நேர்காணல் : நிவேதிதா லூயிஸ்
எழுத்து வடிவம்: இரா. கோகிலா
முதலில் மரக்கா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “திருநங்கையாக என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்கிறேன். என்னுடைய விளிச்சொல் அவள் (Pronoun She/Her). இளவயதில் குடும்பத்தில் உள்ள நெருக்கமான நபர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டேன். இரத்தம் வரும் அளவுக்கு புணரப்பட்டேன். பல்வேறு கேலிக்கும் பாதிப்புகளுக்கும் ஆளானேன். என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இருந்தது. வேறு ஒரு காரணத்தால் வீட்டைவிட்டு வெளியே வந்து பெருந்தொற்றுக் காலத்தில் அடைபட்டிருந்த நேரத்தில் என்னை ஏற்றக்கொள்ள முன்வந்தேன். நான் எழுதி வைத்திருந்த கவிதைகளைத் தொகுத்து ‘மெல்லக் கொல்லும் மன்னிப்புகள்’ என்று நூலாக அனியம் பதிப்புக் கூடம் வெளியிட்டிருக்கிறது. பால்மணம் எனும் மின்னிதழின் இணையாசிரியராக இருக்கிறேன்.
என்னை திருநங்கையாக வெளிப்படுத்திக் கொண்டதில் இருந்து அழுத்தம் அதிகரித்தது. ஒன்பது ஆண்டுகளாக பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பிடித்த சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியராக இருந்தேன். குழந்தைகளின் பாதுகாப்பு என்ற காரணம் காட்டி வேலையைவிட்டு நிறுத்தப்பட்டேன். தற்போது பூந்தமல்லியில் உள்ள பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறேன். முற்போக்கு சிந்தனை உள்ள இந்தப் பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் புரிதலுடன் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு தமிழுடன் பாலினப் பாகுபாடுகள், தீண்டாமை, சமூக நீதி அனைத்தையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்கிறேன்.
குயர் இலக்கியம் சார்ந்து இயங்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. ‘சென்னை குயர் படிப்பகம்’ என்ற பெயரில் நூலகம் மட்டுமில்லாது படிப்பகமாகத் தொடங்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கான நூல்களைச் சேகரிக்கும் பணியில் இப்போது ஈடுபட்டுள்ளேன். நூல்களை தானமாக வாங்குகிறேன். யாராலெல்லாம் இயலுமோ அவர்கள் நூல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தென்னிந்தியாவில் சென்னையில் குயர் லைப்ரரி இல்லை. மதுரையில் ப்ரியா பாபு அம்மா ட்ரான்ஸ் லைப்ரரி வைத்திருக்கிறார்கள். இந்திய அளவில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஒரு என்ஜிஓ தொடங்கலாம் என இருக்கிறேன். அதற்கான பணிகளும் போய்கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.
அடுத்து அக்னி ப்ரதீப் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். “என்னுடைய பெயர் அக்னி ப்ரதீப். என்னுடைய விளிச்சொல் அவள்/அவன்/அவர் (Pronoun He/She/They). நான் ஒரு ‘ட்ரான்ஸ் நான்பைனரியாக’ (trans-nonbinary) என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். திருநங்கை திருநம்பி போன்றதே இது. சிலருக்குத் தான் எந்தப் பாலினம் என்பதை முடிவு செய்வதில் சிக்கல் இருக்கும். தன்னை இரண்டு பாலினமாகவும் உணர்வார். அல்லது இரண்டு பாலினத்திலும் இல்லாமலும் சில சமயங்களில் உணர்வார். நான் என்னை அப்படி உணர்கிறேன். எனவே என்னை ‘நான்பைனரி’ என அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.
சேலம் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை கிராமத்தில் படித்தேன். காரைக்குடி அரசப்பா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்தேன். என்னுடைய மூன்றாம் வகுப்பிலேயே மற்ற பிள்ளைகளைப் பார்க்கும்போது நான் கொஞ்சம் வித்தியாசமாக உணர்ந்தேன். சமூகமும், சினிமாவும் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பிரயோகிக்கிறதோ அந்த வார்த்தைகளால் என்னை அழைத்தார்கள். 20 வருடங்களாக நான் அதைச் சந்தித்துக் கடந்து வந்திருக்கிறேன்.
லாக்டவுன் சமயத்தில் க்ளப் ஹவுஸ் உரையாடல்களைக் கேட்ட பிறகு ஒவ்வொன்றாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அதன் பிறகு குயர் சமூகத்தின் சீனியர்களிடம் பேசினேன். பாலினம் பற்றிய தெளிவு, இன்றைக்கோ, நாளைக்கோ அல்லது அறுபது வயதிலோ கூட வரலாம் என்று சொன்னார்கள். அந்த அறிவுரை எனக்குக் கிடைக்கவில்லை என்றால் 20 வருடங்களாக குழப்பத்தில் இருந்த நான் பாலினம் சார் மனக்குறைக்குள் (gender dysphoria) இன்னும் அதிகமாகச் சென்றிருப்பேன். என்னை வருத்திக் கொண்டிருப்பேன். என்னை ‘டா’ என்றோ ‘டி’ என்றோ எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் பெண்ணாக உணரும் தருணத்தில் ஒருவர் ‘டா’ என்று பேசினால் கோபம் வருகிறது. எனவே என்னை பேர் சொல்லி மட்டும் அழையுங்கள் என்றே நான் கோருகிறேன். என்னுடைய ‘அதரப்பூச்சு’ கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
பிபிசிக்கு மரக்கா அளித்த நேர்காணலில் திருநங்கையாகத் தன்னை உணர்வதற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதை மேற்கோள் காட்டிய நிவேதிதா, “குயர் சமூகம் உடம்பை வருத்திக் கொள்கிறார்கள் என்ற விமர்சனம் இருக்கிறது. நீங்கள் அறுவைசிகிச்சை செய்யாமல் என் இயல்பில் இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன?” என்ற கேள்வியை முன்வைத்தார்.
இந்தக் கேள்விக்கு பதில் கூறிய மரக்கா, “குயர் சமூகத்தில் ஜென்டர் டிஸ்போரியா (gender dysphoria) என்போம். எங்கள் உடல் உறுப்புகளைப் பற்றிய வெறுப்பு இது. என் உடலில் உள்ள ரோமங்களைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கும். நான் ஒரு பெண். எனக்கு இவ்வளவு ரோமங்கள் இருப்பதைப் பார்த்தால் ஷேவ் செய்து கொள்ளத் தோன்றும். நான் ரோமங்களை நீக்கிக் கொள்கிறேன். சிலருக்குத் தங்கள் உறுப்புகளின் மீது அளவில்லாத வெறுப்பு இருக்கும். அந்த காலத்தில் மருத்துவசதிகள் இல்லாத போது தான் ஒரு பெண் என்பதை நிரூபிக்க உறுப்புகளை வெட்டி எறிந்தார்கள். மருத்துவ வசதிகள் வந்தபிறகு அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக உறுப்பினை அகற்றினார்கள். ஹார்மோன் சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணர்ந்தாலே அவர் திருநங்கைதான். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் எல்லா திருநங்கைகளும் இப்படி மாற்றிக் கொள்ளும் ஆர்வத்தில்தான் இருக்கிறார்கள். பெண்ணாக தன்னை உணர்பவர் தனக்கு மார்பகங்கள் வேண்டும் என்று விரும்புகிறார்.”
“சில காரணங்களால் இது அனைவருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம். எனக்கு வயது மூப்பின் காரணமாக அறுவை சிகிச்சை வேண்டாம் என மருத்துவர் சொல்கிறார். எனக்குத் தெரிந்த திருநம்பி ஒருவர் மாற்றுத்திறனாளி. அவர் மார்பகங்கள் கர்ப்பப்பையுடன் தன்னை திருநம்பியாக அறிவித்துக்கொண்டுள்ளார்.”
“ஒருவர் அறுவை சிகிச்சை செய்து, ஹார்மோன்கள் எடுத்துக் கொண்டு முடி வளர்த்து, மார்பகங்கள் வைத்து தன்னை அதிக பெண்மையுடன் காட்டிக் கொள்ள விரும்பினால் தாராளமாக செய்து கொள்ளட்டும். அப்படி செய்யாவிட்டால் திருநங்கை இல்லாமல் ஆகிவிடமாட்டார். எனக்கு தலையில் முடி இல்லை. மேக்கப் போட்டாலும் இல்லாவிட்டாலும் நான் என்னுடலை நேசிக்கிறேன். இந்த உடலுடனே நான் என்னை பெண்ணாக உணர்கிறேன். “
தான் பார்த்த காணொலியின் அடிப்படையில் அடுத்த கேள்வியை முன்வைத்தார் மோனிஷா. குயர் சமூகம் இந்தியாவின் கலாசாரத்தையும் குடும்ப அமைப்பையும் உடைக்கிறதா என்பதுதான் அந்தக் கேள்வி.
முதலில் பேசிய அக்னி, “ஆணாதிக்க சமூகம் பெண்களை கலாசார ரீதியாக, சாதி, பண்பாடு, குலவழக்கம் என்றொல்லாம் பல கட்டமைப்புகளை ஏற்படுத்தி அநீதி இழைக்கிறது. அந்த அடிமைத் தளையில் இருந்து சந்தேகம் எழுப்பி கேள்வி எழுப்பி ஒவ்வொன்றாக பெண்கள் விடுதலை அடைகிறார்கள். அம்பேத்கர் பெண்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கிறதோ அப்போதுதான் உண்மையான விடுதலை என்று குறிப்பிட்டுள்ளார். அதை நான் இங்கு பதிவு செய்கிறேன். பெண்களுக்கு முழு விடுதலை இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் முன்பைவிட இப்போது கொஞ்சம் நிலமை முன்னேறி இருக்கிறது. அவர்களின் பாதையைப் பின்பற்றியே எல்ஜிபிடிக்யூப்ளஸ் சமூகமாகிய நாங்களும் எங்களுக்கான விடுதலையை முன்னெடுக்கிறோம்.”
“பெண்களைப் போலவே எங்களையும் பண்பாடு குடும்பம் என்றெல்லாம் சொல்லி கட்டமைக்கப்பட்ட விதிகளை வைத்து அடக்கி வைக்கிறது சமூகம். ஆணாகப் பிறந்தவர் பெண்ணைத் திருமணம் செய்வது கலாசாரம். நான் என்னை பெண்ணாக சில சமயம் உணர்கிறேன் எனும்போது ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவர் வாழ்வை நாசமாக்குவது தவறு என அறம் சார்ந்து நான் சிந்திக்கிறேன். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இந்த நிலை இல்லை. சமூகத்துக்காக திருமணம் செய்து கொண்டு குழந்தைகூட பெற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த வாழ்வை வாழ முடியாமல் திக்கித் திணறி தினம் தினம் சாவதை நாங்கள் பார்க்கிறோம்” என்று குயர் சமூக மக்களின் உணர்வுகளைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய மோனிஷா, ஆணுக்கு ஆண் மீது ஏற்படும் ஈர்ப்பு, பெண்ணுக்கு பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயமா என்ற சந்தேகத்தைக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அக்னி பாலினம் மற்றும் பாலியல் நாட்டம் இரண்டும் வெவ்வேறு என்றார். இந்தப் பாலீர்ப்பு கே, லெஸ்பியன், பைசெக்ஷுவல், டெமி செக்ஷுவல் என்று பலவகை உள்ளன என்றும், இப்படி இருப்பவர்களை திருமணம் செய்து வைத்து வாழ்க்கையை வீணாக்கி குடும்ப அமைப்பை இவர்கள்தான் உடைக்கிறார்கள் எனவும் ஆதங்கப்பட்டார்.
மேலும், “இந்த உணர்வுகள் காலங்காலமாகத் தோன்றுவதுதான். அலாவுதீன் கில்ஜி காலத்தில் போர்களுக்குச் செல்லும் போது பாலியல் தேவைகளுக்காக பெண்களுக்குப் பதிலாக இன்றைக்கு நாம் கே எனச்சொல்லும் ஆண் தன்பாலின ஈர்பாளர்களைக் கூட்டிக் கொண்டு சென்றார்கள். போர் என்பது சில மாதங்கள் வரைகூட இருக்கும். பெண்களை அங்கே கூட்டிச்செல்வது சிரமம் என்பதால் கே மக்களை கூட்டிச்செல்வார்கள். அத்தனை மாதங்கள் ஆண் போர்வீரர்கள் தங்களின் உடல் ரீதியான பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இவர்களைப் பயன்படுத்தினார்கள். அந்தப்புரத்தில் திருநங்கைகள் இருந்திருக்கிறார்கள். என்னைப் போன்ற நான் பைனரிகள் இருந்திருக்கிறார்கள். வரலாற்றில் பதிவு செய்யபட்டிருக்கிறது. இதெல்லாம் இயல்பான விஷயமாகவே இருந்திருக்கிறது. இப்போதுதான் திடீரென கலாசாரம் பண்பாடு என்றெல்லாம் சொல்கிறார்கள்” என்று வரலாற்றை மேற்கோள் காட்டினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மரக்கா பைபளின் நெகேமியா பற்றியும் மோகினி அவதாராத்தால் பிறந்த ஐயப்பன் பற்றியும் குறிப்பிட்டு பழங்காலத்தில் இருந்தே இருப்பதால்தான் இப்படி புராணங்கள் கதைகள் மத நூல்கள் அனைத்திலும் வருகிறது என்றார். “இதை யாரும் வேண்டும் என்றே செய்வதில்லை. கூகுள் செய்து பார்த்தால் புரியும். உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களால் இப்படித் தோன்றுகிறது. ஆண் பெண்ணைத்தான் விரும்பவேண்டும் என்ற சமூகத்தில் ஆணின் மீதே ஈர்ப்பு வருகிறது என்று சொல்லும் ஆண் என்ன லாபம் அடைகிறான்? கேலியும் கிண்டலும் வெறுப்பும்தான் அவனுக்குக் கிடைப்பது. எனில் எதற்காக அவன் தோன்றாத ஒன்றைச் சொல்லவேண்டும்? ஒரு பெண் ஏன் தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிந்தும் இன்னொரு பெண் மீது ஈர்ப்பும் காதலும் கொள்ளவேண்டும்?” என்று பொதுச்சமூகம் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களே காவல் துறையில் இருந்தாலும் புகாரளிக்கச் சென்றால் திருநர்களுக்கு காவல்துறை பாதுகாப்பான இடமாக இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார் ஜீவிதா.
முன்பு இருந்ததைவிட நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்பதை பதிவு செய்துவிட்டு ஆரம்பித்த மரக்கா, “புதிதாக குடிபோகும் ஏரியாவில் ஒருவாரம் முறைத்துப் பார்த்தாலும் நம் நடவடிக்கையை வைத்து பின்னர் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆட்டோவிலோ ரேபிடோவிலோதான் வருவேன். எந்த ரேபிடோ ஓட்டுநரும் என்னை திருநங்கை என்பதால் ஏற்ற மாட்டேன் என்று சொன்னதோ தவறாக நடந்துகாெண்டதோ கிடையாது. இலவசப் பேருந்தில் ஒருமுறை கண்டக்டர் அடையாள அட்டை இருந்தால்தான் டிக்கட் கேட்க மாட்டேன் என வாதிட்டார். காவல்நிலையத்தில் ஒருமையில் பேசுவார்கள். பாலியல் சில்மிஷம் நடந்தால் பெண் சொன்னால் நம்புவது போல நான் சொன்னால் நம்பாமல் என்னையே சந்தேகப்படுவார்கள். நகரத்தில் இப்படிப்பட்ட சுயமரியாதை சார்ந்த சவால்கள்தான் பெரும்பாலும்.”
“ஆனால் நகருக்கு வெளியே சென்றால் முற்றிலும் பாதுகாப்பில்லாமல்தான் இருக்கிறார்கள். பலர் பாலியல் தொழில் பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். திருநரைக் கண்டாலே கல்லால் அடித்து பிளேடால் கிழித்துத் துன்புறுத்தும் நிலை இன்றைக்கும் இருக்கிறது. வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லாமல்தான் அப்படி ரோட்டோரத்தில் நிற்கிறார்கள். என் வீட்டில் இப்படி திருநங்கையாக மாறுகிறேன் என்றதும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் நான் பாலியல் தொழில் செய்து பலருடன் படுத்துதான் சம்பாதிக்கிறேன் என்றே நினைக்கிறார்கள். அந்தப் பார்வை என்று மாறுகிறதோ அன்றுதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்பாேம்.”
“பாதுகாப்பு என்பது என்னை என்ன விளிச்சொல்லில் அழைப்பது என்று தொடங்கி, எனக்கு விருப்பமான உடை அணிவது, சுதந்திரமாக வேலைக்குச் சென்றுவருவது, நடமாடுவது, ஆயிரம் கண்கள் என் மீது விழாதபடி சக மனிதராக நான் ரோட்டில் நடக்கும் போதுதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்பாேம். அதுவரை ஏதோ ஒரு வகையில் பாதுகாப்பின்மையை நாங்கள் உணர்ந்து கொண்டேதான் இருப்போம்” என்று யதார்தத்தைப் பேசினார்.
விழுப்புரத்தில் நடக்கும் கூவாகம் நிகழ்வுகள் பற்றியும் அங்கே சகஜமாக திருநர்கள் கிராமங்களில் புழங்குவார்கள் என்று கூறிய சுபா, கில்ஜி பெயரைச் சொல்வதால் முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல, நட்டுவாங்கம், சிற்பிகளுக்கு மாடல், ஒற்றர் என இந்து சமூகத்தில் திருநர்கள் இருந்திருக்கிறார்கள் என்றார். தன் மாணவனை திருநர் என்று அடையாளம் கண்டும் நன்றாகப் படி என்ற அறிவுரையுடன் அவனை விட்டுவிட்டேன் என்று நினைவுகூர்ந்தார். இருபது வயதில் இப்போதைய புரிதல் இல்லை என்றவர், “திருநர்கள் நலனுக்காக தான் முடிந்தவரை உதவி செய்வதன் காரணம் இதுதான். இப்போது திருநர் சமூகத்தில் நடக்கும் அரசியல் என்ன? இதில் நாங்கள் ஏதேனும் உதவ முடியுமா?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அக்னி, “அரசியல் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் போலத்தான். என்னைப் போல நான் பைனரி மீசையும் வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக்கும் போடுகிறோம். திருநங்கைகள் அனுபவித்த வலியை நீ அனுபவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு குயர் சமூகத்தில் என்னைப் போல் உள்ளவர்கள் மேல் வைக்கப்படுகிறது. ஒரு குழந்தையை குண்டூசியால் குத்தினால் வலியில் அழும். ஆனால் எனக்கு காலில் கடப்பாரை விழுந்தால்தான் வலிக்கும். குண்டூசியும் கடப்பாரையும் ஒப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அவரவர் வலியையும் வேதனையும் அவரவருக்குத்தான் தெரியும். கே என்ன வலி அனுபவித்தார் என்பது திருநங்கைக்குத் தெரிய வாய்ப்பில்லை. திருநம்பி என்ன வலியைக் கடந்து வந்தார் என்பது லெஸ்பியனுக்குத் தெரியாமல் இருக்கலாம். நிவேதிதா என்னென்ன வகையில் பெண்ணடிமைத்தனத்தை எதிர்கொண்டார் என்பதை அவர்தான் சொல்ல முடியும். நான் சொல்ல முடியாது. அந்த மாதிரி அரசியல்தான் குயர் சமூகத்துக்கு உள்ளே நடக்கிறது. பாலின அடையாளங்களை வலிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள். இதற்கு நாள்கள் ஆகும். பொதுச்சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போலவே குயர் சமூகத்திலும் சிலருக்கு புரிதல் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இதே கேள்விக்கு மரக்கா தோழரும் பதிலளித்தார். “அக்னி தோழர் சொல்வது தலையாய பிரச்சனை. இன்டர் கம்யூனிட்டி சிக்கல் என்பார்கள். குயர் சமூகத்துக்கு உள்ளேயே ஒருவர் பற்றி மற்றவருக்குப் புரிதல் இல்லை. அடுத்தவர் வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாவிட்டால் பரவாயில்லை. நம் குடும்பத்தில் உள்ளவர்களின் சிக்கலே தெரியாவிட்டால் என்ன செய்வது? அந்த முரணை ஒரு பெரிய சிக்கலாக அரசியலாகத்தான் பார்க்கிறேன். அதைப்போலவே இவர் இந்தத் துறையில் இயங்கவேண்டும் என்றும் போட்டி பொறாமை இருக்கிறது. பாலினமோ பாலீர்ப்போ யாரின் திறமையையும் நிர்ணயிக்காது. அவரவர் திறமைக்கு ஏற்ப அவர்கள் வேலை செய்கிறார்கள். இது எங்களுக்குள்ளே புகைந்து கொண்டிருக்கும் இன்னொரு பிரச்சனை.
சுபா குறிப்பிட்ட அரசியல் கடந்த ஒரு வாரமாக வரும் ஃபேஸ்புக் பதிவுகளைப் பார்த்து என நினைக்கிறேன். வெள்ளை மொழி ரேவதி அம்மா, கல்கி சுப்ரமணியம், ப்ரியா பாபு அம்மா, லிவிங் ஸ்மைல் வித்யா அக்கா, க்ளாடியா அக்கா அனைவரும் இன்னும் பலரும் திருநங்கைகள் உரிமைக்காக போராடி இருக்கிறார்கள். இப்போது க்ரேஸ் பானு, நேஹா, இன்னும் எங்களைப் போல உள்ள நிறைய ஆக்டிவிஸ்ட்கள் பல உரிமைகளுக்காகப் போராடுகிறோம். இப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு போராட்டங்களை நாங்கள் எடுத்துச் செல்லும் போது ஆரம்பத்தில் எங்களை உஸ், அலி, அஜக்கு, ஒன்பது என்று கூறிய வார்த்தைகள் இன்றைக்கு நார்மலைஸ் செய்யப்படுகிறது எனில் யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தி பிள்ளைகள், பெற்றோர்கள், சமூகம் என எல்லோரும் ஐய்யோ நாம் ஒன்பது என்று அவர்களை அழைக்கக் கூடாது என்ற தயங்குகிறார்கள் இப்போது. அரவாணி என்ற பெயர் மதம் சார்ந்தது. எனவே பொதுவான பெயராக திருநங்கை என்று சொல்லி மரியாதையாக அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதை இப்போது அப்படியே மாற்றி ஒன்பது என்பதை நார்மலைஸ் செய்ய வேண்டும், இட்ஸ் ஓகே டு பீ ஒன்பது என்றெல்லாம் சொல்கிறார்கள் சிலர். பல வருடங்கள் போராடி கொண்டு வந்த மரியாதையான வார்த்தையை 50 வருடம் பின்னோக்கி இழுப்பதை தடுக்க எங்களுடன் சேர்ந்து செயல்படும் உங்களைப் போன்றவர்களும் இணைந்து எதிர்க்கவேண்டும். புரிந்து கொள்ளவேண்டும்” என்று தன் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அடுத்து பேசிய ரோடா அலெக்ஸ், ஹார்மோன் மாற்றங்களால் தோன்றும் இந்த எண்ணங்கள் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் வேறு மாதிரி தோன்ற வாய்ப்பிருக்கிறதா என்ற சந்தேகத்தை முன்வைத்தார்.
பொது இடங்களில் மக்களை தொந்தரவு செய்யும் திருநங்ககளைத் தடுக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா என்ற ரோடாவின் அடுத்த கேள்விக்கு மரக்கா சகோதரன் என்ஜிஓ அமைப்பைப் பரிந்துரைத்தார். புகைப்படமோ, வீடியோ எடுத்து சகோதரன் அமைப்பின் சவீதாவிடம் தெரிவித்தால் அனைத்து ஏரியா திருநங்கைகளுடன் தொடர்பில் இருக்கும் இந்த என்ஜிஓ உடனே உதவி செய்யும் என்றார். அதிகம் பாதிப்பு ஏற்பட்டால் காவல்துறையை நாடுவதே வழி என்றும் தெரிவித்தார் மரக்கா. இடையூறு செய்பவர்கள் எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள் என்று மறக்காமல் பதிவு செய்த ரோடா, திருநங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் உதவி செய்யும் நோக்கிலேயே கேட்டதாகவும் இந்தத் தகவல் பயனுள்ளது என்றும் கூறி நன்றி தெரிவித்தார்.
உலக நாடுகளில் உள்ள பெண் விளையாட்டு வீரர்கள் திருநங்கைகள் அதிக வலுவுடன் இருப்பதால் பெண்கள் பிரிவில் விளையாட அனுமதிக்கூடாது என்று கருத்து தெரிவிப்பதைப் பற்றியும் கருத்து கேட்டார் ரோடா. “தமிழகத்தில் காவல் துறைத் தேர்விலும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. திருநங்கைகள் பெண்களை விட வலுவானவர் எனில், திருநம்பி அவர்களை விட வலுவாக உள்ள ஆண்கள் பிரிவில்தானே போட்டியிடுகிறார்? அது மட்டும் சரியா?” என அதே லாஜிக்கை இங்கும் பொருத்திப் பார்க்கச் சொன்னார் மரக்கா. எல்லா இடத்திலும் குயர் சமூக பிரதிநிதி பங்களிப்புடன் குழு ஏற்படுத்தி உடல் தகுதி அடிப்படையில் விதிகளை வகுத்து அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
திருநங்கையாக தன்னை வெளிப்படுத்த எது சரியான வயது எனும் நிவேதிதாவின் கேள்விக்கு இது முற்றிலும் தனி நபர் மற்றும் அவர் வாழும் சூழல் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பதிலளித்தார் மரக்கா. 13 வயதில் பெற்றோர் துணையுடன் வெளிப்படுத்திக் கொண்ட திருநரையும் பார்த்திருக்கிறேன், ஐம்பது வயதில் வெளிப்படுத்திக் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறேன் என்றார். சராசரியாக 15லிருந்து 25க்குள் பெரும்பாலும் வெளியே வருகிறார்கள் என்றும் தன் அனுபவத்தில் இருந்து குறிப்பிட்டார் மரக்கா.
ஃபார்மா கம்பெனிகள்தான் தங்கள் வியாபாரத்துக்காக குயர் சமூகத்தை இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பற்றிய கருத்தைக் கேட்டார் நிவேதிதா. தன்னுடைய மார்பக சிகிச்சைக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் அதற்காக வேலை செய்து சம்பாதித்துச் சேமிக்கிறேன் என்றும் கூறிய மரக்கா இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றார்.
கதைகள் எழுதும் மோனிஷா, தன் கதையில் திருநர் பாத்திரங்கள் இயல்பாக உலவ எந்த நூல்களைப் படித்தால் என்னால் நன்றாக இந்த உலகைப் புரிந்து கெள்ளமுடியும் என ஆலோசனை கேட்டார். “கல்கி தோழரின் புத்தகங்கள் இருக்கின்றன. ரேவதி அம்மாவின் வெள்ளைமொழி நூல் அவரின் தன்வரலாறு. அதில் ஜமாத்து உள்ளிட்ட பல தகவல்கள், கடந்து வந்த பாதை எல்லாம் இருக்கும். லிவிங் ஸ்மைல் வித்யாவின் மெல்ல விலகும் பனித்திரை சிறுகதைத் தொகுப்பு நல்ல புரிதலைக் கொடுக்கும். பால்மணம் தொகுப்பு இருக்கிறது. க்ரீஷ் தோழரின் கே பற்றிய புத்தகம் ஒன்று இருக்கிறது. வண்ணங்கள் ஏழு புத்தகமும் நல்ல புரிதல் தரும்” என்று பரிந்துரைகளை அடுக்கினார் மரக்கா.
உங்களின் ஆலைய்(ally) என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? என்ற கடைசிக் கேள்வியைக் கேட்டவர் நிவேதிதா.
“எங்களை நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள். எங்களுக்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுப்பவர்கள். பிரச்சனைகளின் போது களத்தில் நின்று எங்கள் தோளைத் தட்டிக்கொடுப்பவர்கள் எல்லாருமே எங்கள் தோழர்கள்தான். ஆலைய் என்று சொல்லிக் கொண்டு ஜூலை மாதத்தில் மட்டும் கொண்டாடுபவர்கள் கிடையாது. சிலர் ஜூலை மாதத்தில் மட்டும் ரெயின்போ கொடியை இன்ஸ்டாவில் வைத்துவிட்டு ஆலைய் என்பார்கள். நீங்கள் இப்படி எங்களை அழைத்துப் பேசியதே உங்கள் தோழமை நிலையைக் காட்டுகிறது. நேரில் சந்திக்கும் நிகழ்வுகளையும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கோரிக்கையுடன் முடித்தார் மரக்கா.
பொது இடத்தில் சந்தித்து டீ குடித்துவிட்டு அப்படியே பார்க்கில் அமர்ந்து உரையாடலாம் தோழர் என அடுத்த நிகழ்வை ஆன் தி ஸ்பாட் திட்டமிட்டு அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வை முடித்துவைத்தார் நிவேதிதா.