September 12

அது ஓர் அடர்ந்த காடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடிகளும் மரங்களும் மட்டுமே. பாதை ஒன்று தென்பட, அந்தப் பாதையை நோக்கி நடக்கலானாள் கவிதா. பாதையில் கற்களும் மண்ணும் ஆங்காங்கே சில கள்ளிச் செடிகளும் தவிர வேறு ஏதும் இல்லை.

திடீரென புலி ஒன்று உறுமிக்கொண்டு எதிரே நின்றது. அதன் கூரிய பற்களும் நகராத பார்வையும் வயிற்றைக் கலக்கியது. புலி எங்கிருந்து வந்தது என யோசிப்பதற்குள், துரத்த ஆரம்பித்தது. கவிதா, தலைதெறிக்க ஓட ஆரம்பித்தாள். இதயம் வேகமாகத் துடித்தது. மரண பயத்தில் வாயைத் திறந்து சத்தம் போட எத்தனித்தவளுக்கு, நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டது. சத்தம் எழவில்லை. முடிந்தவரை ஓடினாள்.

ஓடிக்கொண்டிருக்கும்போது, திடீரென எதிரே பெரிய பாதாளம் தோன்றியது. அவ்வளவுதான். புலியிடம் மாட்டி சாகப் போகிறேன் என நினைக்கையில், புலி உறுமிக் கொண்டே, எம்பி அவள் மேல் பாய்ந்தது.

அதிர்ச்சியில் திடுக்கிட்டு கண்விழித்த கவிதாவுக்கு ஏசி அறையில் வியர்த்துக் கொட்டியிருந்தது. ஒரு பாதாளத்திலிருந்து தப்பித்து கண்விழித்தவளுக்கு, விடுபட முடியாத இன்னோர் அதல பாதாளம் மிக அருகில் இருப்பதாக, அவள் கண்களுக்கு மிக அருகில் இருந்த ரமேஷின் முதுகு உணர்த்திக் கொண்டிருந்தது.

கனவு கலைந்த பிறகும் புலி உறுமும் சத்தம் வந்து கொண்டிருந்தது. ரமேஷ் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். இடது பக்கம் திரும்பிப் படுத்தால், அவினாஷ். வலது பக்கம் ரமேஷ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். நிம்மதியாக, விஸ்தாரமான இடத்தில் படுத்தே, நீண்ட நாட்கள் ஆகிவிட்டிருந்தன. எட்டு மணி நேரத் தொடர் தூக்கம் என்பதே கவிதாவுக்கு ஒரு ஆடம்பரக் கனவாக இருந்தது.

ரமேஷின் அலட்சியமான போக்கும், பேச்சும் அவளைப் பாதித்துக் கொண்டிருந்தது. அவன் புரிந்து தான் பேசுகிறானா, புரியாமல் பேசுகிறானா என்கிற சந்தேகமே அவளுக்கு நிறைய இருந்தது. இரவுகளின் யாத்திரைகளுக்கு, அவளைத் தயாராக்கும் நேரம் தவிர, ஆசையாக, அன்பாகப் பேசியதாக அவளுக்கு நினைவு ஏதுமில்லை.

மணி ஆறாகிவிட்டது. எதைப் பற்றியும் சட்டை செய்யாமல் ரமேஷ் உறங்கிக் கொண்டிருந்தான். அந்தக் கடிகார முட்களும்தான்… சிறிதும் சட்டை செய்யாமல் அலட்சியமாக அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது.

நேரமாகி விட்டால் அத்தான் வேற கத்துவாரு… அவசரமாகச் சமையலறைக்குள் நுழைந்தாள். பரபரப்பாக வேலையை ஆரம்பித்தாள். இந்த மூன்று வருடங்களில் சமையலை எளிதாக, அலட்டிக் கொள்ளாமல் செய்யக் கற்று விட்டிருந்தாள்.

அரை மூடித் தேங்காய் துருவி விட்டாள். இன்னும் கொஞ்சம் துருவி வைத்துக் கொண்டால், மீனுக்கும் சட்னிக்கும் அரைத்து விடலாம். மீன் குழம்பு வைத்து விட்டால், வேலையை எளிதாக முடித்து விடலாம் என அவள் மனம் கணக்கிட்டு கொண்டிருக்கையில், அவினாஷ் வீறிட்டு அழும் சத்தம் கேட்டது. அவசரமாக எழ முயன்றவள், தேங்காய் துருவியின் கீழ்ப்பக்கத்தில், நைட்டி மாட்டியதில் தடுமாறி கீழே விழுந்தாள். கீழே விழுந்த வேகத்தில், ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வெங்காயமும் உருளையும் மேலே வந்து விழுந்தன.

என்ன நடந்தது என யோசிப்பதற்குள், தலை வலிக்க ஆரம்பித்தது. தடவிப் பார்த்தால் லேசான வீக்கம் இருந்தது. அவினாஷ் அழுகையை நிறுத்தவில்லை. தலையைத் தடவிக்கொண்டே அவினாஷ் படுத்திருந்த அறையை நோக்கி நடந்தாள். காலில் ஏதோ இழுத்துக் கொண்டு போவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தால் நைட்டி கிழிந்திருந்தது.

அவினாஷை எடுத்து இடுப்பில் வைத்ததுதான் தாமதம், கவிதாவின் நைட்டி முழுவதும் ஈரமாகிவிட்டது. அந்த சூடான ஈரம் அன்று அவளை தன் மீதான கழிவிரக்கத்தின் உச்சத்திற்கே இட்டுச் சென்றது.

எதிரே தெரிந்த கண்ணாடியில் அவளைப் பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. தர்மசங்கடமாக இருந்தது. வாரப்படாத தலைமுடி. சாயம் போன ஒரு நைட்டி. அதுவும் பின்னால் கிழிந்து தொங்கியது. பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவளுக்கே அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. கையில் குழந்தையையும் தலை சாயக்கூட இடமற்று நிற்கும் தன்னையும் பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அவளின் விசும்பல் சத்தத்தில் பாதி உறக்கம் கலைத்த ரமேஷ், “உனக்கு என்னதான் பிரச்னை, காலையிலேயே அழுதுகிட்டு… ச்சே… சரியான பீட… என் தலைல கட்டிட்டுப் போயிட்டா… ரூமை விட்டு வெளிய வெளிய போ…” எனக் கத்தினான்.

ரூமை விட்டு வெளியே வந்துவிட்டாள் கவிதா.

ரமேஷோ, பக்கத்தில் இருந்த பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.

காலேஜ் படிக்கும் போது, தன்னை அழகு படுத்திக் கொள்ள முடிந்த கவிதாவுக்கு, இப்போது தலை வாரக்கூட நேரம் இல்லை. பார்லர் பக்கம் போய் வருடங்கள் ஆகின்றன.

வீடு என்பது, தான் விரும்பியபடி இருக்க முடிந்த, செளகரியமான ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?. ரமேஷ் வீட்டில் இருந்தால், வீடு ஏதோ ஜெயில் போலிருக்கிறது. இல்லாத நேரம், ஏதோ கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. ஒரு வேளை எல்லாருக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ? இல்லை, எனக்கு மட்டும்தானா எனப் பலவிதமான சிந்தனைகள் வந்து போனபடி இருந்தன.

இந்த உலகில் சிலருக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவு இருப்பதில்லை. சில நேரம் தனக்கு வேண்டியது இன்னது என்பதைத் தெரிந்து இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக, அதற்கு மாறான விஷயங்களைச் செய்து விடுகிறார்கள். அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வாழ விடுவதில்லை. அப்படி ஓர் ஆள்தான் இந்த ரமேஷ். மிக ஆடம்பரமாக நிறைய வரதட்சணையோடு பணக்கார வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், தன் தாயின் வற்புறுத்தலின் காரணமாகத் தன் சொந்த தாய்மாமன் மகளைத் திருமணம் செய்து கொண்டான். அதையே சொல்லிக் காட்டியும் வந்தான். ஒன்றும் இல்லாத உன்னை என் தலையில் கட்டிவிட்டார்கள் எனச் சொல்லி அவன் எரிச்சல் படாத நாட்களே இல்லை.

கணவனிடமிருந்து எதிர்பார்த்த அன்போ அரவணைப்போ சிறிதும் கிடைத்ததில்லை. அதற்காக அவனுக்குப் பிடித்ததைச் சமைக்கக் கற்றுக் கொண்டாள். எல்லா வகையிலும் தன் கணவனை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய மெனக்கெட்டாள்.

கணவனிடமிருந்து அன்பையும் அரவணைப்பையும் பெற, கணவனுக்காகத் தன்னை மாற்றிக் கொண்டு, கணவனின் விருப்பங்களை மட்டுமே முன்னைலைப் படுத்தி, தன்னைக் கீழாக்கிக் கொள்ளும் பெண்களுக்குக் கணவனிடமிருந்து எதிர்பார்த்தது கிடைத்து விடுகிறதா என்றால், அது கேள்விக்குறியே. மூன்று வருடங்களாக முயன்று வருகிறாள் கவிதாவும்.

இரவு ஷாலினியிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பு, கவிதாவின் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பதை இருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை. கவிதாவும் ஷாலினினியும் அந்த வார இறுதியில், வெள்ளிக்கிழமை மாலை நித்யா வீட்டுக்குப் போகலாம் என முடிவு செய்தனர்.

(தொடரும்)