பெண்கள் கணவனுடனோ, காதலனுடனோ தன்னை மறந்து ஈடுபடும் உறவில் லயித்து, உச்சக்கட்டம் தொடுவதைப் போன்ற காட்சிகள் தொன்றுதொட்டு, காலம் காலமாக நம் தமிழ் திரைப்படங்களில் மிகைப் படுத்திக் காட்டப்பட்டு வந்துள்ளன. இதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், சமீபத்தில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடலில் இடம் பெற்றுள்ள ‘உச்சுக் கொட்டும் நேரத்தில உச்சக்கட்டம் தொட்டவளே…’ என்ற பச்சைப் பொய்யான வரிகள். திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய பல்புதான்!

பெண்களுக்கு உச்சக் கட்டமே வராது என்று பொருளில்லை. ஆனால், அதில் அந்த கணவனுக்கோ அல்லது காதலனுக்கோ என்ன பங்கு இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இந்தத் தொடரை வாசிக்கும்போது பல ஆண்களின் ஈகோஅடிபட்டால், சுக்கு நூறாக உடைந்து போனால், அதற்குக் காரணம் நான் அல்ல. உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் மனக் குமுறல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பும் அதை எதிகொண்டு, மீண்டு வருவதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளதுதான் இந்தத் தொடர்

கூச்சத்தைத் தள்ளி வைத்துவிட்டுப் பெண்களும், ‘ஆணாதிக்க மனப்பான்மையைஒதுக்கி வைத்துவிட்டு ஆண்களும் கொஞ்சம் பொறுமையுடனும் நிறைய நடுநிலைமையுடனும் இந்தத் தொடரை வாசித்தீர்களானால் உங்கள் இல்லற வாழ்கை காப்பாற்றப்படும்

NBC News 2010ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் பொய்யாக உச்சக்கட்டம்அடைவதைப்போல் காட்டிக் கொள்வதாகப் பொங்கியிருக்கிறார்கள். இப்போது இன்றைய தேதியில் இதே கணக்கெடுப்பை மேற்கொண்டோமானால், கண்டிப்பாக 90 சதவீதத்தையும் தாண்டி விடும்.

காரணம், அப்போது இல்லாத அளவிற்கு இப்போது துரித உணவுகள், மன அழுத்தம், வேலைப் பளு, வேறு பொழுதுபோக்குகள், தன்னைப் பொருளாதார ரீதியிலும், சாதனைகளின் அடிப்படையிலும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயம், எளிதாகக் கிடைக்கும் சறுக்கல் பாதைகள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ‘வாழ்க்கைத்துணையே வேண்டாம், நீ மட்டும் போதும்…’ என இருபத்து நான்கு மணி நேரமும் நாம் ஆரத் தழுவியிருக்கும் செல்ஃபோன்… அதில் விதம் விதமாக, ரகம் ரகமாக உள்ளடங்கியிருக்கும் உணர்வுகளுக்கான வடிகால்கள்

இவை எல்லாம் சேர்ந்து, தன் மனைவியுடன் நேரம் செலவழித்து அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், நம் உடலின், மனதின் உண்மை நிலைதான் என்ன என்பதை யோசித்துப் பார்க்கக்கூட விடாமல் ஒரு ஆணை அழுத்தி விடுகிறது. மேற்கூறிய காரணிகளெல்லாம் இல்லாத காலகட்டத்தில், வேறு வழியில்லாமலாவது ஒரு நிர்ப்பந்த பொழுது போக்காக நினைத்தாவது மனைவியுடன் நேரம் செலவழித்து, காதலில் ஈடுபட முயற்சியாவது செய்து கொண்டிருந்த கணவன்மார்கள், இப்போது அந்தப் பொழுதுகளையெல்லாம் ‘இன்ஸ்டாவிலும், முகநூலிலும்முகம் தெரியாத பெண்களிடம் உச்சக் கட்டத் தேடலில் ஈடுபடுவதே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்

இந்த இடத்தில் உங்களுக்கு மூன்று முக்கியமான கேள்விகள் எழலாம்

1. எல்லா கணவர்களும் இப்படியா

விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், அது மிக மிகக் குறைந்த சதவீதமே

2. அப்படியெனில் ஆண்களுக்கு தங்கள் உடல் தேவைகளை மனைவியிடம் தீர்த்து கொள்ள வேண்டிய அவசியமிருக்காதா

அதற்கு அவர்கள் செலவிடும் ஐந்து நொடிகளைப் பற்றியல்ல நாம் பேசிக் கொண்டிருப்பது. அந்த செயல்பாட்டில் மனைவியின் நிலைமை என்ன? ‘ ‘ கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும்என அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்தான். ஆனால், காமனை வெல்வது ஒருபுறமிருக்கட்டும், அந்தப் போரில் ஈடுபடவாவது அந்தக் கணவன் அவளுக்குக் கை கொடுத்தானா…? என்று பார்த்தால், அதுவே பெரும்பாலும் இல்லைதான்

3. மூன்றாவது அதி முக்கியக் கேள்வி – சரி, பெண்கள் உச்சக்கட்டம் அடையாமலிருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினையா?

இதை ஏன் ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் என சில ஆண்கள் வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள். ஆம்இது உளவியல் ரீதியாக மிகப் பெரியப் பிரச்சினைதான். உடலளவில், தன் கணவனால் கவனிக்கப்படாத பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு மட்டுமன்றி, மன நோய்களுக்குமே ஆளாகிறார்கள் எனப் பல உளவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன

மேற்கத்திய நாடுகளில் உள்ளதைபோல் தன் கணவனிடம் தனது உடல் தேவைகளையும், ஆசைகளையும் குறித்துப் பேசும் சுதந்திரம் இன்னும் நம் ஊரில் வரவில்லை. இந்த அடக்கி வைக்கப் பட்ட உணர்வுகளால், வயதாக ஆக மனதளவிலும், அதன் காரணமாக உடலளவிலும் (Psychosomatic disease) பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள். இந்த நோய்களுக்கு நீங்கள் எந்த மருத்துவரை அணுகினாலும்அவர்களால் காரணம் கண்டுபிடிக்கமுடியாது. இதைப் பற்றி மிக விவரமாக இந்தத் தொடரில் பார்ப்போம்.

கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா?

‘Fake orgasm’ எனப்படும் உச்சக் கட்டம் அடைந்து விட்டதைப் போல் பெண்கள் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதுதான். ‘உன்னால் நான் திருப்தி அடையவில்லை…’ என முகத்திற்கு நேராக சொல்லும் உரிமைகூட மறுக்கப்படும் சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நான் அடிப்பேன்! உனக்கு வலிச்சாலும், நீ அழக்கூடாது. சிரிச்ச மாதிரியே முகத்தை வெச்சுக்கணும். எங்க கரெக்டா செய் பார்ப்போம்…” என்று வடிவேலு, கோவை சரளாவிடம் சொல்வதுபோல் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! இதைத்தான் இன்று பெரும்பாலான மனைவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்

சரி, ஏன் அப்படி பொய்யாக நடிக்கவேண்டும்? இதற்கும் மிக, மிக ஆழமான உளவியல் காரணங்கள் இருக்கின்றன. விரிவாகப் பேசுவோம்… 

சரி, காலம் காலமாக இப்படியே பெண்கள் வாழ்ந்து விட்டுப் போய்விடவில்லையா? ஐந்து நொடி சமாச்சாரத்தில், ஐந்தாறு குழந்தைகளைப் பெற்றுப் போட்டு, மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் உள்பட அனைவருக்கும் வடித்துக் கொட்டி, குழந்தைகளுக்குக் கல்யாணம் காட்சி, அவர்களுக்குக் குழந்தைப்பேறு என எல்லாம் பார்த்து, பேரக் குழந்தைகளுக்கும் மேற்கூறிய அனைத்துக் கடமைகளையும் செய்துவிட்டு, வயதான காலத்தில் கணவனுக்குக் கை, கால் அமுக்கி, அவன் மரணத் தருவாயில் மலம் அள்ளிக் கொட்டி, உடல் துடைத்துவிட்டு, அவன் உயிர் பிரிந்ததும் பூ, பொட்டழித்து, வளையல் உடைத்துஆனாலும் மனம் நொறுங்கி விடாமல், தன் கடைசி காலம் வரை தனது குடும்பத்திற்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்து, காலம் வந்தபோது போய் சேரவில்லையா? என எகத்தாளமாய் கேட்கும் என் செல்லக்குட்டி ஆண் நண்பர்களே… 

அது அப்ப

இப்ப…? 

உங்களுக்கிருக்கும் அதே இன்ஸ்டா, அதே முகநூல் உங்கள் வீட்டுப்பெண்கள் கைகளிலுமிருக்கிறது. நீங்கள் சம்பாதிக்கும் அதே அளவு பணத்தை சம்பாதிக்கும் திறமை உங்கள் மனைவிக்குமிருக்கிறது. நீங்கள் காட்டாத கரிசனத்தையும் கவனத்தையும் காட்ட வேறு எவனோ ஒருவன் அவளுக்கும் கிடைக்கக்கூடும்.

இங்கே பல ஆண்களுக்கு வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருப்பதே குழந்தைகள்தான். தந்தைப் பெரியார் சொன்னதைப் போலபெண் அடிமையாகும் பல காரணிகளில் முகவும் முக்கியமான காரணம், ‘குழந்தை‘. 

குழந்தைகளுக்கு ஒரு அப்பா வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காகத்தான் பல பெண்கள் தங்கள் கணவனை சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகள் வளர்ந்து தங்கள் சொந்தக் கால்களில் நிற்கும் நிலை வரும்போது, தெரியும் சேதி… குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஒரு ரவுண்ட் சென்று வந்து பாருங்கள். அறுபத்தைந்து வயதைக் கடந்த மூதாட்டிகள் எத்தனை பேர் விவாகரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வரும். “நாங்கள் அன்பு வைத்தாலும்ஆப்பு வைத்தாலும்எதையும் யோசித்து பெரிசாத்தான் வைப்போம்…” எனும் ஜாதிபெண்கள் ஜாதிகவனம் ஆண்களேஉஷார்… 

தன் தாய் அவளது வாழ்க்கை முழுக்க தங்கள் தந்தையுடன் போராடி, மகிழ்ச்சியை இழந்து வாழ்ந்து வந்ததைப் பார்த்து வளர்ந்த பல குழந்தைகள், தாங்கள் வளர்ந்த பிறகு தங்கள் தாய்க்கு மறுமணம் முடித்து வைப்பதை சமீப காலங்களில் நிறையப் பார்க்கிறோம். இத்தகைய நிரந்தரப் பிரிவு எல்லைகளுக்கெல்லாம் போகாவிட்டாலும்கூட, தங்கள் குழந்தைகள் திருமணமாகி வெளியூரிலோ, வெளி நாட்டிலோ செட்டிலாகி விடும் காலத்தில் அவர்கள் கூடவே மூட்டையைத் தூக்கிக்கொண்டு போய்விடும் எத்தனை அம்மாக்களை நாம் ஏர்போர்ட்டில் பார்க்கிறோம்?

‘ஆறு மாசம் நான் இங்க இருப்பேன். நான் இந்தியா போனதும் அவரு ஆறு மாசம் இங்க வந்து இருப்பாரு…’ இப்படிச் சொல்லும்போது உங்களுக்குக் கேள்வி கேட்கத் தோன்றும்… ‘ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே இடத்துல அந்த ஆறு ஆறு மாசம் இருக்க முடியாதா…?’ ஆனால், யோசித்துப்பார்த்தால் நமக்கே புரியும். ‘அப்படி முடியலேன்னுதானடா இப்படி வர்றேன்ஆறு மாசமாஆறு நிமிஷம் கூட அந்தாளு கூட ஒரே வீட்டுல இருக்க முடியாது’ என்ற புலம்பல்!

அறுபது ஆண்டுகளாகத் தான் கவனிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டிருந்த கோபம், அவள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் உச்ச நிலையை அடையும் போது ‘இனி ஆறு நிமிஷம் கூட என்னால சகிச்சுக்க முடியாது…’ என்ற நிலையை அடைந்து விடுகிறாள். ஊருக்காக, உலகத்திற்காக தாங்கள் வெளியே காட்டிக் கொள்ளும் முகத்தை, குடும்பம் என்ற கட்டமைப்பை இனிமேல் மாற்றியமைத்துக் கொள்ள முடியாதுஅதனால், குழந்தைகளின் புகுந்த வீட்டில் அவர்களது மரியாதை கேள்விக்குறியாகலாம்ஆனால்குறைந்தபட்சம், நாம் நம் கணவனிடமிருந்து ஒரு இடைவெளியை உருவாக்கிக்கொண்டு, ‘ பல வருடங்களாக நாம் தொலைத்த அந்த வாழ்க்கையை சில வருடங்களாவது தனக்காக வாழ்ந்து பார்ப்போம்…’ என்று தனக்குத் தானே ஒரு தீர்வை உருவாக்கிக் கொள்கிறாள்

ஒரு ஆணுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை என்ன தெரியுமாவயதான காலத்தில் தன் வாழ்க்கைத்துணை தன்னுடனில்லாமலிருக்கும் நிலைமைதான். தன் வாழ்க்கைத்துணை மேல் கொஞ்சம்கூட பச்சாத்தாபமோ, காதலோ இல்லாமல், உணர்வுகள் எல்லாம் வற்றிப்போன நிலையில் மட்டுமே ஒரு பெண்ணால் தன் கணவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுக்க முடியும். அவளது உணர்ச்சிகளை வற்றவைக்குமளவுக்கு, அந்தக் கணவன் அவளை எவ்வளவு காயப் படுத்தியிருந்தால் உதாசீனம் செய்திருந்தால்அவளால் இப்படி நடந்து கொண்டிருக்க முடியும்… 

எவ்வளவு வயதானாலும் ஒரு பெண்ணால், தன் இளமைக்காலத்தில் இருந்த அளவிற்கு… சொல்லப்போனால், அதை விட அதிகமான வீரியத்துடன் பாலியல் உறவில் ஈடுபட முடியும். ஆண்களுக்கு அது சாத்தியமில்லைதான்.

ஆனால், வேறு எப்படியெல்லாம் அதை ஈடு செய்து தங்கள் காதலை வெளிப்படுத்தலாம்? உடலளவிலும், மனதளவிலும் தங்கள் மனைவியை உண்மையிலேயே உச்சக்கட்டம் அடைய வைக்க முடியும் என்பதை ஒரு ஆண் கற்றுக்கொண்டு செயல்படுத்தினால், உங்கள் உயிர் மூச்சுப் பிரியும் வரை உங்கள் மனைவி உடனிருப்பார்.

மனமதக்கலை கற்று, கை வருவதில்லை என்பதெல்லாம் பொய்யானக் கூற்று. கற்றுக் கொள்ளுங்கள், எல்லாம் கை வரும்!

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர். விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கி, தமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.