபாரதியும் காதலை ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறாள்.
அந்த நொடியிலிருந்து, இரவு யாரிடம் பேசிக்கொண்டிருந்தே, ஏன் இப்படி டிரஸ் பண்றே என்று ஒவ்வொரு விஷயத்திலும் தலையீடு செய்ய ஆரம்பித்துவிடுகிறார். ஒரிஜினல் குணத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜெயபாரதி, ஓர் அறை வாங்கிய பிறகு உறவை முறித்துக்கொள்கிறார்.
உடனே வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது. படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன் கோழிப்பண்ணை வைத்திருக்கும் ராஜேஷுடன் திருமணம் நடக்கிறது. வீட்டுக்குள் குத்துவிளக்குடன் நுழையும் ஜெயபாரதி, கண்ணாடி டீப்பாய் விரிசல் விட்டுக்கிடப்பதையும் டிவி ரிமோட் ரப்பர் பேண்ட்டுடனும் அலமாரி கண்ணாடி உடைந்தும் நாற்காலியின் கால் கட்டப்பட்டும் இருப்பதைப் பார்க்கிறாள். ராஜேஷ் கோபத்தில் உடைத்த பொருள்கள் என்பதை அறிந்துகொள்கிறாள்.
தினமும் இடியாப்பமும் கடலைக்கறியும் சாப்பிடுபவனுக்கு யூடியூப் பார்த்து புது டிபன் செய்துகொடுக்கிறாள் ஜெயபாரதி. அதைப் பார்த்தவுடன் கோபம் கொண்டு உணவை வீசி எறிகிறான். உணவை இப்படி வீணாக்காதீங்க என்று அவள் சொன்னதும் ஓங்கி ஓர் அறைவிடுகிறான். எதிர்த்துப் பேசினால் பிடிக்காது என்கிறான். ஒவ்வொரு முறையும் அடித்துவிட்டு, ரெஸ்டாரண்ட், சினிமா என்று கூட்டிச் சென்று, ஹேப்பியா ஹேப்பியா என்று கேட்டு இம்சிக்கிறான்.
அம்மாவிடம் அடி வாங்கும் விஷயத்தைச் சொன்னால், அடியைத் தவிர நல்லா வைத்துக்கொள்கிறார். அட்ஜஸ்ட் செய்துகொள் என்கிறார். மேலும் சில அடிகளை வாங்கிய பிறகு, அப்பாவிடம் முறையிடுகிறாள். அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை.
இந்தியாவில் 95 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கணவனிடம் அடி வாங்கியதாகச் சொல்கிறார்கள். மனைவியை அடிப்பது என்பது படித்தவர், படிக்காதவர் , பணக்காரர், ஏழை என்று பாகுபாடு இல்லாமல் ஆண்களிடம் இருந்துவருகிறது.
இந்தப் பிரச்னையைத் தானே சமாளிக்க முடிவு செய்கிறாள் ஜெயபாரதி. அந்த முடிவு ராஜேஷிடமும் குடும்பத்தினரிடமும் சமூகத்திடமும் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை நகைச்சுவையாகவும் சீரியஸாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விபின் தாஸ்.
தர்ஷனா ராஜேந்திரன், பசில் ஜோசப் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆங்காங்கு வரும் பாடல்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன.
அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் எளிதாகச் சென்று சேரும் விதத்தில் குடும்ப வன்முறையை நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கும் இயக்குநருக்கு ஒரு பூங்கொத்து!