பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.

நேற்று இரவு தன் டிவிட்டர் பதிவில் 18 ஆண்டுகால மண வாழ்க்கைக்குப் பின் தானும், மனைவி ஐஷ்வர்யாவும் மனமொத்துப் பிரிவதாக நடிகர் தனுஷ் கூறியிருந்தார். அப்பதிவின் பின்னூட்டங்களில் உருண்டு புரண்டு அழுது கொண்டிருந்த ரசிகர்களைக் காண முடிந்தது. கூடவே, ‘ஐயோ இதனால் ரஜினிக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே’, என்று கேட்ட ‘இதனால் என் கிட்னிக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே’ ரக தீவிர ரஜினி ரசிகர்களையும் பார்க்க முடிந்தது.

https://twitter.com/dhanushkraja/status/1483128992312225792/photo/1

ஏன் இவ்வளவு பதட்டம் நமக்கு?

‘பிரிவு’ என்ற சொல் நம்மை ஏன் இத்தனை வதைக்கிறது? அதிலும் திருமண உறவில் இருந்துவிட்டுப் பிரிபவர்கள் அந்நேரம் நம்மிடம் வேண்டும் ‘பிரிவசி’யை நாம் ஏன் அவர்களுக்குத் தர மறுக்கிறோம்? வாயரிஸம் பெருகிவிட்ட சூழலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம் வாழ்க்கை, நம் வெற்றி போன்றவை அடுத்தவரை மையமிட்டே அமைந்துவிடுகின்றன. நட்சத்திரங்களை நாம் அப்படித்தான் பார்க்கிறோம். அவர்களது சொந்த வாழ்க்கைக்கும், திரை நடிப்புக்கும் இடையேயான எல்லைக் கோடுகள் நம்மைப் பொறுத்தவரை வெகு மங்கலாகவே இருக்கின்றன.

நடிகர்களை, அவர்களது பிம்பங்களை நம்பி முதல்வர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்த இனம் நாம் இல்லையா? இன்னும் அந்தத் தெளிவின்றி தான் அவர்களது பாத்ரூம்களைக் கூட எட்டிப் பார்க்கிறோம். அர்ச்சனாவின் ‘பாத்ரூம் டூர்’ வீடியோவை போட்டி போட்டு வைரலாக்கிய ரசிகக் குஞ்சுகள் நாம்! அடிப்படையில் நம்மிடம் இருக்கும் இந்த வாயரிஸம் ஒழியவேண்டும்.

இந்த மணப் பிரிவையும் அவ்வாறே தனுஷ் என்ற நடிகருக்கும், அவரது மனைவியான சூப்பர் ஸ்டார் மகள் ஐஷ்வர்யாவுக்கும் இடையேயான பிரிவு என்றே பார்க்கிறோம். தனுஷ் என்ற ஆணுக்கும், ஐஷ்வர்யா என்ற பெண்ணுக்குமான திருமண உறவை அவர்களே சொந்த விருப்பின் அடிப்படையில் செய்துகொள்கிறார்கள் என்பதை அறிவுப்பூர்வமாக அணுகாமல் உணர்வுப்பூர்வமாக சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொள்கிறோம். அதீத ‘ஹீரோ ஒர்ஷிப்’ காரணமாக, இந்த நிகழ்வை இரண்டு ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஆண் நடிகர்களுக்கு இடையேயான ‘ஈகோ’ போட்டியாக நாமே ஊதிப் பூதாகரமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஈக்குவேஷனில் ஐஷ்வர்யா என்ற பெண்ணைக் குறித்து யாரும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.

இன்னும் சிலர், ‘இரண்டு குழந்தைகளைக் கருத்தில் கொண்டாவது ஒன்றாக இருக்கக் கூடாதா?’ என்று அழுது புரள்கிறார்கள். கடந்த சில பத்தாண்டின் சிதைந்து போன குடும்ப அமைப்பில், தாயும் தந்தையும் அன்றாடம் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொள்ளும் குடும்பங்களில் வாழும் குழந்தைகளில் பலர், இன்று மன அழுத்தத்துடன் நம்மிடையே வாழ்ந்து வருவதை நாம் உணர்கிறோமா? இன்னும் வேறுவிதமாக மவுனத்தை மட்டுமே வெளிப்படுத்த முடிந்த பிள்ளைகளை கவனித்திருக்கிறோமா? மூச்சு முட்டும் உறவுகளில் இருந்து பிரிந்து ஒதுங்கி வெளிவருவதில் என்ன தவறு இருந்துவிடமுடியும்? ஒரே கூரையின் கீழ் மருகி, ஒடுங்கி வாழ்வதைவிட, மகிழ்வாக உலகமே வீடெனக் கொள்வதில் என்ன சிக்கல் நமக்கு இருக்கிறது?

பண்பாடு அழிந்துவிடும், கலாச்சாரம் ஒழிந்துவிடும், இதைப் பார்த்து அடுத்த தலைமுறை கெட்டுப் போகும்’, என இன்னொரு சாரார் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். பண்பாடும், கலாச்சாரமும் இன்னமும் பெண்ணின் பெண்ணுறுப்பில் இருக்கிறது என்ற கற்பிதமே தவறு என்றுதானே சொல்கிறோம்? ஐஸ்வர்யா என்ற பெண், தான் மணமுடித்த தனுஷ் என்ற ஆணைத் தவிர வேறு யாருடனும் நெருங்கிவிடக் கூடாது என்பதை முடிவு செய்ய சமூகம் யார்? இதற்கும் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் என்ன தொடர்பு? ஒரே கணவருடன் வாழ்நாள் எல்லாம் தொங்கத் தாலிகட்டி, தழைய சேலை கட்டி வாழ்வதாகக் காட்டிக் கொண்டிருப்பது பண்பாடு என்றால், நீங்கள் தேர்ந்த நடிகைகளைத்தான் தேடிக் கொண்டு இருக்கிறீர்களே அன்றி நேர்மையான பெண்களை அல்ல.

அடுத்து வரும் தலைமுறைக்கு யாரை ரோல் மாடல்களாக அறிமுகம் செய்ய விரும்புகிறீர்கள்? பாசாங்கு செய்து நடிக்கும் பாவப்பட்ட பெண்களையா, தேவை இல்லை என்பதை தூக்கி எறிந்துவிட்டு தன்னளவில் உள்ள நேர்மையுடன், அது தரும் நிம்மதியுடன் வாழும் பெண்களையா?

இது எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், நடிகர்கள் அல்லது பெரும் பணக்காரக் குடும்பங்களில் இருக்கும் ‘டோன்ட் கேர்’ ஆட்டிட்யூட். அங்கே மண முறிவுகள், தனித்து வாழுதல், மறுமணம் எல்லாமே சாதாரணம். அவர்கள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மிடில் கிளாஸ் மத்தியமர்களே இன்று பக்கத்து வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்த்து தங்கள் வாழ்வைக் கட்டமைக்கும் மக்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு- உங்கள் கருத்துகளை எள்ளளவும் கூட பணக்காரர்களும், நடிகர்களும் மதிப்பதில்லை எனில், ஏன் உங்கள் நேரத்தை, கவனக்குவிப்பை இதில் விரயம் செய்கிறீர்கள்?

tinybuddha.com

‘விவாகரத்து’ என்ற சொல்லையே இந்தப் பிரிவுகளுக்குப் பயன்படுத்தத் தேவையில்லை. ‘பரஸ்பரப் பிரிதல்’, ‘மகிழ் பிரிதல்’ எனக் கொள்ளுதல் நலம். இதில் அழுது ஒப்பாரி வைக்க ஒன்றும் இல்லை; உடைக்கக் கூடாத மண் குடம் நம் மண வாழ்க்கையும் இல்லை. திருமணங்களுக்கு வைதீக சடங்குகளை உள்நுழைத்து, பெரும் பொருட்செலவுடன் நாம் செய்விப்பதே பெரும் அழுத்தமாக திருமண உறவில் மாறுகிறது. ‘கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்’ என விவிலியம் சொல்கிறது. பகுத்துணரத் தெரியாத, புதிதாக அப்போது தான் நாகரிகம், வளர்ச்சியைக் கண்ட சமூகத்தைக் கட்டமைக்க, நெறிப்படுத்த மதங்களும், இவ்வாறான சடங்குகளும் தேவைப்பட்டன.

பகுத்துணரத் தெரிந்த, தனக்கு இன்னதான் வேண்டும் என முடிவு செய்யத் தெரிந்தபின், இந்த வசனங்கள் ‘ஆர்கையாக்’- வழக்கொழிந்து போய்விடவேண்டும் அல்லவா? கடவுள் எதையும் இங்கு இணைப்பதில்லை. ஒரு ஆணும், பெண்ணும், அல்லது தற்பாலீர்ப்பாளரும் தங்கள் மனமொத்து வாழ முடிவெடுப்பதில், கடவுளுக்கு என்ன வேலை இருந்துவிடமுடியும்? ‘தெய்வாதீனமாக’ திருமணங்கள் செய்து வைக்கப்படுவதால் தான் ‘புனிதம்’ என்ற கட்டுக்கோப்புக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மனமொத்து வாழத் தெரிந்த தம்பதி, மனமொத்து பிரிவது இயல்பே. அது அவரவர் தேர்வே அன்றி அதில் எந்தப் புனிதமும், களங்கமும் இல்லை. சொல்லப்போனால் அது அவர்களுக்கு அவர்களே வழங்கிக்கொள்ளும் விடுதலை.

இதில் ரஜினியைக் கொணர்ந்து சேர்த்து, “ஐயோ அவர் எவ்வளவு வருந்துவார்?” என கவலைப்படுபவர்களிடம் ஒரு கேள்வி. தனுஷ்- ஐஸ்வர்யா என்ற இரண்டு தனி நபர் உறவில், மூன்றாம் நபரான ரஜினிக்கு என்ன கருத்து, வேலை? இன்னமும் ‘பெரியவர்கள்’, ‘குடும்பத் தலைவர்கள்’, ‘ஊர்ப் பெரியவர்கள்’, ‘நாட்டாமை’, ‘பஞ்சாயத்துத் தலைவர்’ என அதிகாரம் கொண்ட ஆண்களின் ஒப்புதல், விருப்பு குறித்தான கவலையை நாம் ஏன் கொள்ளவேண்டும்? ‘பெற்றோர்’ மனம் குளிர மண உறவில் சேரும் தம்பதி, அதே பெற்றோர் மனம் குளிர ஏன் பிரியக் கூடாது? பெற்றோர் மனம் குளிர, நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் செதுக்கும் ‘ஒழுக்க சீலர்களா’ நாம்?

Life is not always about happy endings.

‘கடைசி வரைக்கும் அந்த ராஜாவும், ராணியும் சந்தோஷமா ஒண்ணா வாழ்ந்தாங்களாம்’ என சிறு குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போதே நாம் சறுக்குகிறோம். ‘கடைசி வரை அந்தப் பொண்ணு மகிழ்ச்சியா வாழ்ந்தா, அந்தப் பையனும் வாழ்ந்தான்’ எனச் சொல்வதில் சிக்கல் இல்லையே. மகிழ்ச்சியான வாழ்க்கை ஒருவருக்கு மண வாழ்க்கை மட்டுமே என முடிவு செய்வதும், குழந்தை பெற்றால் தான் சந்தோஷம் என சொல்வதும் சமூகக் கற்பிதங்களே அன்றி தனிமனித விருப்பு அல்ல. அந்த விருப்புக்கு இடமளிக்க சொல்லித்தான் இவ்வளவு பெரிய கட்டுரை.

Boredpanda இதழின் இந்தக் கட்டுரையை வாசியுங்கள். எத்தனை விதமான மனிதர்கள்; அவர்களின் பிரிவில் செல்ஃபி எடுத்துப் போட்டுக் கொண்டாடும் இந்தக் கொண்டாட்ட மனநிலை இல்லையெனினும், குறைந்த பட்சம் மண முறிவு பற்றிய குற்றவுணர்வையாவது வருங்காலத் தலைமுறை விட்டொழிக்காதா?

‘சமந்தாவுக்கு நாகசைதன்யா ஏன் தீர்ந்து போனார்?’ என ஆய்வுக் கட்டுரைகள் எழுதவேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம், ‘விவாகரத்து இன்று சாதாரணம். இப்படித்தான் சமந்தாவும், இப்படித்தான் செல்வராகவனும், இப்படித்தான் அமலா பாலும்’ என நம் அன்றாடங்களில், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பேசவேண்டியதும் இல்லை. அவர்களது கலையை ரசிக்கும் எல்லைக்குள் நாம் நின்றுகொள்வதே நமக்கு நல்லது. அன்றி இதை ஒரு செய்தியாகக் கூட நாம் கடந்து செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து. கடைசியாக, divorce is not a crime. It is a happening. அவ்வளவே.

மகிழ் பிரிவு வாழ்த்துகள், ஐஸ்வர்யா, தனுஷ்…

படைப்பு:

நிவேதிதா லூயிஸ் 

வரலாற்றாளர், எழுத்தாளர்.