நீங்கள் அனைவரும் எப்போதும் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, உங்கள் நலம் விரும்பியாக இக்கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன்.

உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் நலனுக்காகவும், நேரங்காலம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு முறையாவது உங்களுடைய நலனைக் குறித்து அக்கறை கொண்டது உண்டா தோழர்களே?

அதிகாலைப் பொழுது மகிழ்ச்சியுடன் எழுந்து, உண்ணும் உணவை அவசரமில்லாமல் ரசித்து புசித்து, குறிப்பாகக் கையில் அலைபேசியோ தொலைக்காட்சியோ பார்க்காமல்  சாப்பிட்டிருக்கிறீர்களா?

காலைப் பொழுதில் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்று நீங்கள் கூறினாலும், வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு வேளையாவது உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதா?

குறித்த நேரத்திற்குள் சாப்பிடாமல் உடல்நலனைக் கெடுத்து, அவசர அவசரமாக ஓடி உழைக்கும் பணத்தால்,  இழந்த உங்கள் ஆரோக்கியத்தை மீட்டுத் தர இயலுமா?

உங்கள் உணவு பழக்க வழக்கமும், வாழ்வியல் முறையில் நீங்கள் கடைப்பிடிக்கும் சில சுய ஒழுக்க வழிதான் முறைகளான (உடற்பயிற்சி, யோகா போன்றவை) உங்கள் வாழ்நாள் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் நிர்ணயிக்கிறது தோழர்களே…

இளமையில் சம்பாதித்து சேர்த்த பணத்தை, முதுமையில் மருத்துவச் செலவிற்குப் பயன்படுத்துவதற்காகவா இத்தனை ஓட்டம்? ஓடும் ஓட்டத்தை நிறுத்தி, சற்று உங்களை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். “உண்மையிலேயே நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் உலகிலேயே மிகப் பெரிய மில்லியனர்”       – எடி ஜேக்கூ (உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர் புத்தகத்திலிருந்து…)

அவசரத் தேவைக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட அலைபேசி, இன்று  அத்தியவசியத் தேவையாக மாறியதோடு, அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தப்படுவதால்தான், பல பிரச்னைகள் உருவாகின்றன.

உண்ணும் உணவை மட்டுமல்ல, அளவுக்கு அதிகமாக எதைப் பயன்படுத்தினாலும் ஆபத்துதான் தோழர்களே…

இரவு  உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அலைபேசி, தொலைக்காட்சிகள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது தெரிந்திருந்தாலும்,  யாரும் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.  உங்களோடு சேர்ந்து உங்கள் குழந்தைகளும் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை, சற்று சிந்தித்துப் பார்த்தால், நிச்சயமாக அலைபேசியை அதிகம் பயன்படுத்த மாட்டீர்கள்.

தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக அலைபேசியை உபயோகித்தால்,  மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறதாம்.

மெலோடனின் என்கிற ஹார்மோன் சுரக்கும் உற்பத்தி அளவைப் பொறுத்துதான், நம் தூங்கும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறதாம்.

இரவு நேரத்தில் அலைபேசி பயன்படுத்துவதால், மெலோடனின் சுரக்கும் அளவு குறைந்து தூக்கம் தடைப்படுவதாகவும், இதனால் மன அழுத்தம், உடல் சோர்வு, பார்வைத்திறன் குறைவதோடு, லிம்போமா என்கிற  புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இரவு படுக்கைக்குச் சென்றதும் அலைபேசியைத் தவிர்த்து, உங்கள் குடும்பத்தினருடன் சிறிது நேரம் மனம்விட்டுப் பேசி சிரித்து மகிழலாம். தினமும் யாருக்காக ஓடுகிறோமோ, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம் தோழர்களே!

அலைபேசிக்குப் பதிலாக, புத்தக வாசிப்பை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். இப்பழக்கம் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

நம் வாழ்வின் அடுத்த நொடி என்ன  நிகழும் என்பதை யாராலும் கணிக்க இயலாது தோழர்களே!

இருக்கும் நாட்களில் குடும்பத்தினருடனும், சுற்றத்தாருடனும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகளை அறிந்து  வாழப் பழகுவோம்.

இன்றைய வாழ்க்கை முறையைச் சரியாகத் திட்டமிட்டு வாழப் பழகிக்கொண்டால், எதிர்காலத்தில் நம் தலைமுறைகளுக்கு நாம் சுமையாக இல்லாது, துணையாக இருக்க முடியும்.

முதுமையில் வரும் தனிமையின் தவிப்பை தவிர்க்க,  புத்தக வாசிப்பு, பிடித்த இடங்களுக்குச் செல்வது, நண்பர்களைச் சந்திப்பது என உங்கள் சூழலுக்கேற்ப பயனுள்ளதாகவும், இனிமையாகவும் வாழ்வதற்கான வழி முறைகளைத்  திட்டமிட்டுக்கொள்ளுங்கள் தோழர்களே!

உங்கள் மீது அக்கறை கொள்ளும் அன்பானவர்களுக்கு, நீங்கள் கொடுக்கும் விலைமதிக்க முடியாத பரிசு, உங்கள் உடல்  ஆரோக்கியம்தான் தோழர்களே. இவ்வுலகில் வாழும் இவ்வாழ்க்கை ஒருமுறைதான்.  அதை “உடல் நலமுடன், மன நிறைவுடன் வாழ்ந்து மகிழுவோம்!”

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஹங்கேரியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.